இளையராஜா மகள் பவதாரிணி காலமானார் - காற்றில் கலந்த குயிலிசை பவதாரிணி (1976-2024)

Update:2024-01-26 15:43 IST
Click the Play button to listen to article

இளையராஜா மகள் பவதாரிணி மரணம்

இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணி உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராசய்யா படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்த படத்தில் பவதாரிணி பாடிய மஸ்தானா.. மஸ்தானா.. பாடல் பெரிய ஹிட் ஆனதையடுத்து, தொடர்ந்து தந்தை இளையராஜா மற்றும் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் இசையமைப்பில் பாடல்களை பாடினார். தேவா, சிற்பி உள்ளிட்டோர் இசையிலும் பாடியுள்ளார். பவதாரிணியின் குரல் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்பதால், பல வெற்றி பாடல்கள் அவரை தேடி வந்தன. 

பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு, அழகி படத்தில் ஒளியிலே தெரிவது தேவதையா பாடல், ஒரு நாள் ஒரு கனவு படத்தில் காற்றில் வரும் கீதமே பாடல், விஜயின் காதலுக்கு மரியாதை படத்தில் ஒரு சில பாடல்கள், அஜீத்தின் தீனா படத்தில் நீயில்லை என்றால் பாடல், பிரபு தேவாவின் டைம் படத்தில் தவிக்கிறேன் தவிக்கிறேன் பாடல், ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் வரும் தென்றல் வரும் வழியை பாடல் என பவதாரிணி பாடிய பாடல்கள் அதிரடி ஹிட் அடித்தன. அவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல், சுமார் 10 படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

மயில் போல பொண்ணு ஒன்னு மறைந்தது - சகோதரி விலாசினி தெரிவித்த தகவல்கள்

இந்தநிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த பவதாரிணி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பவதாரிணி இறப்பு குறித்து அவரது சகோதரி விலாசினி சில தகவல்களை தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு பித்தப்பையில் ஏதோ பிரச்சினைக்காக பவதாரிணி சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் அப்போது அது கேன்சர் என்பது தெரியவில்லையா? எப்படி இவ்வளவு பெரிய பிரச்சினை தெரியாமல் போனது என்பது பற்றியெல்லாம் தெரியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளதாக கூறியுள்ளார். கடந்த நவராத்திரி கொலுவின்போது தன்னை அழைத்து அருகில் அமர்த்தி பவதாரிணி பாட்டு பாட சொன்னதாகவும், அவர் ஏன் அப்படி செய்தார் என்பது அப்போது புரியவில்லை என்றும், ஆனால் அப்போதே அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டதாகவும் விலாசினி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


தந்தை இளையராஜாவுடன் பவதாரிணி

 கைவிரித்த மருத்துவர்கள்

அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டீஹைட்ரேஷன் பிரச்சினை என்று மருத்துவமனையில் பவதாரிணி அட்மிட் செய்யப்பட்டதாகவும், மருத்துவமனையிலிருந்து ஃபோனில் பேசிய அவரது கணவர் சபரி, அக்கா பவதாரிணியை கடைசியாக வந்து பார்த்துவிட்டு போ விலாசினி என்று கூறியதாகவும், ஏன் என்று அதிர்ச்சியடைந்து கேட்டதற்கு 4-ம் நிலை கேன்சர் என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்ததாக கூறியுள்ளார். 

உடனிருந்து பார்த்துக்கொண்ட யுவன்சங்கர் ராஜா

இந்த சூழலில்தான், ஆயுர்வேத சிகிச்சை பெற்றால் கூடுதல் காலம் பவதாரிணி உயிர் வாழ்வார் என்று இலங்கையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரை சகோதரர் யுவன்சங்கர் ராஜாதான் கூடவே இருந்து பார்த்துக் கொண்டதாகவும், உடனிருந்ததாகவும் தங்கை விலாசினி கூறியுள்ளார். 

இதனிடையே தனக்கு கேன்சர் இருப்பதை குடும்பத்தினர் ஆரம்பத்தில் மறைத்திருந்தாலும், மெல்ல அதனை தெரிந்து கொண்ட பவதாரிணி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது பிறந்தநாளை உறவினர்களை அழைத்து சிறப்பாக கொண்டாடியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்