‘ஜாலி ஓ ஜிம்கானா' பாடலை அரை மணி நேரத்தில் எழுதினேன் - பாடலாசிரியர் கு. கார்த்திக்

குலேபா, ஆஹ் ஆஹ் கல்யாணம், கமலா கலாசா, நிரா, ஜாலி ஓ ஜிம்கானா போன்ற சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த பாடல்களை எழுதிய பாடலாசிரியர் கு.கார்த்திக் அளித்த சுவாரஸ்யமான நேர்காணலை இங்கு காண்போம்.

Update:2023-09-19 00:00 IST
Click the Play button to listen to article

ஒரு படம் ஹிட் ஆவதும் ஆகாமல் போவதும் கதையை மட்டும் சார்ந்ததில்லை. படத்தின் கதை, பாடல், இசை, நடனம், கிராபிக்ஸ், வீடியோ எஃபக்ட்ஸ் என்று அனைத்தும் அதற்கு துணைபுரிகிறது. படமே பார்க்காதவர்கள்கூட எங்கு சென்றாலும் பாடலை முணுமுணுப்பார்கள். அந்த அளவுக்கு ஒரு திரைப்படத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது பாடல்கள். குலேபா, ஆஹ் ஆஹ் கல்யாணம், கமலா கலாசா, நிரா, ஜாலி ஓ ஜிம்கானா போன்ற சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த பாடல்களை எழுதிய பாடலாசிரியர் கு.கார்த்திக் அளித்த சுவாரஸ்யமான நேர்காணலை இங்கு காண்போம்.

தமிழ்ப்பற்றின் காரணமாக இனிஷியலை கு. கார்த்திக் என்று வைத்துள்ளீர்களா?

தமிழ்நாட்டில் பிறந்த அனைவருக்கும் தமிழ்ப்பற்று இருக்கிறது என்று நம்புகிறவன் நான். என் அப்பா பெயர் குசேலன். எனவே ஆங்கிலத்தில் எழுதும்போது K.Karthik என்று எழுத வேண்டும். அதுவே தமிழில் எழுதும்போது கு. கார்த்திக் என்று எழுதுவேன். அதனால் ஆங்கிலத்திலேயும் அப்படியே வைத்துக்கொண்டேன்.

150- க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளீர்கள். அதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள்...

அது ஒரு நீண்ட பயணம். 2005 இல் சென்னைக்கு வந்தேன். 10 வருட முயற்சிக்கு பின்னர் 2016- இல் இருந்துதான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 6 வருடத்தில் 150-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை இது குறைந்த எண்ணிக்கைதான். இன்னும் பல புதுமையான பாடல்களை எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

பாடல் எழுதுவதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

நீலகிரி மாவட்டம் ஆதி பழங்குடியான படுகர் சமூகத்தைச் சேர்ந்தவன் நான். இந்த சமூகத்திலிருந்து யாரும் பெரிதளவில் திரைத்துறையில் சாதித்ததில்லை. இப்போதுதான் சாய் பல்லவி, கார்த்திக் நாராயணன், வாணி போஜன் என்று சிலர் திரைத்துறையில் பிரபலமாகி வருகின்றனர். என் குடும்பத்தை பொருத்தவரை சினிமாத்துறை என்றாலே எதிர்ப்புதான். ஆனால், என் தந்தைக்கு சிறுவயது முதலே நான் மிகுந்த கலை ஆர்வம் உடையவன் என்பது தெரியும்.


பாடலாசிரியர் கு. கார்த்திக்

அதேபோல் கவிதை, கட்டுரை, பாட்டு என அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொள்வேன். இருப்பினும் அவர் இளங்கலை பட்டம் முடித்தபிறகே பிறவற்றை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார். அவர் கூறியவாறே இளங்கலை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து இசைக் கல்லூரியிலும் சேர்ந்தேன். MBAவும் முடித்தேன். ஒரு புறம் சினிமாத்துறையில் வாய்ப்புத் தேடி அலைந்தேன். மற்றொரு புறம் வேலைக்குச் சென்றேன். என்னுடைய விடாமுயற்சியினால் 2016-இல் வெற்றிகரமாக எனக்கு சினிமாவில் வாய்ப்புக் கிடைத்தது.

சினிமாவில் எழுதிய முதல் பாடல் அனுபவம் பற்றி ஒருசில வார்த்தைகள்...

P.S.விஜய் இயக்கத்தில் அமரா C.V இசையமைத்த ‘கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்கப் போறாங்க’ என்ற படத்தில் பவர் ஸ்டார் நடனமாடிய பாடலே சினிமாவில் நான் எழுதிய முதல் பாடல். பின்னர் ஜித்தன், யூத், பிரியமுடன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வின்சென்ட் செல்வா, அவருடைய ஒரே படத்தில் தொடர்ச்சியாக 4 பாடல்கள் எழுதும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். அதேபோல் இசையமைப்பாளர் தேவராஜன் இசையில் 4 பாடல்களை எழுதினேன். இப்படி சிறிய படங்களில் நல்ல வரவேற்பு பெற்றதன் மூலம் இசையமைப்பாளர் அனிருத் இசையில் முதன்முதலில் ‘ரெமோ’ படத்தின் ஹிட் பாடல்களில் ஒன்றான டாவியா என்ற பாடலை எழுதத் தொடங்கி தொடர்ந்து பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளேன்.


பவர் ஸ்டார் படத்தில் கு. கார்த்திக் எழுதிய பாடல்

‘ரெமோ’ திரைப்படத்தில் எழுதிய பாடலில் வரும் ‘டாவியா’ என்பதற்கான அர்த்தம் என்ன?

தேவா சார் எழுதிய ‘டாவு டாவு டாவுடா... டாவில்லாட்டி டையிடா…’ வரிகள் போலத்தான் இதுவும். இங்கு டாவு என்பது ‘என்னுடைய ஆளு’ என்பதைக் குறிக்கிறது. முதலில் ‘காவியா வாட்யா வை வெரி சோகம் யா’ என்று எழுதப்பட்டது. பிறகே இந்த வரிகள் படத்தில் வரும் காவியாவை மட்டுமே குறிப்பிடுவதால் இது பொதுப் பாடலாக அமைய ‘டாவியா’ என்று மாற்றி எழுதப்பட்டது.

தளபதி விஜய் படத்திற்கு பாடல் எழுதிய அனுபவம் குறித்து பகிருங்கள்...

இசையமைப்பாளர் அனிருத்தால் ரெமோ பட பாடலின் மூலம் பெரிய திரையில் அறிமுகமான பின்னர் விவேக் - மெர்வின், சைமன் கிங், விஷால் சந்திரசேகர் போன்ற பல இசையமைப்பாளர்களுடன் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தேன். அப்போதுதான் அனிருத் தொடர்புகொண்டு, ‘பீஸ்ட்’ படத்தில் ஒரு பாடல் எழுத வேண்டும், அதுவும் தளபதி பாட இருக்கிறார் என்றார். அவர் இப்படி கூறியவுடன் நான் உற்சாகமாகி இரவில் அரை மணி நேரத்தில் லிரிக்ஸ் எழுதி முடித்து விட்டேன். அனிருத் கூறியபோதே இந்த பாடல் படத்தில் இடம் பெறலாம், இடம்பெறாமலும் போகலாம் என்றுதான் கூறினார். ஆனால் தளபதி பாடிய ஜாலி ஓ ஜிம்கானா… பாடல் பெரும் ஹிட்டடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.


அனிருத் இசையில் வெளியான ஜாலி ஓ ஜிம்கானா பாடல்

அனிருத் பெரும்பாலும் இரவில்தான் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. உங்களுடன் பணிபுரிந்த போதும் இரவில்தான் இசையமைப்பாரா?

பொதுவாகவே இசையமைப்பாளர்கள் இரவில்தான் கம்போஸ் செய்வார்கள். இரவில்தான் எந்தவொரு இடையூறும் இல்லாமல் அமைதியாக இருக்கும். அதனால் அனிருத் மட்டுமல்லாமல் பல இசையமைப்பாளர்களுடன் இரவில்தான் பணி புரிந்துள்ளேன்.

‘உன்னை தீராமல் பிடித்தேன்… உயிரின் உள்ளே மறைத்தேன்… வெளியில் கொஞ்சம் நடித்தேன்…’ என்று காதல் நிறைந்த நிரா பாடல்களின் வரிகள் மிகவும் வர்ணித்து எழுதப்பட்டுள்ளது. நீங்கள் காதலித்ததுண்டா?

இதுவரைக்கும் காதலித்ததில்லை. நான் நேசித்ததெல்லாம் சினிமாவும், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதும்தான். பள்ளிப் பருவங்களிலும் கல்லூரிப் பருவங்களிலும் கவிதை, கட்டுரை, பாட்டுப் போட்டி போன்றவற்றில் கலந்து வெற்றிபெறுவது மட்டும்தான் என் ஒரே கவனமாக இருந்தது. இந்த நிரா பாடல் வழக்கத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான ஒரு பாடலாக அமைந்தது. தொடர்ச்சியாக கமலா கலாசா, குலேபா போன்ற ஜாலியான பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்ததால், நிரா போன்ற காதல் பாடல்களை நான் எழுதுவேன் என்பதே பலருக்கும் தெரியவில்லை.


நிரா பாடல்

அப்போதுதான் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் கவிதைகள் நிறைந்த ஒரு காதல் பாடல் வேண்டும் என்றார். நிவாஸ் கே. பிரசன்னா அமைத்த இசையே பயங்கரமாக இருந்தது. 2 முதல் 3 நாட்களுக்கு இசையை மட்டுமே கேட்டு நிறம் என்ற வார்த்தையை நிரா என்று மாற்றி படிப்படியாக இந்த பாடல் வரிகள் எழுதப்பட்டது. 2019-ல் வெளியான இந்த பாடல் மக்களால் படிப்படியாக விரும்பப்பட்டு இப்போது பெரிய ஹிட்டடித்திருக்கிறது. நான் இந்த பாணி பாடல்களையும் எழுதுவேன் என்பதை நிரூபிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வரும் “ஆஹா கல்யாணம்..” பாட்டை எழுதியுள்ளீர்கள். தலைவர் படத்திற்கு பாடல் எழுதிய தருணம் எப்படி இருந்தது?

இந்த பாடல் எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஒரு பாடல் எனலாம். அனிருத் பாடிய ‘குலேபா’ பாடலுக்குப் பிறகு என்ன பாடல் அமையப் போகிறது? என்று கேட்டபோது, ‘விரைவில் அழைக்கிறேன்’ என்றார். திடீரென்று ஒருநாள் அழைத்து, வாட்ஸ்-அப்பில் ஒரு இசையை பகிர்ந்திருக்கிறேன். இதற்கு ஒரு கல்யாண பாடல் வேண்டும் என்றும், தலைவர் ஒரு கல்யாண இடத்திற்கு செல்லும் காட்சி என்றும் கூறினார். தலைவர் பாடல் என்பதால் இதை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற பயம் இருந்தது. இரண்டு நாட்களில் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருந்ததால் ஒரே நாள் இரவில் இந்தப் பாடல் எழுதப்பட்டது. பொதுவாகவே சினிமாத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ரஜினியுடனும் கமலுடனும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வெற்றிகரமாக ரஜினி படத்தில் பாடல் எழுதிவிட்டேன். இன்னும் கமல் படத்திற்கு பாடல் எழுதத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்.


சூப்பர் ஸ்டாருடன் கு. கார்த்திக் நெகிழ்ச்சி தருணம்

ஆஹா கல்யாணம் பாடலைக் கேட்டுவிட்டு தலைவர் என்ன சொன்னார்?

பேட்ட படத்தின் வெற்றி சந்திப்பு ஒன்றில் எதார்த்தமாக அனைவரும் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென்று என்னை அழைத்து “நீ தானே அந்த ஆஹா கல்யாணம் பாட்டு எழுதியது?” என்று கேட்டார். அருகிலிருந்த கலாநிதி மாறனிடமும் என்னை அறிமுகப்படுத்தினார். அவரும் பாடல் அருமையாக இருக்கிறது என்று பாராட்டினார். பிறகு “நில்லுனா நிக்கணும் சூப்பர் ஸ்டார் ஆனாலும் சிங்கமா வாழ்ந்தாலும்…” என்ற வரிகளை எப்படி எழுதினாய்? என்று கேட்டார். அதற்கு நான், “சார் உங்களுக்கு அறிமுகப் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது அமையவில்லை. அதனால் இந்த பாடலில் எப்படியாவது உங்கள் பெயரை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதினேன்” என்றுக் கூறினேன். அதற்கு அவர் வாழ்த்து தெரிவித்துவிட்டு அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வைத்தார். இது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு தருணமாக என்றும் நிலைத்து இருக்கும்.

சினிமா பாடல்கள் தவிர, இன்டிபென்டென்ட் பாடல்களும் ஹிட் பெறுகிறது. அதுகுறித்து ஒருசில வார்த்தைகள்...

எல்லா நாடுகளிலும் இன்டிபென்டன்ட் இசை மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி வருகிறது. தமிழில் இன்டிபென்டன்ட் இசையில் அசத்தியவர் ஹிப்ஹாப் ஆதி. பல இன்டிபென்டன்ட் இசையை யூ-டியூபில் வெளியிடுவது சுலபம். ஆனால் அதை சரியான மேடையில் சேர்ப்பது பிரபலமான லேபிள்களால்தான் முடியும். அந்த வகையில் 7 அப் லேபிளால்தான் என்னுடைய இன்டிபென்டன்ட் பாடலான ஒரசாத பாடல் எனக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

விவேக் - மெர்வின் இருவரும் ஒவ்வொரு பாடல் இயற்றும்போதும் முதல் பாட்டு அமைப்பது போலவே புதிதாக அமைப்பார்கள். அவர்களுக்கு திருப்தி ஆகும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிசெய்து புதுமையானவைகளை இயக்குவார்கள். நானும் அதே சிந்தனை உள்ளவன்தான். ஒவ்வொரு பாடலும் மக்களை எப்படி கவரப்போகிறது என்பதை நினைவில் வைத்துதான் ஒவ்வொரு பாடலையும் எழுதுவேன்.


கபடதாரி படத்தின் பாடல் குறித்து கு. கார்த்திக்

நீங்கள் எழுதிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது?

‘கபடதாரி’ படத்தில் சைமன் கே.கிங் இசையமைத்து பிரதீப் குமார் பாடிய ‘கனவில் கண் மலரும்...’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. 2019 -இல் வெளிவந்த ‘நிரா’ பாடல் எப்படி 3 வருடங்களுக்குப் பிறகு மக்களால் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல் ‘கனவில் கண் மலரும்...’ பாடலும் கூடிய விரைவில் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஒரு பாடலாசிரியராக எந்த நேரத்தில் லிரிக்ஸ் எழுதுவீர்கள்?

இந்த நேரத்தில் தான் லிரிக்ஸ் எழுதுவேன் என்பது போல் எந்த குறிப்பிட்ட நேரமும் இல்லை. சில இசையமைப்பாளர்கள் ஒரு மணி நேரத்தில் பாடல் வேண்டும் என்று கேட்பார்கள். அந்த சமயங்களில் ஒரு மணி நேரத்தில் பாடல் எழுதி அனுப்புவேன். வெளியில் பயணம் செய்யும்போது வரிகள் தோன்றினால் உடனே வண்டியை நிறுத்தி அந்த வரிகளை எழுதுவேன். அதனால் என்னை பொறுத்தவரை பாடல்கள் எழுத குறிப்பிட்ட இடம், நேரம் எல்லாம் தேவையில்லை. ஜாலி ஓ ஜிம்கானா பாடலை அரை மணி நேரத்தில் எழுதினேன். கமலா கலாசா பாடலை ஒரு மணி நேரத்தில் எழுதினேன். இது போன்ற பல பாடல்களை குறுகிய நேரத்தில் எழுதியுள்ளேன்.

உங்களின் அடுத்த திட்டங்கள் என்ன?

பாடலாசிரியர் என்பதைத் தாண்டி தற்போது சத்யராஜ் நடித்த ‘அங்காரகன்’ என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறேன். வருங்காலங்களில் பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் பணிபுரிய இருக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்