அம்பு தொடுக்கிறேன்! நடிகர் கார்த்திக்

கார்த்திக், ராதாவை காதலித்து மணப்பாரா?

Update:2024-01-23 00:00 IST
Click the Play button to listen to article

(18.04.1982 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

கார்த்திக், ராதாவை காதலித்து மணப்பாரா? தொடருங்கள்!

என்னை எங்காவது பார்த்துவிட்டால், ரசிகர் கேட்கும் முதல் கேள்வி...

"கார்த்திக்! உன் ராதா எங்கே?" ரசிகர்களின் உள்ளுணர்வு எனக்குப் புரிகிறது! இது இயற்கையான எண்ணம்தான்!

ரசிகர்கள் ஆசை

ஒரு படத்தில், கதாநாயகனும், கதாநாயகியும் புதுமுகமாக இருந்து, அவர்கள் ஜோடிப் பொருத்தம் நன்றாக அமைந்துவிட்டால், அந்த நாயகனும், நாயகியும் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவது இயல்புதான்! "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் அறிமுகமான என்னையும், ராதாவையும், கண்ணன் - ராதையாக ரசிகர்கள் நோக்குகிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது! ரதி-மன்மதன் என்று எங்களை வர்ணித்து ரசிகர்கள் கடிதம் கூட எழுதுகிறார்கள்.

தமிழ் சினிமாவில், இதுபோன்று, சினிமாவில் ஜோடி சேர்ந்தவர்கள், பின்பு வாழ்க்கையில் கணவன்- மனைவி ஆகியிருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது! ஆனால், அதை விரும்புகிறார்கள் என்பது மட்டும் உண்மை! 'கார்த்திக் உன் ராதா எங்கே” என்று கேட்பதோடு ரசிகர்கள் நிறுத்திக் கொள்கிறார்களா? "திருமணச் சாப்பாடு எப்போது?" என்றும் கேட்கிறார்கள்.


நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை ராதாவுடன் கார்த்திக் நடித்த திரைப்படக் காட்சிகள் 

ராதா காதலிக்கிறாரா?

பத்திரிகை கிசு கிசுக்களை வைத்துக் கொண்டு, என் நெருங்கிய நண்பர்கள் கூட, "டேய்! நீ ராதாவை காதலிப்பது உண்மை தானா?" என்று காதைக் கடிக்கிறார்கள்! "ராதாவும் உன்னை காதலிக்கிறதா?" என்று கேட்கிறார்கள்! இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்! நான் ஆண்மகன்! ராதாவையும் காதலிக்கலாம்; சாந்தியையும் காதலிக்கலாம். என்னை யாரும் தடுக்க முடியாது. ஆனால், நான் காதலிப்பவர்கள் எல்லோரும் என்னைக் காதலிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அவர்களுக்கு என்று ஒரு மனம்! அதில் யார் குடியிருக்கிறர்கள் என்பது யாருக்குத் தெரியும்! "ராதா! நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னைக் காதலிக்க வேண்டும்" என்று நான் போராட்டம் நடத்த முடியுமா? அப்படி காதல் பிச்சை கேட்பது நல்ல ஆண் மகனுக்கு அடையாளம் ஆகுமா?


'ஒரு கை பார்ப்போம்' திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் ராதா 

புதுமுகம்

சரி, இப்பொழுது நான் “காதல் காதல்” என்று அலைவதற்கு அப்படி என்ன வயது ஆகிவிட்டது?. சின்னப் பையன். இன்னும் ஆளாக வேண்டியவன். இந்த வயதில் "காதல்" என்றால், "முளைத்து மூன்று இலை விடவில்லை”. அதற்குள் காதலா? என்று பெரியவர்கள் குட்டமாட்டார்களா? நான் நடிப்புக்குப் புது முகம். வளர வேண்டியவன். நிறைய சாதிக்க வேண்டியவன்! இந்த வயதில் கடமையை மறந்து, காதலை நினைத்து கொண்டு இருந்தால், என்னை ஆளாக்கியவர்களுக்கு எவ்வளவு பெரிய இழுக்கு! என் அப்பாவை (நடிகர் முத்துராமன்) உங்களுக்குத் தெரியும். சினிமா உலகில் அவர் பக்கா ஜென்டில்மேன். அவர் பிள்ளையான நான் அப்பா பெயரைக் கெடுத்துவிடக்கூடாதே! எனவே, முதலில் நடிப்பு, பிறகுதான் காதல்.


'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் காட்சி மற்றும் நடிகர் கார்த்திக்கின் தனிப்பட்ட புகைப்படம் 

அம்மா முடிவு

முன்னே சொன்னது போல, எனக்கு காதல் உணர்வுகள் உண்டு. என் மனதுக்கு பிடித்தவளை காதலிப்பேன். அவளும் என்னை காதலித்தால், அம்மாவிடம் சொல்லி, மணம் முடிப்பேன். ஆனால் ஒருபோதும் தொழிலை மறந்து காதலில் சுற்றிக்கொண்டு இருக்கமாட்டேன்!. என் மனதுக்குப் பிடித்த ஒருத்தி கிடைக்காவிட்டால், பெண் தேடும் பொறுப்பை அம்மாவிடமே விட்டு விடுவேன். ஒருபோதும், பெற்றவர்களுக்கு அவமரியாதை ஏற்படும்படி நான் நடந்தது கொள்ள மாட்டேன்.

Tags:    

மேலும் செய்திகள்