என்னை பாராட்டிய இயக்குநர் பாலா! "வணங்கான்" பட அனுபவங்களை பகிரும் நடிகை ஜெயந்திமாலா!

மேடை நாடகத்தில் தொடங்கி சின்னத்திரை, வெள்ளித்திரை என்று தன் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவர்தான் நடிகை ஜெயந்திமாலா.

Update: 2024-12-23 18:30 GMT
Click the Play button to listen to article

மேடை நாடகத்தில் தொடங்கி சின்னத்திரை, வெள்ளித்திரை என்று தன் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவர்தான் நடிகை ஜெயந்திமாலா. ‘அப்புச்சி கிராமம்’ தொடங்கி இன்று பாலாவின் ‘வணங்கான்’ திரைப்படம் வரை பல படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாக, குணசித்திர நடிகையாக என தன் பங்களிப்பை வெற்றிகரமாக கொடுத்துவரும் இவர், தனக்கான தனித்துவமான அடையாளத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில், அவர் தன் சினிமா பயணம் குறித்து பகிர்ந்துகொண்ட நேர்காணலின் தொடர்ச்சியை இந்த கட்டுரையில் காணலாம்.

இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடித்து இருக்கிறீர்கள்.. உங்கள் பார்வையில் அவர் எப்படிப்பட்டவர்?

இயக்குநர் பாலா தங்கமான மனிதர். அவருடைய அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அது அவரது அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்புதானா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு நேராக சென்றேன். அப்போது, அலுவலகத்தில் பாலா சாரின் உதவியாளர்கள்தான் இருந்தார்கள். சார் வெளியில் சென்றிருக்கிறார். அவர் வருவதற்குள் ஒரு ஆடிஷன் எடுத்துவிடலாம் என்று கூறினார்கள். நானும் அவர்கள் சொன்ன கதைக்கு ஏற்ப நடித்துக் காட்டினேன். பிறகு, பாலா சார் வந்தார். அவரை பார்த்ததும் பெரிய இயக்குநராச்சே என்ற ஒரு படபடப்பு ஏற்பட்டது. நான் அவருக்கு வணக்கம் சொன்னதும், பதிலுக்கு அவர், என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்ன படங்கள் நடித்திருக்கிறீர்கள்? என்று விசாரித்தார். நான் என்னை பற்றியும் நான் நடித்த படங்கள் பற்றியும் விவரித்தேன். சரி உங்களது ஜாக்கெட்டுக்கு மட்டும் அளவு கொடுத்துவிட்டு போங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார். பின்னர், இரண்டு நாட்கள் கழித்து சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள ராணிமேரி கல்லுரியில் ஷூட்டிங் நடக்கிறது வந்து விடுங்கள் என்ற அழைப்பு வந்தது. நானும் சென்றேன். எனக்கு வசன பேப்பர் கையில் கொடுத்தும், எனக்கான ஷாட் முதல் நாள் எடுக்கப்படவில்லை. இரண்டாம் நாள் மதியம் 12 மணிக்குதான் எனக்கான காட்சி எடுக்கப்பட்டது. அப்போது அருண் விஜய் சார் வந்தார். அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள்.


'வணங்கான்' திரைப்படத்தில் பாலா இயக்கத்தில் நடித்துள்ள ஜெயந்திமாலா  

அதற்கு பிறகு, ஷாட் முடிந்து சாப்பிட சென்ற இடத்தில் எல்லோரும் என்னிடம் 18 டேக் எடுத்து இருக்கிறீர்கள்; ஆனால், ஒன்றில் கூட உங்கள் எனர்ஜி குறையவே இல்லை என்று கூறினார்கள். அதேபோல் பாலா சாரும் எனது நடிப்பில் ஒரு குறையும் சொல்லவில்லை. நான் எனது வேலைகள் முடிந்து இரவு கிளம்பி செல்லும்போது எதிரே இயக்குநர் பாலா வந்தார். அவரிடம் உங்களோடு ஒரு புகைப்படம் வேண்டும் என்று கேட்டதும், வாம்மா என்று அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டது மட்டுமின்றி நான் மிகவும் நன்றாக நடிப்பதாக பாராட்டினார். அது ஒரு ஆஸ்கார் விருதே வாங்கியது போன்ற உணர்வை எனக்கு கொடுத்தது. எனது மகன்களுக்கெல்லாம் போன் செய்து பாலா சாரே என்னை பாராட்டிவிட்டார் என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தேன். 15 நாட்கள் கழித்து படப்பிடிப்புக்கு போன போதும் கூட என்னை விசாரித்தது மட்டுமின்றி அப்போதும் என்னிடம் “ரொம்ப நல்லா நடிக்கிறம்மா நீ” என்று பாராட்டினார். ஒரு பெரிய இயக்குநர் என்னை அழைத்து அப்படி பாராட்டியது மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பாலா சார் வேறு யாரிடமாவது மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? ஏனென்றால் சரியாக நடிக்கவில்லை என்றால் அவர் அடிப்பார் என்று சொல்கிறார்களே?

மற்றவர்கள் சொல்லித்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் அப்படியான எந்த நிகழ்வையும் அவரின் படப்பிடிப்பு தளத்தில் காணவில்லை. அவரின் உதவி இயக்குநர்கள் அனைவருமே சொல்லுவார்கள், சார் எதிர்பார்ப்பது மாதிரி நடித்துவிட்டால் பாராட்ட யோசிக்கவே மாட்டார். அழைத்து பாராட்டுவார் என்று. அதேபோன்று அங்கு அவரின் உதவி இயக்குநராக லட்சனா என்ற ஒரு பெண் இருக்கிறாள். அவள் அடிக்கடி சொல்லுவாள் உங்கள் கதாபாத்திரம் சார் மனதில் அப்படியே பதிந்து விட்டதுபோலும். அதனால்தான் நீங்கள் நன்றாக நடிப்பதாக சாரே அழைத்து பாராட்டுகிறார். நிச்சயம் அவரின் அடுத்த படத்தில் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று.


சிறப்பாக நடித்துவிட்டால் இயக்குநர் பாலா பாராட்ட தயங்கமாட்டார் - ஜெயந்திமாலா 

நீங்கள் பெரும்பாலும் சீரியஸான கதாபாத்திரமாகவே நடித்து இருக்கிறீர்கள்… நகைச்சுவை கலந்த வேடங்கள் ஏதும் ஏற்று நடித்து இருக்கிறீர்களா?

எனக்கு நகைச்சுவை கலந்த அம்மா வேடங்களில் நடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். இப்போது கூட ‘பார்க்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறேன். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஜானரில் எடுக்கப்பட்டுள்ள அந்த படத்தின் ஹீரோ தமன் குமார். அவருக்கு அம்மாவாக நடிக்க யாரும் கிடைக்கவில்லை. அப்போது ‘பார்க்’ படத்தின் நாயகியாக போடப்பட்டிருந்த ஹீரோயின் ஏற்கனவே என்னுடன் நடித்து இருந்ததால் அவர் என்னை போடா சொல்லி சிபாரிசு செய்து இருக்கிறார். படக்குழுவும் என்னை அழைத்து ஆடிஷன் எதுவும் வைக்காமல் தேர்வு செய்து நடிக்க வைத்துவிட்டார்கள். திருவண்ணாமலையில் படப்பிடிப்பு. எனக்கு பெரிதாக டயலாக் எதுவும் கொடுக்கப்படவில்லை. பேய் அதாவது திரில்லர் ஜனார் கதை அது என்பதால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட எனது மகன், அவளது வருங்கால மனைவியுடன் வெளியில் சென்றுவிட்டு தாமதமாக வருவான். அப்போது நான் அவனை பார்த்து “ஏண்டா நிச்சயமாயிட்டா, வீட்டை விட்டு வெளியே போக கூடாதுன்னு சொல்லுவாங்க. ரெண்டு பெரும் இப்படி போய் ஊற சுத்திட்டு வறீங்களே நேரத்தோட ஊட்டுக்கு வர தெரியாது” என்று எனது சொந்த வார்த்தைகளையும் போட்டு காமெடி கலந்து ஒரு வசனம் பேசுவேன். நான் பேசி முடித்ததும் என்னை பார்த்து கத்துவான். நான் எகிறி குதித்து போய் மரத்தை கட்டி பிடித்துக்கொள்ளுவேன். அந்த மாதிரி நிறைய காமெடி காட்சிகள் அந்த படத்தில் இருக்கிறது. எனது அந்த நடிப்பை பார்த்து அங்கு எல்லோருமே பாராட்டினார்கள்.


 ‘பார்க்’ திரைப்படத்தில் நடிகை ஜெயந்திமாலா 

இப்போது திரைத்துறையில் அம்மா வேடங்களுக்கு என்று நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் உங்களுக்கு ரோல் மாடல் என்றால் யாரை சொல்லுவீர்கள்?

எனக்கு வடிவுக்கரசி அம்மாவை மிகவும் பிடிக்கும். நான் இப்போது ஒரு படத்தில் வில்லத்தனமான ரோலில் நடிக்கிறேன் என்றால் அவரைத்தான் நினைத்துக்கொள்ளுவேன். காமெடி கலந்த ஜானரில் நடிக்கிறேன் என்றால் ஊர்வசி அவர்களை நினைத்து கொள்ளுவேன். எனக்கு அவர்களையும் மிகவும் பிடிக்கும். எவ்வளவு பெரிய நடிகை அவங்க. ஆனாலும், நகைச்சுவையை அவர் அளவுக்கு வேறு யாராலும் செய்ய முடியாது. மேடை நாடகங்களில் நடிக்கும் போது கூட ஹீரோயின் வேடம் செய்ய சொன்னால் நான் வேண்டாம் நகைச்சுவை தான் வேண்டும் என்று நடிப்பேன். அந்த அளவுக்கு எனக்கு காமெடி காட்சிகளில் நடிப்பது பிடிக்கும். அதேநேரம் எந்த வேடம் கொடுத்தாலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும்.


நடிகைகள் வடிவுக்கரசி மற்றும் ஊர்வசி ரொம்ப பிடிக்கும் - ஜெயந்திமாலா

பெரிய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் யார் கூடவெல்லாம் நடிக்க விருப்பப்படுவீர்கள்?

ஆசை இல்லாமல் இருக்குமா? நிச்சயமாக தனுஷ், விஜய் சேதுபதி இப்படி எல்லா பெரிய ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பாட்டியாக கொடுத்தால்கூட நடிப்பேன். ஜெயந்தி மாலா என்றால் தனித்துவமாக தெரிய வேண்டும். அவங்களை கூப்பிடுங்க எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பாங்க என்ற பெயரை வாங்க வேண்டும். எனக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றுதான் காத்திருக்கிறேன்.

திரைத்துறையில் நெருங்கிய தோழிகள் யார் யார் இருக்கிறார்கள்?

எனக்கு நெருங்கிய தோழி என்றால் உமாதேவி என்று ஒருவர் இருக்கிறார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கிறார். அவரை சுருக்கமாக கோவை உமா என்றுதான் அழைப்பார்கள். எங்கு வெளியில் சென்றாலும் நாங்கள் இருவரும்தான் ஒன்றாக செல்வோம். அவரது குடும்பமும் ஊரில்தான் இருக்கிறது. இருவருமே தனியாக சென்னையில் இருப்பதால் ஒருவருக்கொருவர் சப்போர்டிவ்வாக இருக்கிறோம். எங்கள் இருவரை தாண்டி வேறு யாரும் எனக்கு நண்பர்கள் கிடையாது.


தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்துவிட வேண்டும் - ஜெயந்திமாலா

நடிகர் அருள்நிதியுடன் நடித்து இருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

எங்கள் இருவருக்கும் சேர்ந்த மாதிரியான காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால், ஒரு பெரிய கூட்டமே இடம்பெறுவது மாதிரியான பஞ்சாயத்து காட்சி ஒன்று உள்ளது. அதில் அவருடன் இருக்கிறேன். மிகவும் நல்ல மனிதர். வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. எதையும் எதிர்பார்க்க மாட்டார். வருவார் நடிப்பார் போவார். அவ்வளவுதான்.

சிங்கம்புலியுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?


‘அப்புச்சி கிராமம்’ திரைப்படத்தில் சிங்கம்புலியுடன் அறிமுகமான ஜெயந்திமாலா

நான் சிங்கம் புலி சாருடன்தான் எனது முதல் பயணத்தையே தொடங்கினேன். முதல் படமான ‘அப்புச்சி கிராமம்’ படத்திலேயே அவருடன் நடித்திருந்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் ஒரு 15 நாட்கள் நடைபெற்றது. அப்போது என்னுடன் படப்பிடிப்புக்கு என்னுடைய கணவரும் கூடவே வருவார். ஒரு நாற்காலியை தனியாக எடுத்துப்போட்டு யாருடனும் பேசவிடமால் தனியாக அமர வைத்துவிடுவார். அப்போது சிங்கம்புலி சார் போன்ற ஒரு சிலர் இந்த பொண்ணு அழகாக இருக்கிறதே. சென்னைக்கு நடிக்க வரலாமே என்று பேச முயற்சி செய்திருக்கிறார்கள். எனக்கு அது தெரியாது. சென்னை வந்த பிறகு அவரை பார்த்தபோது கூட அவர் சொன்னார். “அப்பப்பா முதல் படத்துல உன் வீட்டுக்காரு பண்ணானே பாரு” என்று சொல்லி சிரித்தார். நல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பரும் கூட. ‘அப்புச்சி கிராமம்’ படத்தில் ஆரம்பித்த எங்களுடைய நட்பு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்