தொடர் வெற்றிகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துவரும் நடிப்பு ராட்சஸன் பகத் பாசில்!

மலையாள சினிமாவில் மிகமுக்கியமான நடிகர் பகத் பாசில். இவரது தந்தை மலையாள சினிமா வரலாற்றில் பாப்பாயுதே ஸ்வந்தம் அப்பூஸ் (1992), மணிச்சித்திரதாழு (1993) மற்றும் அனியாதிபிரவு (1997) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர். பகத்தின் தனி சிறப்பு என்னவென்றால் தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திடுவார். இதனாலேயே உலகமெங்கிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தனது முதல் படமான கையேந்தும் தூரத்து படத்திற்காக பல விமர்சனங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்திருந்தார். அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகிவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2009-ம் ஆண்டு வெளியான கேரளா கஃபே என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார் பகத் பாசில். அங்கு ஆரம்பித்தது பகத் பாசிலின் திரை பயணம், அங்கிருந்து நடிப்பு அசுரனாக திகழ்ந்து வருகிறார்.

Update: 2024-04-15 18:30 GMT
Click the Play button to listen to article

மலையாள சினிமாவில் மிகமுக்கியமான நடிகர் பகத் பாசில். இவரது தந்தை மலையாள சினிமாவில் பாப்பாயுதே ஸ்வந்தம் அப்பூஸ் (1992), மணிச்சித்திரதாழ் (1993), அனியாதிபிரவு (1997) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர். பகத்தின் தனி சிறப்பு என்னவென்றால் தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திடுவார். இதனாலேயே உலகமெங்கிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தனது முதல் படமான கையேந்தும் தூரத்து படத்திற்காக பல விமர்சனங்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்திருந்தார். அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகிவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2009-ம் ஆண்டு வெளியான கேரளா கஃபே என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார் பகத் பாசில். அங்கு ஆரம்பித்தது பகத் பாசிலின் திரை பயணம். அங்கிருந்து நடிப்பு அசுரனாக திகழ்ந்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தொடர்ந்து வெவ்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றன. சமீபத்தில் இவர் நடித்த ஆவேசம் திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கட்டுரையில் அவர் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றி அடைந்த சில படங்களை பற்றியும், அவர் நடித்த கதாபாத்திரங்களை பற்றியும் காணலாம்.


மலையான்குஞ்சு படத்தில் பகத் பாசில் 

மலையான்குஞ்சு - அனில்குமார்

மின்சாதனங்களை சரிபார்க்கும் அனில்குமார் எனும் அனிக்குட்டன் (பகத் பாசில்) கேரளாவின் மலைக்கிராமம் ஒன்றில் தாயுடன் வசித்து வருகிறார். அது மழைக்காலம் என்பதால், பாதுகாப்புக்காக மக்கள் ஊரிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்கும்படி அரசால் அறிவுறுத்தப்படுகின்றனர். இதனை வெறும் பயமுறுத்தும் சங்கதியாக நினைத்து, முகாமுக்கு செல்ல மறுக்கும் அனிக்குட்டன் நிலச்சரிவு ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்.அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார்? அவருடன் சேர்ந்து சிக்கியவர்களின் நிலை என்னவானது? என்பதுதான் படத்தின் கதை. அனில்குமாராக நடித்திருக்கும் பகத் பாசில், சுற்றிலும் சிதைந்து கிடக்கும் பொருட்களுக்கு இடையே நிலச்சரிவில் மாட்டிக்கொள்ளும் கை, கால்களை பயன்படுத்தாமல் வெறும் முகத்திலிருந்து மட்டுமே வலியையும், வேதனையையும், பயத்தையும் திரையில் காட்ட வேண்டும். இந்த சூழலில் எல்லாவற்றையும் கண்களிலிருந்தும் முகத்திலிருந்தும் கச்சிதமாக கடத்திவிட்டு, நம்மையும் அந்த குழிக்குள்ளேயே இழுத்துச் செல்லும் அசுர நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பகத் பாசில். அதற்கான அவரது உழைப்பு அவ்வளவு எளிதானதல்ல. மொத்தப் படத்தையும் தன்னுடைய நடிப்பால் வியக்க வைத்திருப்பார். ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியான போதிலும் அனிக்குட்டன் நம் மனதில் நீங்கா இடம்பிடித்துவிடுவார்.


பாச்சு கதாபாத்திரத்தில் பகத் பாசில் 

பாச்சுவும் அத்புத விளக்கும் - பாச்சு

மும்பையில் மெடிக்கல் கடை நடத்தி வரும் பாச்சு(பகத் பாசில்) என்கிற பிரசாந்திற்கு, தன் வாழ்வில் நடக்கும் எதிர்பாராதச் சம்பவங்கள் ஒரு பயணம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அந்த விபரீத பயணம் அற்புதமாக மாறுமா? அதனால் அவனுக்கும் அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. அழகான வெகுளித்தனம், எதிலும் முழுமையில்லாத் தன்மை, நல்லவன், ஆனால் கொஞ்சம் கெட்டவன், தவறுகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திருத்திக்கொள்பவன் எனப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் காந்தமாகியிருப்பார் பகத் பாசில். ஹீரோவுக்கு பெரிய ஸ்கோப் இல்லாத கதை போன்ற படங்களில்கூட தனது நாயகத்தன்மையின் தேவையை நல்ல நடிகரால் பூர்த்தி செய்ய முடியும் என்பதை பகத் தன் கதாப்பாத்திரத்தின் வழி வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் ஒரு மெடிக்கல் கடை உரிமையாளராக, திருமணத்துக்கு பெண் தேடும் இளைஞனாக, வளர்ச்சிக்கான வாய்ப்பை தவறவிடாமல் பற்றிக் கொள்ள விரும்பும் சராசரி மனிதனாக, கண்களின் வழியே காதலையும், பாசத்தையும் வெளிக்காட்டும் ஹீரோவாக பகத் பார்வையாளர்களை வசப்படுத்திக் கொள்வார். இதுவே படத்தின் வெற்றி.


மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ரத்னவேலு கதாபாத்திரத்தில் பகத்

மாமன்னன் - ரத்னவேலு

அதிவீரனின் (உதயநிதி) கல்லூரித் தோழி லீலா (கீர்த்தி சுரேஷ்), நண்பர்களுடன் இணைந்து அதிவீரன் இடத்தில் இலவசக் கல்வி வகுப்புகளை நடத்துகிறார். கோச்சிங் சென்டர் நடத்தும் ரத்னவேலுவின் (பகத் பாசில்) அண்ணன் (சுனில் ரெட்டி), லீலாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட, இரு தரப்புக்குமான மோதலும், வன்முறையும் வெடிக்கிறது. மாமன்னனையும் (வடிவேலு), அதிவீரனையும் சமரசம் பேச அழைக்கிறார் ரத்னவேலு. அங்கே ரத்னவேலுவுக்கும், அதிவீரனுக்கும் வெடிக்கும் மோதல், உட்கட்சி பிரச்சினையாக மாறுகிறது. இதனால் ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் சேரும் ரத்னவேலு, தேர்தலில் மாமன்னனை வீழ்த்த முடிவெடுக்கிறார். அதை மீறி மாமன்னன் வென்றாரா? ரத்னவேலு - அதிவீரன் மோதல் என்ன ஆனது? என்பதே படத்தின் கரு. இத்திரைப்படத்தில் ரத்னவேலு என்கிற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் பகத் பாசில். ரத்னவேலு கதாபாத்திரம் நெகடிவ் கதாபாத்திரம் என்றாலும், சமூகவலைதளங்களில் அந்த கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடி தீர்த்தனர். சொல்லப்போனால் படத்தின் கதாநாயகனே பகத் பாசில்தான் என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பால் அனைவரையும் வசியம் செய்திருப்பார்.


வைரலாகிவரும் ஆவேசம் படத்தின் ரங்கா கதாபாத்திரம் 

ஆவேசம் - ரங்கா

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் "ஆவேசம்". கேரளாவில் இருந்து பெங்களூருக்கு படிக்கச் செல்லும் மாணவர்களை அங்குள்ள சீனியர்கள் ரேகிங் செய்கின்றனர். ரேகிங் செய்யும் சீனியர்களை 3 இளம் மாணவர்கள் எதிர்க்க, சீனியர்களிடம் சரியான அடி வாங்குகின்றனர். நாங்களும் லோக்கல் டானை கூட்டிட்டு வந்து உங்களை பழிக்குப் பழி வாங்குகிறோம் என சவால் விடும் இளைஞர்கள், ரங்கா (பகத் பாசில்) எனும் லோக்கல் கன்னடிகா மற்றும் மலையாளி டானிடம் நட்பு பாராட்டுகின்றனர். மூன்று மாணவர்களையும் சொந்த தம்பிகளாகவே பார்க்கத் தொடங்கும் ரங்கா தனது ஆட்களை வைத்து காலேஜ் சீனியர்களை கல்ச்சுரல்ஸ் விழாவில் அனைவரும் பார்க்கும்படி, அடி வெளுத்து விடுகிறார். ஆனால், அதன் பின்னர் ரங்காவால் இந்த மூவருக்கும் ஏற்படும் பிரச்சினைகளும், கடைசியில் என்ன ஆனது என்பதும்தான் படத்தின் மீதி கதை. மொத்த படத்தையும் பகத் பாசில் தாங்கி பிடிக்கிறார். கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். காமெடி கலந்த ரௌடியாக வந்து நம்மை ரசிக்க வைக்கிறார் பகத். பகத் பாசிலின் திரைப்பயணத்தில் ரங்கா என்கிற கதாபாத்திரமும் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்