இணையத்தை தெறிக்கவிட்ட நெப்போலியன் மகன் திருமணம்! - ட்ரெண்டிங் சினிமா செய்திகள்!

தனது மகன் குறித்து மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று நெப்போலியன் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருக்கிறார். தனது மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பது தெரியவந்தவுடன் இந்தியாவில் பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் பலனளிக்காததால் அவருடைய ஆசைக்கிணங்க அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

Update:2024-11-19 00:00 IST
Click the Play button to listen to article

சோஷியல் மீடியாவை திறந்தாலே நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் குறித்த வீடியோக்களைத்தான் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் நடிகைகள் மீனா, ராதிகா, குஷ்பூ போன்றோர் கலந்துகொண்டு விழாவையே அமர்க்களப்படுத்தினர். இது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘கங்குவா’ திரைப்படம் சூப்பரா? சுமாரா? என்ற கேள்விகளும் அதிகம் கேட்கப்பட்டு வருகின்றன. சரி இந்த வாரம் தென்னிந்திய திரையுலகில் என்னென்ன செய்திகள் முன்னணி வகிக்கின்றன. சற்று பார்க்கலாம்.

கங்குவாவில் சம்பளம் இவ்வளவு தானா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான ‘கங்குவா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா படம் ரிலீஸாகியிருப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் இரண்டு வருட கடின உழைப்பிற்கு சூர்யாவிற்கு கிடைத்திருக்கும் சம்பளம் மிகவும் குறைவுதான். பொதுவாக முன்னணி ஹீரோக்களுக்கு 3 டிஜிட் கோடியில் சம்பளம் என்னும் நிலை இந்திய சினிமாவில் காணப்படுகிறது.


‘கங்குவா’ படத்திற்கு சூர்யாவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.39 கோடி?

ஆனால் ‘கங்குவா’ படத்திற்கு சூர்யாவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.39 கோடி என்று தகவல்கள் கசிகின்றன. இது விஜய் சம்பளத்தில் பாதிகூட இல்லை என ஆதங்கப்பட்டு வருகின்றனர் அவருடைய ரசிகர்கள். அதுபோக, இந்த படத்தில் ஹீரோயின் திஷா பதானிக்கு ரூ. 3 கோடியும், வில்லனாக மிரட்டிய பாபி தியோலுக்கு ரூ. 5 கோடியும்தான் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

காதல் தோல்வி குறித்து ராஷி கண்ணா

தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வலம்வரும் நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. தனுஷுடன் தமிழில் இவர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இங்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. தற்போது இவர் நடிப்பில் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற தெலுங்கு படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட இவர், தனது காதல் தோல்வி குறித்து மனம் திறந்திருக்கிறார். அந்த பேட்டியில், பொதுவாகவே தான் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவள் என்றும், தனது முதல் காதல், தோல்வியில் முடிந்தபோது மிகவும் வேதனைப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.


காதல் தோல்வி குறித்து ராஷி கண்ணாவின் பகிர்வு

அதனால், தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அதுதான் வாழ்க்கையின் மோசமான கட்டமாக இருந்ததாகவும் கூறியதோடு, அதன்பிறகுதான் நடிப்பின்மீது கவனம் செலுத்த தொடங்கியதாகவும் கூறியுள்ளார். நடிகையான பிறகு பொது இடங்களில் மக்கள் தன்னை பார்க்க கூடும்போதுதான் ஒரு நடிகைக்கு இவ்வளவு புகழ் கிடைக்குமென்று தான் புரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

தனுஷுக்கு உதவிய மகேஷ் பாபு!

‘ராயன்’ படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரா’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவரும் தனுஷின் 51வது படமான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் அறிமுக வீடியோக்களுக்கு பிறகு எந்த அப்டேட்ஸும் வராததால் அதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.


தனுஷின் ‘குபேரா’ பட க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட மகேஷ் பாபு

இந்நிலையில் ‘குபேரா’ பட க்ளிம்ஸ் வீடியோவை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை நடித்திராத கெட்டப்பில் தனுஷ் இருக்கிறார். திருப்பதி, மும்பை, தாய்லாந்து என இதுவரை 80% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடையாளம் தெரியாத அளவுக்கு தனுஷ் இந்த படத்திற்காக தனது உடலை வருத்தியிருப்பதாகவும், படம் சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இணையும் இரு துருவங்கள்?

மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டியும் மோகன்லாலும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘டேக் ஆஃப்’ மற்றும் ‘மாலிக்’ ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயண் இப்படத்தை இயக்கவிருப்பதாகவும், அந்த படத்தில் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் இணைந்து நடிப்பதுடன், அதை இருவருமே சேர்ந்து தயாரிப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 16ஆம் தேதி இலங்கையில் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இணைந்து நடிக்கவிருக்கும் மம்மூட்டி - மோகன்லால்

ஏற்கனவே மம்மூட்டி தயாரிக்கும் படத்தில் விநாயகன் ஹீரோவாக நடிக்க, அதில் அவர் வில்லனாக நடித்துவருகிறார். அதேபோல், பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கும் ‘எம்புரான்’ படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்துவருகிறார் மோகன்லால். இந்நிலையில் இந்த இருவரும் இணைந்து தயாரித்து நடிக்கும் படம் உருவாகவிருக்கும் செய்தி மலையாள ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

காதலில் விழுந்த விஜய் ஹீரோயின்!

சமீபத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்துவரும் நிலையில் அந்த படத்தின் கதாநாயகி மீனாட்சி சௌத்ரி காதலில் விழுந்திருப்பதாக அடுத்த செய்தி வெளியாகியுள்ளது.


தனது காதலன் சுஷாந்துடன் மீனாட்சி சௌத்ரி

தெலுங்கு நடிகரும், நாகர்ஜூனாவின் சகோதரி மகனுமான சுஷாந்தும், மீனாட்சியும் ‘இச்சடா வாகனமுல்லு நீலுபரடு’ படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணத்திற்கு பிறகு இவர்கள் திருமணம் நடக்கும் என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நெப்போலியன் மகன் திருமணம் - சந்திக்கும் சவால்கள்!

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு நவம்பர் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவரை திருநெல்வேலியைச் சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண் கரம்பிடித்தார். இந்த திருமணம் குறித்த செய்திகள்தான் தற்போது சமூக ஊடகங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது. ஜப்பானில் வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு தம்பதியரை வாழ்த்தினர். உடல்நலம் சரியில்லாத ஒருவரை திருமணம் செய்துகொண்ட அக்‌ஷயாவிற்கு சிலர் வாழ்த்து தெரிவித்தாலும், நெப்போலியன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தனுஷை தனக்கு பிடித்துபோய்தான் திருமணம் செய்திருப்பதாக அக்‌ஷயா விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலும் நெப்போலியனின் மாமனாரை தங்களுக்கு நீண்டகாலமாக தெரியும் என்றும், இந்த திருமணத்திற்கு தங்களுடைய பெண்ணை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அக்‌ஷயாவின் பெற்றோரும் விளக்கமளித்திருக்கின்றனர்.


நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம்

இந்நிலையில் தனது மகன் குறித்து மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று நெப்போலியன் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருக்கிறார். தனது மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பது தெரியவந்தவுடன் இந்தியாவில் பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் பலனளிக்காததால் அவருடைய ஆசைக்கிணங்க அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவருடைய திருமணம் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு பட்டிமன்றமே நடந்துவருவதாகவும், தனது மகன் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியில்லாதவர் என விமர்சிப்பது தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளார். விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து இன்றுவரை புதுமண தம்பதிகள் குறித்த வீடியோக்களை பல தனியார் யூடியூப் சேனல்கள் கவர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்