தொடர்ந்து தோல்வியடையும் PART-2 படங்கள்! இந்தியன் 2-ம் அப்படித்தான்?

சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்கில் வெளியான திரைப்படம் தான் "இந்தியன் 2", ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை வெளியான ஷங்கர் திரைப்படத்தில் படுமோசமான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் இந்தியன் 2 தான். அதுமட்டுமில்லாமல் இன்னொரு பாகமும் இருக்கிறது என்று படக்குழு அறிவித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வந்த பார்ட் 2 படங்கள் பெரிதாக வெற்றி பெற்றதில்லை.

Update:2024-08-06 00:00 IST
Click the Play button to listen to article

சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்கில் வெளியான திரைப்படம்தான் "இந்தியன் 2", ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை வெளியான ஷங்கர் திரைப்படத்தில் படுமோசமான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் "இந்தியன் 2"தான். அதுமட்டுமில்லாமல் இன்னொரு பாகமும் இருக்கிறது என்று படக்குழு அறிவித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை வந்த பார்ட்-2 படங்கள் பெரிதாக வெற்றி பெற்றதில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அதையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். தொடர்ந்து பார்ட்-2 படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால் ரசிகர்களும் பார்ட்-2 படங்களை விரும்புவதில்லை. இக்கட்டுரையில் அதிக எதிர்பார்ப்பில் சொதப்பிய பார்ட்-2 படங்களை பற்றியும், வெளியாக தயாராகிவரும் பார்ட்-2 படங்களை பற்றியும் பார்க்கப் போகிறோம்.


சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் 

ரசிகர்களை ஏமாற்றிய படங்கள் :

முதல் பாகத்தின் பெரிய வெற்றியால் பார்ட் 2 திரைப்படங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள். முதலில் வலுவான திரைக்கதையை கொடுத்துவிட்டு, இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தின் வெற்றிக்காகவே இத்திரைப்படம் எடுக்கப்பட்டது போல் திரைக்கதையை அமைத்துவிடுவர். அப்படி வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஆரம்பித்து தற்போது வெளியாகியிருக்கும் இந்தியன் 2 படம் வரைக்கும் இதே போல்தான் நடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பார்ட் 2 திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் பயப்படும் நிலையே ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பார்ட் 2 திரைப்படங்களை தயாரிப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஹாலிவுட் படங்களின் மோகத்தினால்தான் பார்ட் 2 திரைப்படங்கள் இந்திய சினிமாவில் எடுக்கப்படுகின்றன. ஆனால் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக திரைக்கதை இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.


ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா டபுள் X 

வெற்றி பெற்ற பார்ட் 2 படங்கள் :

பெரும்பாலான பார்ட் 2 திரைப்படங்கள் தோல்வி படங்களாக இருந்தாலும், ஒரு சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பதிவு செய்துள்ளன. அந்தவகையில் சிங்கம் 2, சென்னை 600028 மற்றும் ஜிகர்தண்டா டபுள் X போன்ற பார்ட்-2 திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படங்களின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம் என்னவென்றால் முதல் பாகத்தின் திரைக்கதை மக்களிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தியதோ அதே பாதிப்பை இரண்டாம் பாகமும் ஏற்படுத்தியதுதான். இப்படி விரல்விட்டு என்னும் அளவிற்கே பார்ட்-2 படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் ரசிகர்களும் அந்த படங்களின் மீது எதிர்பார்ப்பை வைப்பதற்கு தயங்குகின்றனர்.

தமிழ் சினிமாவில் அடுத்து வெளிவரவுள்ள பார்ட்-2 படங்கள் :


அதிக எதிர்பார்ப்பில் இம்மாதம் வெளியாகவிருக்கும் டிமான்டி காலனி திரைப்படத்தின் போஸ்டர் 

டிமான்டி காலனி :

கோப்ரா படத்தின் தோல்விக்கு பிறகு அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் படம் " டிமான்டி காலனி '. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. முதல் பாகத்திலிருந்த அருள்நிதி இந்த படத்திலும் தொடருகிறார். மேலும் பிரியா பவானி ஷங்கர், முனீஸ்காந்த், ஷாரா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். முதல் பாகத்தை போலவே அதே டிமான்டி காலனியில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் பற்றிதான் இப்படத்தின் ட்ரெய்லரும் இருக்கின்றது. இப்படமும் மிகப்பெரிய ஹாரர் த்ரில்லராக இருக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

விடுதலை 2 :

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் "விடுதலை 2". கதையின் நாயகனாக சூரியும், வாத்தியாராக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் ஒரு பாகமாக எடுப்பதாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் நீளம் காரணமாக தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தின் பாதியையும் எடிட் செய்து, கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிட்டனர். 4 மணிநேரம் கொண்ட இப்படத்தை மக்கள் வெகுவாக பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறனின் திரைக்கதை மீது மக்களுக்கு எப்பொழுதும் தனி ஈர்ப்புண்டு.


திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் "சார்பட்டா பரம்பரை 2"

சார்பட்டா பரம்பரை 2 :

2021-ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் "சார்பட்டா பரம்பரை". ஆர்யா, துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் பசுபதி இப்படத்தில் நடித்திருந்தனர். 1960களில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. ரஞ்சித் இயக்கத்தில் இதுவரை வந்த படங்களில் மிகச்சிறந்த படமென்றால் அது சார்பட்டா பரம்பரைதான். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இதிலும் ஆர்யாதான் நடிக்கவிருக்கிறார். இது முதலாம் பாகத்தின் ப்ரீகுவல் என்று சமீபத்திய பேட்டியில் ரஞ்சித் கூறியிருந்தார். அதனாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


சிவா நடிப்பில் உருவாகிவரும் "சூதுகவ்வும் 2"

சூதுகவ்வும் 2 :

விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் "சூதுகவ்வும்". தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்திலிருந்த யாரும் இரண்டாம் பாகத்தில் இல்லை. அதுமட்டுமில்லாமல் இயக்குநர் நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கவில்லை. விஜய் சேதுபதிக்கு பதிலாக சிவா நடிக்கிறார். அதனாலேயே மக்களுக்கு பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது. இப்படத்தையும் ஏதாவது பண்ணிவிடுவார்களோ என்று ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். டார்க் காமெடி படமாக வெளியாகியிருந்த சூதுகவ்வும், இன்றளவும் மக்களுக்கு பிடித்த படமாக இருக்கின்றது. இரண்டாம் பாகமும் மக்களுக்கு பிடித்ததுபோல் இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வருகிறது "தனி ஒருவன் 2"

தனி ஒருவன் 2 :

2015-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் மிகமுக்கிய படமாக வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததுதான் "தனி ஒருவன்". இதன் இரண்டாம் பாகத்திலும் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிக்கிறார்கள். முதல் பாகத்தில் அரவிந்த் சாமி கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இந்த பாகத்தில் அபிஷேக் பச்சனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. வில்லனுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானதென்றால் அது தனி ஒருவன் படத்திலிருந்துதான், அதுமட்டுமில்லாமல் முதலாம் பாகம் வெற்றி பெறுவதற்கு ஹிப் ஹாப் ஆதியின் இசை மிகப்பெரிய பலமாக இருந்தது. ஆனால் தற்போது சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசை அமைக்கவிருக்கிறார். இருந்தபோதிலும் முதல் பாகத்தை போன்று இந்த பாகத்திலும் பின்னணி இசை நன்றாக இருக்கும் என்று நம்புவோம். அதுமட்டுமில்லாமல் இன்றளவும் கொண்டாடப்படும் திரைப்படங்களில் தனி ஒருவனும் ஒன்று. எனவே முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்தின் திரைக்கதையும் மிகச்சிறப்பாக இருந்தால் நிச்சயம் படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்