அப்பா ஷங்கருடன் மகள் அதிதி ஷங்கர் மோதல்!
அப்பாவின் படத்திலேயே அறிமுகமாகி இருக்கலாமே என்று பலரும் கேட்ட நிலையில், அப்படி அறிமுகம் ஆகியிருக்கலாம், ஆனால் அதில் எனக்கும் விருப்பமில்லை, அப்பாவுக்கும் விருப்பமில்லை என்று கூறிய அதிதி, எதிர்காலத்தில் அப்பா மனசு வைத்தால் அவருடைய படத்தில் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
சினிமா இண்டஸ்ட்ரியை பொருத்தவரை வாரிசு நடிகர் நடிகைகள் என்றாலே வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடும். ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ளும் திறமை அவர்களிடம் இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அப்படி அப்பாவின் ஆதரவுடன் திரையுலகிற்கு வந்திருந்தாலும் தனது தாழ்மையான குணம், எதார்த்தமான பேச்சு, அனைவருடனும் பாகுபாடின்றி பழகும் தன்மை, வெகுளித்தனமான சிரிப்பு மற்றும் மொக்கை ஜோக்ஸ்களால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்தான் அதிதி ஷங்கர். முதலில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி இருந்தாலும் அதிதிக்கு சிறுவயதிலிருந்தே நடிக்கவேண்டும் என்ற ஆசை மனதுக்குள் இருந்ததாம். ஒரு வழியாக பெற்றோரின் ஆசைக்கிணங்க டிகிரி முடித்துவிட்டு சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்தார். முதல் படமே வெற்றிப்படமாக அமைய, அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. சமீபத்தில் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கும் அதிதியின் அடுத்த தமிழ் படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. அதே நாளில் ஷங்கர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படமும் ரிலீஸாகவிருப்பதால், அப்பா - மகள் இருவரும் ஒரே நாளில் மோதவிருப்பதாக செய்திகள் வலம்வருகின்றன.
மருத்துவம் டூ சினிமா
பிரம்மாண்டத்துக்கு பெயர்போன இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. இவர் நடிகையாக அறிமுகமாகிறார் என்ற செய்தி வெளியானதிலிருந்தே அவருக்கு கிடைத்த வரவேற்பைவிட கிடைத்த விமர்சனங்கள்தான் மிகவும் அதிகம். இதற்கு காரணம் இந்திய சினிமாவில் நெபோட்டிசம் என்ற வார்த்தை சமீபகாலமாக அதிகம் வலம்வருவதுதான். அதற்கேற்றாற்போல் அதிதி முதல் படத்திலேயே தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் கார்த்தியுடன் ஜோடிசேர்ந்தார். ஷங்கரின் மகள் என்பதால்தான் அதிதிக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு எளிதில் கிடைத்ததாகவும், நடிகைகளுக்குரிய அழகு அவரிடம் இல்லை எனவும் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் ஒருவழியாக வெளியானது ‘விருமன்’. முத்தையா இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் வெளியான இப்படத்தை பார்த்தபிறகு பலருக்கும் அதிதியை முன்பு பார்த்த கோணமே மாறியது. முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, இவரை அறிமுக நடிகை என்றே சொல்லமுடியாது என்ற பாராட்டை பலதரப்புகளிடமிருந்தும் பெற்றார். மேலும் அந்த படத்தில் ‘மதுரவீரன் அழகுல’ என்ற பாடலையும் தனது சொந்த குரலிலேயே பாடியிருந்தார். அதற்கு முன்பே தெலுங்கில் ‘கானி’ என்ற படத்தில் ரோமியோ ஜூலியட் பாடலை பாடியிருந்தார். இப்படி ஆரம்பமே அதிதிக்கு அமர்க்களமாக அமைந்தது. மற்றவர்களை பொருத்தவரை அதிதிக்கு இந்த வாய்ப்பு சுலபமாக கிடைத்ததாக தோன்றினாலும் அதிதிக்கோ அப்படி இல்லை. தனது சினிமா என்ட்ரி குறித்து பல நேர்காணல்களில் அவரே பகிர்ந்திருக்கிறார்.
அப்பா ஷங்கருடன் சிறுவயதில் அதிதி - சமீபத்திய போட்டோஷூட்
“சிறுவயதிலிருந்தே நன்றாக படிப்பேன் என்பதால் டாக்டராக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதேசமயம் சினிமாவுக்குள் நுழையவேண்டுமென்ற விருப்பமும் எனக்குள் இருந்தது. குறிப்பாக பாடகியாக வேண்டுமென்று நினைத்தேன். ஏனென்றால் எட்டரை வருடங்கள் கர்நாடக இசையும், இரண்டு வருடங்கள் வெஸ்டர்ன் பாப் இசையும், இரண்டு வருடங்கள் இந்துஸ்தானி இசையும் கற்றிருக்கிறேன். அப்பாவுடன் நிறைய பட ஷூட்டிங்கிற்கு சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் வீட்டில் தனது படம் குறித்தும், தொழிலுக்கு எப்படி நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கவேண்டுமெனவும் அப்பா எங்களிடம் நிறைய எடுத்துக்கூறுவார். ஆனால் எங்களுடைய வீட்டை பொருத்தவரை படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று எனக்கு தெரியும். எனவே ஒருநாள் அம்மாவிடம் சென்று நடிக்கப்போவதாக சொன்னேன். உடனே அப்பாவிடம் சொல்லிவிட்டார். படிப்பை முடித்தபிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். படித்து முடித்தபிறகும் நான் நடிக்கவேண்டுமென்ற விருப்பத்தை தெரிவிக்க, அப்பாவின் மேனேஜர் உதவியோடு வாய்ப்புத் தேடினேன். அப்போதுதான் முத்தையா சார் இயக்கத்தில் ஒரு கிராமத்து கதைக்களத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே எனக்கு சவாலாக அமைந்தது. இது எனது திறமையால் கிடைத்ததுதானே தவிர, அப்பாவின் ஆதரவால் அல்ல” என்று கூறியிருந்தார். அந்த படம் முடிந்த கையோடு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் கலந்துகொண்ட அதிதியின் சிரிப்பு, கலகல பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த சமயத்தில் அப்பாவின் படத்திலேயே அறிமுகமாகி இருக்கலாமே என்று பலரும் கேட்ட நிலையில், அப்படி அறிமுகம் ஆகியிருக்கலாம், ஆனால் அதில் எனக்கும் விருப்பமில்லை, அப்பாவுக்கும் விருப்பமில்லை என்று கூறிய அதிதி, எதிர்காலத்தில் அப்பா மனசு வைத்தால் அவருடைய படத்தில் நடிப்பேன் என்று கூறியிருந்தார். அதேபோல் ‘இந்தியன் 2’ விழாவில் ஷங்கரும், அதிதியும் ஒரே மேடையில் நின்றபோது, ஷங்கரிடமும் அதிதியை தனது படத்தில் நடிக்கவைப்பது குறித்து கேட்கப்பட்டது. அவர் எதிர்காலத்தில் தனது கதைக்கு அவர் பொருத்தமாக இருந்தால் நடிக்கவைப்பேன் என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
மருத்துவராக பயிற்சி மற்றும் பட்டம் பெற்ற அதிதி ஷங்கர்
தெலுங்கு அறிமுகம்
தமிழில் இரண்டாவது படமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அடுத்து தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அதிதிக்கு கிடைத்தது. விஜய் கனகமேடலா இயக்கி, கே.கே ராதாமோகன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின்மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் அதிதி. இந்த படத்தில் பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின்மூலம் தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பைரவம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஸ்ரீ சரண் பாகலா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ஓ வெண்ணிலா’ என்ற முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. என்னதான் அதிதி சிட்டியில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் தாவணி, மல்லிகைப்பூ என கிராமத்து கதைகளுடன் ஒன்றிப்போவதாக நல்ல விமர்சனங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதிதி பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான் என்றாலும் தமிழைப் போன்றே தெலுங்கு மொழியையும் சரளமாக பேசக்கூடியவர் என்பதால் அங்கும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிதி ஷங்கரின் தெலுங்கு பட அறிமுகம்
அப்பாவுடன் மோதும் அதிதி!
தெலுங்கு, தமிழ் என மாறிமாறி பிஸியாக இருக்கும் அதிதியின் ‘ஒன்ஸ்மோர்’ மற்றும் ‘நேசிப்பாயா’ ஆகிய தமிழ்மொழி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகிவருகின்றன. ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்கள்மூலம் வில்லனாக அறிமுகமாகி ‘அநீதி’, ‘ரசவாதி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் நடித்துவருகிறார் அதிதி. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்குகிறார். இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்ஸும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. இதற்கிடையே நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ என்ற படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பிரபு, குஷ்பு, சரத்குமார், கல்கி கோச்சலின் போன்ற பல நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். ‘பில்லா’, ‘ஆரம்பம்’ என அஜித்தின் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள பெரும்பாலான படங்கள் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் பல படங்கள் முன்கூட்டியே ரிலீஸாகவிருக்கின்றன. அதில் ‘நேசிப்பாயா’ திரைப்படமும் ஒன்று. பொங்கலை முன்னிட்டு ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க வெகு பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படமும் வெளியாகவிருப்பதால் அப்பாவுடன் மகள் அதிதியும் மோதுவதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. இந்த போட்டியில் அதிதி ஓரளவு வெற்றிபெற்றாலும் அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.