5000 பேர் முன் தனுஷ் போட்ட ஆட்டம்! மறக்க முடியாத நினைவுகளை பகிரும் நட்டி நட்ராஜ்!

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இன்றும் அறியப்படுபவர்தான் நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியன்.

Update: 2024-11-25 18:30 GMT
Click the Play button to listen to article

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இன்றும் அறியப்படுபவர்தான் நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியன். இவர் ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என இவர் நடிக்காத வேடங்களே இன்று இல்லை. அந்த அளவுக்கு மிகவும் பிசியாக இயங்கி வரும் நட்டி, ராணி நேயர்களுக்காக அளித்த நேர்காணலின் ஒரு பகுதியை ஏற்கனவே பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியை இந்த பதிவில் காணலாம்.

‘மகாராஜா’ படத்தில் உங்களின் கதாபாத்திரம், பார்க்கும் அனைவருக்கும் மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கும்… அது எப்படி அமைந்தது?

அந்த படத்தில் எனக்கு கிடைத்த பாராட்டுகள் அத்தனைக்கும் நான் படத்தின் இயக்குநர் நித்திலன் ஸ்வாமிநாதனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அதேபோன்று படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியும் கதை இப்படித்தான் போக வேண்டும், இப்படி சென்றால்தான் நன்றாக இருக்கும் என்று எனக்கான ஸ்பேஸ் அதாவது அவருடனான திரை பகிர்வை கொடுத்திருந்த விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த படத்தில் நடித்ததற்காக பாராட்டு மட்டுமின்றி நல்ல சம்பளமும் எனக்கு வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் விட முக்கியமான விஷயம் இந்த படத்தில் நடித்ததன் மூலம் விஜய் சேதுபதி என்ற நல்ல நண்பர் எனக்கு கிடைத்துள்ளார். அந்த நட்பை கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக நான் நினைக்கிறேன்.


‘மகாராஜா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகர் நட்டி 

விஜய் சேதுபதி போன்றுதான் உங்களுக்கு நடிகர் தனுஷ். அவரின் நட்பு மற்றும் அவருடன் பணியாற்றியதை பற்றி சொல்லுங்களேன்?

தனுஷ் சார் இந்தியில் அறிமுகமான ‘அம்பிகாபதி என்கிற ராஞ்சனா’ படத்திற்கு நான்தான் கேமராமேன். முதல் நாள் படப்பிடிப்பில் நான் வெகு சாதாரணமாக இருந்தேன். காரணம் அவர் ஹிந்தி பயிற்சி எடுத்துக்கொண்டு பேச நேரமாகும் என்று. அதனால் பொறுமையாகவே எனது பணிகளை செய்துகொண்டிருந்தேன். ஆனால், செட்டுக்கு வந்து என்ன காட்சி எடுக்கப் போகிறோம் என்பதை தெரிந்துகொண்டு அவர் டயலாக் டெலிவரி கொடுத்த விதம் என்னை ஆச்சர்யப்படுத்தியது மட்டுமின்றி நாம்தான் இனி கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. தனுஷ் தண்ணீர் மாதிரி. எதில் போட்டாலும் அந்த பாத்திரமாகவே மாறிவிடுவார்.

அவருடன் மறக்க முடியாத சம்பவம் என்னவென்றால், உத்திரப் பிரதேச மாநிலத்தில் பனாரஸ் காட் என்ற இடத்திற்கு அருகே, ஒரு இடத்தில் ஹீரோயினுக்கு லவ் ப்ரபோஸ் செய்யும் காட்சி ஒன்றை படமாக்கினோம். அந்த காட்சியில் ஹீரோயின், ஹீரோவின் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறைந்துவிட்டு போய்விடுவார். அப்போது அங்கு இருக்கும் டீ கடை ஒன்றில் பழைய பாடல் ஒலிக்கும். அந்த பாட்டுக்கு ஹீரோ தனுஷ் நடனமாட வேண்டும். அப்போது படத்தின் இயக்குநர் நான் வேண்டுமானால் நடன இயக்குநரை ஏற்பாடு செய்யவா என்று கேட்க, தனுஷ் சார், வேண்டாம் நானே நடனம் ஆடிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார். அந்த இடம் ஒரு சுற்றுலாத்தலம். சுமார் 5 ஆயிரம் பேர் வரை படப்பிடிப்பை காண்பதற்காகவே அங்கு கூடியிருந்தனர். பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் தனுஷ் நடனம் ஆடத்தொடங்கி முடித்ததும் இயக்குநர் கட் சொல்லி கை தட்டினார். அவர் தட்ட தொடங்கிய போதே சுற்றி வேடிக்கை பார்த்து நின்ற ஐந்தாயிரம் பேரும் உற்சாகமாக கை தட்டுவதை பார்த்த போதே நிச்சயம் இந்த படம் வெற்றி அடைந்துவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது. பான் இந்தியா மூவி கலாச்சாரம் இல்லாத அப்போதே தனுஷ் யார் என்றே தெரியாமல் உத்திரப் பிரதேச மக்கள் கொடுத்த வரவேற்பு யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சென்று சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது. இப்போது பான் இந்தியா படங்கள் நிறைய வர தொடங்கிவிட்டன.


'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கிச்சட்டை' படங்களின் தயாரிப்பாளர் தனுஷுடன் சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதி, தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடனும் நடித்து இருக்கிறீர்கள். தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையேயான மோதல் குறித்து வரும் செய்திகள் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பொது இடங்களில் யாரும் யாரிடமும் எதுவும் புறம் பேசிக்கொள்வது கிடையாது. அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்றுதான் இருப்பார்கள். படப்பிடிப்பு தளங்களில் கூட திரை பகிர்வை தாண்டி ஏதும் பேச மாட்டார்கள். சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் போன்று நான் ஏதும் கேள்விப்பட்டதும் இல்லை; பார்த்ததும் இல்லை.

90-கால கட்டங்களில் இருந்து சினிமாவில் பயணித்து கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு இருக்கும் சினிமா, ஹீரோக்கள், இயக்குநர்களை எப்படி பார்க்கிறீர்கள்?

ரொம்பவே சிறப்பாக இருக்கிறது. இப்போது உள்ள நடிகர்களில் கவின், மணிகண்டன் போன்றவர்கள் எல்லாம் பிரமாதமாக நடிக்கிறார்கள். இந்த மாதிரி ஹீரோக்களுடன் நடிப்பது என்பது கடுமையான போட்டியாகவே இருக்கிறது. வளர்ந்துவரும் கேமராமேன்கள் சிறப்பாக ஒளிப்பதிவு செய்கிறார்கள். நான் நடித்த கடைசி உலகப் போர் திரைப்படத்தை எடிட் செய்தவர் கூட பள்ளி வகுப்பையே முடிக்காத ஒருவர்தான். அவர் இனிதான் கல்லுரிக்குள்ளேயே நுழையப்போகிறார். ஒரு படத்திற்கான ட்ரெய்லர் எடிட் செய்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. அதையும் அவர் சிறப்பாக செய்து கவனிக்க வைத்தார். இவர்களையெல்லாம் பார்க்கும்போது ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.


மணிகண்டன், கவின் சிறப்பாக நடிப்பதாக பாராட்டிய நடிகர் நட்டி 

ஒளிப்பதிவாளராக நிறைய சவால்களை சந்தித்துதான் வந்து இருப்பீர்கள்.. அவற்றில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வுகள் ஏதேனும் உள்ளதா?

கண்டிப்பாக இருக்கிறது. நான் ‘பிளாக் ஃப்ரைடே’ என்றொரு படத்தில் பணியாற்றினேன். அந்த திரைப்படம் 1993-இல் நடந்த பம்பாய் குண்டுவெடிப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அதை நேரலையாக படம்பிடிக்க நானும் அப்படத்தின் இயக்குநரான அனுராக் காஷ்யப்பும் முடிவு செய்தோம். அந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் என்னால் மறக்க முடியாது. 93-ல் நடந்த நிகழ்வை, 2004-ல், சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரலையாக படம் பிடிக்கிறோம். 1993-ல் சம்பவம் நடைபெற்றபோது மொபைல் ஃபோன் பெரிதாக கிடையாது. 2004-ல் நாங்கள் படம் எடுத்தபோது மொபைல் ஃபோன்கள் வந்துவிட்டன. லைவ்வாக நாங்கள் எடுக்கும் காட்சிகளை யாரும் கவனித்து விடக்கூடாது என்ற ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. அப்படி மிகவும் கவனமாக எடுத்த அந்த வீடியோவின் ஒரு காட்சியில் சமீபத்தில் இருக்கும் ஒரு போர்டு வந்துவிட்டது. அது எனக்கு நெருடலாகவே இருந்தது. அனுராக்தான் எதுவும் செய்யாதே; அப்படியே இருந்துவிட்டு போகிறது என்று தடுத்து விட்டார். இன்று இருக்கும் டெக்னாலஜி அன்று இருந்திருந்தால் அந்த காட்சியை எளிதாக மறைத்து இருக்கலாம்.

உங்களுக்கும், அனுராக் காஷ்யப்புக்குமான நட்பு எப்படிப்பட்டது?

சினிமாவில் தொழிலை மீறிய நட்பு என்று சொல்வார்கள் இல்லையா. அப்படித்தான் எனக்கும், அனுராக், சுஜித் சர்க்கார் அகியோருக்குமான நட்பு. நாங்கள் அனைவருமே ஒரே நெட்வொர்க்கில் இருப்பவர்கள். இதில் நானும், அனுராக்கும் மட்டும் இன்னும் நெருங்கிய நண்பர்கள்.


அனுராக் காஷ்யப்புடனான நட்பு குறித்து மனம் திறந்த நட்டி 

இன்று இந்திய அளவில் அறியப்படும் ஒளிப்பதிவாளராக நீங்கள் இருந்தாலும், உங்களுக்கென்று குருநாதர்கள் யாரும் இருக்கிறார்களா?

நிச்சயமாக எனக்கும் குருநாதர்கள் இருக்கிறார்கள். நான் முதன்முதலில் லங்கா என்பவரிடம்தான் உதவி ஒளிப்பதிவாளராக சேர்ந்தேன். அதன் பிறகு தெலுங்கில் மிகப்பெரிய கேமரா பெண்மணியாக அறியப்படும் விஜயலட்சுமியிடம் பணியாற்றினேன். அதேபோன்று செந்தில்குமார் என்பவரும் இருக்கிறார். அவர் என்னுடைய நெருங்கிய நண்பரும் கூட. இவர்களுக்கெல்லாம் முன்பாக பணியாற்றிய ஒவ்வொரு ஒளிப்பதிவாளர்களுமே என்னுடைய குருநாதர்கள்தான். அவர்களின் ஒளிப்பதிவு ஏற்படுத்திய பாதிப்பால்தான் நான் இந்த துறைக்குள்ளேயே வர முடிவெடுத்தேன்.

சிறிது காலமாக ஒளிப்பதிவில் கவனம் செலுத்தாதது போன்று இருக்கிறதே… ஏன்?

நிறைய விளம்பர படங்கள் மட்டும் செய்து கொண்டிருக்கிறேன். படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கொண்டால் அதற்கு ஒரு வருடம் தேவைப்படும். இப்போது நடிப்பதில் பிசியாக இருப்பதால் அவ்வளவு நேரம் ஒதுக்க முடியாது. இந்த துறையில் நண்பர்கள் அதிகம். ஒருவருக்கு வாக்கு கொடுத்து, இன்னொருவருக்கு செய்தால் அது மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். அதனால், படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கொள்வது இல்லை.


பாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக நட்டி பணியாற்றிய தருணம் 

சோலோ ஹீரோவாக மீண்டும் உங்களை எப்போது பார்க்க முடியும்?

கண்டிப்பாக பார்க்கலாம். இப்பொது ஒரு படம் சோலோ ஹீரோவாக நடித்து முடித்துள்ளேன். விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதுமட்டும் இல்லாமல் நான் பிற ஹீரோக்களின் படங்களில் இணைந்து நடித்துள்ள பிரதர், கங்குவா ஆகிய படங்களும் திரைக்கு வந்துள்ளன. சீசா என்ற படமும் வெளிவர இருக்கிறது.

பிரதர் திரைப்படத்தில் பூமிகாவுடன் இணைந்து பணியாற்றியது எப்படி இருந்தது?

பூமிகா மிகவும் புரொஃபஷனலான ஒரு நடிகை. என்னை ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் அவங்களுக்குத் தெரியும். ஒரு நடிகராக அதுவும் அவருக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன். அப்போது அவர் என்னிடம் அடிக்கடி சொல்வது “நட்டி கொஞ்சம் மெதுவா கம்மி பண்ணி நடிங்க’ என்று கூறுவார். ஏனென்றால் எனக்கு கொடுக்கப்படும் காட்சிகளை நான் வேகமாக பேசி நடித்து விடுவேன். என் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று அவர் அப்படி சொல்லுவார்.

‘கங்குவா’ படத்தில் நடிகர் சூர்யாவுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. சூர்யா கங்குவா திரைப்படத்தில் மிக அருமையாக நடித்துள்ளார். தனிப்பட்ட முறையில் அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும். மிக பிரம்மாண்டமாக போடப்பட்ட செட், தினமும் ஒரு 1500 பேருடன் பணியாற்றிய அனுபவம், அதற்காக செய்யப்பட்ட செலவுகள், சிறுத்தை சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, மறைந்த ஆர்ட் டைரக்டர் மிலன் ஆகியோர் கொடுத்த உழைப்பு, சாதாரணமானது கிடையாது. இது எதையும் அவ்வளவு எளிதாக மறக்கவும் முடியாது.


'கங்குவா' திரைப்படத்தில் சூர்யா மற்றும் மறைந்த ஆர்ட் டைரக்டர் மிலன் குறித்து பேசிய நட்டி 

உங்களின் சதுரங்க வேட்டை படத்தின் தயாரிப்பாளர் மறைந்த மனோ பாலா பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா?

அவருடன் இருந்த காலங்களை என்னால் மறக்கவே முடியாது. அவரின் மல்லுவேட்டி மைனர் தொடங்கி பல படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறேன். எந்த ஈகோவும் பார்க்காமல் மற்றவர்களுக்கு வேலையை அழகாக கத்துக்கொடுப்பார். இப்போது செய்யக்கூடிய ரீமிக்ஸ் எல்லாம் அப்போதே மனோபாலா செய்தார். தான் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அதற்கு என்று ஒரு படத்தொகுப்பாளர் அதாவது எடிட்டரை போட்டு பணியாற்றுவார். லேட்டஸ்ட் பாடல்களை எம்ஜிஆர், சிவாஜி பட பாடல்களோடு மிக்ஸ் செய்து போட்டு பார்ப்பார். இப்படி நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து நாங்களும் கற்றுக்கொண்டோம். சதுரங்க வேட்டை படம் ஆரம்பிக்கும்போது கூட ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருந்த எனக்கு ஃபோன் செய்து, எச்.வினோத் உன்னை வைத்துதான் படம் எடுக்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருக்கிறான். நீ எங்கு இருக்கிறாய். உடனே கிளம்பி சென்னைக்கு வா என்று கூப்பிட்டார். அப்படித்தான் என்னை அழைத்தார். நானும் இதற்குள் அப்படிதான் வந்து நடித்தேன். இன்று அவர் நம்மிடம் இல்லாதது வருத்தமாக உள்ளது.

நிறைய இயக்குநர்களுடன் பயணித்து இருக்கிறீர்கள்.. உங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர் யார் என்று கூற முடியுமா?

எனக்கு பிடித்த இயக்குநர் என்றால் அது ‘பரினீதா’ என்ற இந்தி படத்தின் இயக்குநரான பிரதீப் சர்க்கார்தான். இன்று அவரும் நம்முடன் இல்லை. இருந்தாலும் என்னை மனதார பாராட்டிய ஒரு மனிதர். என்னுடைய வேலை அவருக்கு பிடிக்கும். அவருடைய வேலை எனக்கு பிடிக்கும். என்னுடைய ஒளிப்பதிவை பார்த்துவிட்டு எப்போதும் அவர் சொல்வது ”ஏதோ இடது கை விளையாட்டு போல் செய்கிறாய்” என்று கூறுவார். அவருடன் மட்டும் 600 முதல் 700 வரையிலான தொலைக்காட்சி ஷோக்களில் பணியாற்றி இருக்கிறேன். ஒட்டுமொத்த திரையுலகமும் அவரை “தாதா” அதாவது பெங்காலியில் “அண்ணா” என்றுதான் அழைப்பார்கள். நானும் அப்படித்தான் கூப்பிடுவேன். அவர் ஒரு பெங்காலி இயக்குநர். நேரம் போவதே தெரியாமல் பணியாற்றுவது அவரிடம் மட்டுமாகத்தான் இருக்கும்.


நடிகர் நட்டிக்கு பிடித்த ‘பரினீதா’ படத்தின் இயக்குநர் பிரதீப் சர்க்கார்

மொழி தெரியாமல் பிற மொழிப்படங்களில் பணியாற்றிய அனுபவங்கள் எப்படி இருந்தது? அதை எப்படி நீங்கள் கையாண்டீர்கள்?

இந்தி மொழியை நாம் தொலைக்காட்சிகளை பார்த்து ஒன்றிரண்டு வார்த்தைகள் கற்று வைத்திருப்போம். அப்படித்தான் நானும் ஒன்றிரண்டு வார்த்தைகள் தெரிந்து வைத்திருந்தேன். பிறகு அங்கு சென்று ஒவ்வொருவரிடமும் பழக பழக அது தானாகவே வந்துவிட்டது. அங்குள்ள சினிமா துறையில் பணியாற்றுபவர்களின் வேலைகள் பார்க்க அழகாக இருக்கும். இங்கு ஏதோ இருக்கிறது. நாமும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன். அதன் பிறகு எனக்கு மொழி ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.

நட்டி ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? எந்த பெண் மீதும் அவருக்கு க்ரஷ் கூட இல்லையா?

ஏன் இல்லை. அப்படி இல்லை என்று சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும். எனக்கும் பெண் தோழிகள் இருந்தார்கள். ஆனால், நமக்கு ஒத்துப்போகவில்லை என்றால் என்ன செய்ய முடியும்.

அம்மா பற்றி ஒரு வார்த்தை….

எங்க அம்மா என்னுடைய சாமி... அவர் மாதிரி ஒரு அம்மா யாருக்கும் இருக்க முடியாது. எல்லாருக்குமே அவர்களுடைய அம்மா தனித்துவமானவர்கள்தான். நான் கோபித்தால் கூட அப்போது அமைதியாக இருந்துவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து என்னிடம் அமர்ந்து பொறுமையாக பேசுவார்கள். என் தவறை சுட்டிக்காட்டி இப்படி செய்யாதே என்று அறிவுறுத்துவார்கள். அவரை போன்றுதான் அப்பாவும். அப்பா எந்த அளவுக்கு கண்டிப்பாக இருக்கிறாரோ அதே அளவுக்கு ஜாலியாகவும் இருக்கக் கூடிய மனிதர். அண்ணன் என்னை சரியாக வழிநடத்தி செல்வார். என்னுடைய அண்ணி மிகவும் பொறுமையானவர். என்னை பொறுத்தவரை என் குடும்பம் எனக்கு மிகவும் நெருக்கமானது.


ஒளிப்பதிவாளராக உலகநாயகன் கமல்ஹாசனை கவர்ந்த நட்டி

நீங்கள் தமிழ் சினிமாவில் பணியாற்ற முடியாமல் போன டாப் ஹீரோக்கள் யார்?

கண்டிப்பாக எனக்கு அந்த வருத்தம் எப்போதும் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தல அஜித் இருவருடனும் பணியாற்ற முடியாமல் போனது எனக்கு உண்மையிலேயே வருத்தமான ஒன்றுதான். இனிவரும் காலங்களில் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு வந்தால் சந்தோஷமாக செய்வேன். அதேபோல் உலகநாயகனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டு விட்டேன். இருந்தாலும் தனிப்பட்ட முறையில் கமல் சாருக்கு என்னுடைய கேமரா பணி மிகவும் பிடிக்கும். பாராட்டவும் செய்திருக்கிறார். குறிப்பாக, ‘பரினீதா’ திரைப்படத்தில் சிறப்பாக பணியாற்றி இருப்பதாக சொல்லி பாராட்டி இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்