நானும் துணிந்து விட்டேன்! குமாரி பத்மினி

“கவர்ச்சி வேடத்தில் நடிக்கவும், ஆடவும் நான் தயார்!' என்று நடிகை குமாரி பத்மினி கூறினார்.

Update:2024-07-02 00:00 IST
Click the Play button to listen to article

(06.04.1975 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

“கவர்ச்சி வேடத்தில் நடிக்கவும், ஆடவும் நான் தயார்!' என்று நடிகை குமாரி பத்மினி கூறினார். இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் அவரே விளக்கினார்.

ராணி நிருபரிடம் குமாரி பத்மினி சொன்னதாவது:

கவர்ச்சி காட்ட தயார்!

“தமிழ் சினிமாவில் எனக்கு என்று ஓர் இடம் இருந்து வந்தது. துணைப் பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வந்தேன்! ஆனால், இப்பொழுது தயாரிப்பாளர்கள் என்னை அடியோடு மறந்து விட்டார்கள். தொடக்க காலத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து உதவிய டைரக்டர்கள் கூட, பத்மினி! உனக்கு ஏற்ற வேடம் இல்லை. நீ கவர்ச்சி வேடத்தில் நடிக்கமாட்டாய்” என்று நேரிலேயே சொல்லி விட்டார்கள்!.


“கண்காட்சி” படத்தில் குமாரி பத்மினி

"மற்ற டைரக்டர்களும் அப்படி எண்ணிக் கொண்டு என்னை ஒதுக்கி வருகிறார்கள். இனிமேல் நான் குணச்சித்திர வேடம் வரும் வரும் என்று காத்திருக்கப்போவது இல்லை. நான் துணிந்து விட்டேன். எந்த வேடத்தில் எந்த ஆடையில் தோன்றவும் நான் தயார்! கவர்ச்சி உடையில் ஆடக் கூடத் தயங்கமாட்டேன்!". இவ்வாறு குமாரி பத்மினி கூறினார்.

"சொந்தங்கள் வாழ்க” என்ற படத்தில். இரண்டு காட்சிகளில் வந்து பொம்மை போல நின்று விட்டுப் போகிறீர்களே! எப்படி அப்படி நடிக்க ஒப்புக் கொண்டீர்கள்? என்று நிருபர் கேட்டார்!

"அந்தப் படத்தில் மனதில் நிற்கிற மாதிரி நல்ல வேடம் என்றுதான் எண்ணை ஒப்பந்தம் செய்து, முன் பணமும் கொடுத்தார்கள்". நல்ல வேடம் என்றதால், ஒப்பந்தம் செய்யும் போது நான் பணத்தைக் கூட ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மூன்று நாள் படப்பிடிப்பு நடந்தது. முதல் நாள் ஒரு நடனக் காட்சியில் நிற்கச் சொன்னார்கள். நானும் நின்றேன். அப்போதே டைரக்டரிடம் கேட்டேன். "ஏன், என்னை இப்படி பொம்மை போல நிறுத்துகிறீர்கள்" என்று. "உங்கள் பாத்திரம் பின்னால் அதிகம் வருகிறது" என்று டைரக்டர் சொன்னார். நானும் நம்பினேன்!


“பிள்ளை செல்வம்” படத்தில் அழகிய தோற்றத்தில்

அடுத்த நாள், திருமணக் காட்சியில் நிற்கச் சொன்னார்கள். அப்போதும் டைரக்டரிடம் கேட்டேன், முதல் நாள் சொன்ன பதிலையே திருப்பிச் சொன்னார். மற்றொரு நாள் சந்தித்து கேட்டபோது, "நான் நினைத்தது வேறு. இப்பொழுது நடந்து கொண்டு இருப்பது வேறு. கதைக்கு ஏற்றார் போல் நடிகர்- நடிகைகளை நான் ஒப்பந்தம் செய்யவில்லை. படத்தைப் பற்றி நினைக்கும் போது, எனக்கே குழப்பமாக இருக்கிறது” என்று டைரக்டர் சொல்லி விட்டார்.

வெட்டி விட்டோம்!

ஒரு நாள் இரவு திடீர் என்று வந்து, "நாளை காலை படப்பிடிப்பு இருக்கிறது" என்று சொன்னார்கள். "எனக்கு வேறு கால்ஷீட் இருக்கிறது" என்று சொன்னேன். அதன் பிறகு யாரும் என்னிடம் வரவே இல்லை. "படம் எல்லாம் முடிந்து விட்டது” என்று சொல்லி விட்டார்கள். உடனே நான் டைரக்டரிடம் போய், "ஏற்கனவே எடுத்த மூன்று காட்சிகளும் படத்தில் வருமா? " என்று கேட்டேன். அவர்களோ, "எல்லாவற்றையும் வெட்டி விட்டோம் ஒரு காட்சியும் வராது" என்று சொல்லி விட்டார்கள்!.


“கங்கா கவுரி” படத்தில் நாரதரின் பெண் அவதாரமாக வரும் குமாரி பத்மினி  

படம் வெளிவந்த பிறகுதான் தெரிகிறது. அவர்கள் சொன்னபடி, என் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெட்டவில்லை என்பது! இது முன்பே தெரிந்து இருந்தால், நடிகர் சங்கத்திடம் முறையிட்டு, படத்தை நிறுத்தியிருப்பேன். ஒப்பந்தப்படி எனக்கு வர வேண்டிய பணத்தை வாங்கி இருப்பேன். இவ்வளவு பெரிய டைரக்டர் என் பெயரை கெடுப்பது மாதிரி படத்தை எடுத்து வெளியிட்டுவிட்டாரே என்று நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது! இவ்வாறு குமாரி பத்மினி சொன்னார்.

Tags:    

மேலும் செய்திகள்