`RRR' பட நடிகையிடம் ‘ஸாரி’ கேட்ட பிரபல இயக்குனர்

குழந்தை பிறந்த பிறகு ஆலியா பட் நடிக்கும் முதல் படம் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ ஆகும்.

Update:2023-07-25 09:45 IST
Click the Play button to listen to article

தயாரிப்பாளர்  யாஷ் ஜோஹர் மகனான கரண் ஜோஹர் இந்தி திரையுலகில் ‘குச் குச் ஹோதா ஹை’ படம் மூலம் 1998 இல் இயக்குனராக அறிமுகமானார். அவருடைய முதல் படமே சிறந்த முழு பொழுதுபோக்கு திரைப்படம் பிரிவில் தேசிய விருது பெற்றதோடு, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதைக்காக பிலிம்பேர் விருதுகளையும் வென்றது. இயக்குனராக மட்டுமல்லாமல் கரண் ஜோஹர் ‘தர்மா புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி ‘காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.


ஆலியா பட் உடன் கரண் ஜோஹர்

இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட்டை ‘ஸ்டூன்ட் ஆப் தி இயர்’ என்ற படம் மூலம் கரண் ஜோஹர் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.  அதன்பிறகு ‘ஹைவே’, ‘ஷாந்தார்’, ‘ஏ தில் ஹை முஸ்கில்’, ‘குல்லுபாய்’, ‘2 ஸ்டேட்ஸ்’, ‘கலங்’, ‘ராசி’ என வரிசையாக பல இந்திப்படங்களில் நடித்து இந்தி திரையுலகின் முன்னணி நடிகை ஆனார். ஆலியா பட் நடித்த பெரும்பாலான படங்களை கரண் ஜோஹர்தான் தயாரித்திருந்தார். ஆலியா பட்டை தனது வளர்ப்பு மகள் என்று கரண் ஜோஹர் கூறும் வகையில் அவர்களிடையே நல்ல நட்புறவு இருந்து வந்தது.

ஆஸ்கார் விருது வென்ற ‘ஆர்ஆர்ஆர்’ பான் இந்தியா படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவிலும் ஆலியா பட்டுக்கு அறிமுகமானார். இப்படி உச்ச நாயகியாக வலம் வந்த நிலையில் நடிகர் ரன்பீர் கபூரை அவர்  2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் ரன்பீருடன் நடித்த ‘பிரம்மாஸ்திரம் பாகம் 1’ படம் பான் இந்தியா படமாக வெளியாகி இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  


குழந்தை பிறந்த பிறகு ஆலியா பட் நடிக்கும் முதல் படம் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ ஆகும். இந்தப் படத்தை கரண் ஜோஹர் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரிதம் இசையில் அரிஜித் சிங் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடிய ‘தும் க்யா மிலே’ பாடலின் படப்பிடிப்பு குறித்த ஒரு வீடியோவை சமீபத்தில் ஆலியா பட்  தனது யூடியூப் சானலில் விலாக் ஆக வெளியிட்டிருந்தார்.

ஏழு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில்  காஷ்மீரின் ரம்மியமான பின்னணியில் வீடியோவை பதிவு செய்திருக்கிறார் ஆலியா பட். படப்பிடிப்புக்கு  மேக்கப் போட்டு தயாராவதாக ஆரம்பிக்கும் வீடியோ படம் மேக்கிங் பின்னணியைக் காட்டுகிறது. ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் இணைந்து நடித்த காதல் காட்சிகள் அதில் படமாக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு காரில் கரண் ஜோஹருடன்  ஆலியா பட் உரையாடிக் கொண்டே பயணிப்பதாக வீடியோ தொடர்கிறது. அதில் அன்று நிகழ்ந்த பாடல் காட்சியில் தங்களுக்கு பிடித்த புடவைகளைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டனர். அப்போது பல வண்ணத்தில் இருந்த ’குல்பி’ சேலை மேலும் ‘இளஞ்சிவப்பு மற்றும் பச்சை’ நிற புடவையை கரண் ஜோஹர் பிடித்திருப்பதாக கூறினார். அதற்கு ஆலியா பட் ‘இளஞ்சிவப்பு மற்றும் பச்சை’ மேலும் ‘கருப்பு’ நிற புடவை தமக்கு பிடித்ததாகத் தெரிவித்தார்.

 அந்த பேச்சின் ஊடாக கருப்பு நிற புடவை அணிந்து நடித்தபோது ரன்வீர் சிங் அணிந்திருந்த பபர் ஜாக்கெட்டை கைகளால் பற்றிக் கொண்டதாக ஆலியா பட் தெரிவித்ததும், அப்படிப்பட்ட மைனஸ் டிகிரி குளிரில் ஷிபான் சேலை காஸ்டியூம் தந்ததற்காக கரண் ஜோஹர் ஆலியா பட்டிடம் மன்னிப்பு கோரினார்.

Full View

முன்னதாக கரண் ஜோஹர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இது ஒரு தேவதையைப் பெற்றெடுத்து பின் ஆலியா பங்கேற்கும் முதல் படப்பிடிப்பாகும். உண்மையில் ஷிபான் சேலையில் ஆலியாவை உறைய வைத்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். படப்பிடிப்பு முழுவதுமே நான் உடல்நலக் குறைவாகத்தான் (கர்மவினை) இருந்தேன். ரன்வீர் கூட பதட்டத்தில் இருந்தார். இது அவருக்கு மலைப்பிரதேச  காதல் காட்சியின் முதல் உதட்டசைவாகும். உண்மையில் அவர் ஒரு வீரர்தான்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்