மீண்டும் சூடு பிடிக்கும் சினிமா மார்க்கெட் - அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ராகவா லாரன்ஸ்
திறமையும், விடா முயற்சியும் இருந்தால் சாதாரண மனிதனும் எப்பேர்ப்பட்ட உயரத்தையும் எட்டிப்பிடித்துவிடலாம் என்பதற்கு உதாரணம்தான் ராகவா லாரன்ஸ்.
வெற்றி தோல்வி என்பது எல்லோரது வாழ்க்கையிலும் சாதாரணமான ஒன்றுதான். திறமையும், நல்ல வழிகாட்டுதல்களும், விடா முயற்சியும் இருந்தால், சாதாரண மனிதனும் எப்பேர்ப்பட்ட உயரத்தையும் எட்டிப்பிடித்துவிடலாம் என்பதற்கு உதாரணம்தான் ராகவா லாரன்ஸ். ஒரு வேலை சாப்பாட்டுக்கே சிரமப்படும் குடும்பத்தில் வறுமையோடு பிறந்து, அந்த வறுமையோடு போராடி, யாருடைய ஆதரவும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண பின்னணி நடன கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கிய இவர், இன்று ஒட்டுமொத்த இந்திய திரையுலக ஜாம்பவான்களாலும் அறியப்படும் நடனக்கலைஞராக, நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பன்முகக்கலைஞராக மாறியிருக்கிறார் என்றால் அது அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. பல போராட்டங்களையும், அவமானங்களையும் கடந்து இன்று யாரும் தொட்டு பார்த்திட முடியாத உச்சத்தில் நிற்கிறார் என்றால் அது அவரால் மட்டுமே சாத்தியமானது. இதுதவிர ஒரு சிறந்த சமூக செயல்பாட்டாளராகவும் எப்போதும் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளும் ராகவா லாரன்ஸ், சமீபகாலமாக நடித்துவரும் படங்கள் அனைத்தும் அவரது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் கூட கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’பென்ஸ்’ மற்றும் ’ஹன்டர்’ ஆகிய இரண்டு படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ராகவா லாரன்ஸ் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பபை ஏற்படுத்தியுள்ள இப்படங்கள் குறித்தும், இதற்கு முன்பாக இவரது நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படங்கள் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.
காஞ்சனாவிற்கு பிறகு வந்த சறுக்கல்
இளமை பருவத்தில் நடிகர் பிரபு தேவாவுடன், நடிகர் ராகவா லாரன்ஸ்
1993-ஆம் ஆண்டு ரஜினியின் ‘உழைப்பாளி’, அர்ஜுனின் ‘ஜென்டில்மேன்’ ஆகிய படங்கள் வாயிலாக பின்னணி நடனக்கலைஞராக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ், அஜித்தின் ‘அமர்க்களம்’ படத்தில் இடம்பெற்ற “மகா கணபதி” பாடல் வாயிலாக ஒரு சோலோ நடன கலைஞராக அவதாரம் எடுத்தார். இதற்கு பிறகு தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்ற ராகவா லாரன்ஸ், 2002-ஆம் ஆண்டு காதல் படமாக வெளிவந்த ‘அற்புதம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து, டான்சர், நடிகர் என்ற நிலையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய ராகவா லாரன்ஸ் தெலுங்கில் அப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நாகர்ஜூனாவை வைத்து ‘மாஸ்’ என்றொரு படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார். பிறகு தொடர்ந்து அனைத்து தளங்களிலும் இயங்க ஆரம்பித்த லாரன்ஸ், தமிழில் அனைவரையும் கவரும் வகையில் நகைச்சுவை கலந்த திகில் படமாக வெளிவந்த ‘முனி’ படத்தினை இயக்கி முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ராஜ்கிரண் புதிய தோற்றத்தில் முனியாக வந்து நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
'காஞ்சனா' படத்தில் ராகவா லாரன்ஸின் கெட்டப்
இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் வந்து வெற்றி பெறவே, தொடர்ந்து இதே ஜானரில் வெவ்வேறு கதைக்களங்களை கொண்டு காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என அடுத்தடுத்த பாகங்களை இயக்கினார். இந்த காஞ்சனா சீரிஸ் இந்திய அளவில் லாரன்ஸிற்கு கவனத்தை பெற்று தந்ததோடு, மிகப்பெரிய வசூல் சாதனைகளையும் படைத்தது. குறிப்பாக இந்த பாகங்கள் அனைத்திலும் கோவை சரளா, தேவதர்ஷினி ஆகியோருடன் இணைந்து ராகவா லாரன்ஸ் செய்திருந்த லூட்டிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். இதற்கு பிறகு குழந்தைகள் விரும்பும் நட்சத்திர நாயகனாக மாறிய ராகவா லாரன்ஸ், தொடர்ந்து அடுத்தடுத்து ஜாலியான கதைக்களங்களில் படத்தினை இயக்கலாம் என்றிருந்த போது, பிற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி சாய் ரமணி என்பவரது இயக்கத்தில் 'மொட்ட சிவா கெட்ட சிவா', பி.வாசு இயக்கத்தில் 'சிவலிங்கா', 'சந்திரமுகி 2', கதிரேசன் என்பவரது இயக்கத்தில் 'ருத்ரன்' ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இப்படங்கள் அனைத்துமே அவருக்கு பெரிய அளவில் வெற்றிப்படங்களாக அமையவில்லை. இருந்தும் இதில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சரி, போலீஸ் கெட்டப்பில் வந்து லாரன்ஸ் பேசும் பஞ்ச் வசனங்களும் சரி அவரது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டன. இதற்கிடையில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கியவர் தொடர்ந்து பல சமூக பணிகளையும் செய்து வந்தார்.
மாற்றம் தந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸ் ரவுடியாக இருந்து ஹீரோவாக மாறும் தருணம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பாபி சிம்ஹா, சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம்தான் 'ஜிகர்தண்டா'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதன் இரண்டாம் பாகம் 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவந்து, முதல் பாகத்தை போன்றே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற பெயரில் வெளிவந்த இப்படத்தினையும் கார்த்திக் சுப்புராஜே இயக்க, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முதல் பாகத்தில் அசால்ட் சேதுவாக வரும் பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த்தின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்ததால், அதே அளவுக்கான எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ், நடிப்பு அரக்கனான எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் மீதும் வைக்கப்பட்டது. இப்படத்தில் அலியஸ் சீசர் என்ற அரசியல் செல்வாக்கு மிகுந்த ரவுடி கெட்டப்பில்வரும் ராகவா லாரன்ஸ், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போது, சினிமா ஹீரோவாக வரும் அரவிந்த் ஆகாஷ், லாரன்ஸை பார்த்து கருப்பா இருக்குறவனால சினிமாவில் ஹீரோ ஆகிவிட முடியாது என்று அவமானப்படுத்த, அப்போது எப்படியாவது சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் லாரன்ஸிற்கு வர ஆரம்பிக்கிறது. கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் தன்னை வைத்து படம் இயக்குவதற்கு ஏற்ற மாதிரியான நபரை தேட ஆரம்பிக்கும் போதுதான், ரே தாசனாக வரும் எஸ்.ஜே.சூர்யா அவரது கண்ணில்படுகிறார்.
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் அலியஸ் சீசர் கதாபாத்திரத்தில் வரும் ராகவா லாரன்ஸ்
இதற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸை வைத்து படம் இயக்கினாரா? யார் இந்த ரே தாசன்? என்பதுதான் படத்தின் மீதி கதையாக வரும். இப்படத்தில் ராகவா லாரன்சும் சரி, எஸ்.ஜே.சூர்யாவும் சரி ஒருவருக்கொருவர் போட்டி போட்டு அதகளம் செய்திருப்பர். அதிலும் அலியஸ் சீசர் கதாபாத்திரத்தில் வரும் ராகவா லாரன்ஸ் முதல் பாகத்தில் அசால்ட் சேதுவாக வரும் பாபி சிம்ஹாவையே மறக்கடிக்கச் செய்யும் அளவுக்கு சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் மிரட்டியிருப்பார். படம் வெளிவருவதற்கு முன்பாக இரண்டு நடிப்பு ஜாம்பவான்கள் இப்படத்தில் இருக்கிறார்கள். இவர்களில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும். முதல் பாகத்தில் வரும் அசால்ட் சேது கதாபாத்திரத்தை மிஞ்சி நடிப்பாரா லாரன்ஸ் போன்ற பல கேள்விகளும் ரசிகர்களால் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அமைந்திருந்தது. அதே நேரம், எஸ்.ஜே.சூர்யாவையே ஓவர் டேக் செய்யும் படியாக ரவுடியாகவும், வீரனாகவும் என இருவேறு கதாபாத்திரங்களில் லாரன்ஸ் நடித்து பட்டையை கிளப்பி இருந்தது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்'
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
‘அவியல்’, ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர்தான் லோகேஷ் கனகராஜ். அண்மையில் விஜய்யை வைத்து இவர் இயக்கி இருந்த 'லியோ' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி உலக அளவில் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவித்தது. இதனை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 171 படத்தில் கை கோர்த்துள்ள லோகேஷ் கனகராஜ் விரைவில் படப்பிடிப்பை தொடங்குவதற்கான பணிகளில் மிகவும் பிசியாக இயங்கி வருகிறார். இதற்கிடையில் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடலில் நடித்து பல்வேறு தரப்பில் இருந்தும் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றிருந்தார். இப்படியான நிலையில், சொந்தமாக ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி படங்களை தயாரித்து வரும் லோகேஷ், ஏற்கனவே ‘பைட் க்ளப்’ என்ற படத்தினை தயாரித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவதாக நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து ‘பென்ஸ்’ என்ற படத்தினை தயாரிக்கவுள்ளார். ‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தையும் இயக்கவுள்ளார். தமிழ் புத்தாண்டு அன்று இப்படம் தொடர்பாக படக்குழுவினர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது. தற்போது அந்த போஸ்டர் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, லாரன்ஸ் ரசிகர்களும் அந்த போஸ்டரை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
மெகா பட்ஜெட் படத்தில் ராகவா லாரன்ஸ்
ஏற்கனவே ‘அதிகாரம்’, ‘துர்கா’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ், தற்போது லோகேஷ் தயாரிப்பில் ‘பென்ஸ்’ படத்தில் நடிப்பதை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் ஆகியோரின் தயாரிப்பில் ‘ஹண்டர்’ என்ற மெகா பட்ஜெட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரின் 25-வது திரைப்படமாக வெளிவரவுள்ள இப்படத்தினை விஷாலை வைத்து ‘அயோக்கியா’ என்ற படம் எடுத்த வெங்கட் மோகன் என்பவர் இயக்குகிறார். 100 கோடி பட்ஜெட்டில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக உள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் இரண்டு விதமான கெட்டப்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் திரை வரலாற்றில் மிக அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படமாகவும் இப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பாலிவுட்டை சேர்ந்த நடிகையும், வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ மற்றும் ‘பென்ஸ்’ திரைப்பட போஸ்டர்கள்
இதுதவிர படத்தில் ஒரு புலி நடிக்க இருப்பதாகவும், அந்த புலிக்கும், ஹீரோவுக்கும் இடையில் நடக்கும் நெகிழ்ச்சியான சம்பவங்களை மையமாக கொண்டுதான் படத்தினை எடுக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் புத்தாண்டு அன்று இப்படம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. ஒரே நாளில் காலை, மாலை என ராகவா லாரன்ஸ் நடிக்கும் இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும், குஷியையும் ஏற்படுத்தியுள்ளதோடு, ராகவா லாரன்ஸ் காஞ்சனவிற்கு பிறகு மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி இருப்பதாகவும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.