தலைமுறைகளைத் தாண்டிப் பறக்கும் கழுகு!

நீங்கள் என்னை முழுமையாக நம்பிய பிறகு நாம் படம் செய்யலாம்.

Update: 2023-08-01 05:15 GMT
Click the Play button to listen to article

நெல்சன்-ரஜினிகாந்த் கூட்டணி

தமிழ் திரையுலகில் ஐம்பதாண்டுகளை கடந்தும் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. முதன் முதலில் 2022 பிப்ரவரியில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. முதலில் இந்தப் படத்துக்கு ரஜினி கதை எழுத, கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதை அமைப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் பிறகு நெல்சன் கதையிலேயே ரஜினி நடிப்பார் என்று முடிவானது. இந்தப் படத்தை 190 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.


‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்

நடிகர்கள் பட்டாளம்

முதலில் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வசந்த் ரவி, மிர்னா மேனன், ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன் போன்றோரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கூட இந்தப் படத்தில் நடிக்கிறார் என்று தெரிவித்தது படக்குழு. ஆனால் அவர் இந்தப் படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் மட்டுமே வருகிறார். அதேபோன்று தெலுங்கு நடிகர் சுனில், தமன்னா, ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்தனர். அதுமட்டுமின்றி கிஷோர், சரவணன், பாகுபலி படத்தில் காலகேயா பாத்திரத்தில் நடித்த பிரபாகர் போன்றோரும் `ஜெயிலர்’ குழுவில் சேர்ந்தனர். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபு, அறந்தாங்கி நிஷா, கலையரசன் என நடிகர்களின் பட்டாளம் நீண்டது. மொத்தத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழி நடிகர்களும் இந்த ஒரே படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.


ரஜினிகாந்த் மற்றும் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார்

பிளாக் காமெடி

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியனாக வருகிறார். வசந்த் ரவி அவருடைய மகனாகவும், மிர்னா மேனன் மருமகளாகவும் நடித்துள்ளனர். இதில் சிலைக்கடத்தல் கதையை நெல்சன் கையிலெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பொதுவாகவே நெல்சன் படங்கள் ‘பிளாக் காமெடி’ ரகமாக இருக்கும். இந்தப் படமும் அந்த வரிசையில்தான் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மிகவும் சீரியஸான இடங்களில்கூட நெல்சன் காமெடி செய்திருப்பதாக ரஜினி நெல்சனைப் பாராட்டியிருக்கிறார். இந்தப் படத்திற்கு டாக்டர், பீஸ்ட் படத்தில் பணிபுரிந்த குழுவை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் நெல்சன். இசையைப் பொறுத்தவரை வழக்கம்போல் இந்த முறையும் அனிருத் ரவிசந்தர்தான் கூட்டணி சேர்ந்துள்ளார்.


ரஜினிகாந்த் உடன் வசந்த் ரவி மற்றும் மிர்னா மேனன்

பாடல்கள்

முதன்முதலில் வெளியிடப்பட்ட ‘காவாலய்யா’ பாடல் இணையத்தில் இப்போதும் வைரலாகவே இருக்கிறது. இந்தப் பாடலை அருண் காமராஜ் வரிகளில் அனிருத் மற்றும் ஷில்பா ராவ் இணைந்து பாடியுள்ளனர். ஜானி மாஸ்டரின் நடன வடிவமைப்புக்கு தமன்னா ஆடியிருக்கும் நடனம் பலராலும் ரசிக்கப்படுகிறது. இந்த பாடலின் நடனத்தை பலரும் சமூக ஊடகத்தில் ரீல்ஸ் செய்து வருகின்றனர். அடுத்ததாக சூப்பர் சுப்பு எழுதிய ‘டைகர் கா ஹூகும்’ (டைகரின் கட்டளை) பாடல் ரஜினி ரசிர்கர்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. குறிப்பாக, இந்தப் பாடலில் வரும் ‘உன் அலும்ப பார்த்தவன், உங்கப்பன் விசிலை கேட்டவன், உன் மகனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்’ போன்ற வரிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. மூன்றாவதாக, பாடகி தீ குரலில் வெளிவந்த ‘ஜுஜுபி’ பாடலும் ரஜினியின் ‘மாஸ்’ பாடலாகவே அமைக்கப்பட்டிருந்தது. இவை தவிர, ‘முத்துவேல் பாண்டியன் தீம்’, ‘அலப்பரை தீம்’, ‘ஜெயிலர் டிரில்’, ‘ஜெயிலர் தீம்’ என நான்கு தீம் இசைகளை தொகுத்திருக்கிறார் அனிருத். நான்காவதாக விக்னேஷ் சிவன் வரிகளில் ‘ரத்தமாரே’ என்ற பாடலை விஷால் மிஸ்ரா பாடியிருக்கிறார்.


காகம் - கழுகு கதை

`ஜெயிலர்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், “காட்டில் சிறிய மிருகங்கள் பெரிய மிருகங்களை தொல்லை செய்துகொண்டே இருக்கும். உதாரணத்துக்கு, சிறிய காகம் எப்போதும் பெரிய கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். ஆனால் கழுகு அதை கண்டு கொள்ளாது அமைதியாகவே இருக்கும். கழுகைப் பார்த்து காகமும் உயரமாகப் பறக்க நினைக்கும். ஆனால் காகத்தால் அது முடியாது. கழுகோ எட்ட முடியாத உயரத்தில் பறந்துகொண்டே இருக்கும்” என்று கூறினார். ஆனால் அவர் யாரை மனதில் வைத்து இந்தக் கதையைக் கூறினார் என்று தெரியவில்லை.


ஜெயிலர் பாடல் வெளியீட்டு விழா

அதேபோன்று “குடிப்பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்தான் நான் வாழ்க்கையில் இப்போது இருப்பதை விட எங்கோ போயிருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவுசெய்து குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள். நீங்கள் குடிப்பதால் அம்மா, மனைவி உட்பட குடும்பத்தில் இருக்கும் அனைவரின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. நாம் நம்முடைய வேலையை பார்த்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்” என்றும் பேசியிருந்தார்.


குடிப்பழக்கம் பற்றி பேசும் ரஜினிகாந்த்

நம்பிக்கை

படத்தின் இயக்குனர் நெல்சன் பேசியபோது, “பீஸ்ட் படத்தின்போது விஜய்தான் ரஜினியை சந்தித்து கதை கூறும்படி என்னை ஊக்கப்படுத்தினார். ஆரம்பத்தில் நான் `ஜெயிலர்’ படத்தை இயக்குவேனா என்றுகூட நினைத்தேன். அப்போது தலைவரிடம், `நீங்கள் என்னை முழுமையாக நம்பிய பிறகு நாம் படம் செய்யலாம்’ என்று கூறினேன். ஆனால் அவர் அப்போதே என்னை முழுமையாக நம்பினார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.


நெல்சன் ரஜினி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய தருணம்

நெல்சன்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் வெற்றிப் படமா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்