பெற்ற வயிறு பூரித்தது! - ஷோபா அம்மா பிரேமா
ஷோபா நடித்த "கரை காணா கடல்" படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக முடிந்துவிட்டது.
(07.09.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
ஷோபா நடித்த "கரை காணா கடல்" படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக முடிந்துவிட்டது. அன்றே நாங்கள் எல்லோரும் சென்னைக்குப் புறப்பட்டோம். டைரக்டர் சேதுமாதவன் சாரிடம் போய் சொல்லிவிட்டு வந்து ஷோபா காரில் ஏறினாள். கார் புறப்படவும், அவளுக்கு சத்தியன் நினைவு வந்துவிட்டது. “சத்தியன் அங்கிளிடமும் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்” என்று இறங்கி ஓடினாள். நானும் (பிரேமா) அவளோடு சென்றேன். சத்தியன், அறைக்குள் நின்றபடியே முகச்சவரம் செய்துகொண்டு இருந்தார்.
முத்தம்
ஷோபா, சட்டென்று அறைக்குள் செல்ல பயந்து வெளியே நின்று தலையை மட்டும் நீட்டினாள். சத்தியன், ஷோபாவை கவனித்து விட்டார். "வா மோளே!" என்று அழைத்தார். "அங்கிள்! நான் ஊருக்கு போய்விட்டு வருகிறேன்" என்று ஷோபா சொன்னாள். உடனே சத்தியன், ஷோபாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.. "பிறகு என் தலையில் ஒரு கையும் ஷோபா தலையில் ஒரு கையும் வைத்து, 'அம்மாவை விட, நீ சிறந்த நடிகையாக வேண்டும். எப்பொழுதும் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும்” என்று வாழ்த்தினார். அதன் பிறகு சத்தியனை ஷோபா சந்திக்கவில்லை. “கரை காணா கடல்” படம் சத்தியனுக்குக் கடைசிப் படம் ஆகிவிட்டது. அடுத்த சில மாதத்தில், சத்தியன் இரத்தப்புற்று நோயால் இறந்து போனார்.
பக்தி
சத்தியன் சொன்னபடி ஷோபா ஜெபிக்க தவறியது இல்லை. குழந்தையில் இருந்தே ஷோபாவிடம் தெய்வ பக்தி அதிகம் இருந்தது. எந்த நேரத்தில் நாங்கள் கோவிலுக்குப் புறப்பட்டாலும், ஷோபா முதல் ஆளாக முன்னே வந்து நிற்பாள். படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களில் உள்ள கோவில்களையும் பார்க்காமல் விடமாட்டாள். கோவிலில் உள்ள அத்தனை தெய்வச் சிலைகளையும் தொட்டு வணங்குவாள். எதாவது ஒன்று விட்டுப்போனால், அவளுக்கு முழு திருப்தி ஏற்படாது. திரும்பச்சென்று தொட்டு வணங்கிவிட்டு வருவாள்.
ஷோபாவின் இருவேறு முக பாவனைகள்
இராமாயணம்
ஷோபாவுக்கு சின்ன வயதிலேயே இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதையில் உள்ள கதைகள் எல்லாம் அத்துபடி. ஷோபா, பொழுதுபோகாத நேரத்தில் அப்பாவிடம் சென்று, "டாடா கதை சொல்லுங்கள்” என்று கேட்பாள். அவர், இராமாயணத்தில் இருந்தும், மகாபாரதத்தில் இருந்தும் கதை சொல்லுவார்.
மணிக்கணக்காக...
அந்தக் கதைகள் ஷோபாவுக்கு நிரம்பப் பிடித்தன. சில நாள் மணிக்கணக்கில் கதை நடக்கும். ஷோபா விடமாட்டாள். "இந்த இடத்தில் வேண்டாம். வேறு ஒரு நல்ல இடத்தில் நிறுத்துங்கள்” என்று கதையை வளர்ப்பாள். இப்படி மணிக்கணக்காக கதை நடப்பது எனக்கு எரிச்சலாக இருக்கும். அதற்காக கதையை நிறுத்தச் சொல்லமாட்டேன். குழந்தை ஆசையோடு கேட்டுக்கொண்டு இருக்கிறதே! அப்படியே இரண்டு பேரையும் எழுப்ப வேண்டும் என்றால், 'கதையை நிறுத்துங்கள்” என்று நேரிடையாகக் கூறாமல், "குழந்தைக்குக் கதையை ஆங்கிலத்தில் சொல்லுங்கள்" என்று அவரிடம் கூறுவேன். அவர் மலையாளத்தில் சொல்லுவதை நிறுத்தி விட்டு, ஆங்கிலத்தில் கூறத் தொடங்குவார். "டாடா! போதும் நிறுத்துங்கள். மம்மி இல்லாதபோது மீதியை சொல்லுங்கள்" என்று ஷோபா உடனே எழுந்து விடுவாள். நான் சிரித்துக்கொள்ளுவேன். வீட்டில் அடிக்கடி நடக்கும் விளையாட்டு, இது.
உடல் நலம்
ஒரு சமயம் ஷோபாவின் அப்பா உடல் நலம் இல்லாமல் படுத்தார். ஐம்பது, அறுபது நாள் அவர் படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது. அப்போது அவருக்கு ஒரே வேலை, ஷோபாவுக்கு புராணக் கதைகள் சொல்லுவதுதான். ஷோபா பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர, மற்ற நேரம் முழுவதும் வீட்டில் புராணக் கதை தான் நடக்கும். ஏறக்குறைய எல்லாக் கதைகளையும் அவர் சொல்லி முடித்தார்.
பிரியும் வரை...
ஷோபாவுக்கு எதையும் ஒருமுறை சொன்னால் மனதில் பதித்துக்கொள்வாள். இப்படித்தான், இராமாயணமும், மகாபாரதமும், பகவத்கீதையும் ஷோபாவின் மனதில் பதிந்தன. அதன் பிறகு, ஷோபாவிடம் எந்த நேரத்தில் புராணக்கதைகள் கேட்டாலும் மிக அழகாகச் சொல்லுவாள். எங்களிடம் இருந்து அவளை பிரியும்வரை இந்த ஆற்றல் அவளிடம் இருந்தது.
சிறிய வயதிலேயே பெரிய கேரக்டர்களை செய்த ஷோபா
நடிப்பு
நடிப்பும் ஷோபாவின் உடம்பில் ஊறிய ஒன்றாக இருந்தது. அவளுக்கு ஒருமுறைக்கு இருமுறை நடிப்பு சொல்லிக் கொடுத்து, தலையில் அடித்துக் கொண்ட டைரக்டரை நான் பார்த்ததே இல்லை. ”தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற தமிழ்ப் படத்துக்குப் பிறகு, ஷோபா தொடர்ந்து சில காட்சியில் தோன்றும்படி அமைந்த முதல் படம் "அவள் ஆல்பம் வைகி போயி” (மலையாளம்). அந்த முதல் படத்தில் கேமரா முன் நின்றபோது கூட, டைரக்டருக்கு எந்தக் கஷ்டமும் அவள் கொடுத்தது இல்லை.
நல்ல பெயர்
காட்சி எப்படி இருக்க வேண்டும் என்று அவளுக்கு ஒரு முறை விளக்கினால் போதும், அவள் அப்படியே நடித்துக் காட்டுவாள். இதனால் ஷோபாவுக்கு எல்லாரிடமும் நல்ல பெயர். "அல்லாஹு அக்பர்” என்ற படத்தில் ஷோபாவுக்கு முஸ்லிம் சிறுமி வேடம். நானும் அந்தப் படத்தில் நடித்தேன். முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கு முன், அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று நான் ஷோபாவுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். அதைக் கவனித்த டைரக்டர் மொய்துபடியத் "பிரேமா அம்மா! ஷோபாவுக்கு நீங்கள் நடிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டியது இல்லை. அவள் ஆயிரம் பேருக்கு கற்றுக் கொடுப்பாள்" என்று பட்டென கூறிவிட்டார். அதைக் கேட்டதும் ஷோபாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. "மம்மி! டைரக்டர் அங்கிள் சொன்னதைக் கேட்டீர்களா? எனது திறமை எப்படி?" என்று என்னிடம் பெருமையாகக் கேட்டாள்.
டைரக்டர் சொன்னது எனக்கு முகத்தில் அறைந்தது போல இருந்தாலும், பெற்ற வயிறு பூரித்தது. எனது ஆசைக் கனவுகளே, அவள் சிறந்த நடிகை ஆக வேண்டும் என்பதுதானே! ஆனால், ஒருநாள் “எப்படி நடிக்க வேண்டும்” என்பதை ஷோபா எனக்கே சொல்லித்தருவாள் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை! அதுவும் நடந்தது!
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்….