திரைத்துளிகள் - விஜயகாந்த் ஓர் சகாப்தம்!

விஜயகாந்தின் வெள்ளந்தியான மனமும் இரக்க குணமும், என்னதான் பொதுமக்களால் கொண்டாடப்பட்டாலும் திரையுலகில் அவரை எதிர்ப்பவர்களும் இருந்தனர். விஜயகாந்தின் திரையுலக எதிர்ப்புகள் மற்றும் வெற்றிகள் குறித்து ஓர் ரீவைண்ட்...

Update:2024-01-02 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவின் உன்னதமான நல்ல மனிதர்களுள் ஒருவர் விஜயகாந்த். சக கலைஞர்களை சமமாக நடத்தும் தன்னிகரில்லா இவர், பசி என்று வருவோருக்கு வயிறார உணவளிக்கும் வள்ளல். அவரது இழப்பை இந்த நூற்றாண்டின் பேரிழப்பாகவே கருதுகின்றனர் மக்கள். விஜயகாந்தின் வெள்ளந்தியான மனமும், இரக்க குணமும், என்னதான் பொதுமக்களால் கொண்டாடப்பட்டாலும் திரையுலகில் அவரை எதிர்ப்பவர்களும் இருந்தனர். விஜயகாந்தின் திரையுலக எதிர்ப்புகள் மற்றும் வெற்றிகள் குறித்து ஓர் ரீவைண்ட்...

இறப்புக்கு கூட இரங்கல் தெரிவிக்காத வடிவேலு

கைதூக்கி விட்டவரை கடைசி நிமிஷத்திலும் பார்க்க எண்ணம் வரவில்லை என்று வருத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடைசியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நடிகரும், தேமுதிக கட்சித் தலைவருமான விஜயகாந்தை ஒருகாலத்தில் அண்ணன், அண்ணன் என்று அன்போடு அழைத்தவர்தான் வடிவேலு. ஆனால் 2011ஆம் ஆண்டு தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, பிற கட்சியினரை பற்றி பேசாமல், விஜயகாந்தை மட்டுமே குறிவைத்து தாக்கிப் பேசினார். அதிலும் குறிப்பாக, ‘இவன்’ என்றெல்லாம் ஒருமையில் பேசி விமர்சித்தார். சினிமா உலகில் வடிவேலு தனி இடத்தை பிடிக்க, முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் விஜயகாந்த். ஆனால் அப்படிப்பட்ட நபரை ஏன் வடிவேலு இப்படி தாக்கிப் பேசுகிறார்? அப்படி என்ன பிரச்சினை இருவருக்கும்? என்ற கேள்வி இன்றும் பலருக்கும் இருக்கிறது.


விஜயகாந்த் இறப்பிலும் பங்கேற்காத வடிவேலு

இதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. வடிவேலுவின் அலுவலகத்திற்கு அருகில்தான் விஜயகாந்தின் அக்கா வீடும் இருக்கிறது. விஜயகாந்தின் அக்கா கணவர் இறந்துபோன சமயத்தில் விஜயகாந்தும் அவருடைய கட்சித் தொண்டர்களும் வடிவேலுவின் அலுவலகத்திற்கு முன்பு தங்கள் காரை நிறுத்திவிட்டு சென்றதால் ஆத்திரமடைந்த வடிவேலு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் விஜயகாந்தை ஒருமையில் திட்டியதாகவும் தெரிகிறது. இதனால் கோபமடைந்த விஜயகாந்தின் தொண்டர்கள் வடிவேலுவின் வீட்டில் கல்லெறிந்ததாகவும் கூறப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வடிவேலு, விஜயகாந்துக்கு எதிராகவே திரும்பிவிட்டார் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். என்னதான் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பகையாக இருந்தாலும் ஒரே ஊரில் இருந்துகொண்டு, ஊரே திரண்டு அஞ்சலி செலுத்தும் சமயத்திலும் இறப்புக்குக்கூட அஞ்சலி செலுத்த வராதது வருத்தம் அளிக்கிறது என்கின்றனர் ரசிகர்கள். என்னதான் மனக்கசப்பு இருந்தாலும் வடிவேலுவின் மனதில் எந்த அளவுக்கு வன்மம் நிறைந்திருக்கிறது என வருத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள்.

விஜயகாந்தை காண ஒரு வருடமாய் தவித்த விஜய்!

விஜய் நடிகராக அறிமுகமான முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அப்போது விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரும், விஜயகாந்தும் நல்ல உறவில் இருந்ததால், அவருடன் தனது மகன் நடித்தால் கவனம் பெறுவார் என்று நினைத்த எஸ்.ஏ.சி., விஜயகாந்திடம் இதுகுறித்து கேட்டிருக்கிறார். அப்போது உச்சத்தில் இருந்த விஜயகாந்தும் எந்தவித மறுப்புமின்றி சம்மதம் தெரிவிக்கவே விஜயகாந்தின் தம்பியாக திரையில் தோன்றினார் விஜய். அப்படி உருவான ‘செந்தூர பாண்டி’ திரைப்படத்தால்தான் விஜய்க்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடிவந்தன. இதனால் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்தால் வெற்றிபெற்று விடலாம் என்ற கருத்தே அப்போதைய திரையுலகில் பரவியது.


அண்ணனை (செந்தூர பாண்டி) கண்ணீர் மல்க ஏக்கத்துடன் பார்த்த நடிகர் விஜய்

இந்நிலையில் விஜயகாந்த் இறப்புக்கு சென்ற நடிகர் விஜய், அவரை வைத்திருந்த கண்ணாடிப் பெட்டியின்மீது கைகளை வைத்து அவரது முகத்தை பார்த்து கண்ணீர்விட்டார். ஆனால் அந்த இடத்திலும் விஜய்க்கு அவமரியாதையே கிடைத்தது. அங்கிருந்த தொண்டர்கள் பலர் ‘இங்கிருந்து போ’ என கோஷமிட்டனர். ‘உயிருடன் இருந்தபோது பார்க்க வரவில்லை. இப்போது ஏன் வந்தாய்?’ என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால் உண்மை என்னவென்று பின்னர்தான் தெரியவந்தது. உயிருடன் இருக்கும்போதே விஜயகாந்தை பார்க்க விஜய் பலமுறை முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர்தான் அனுமதிக்காமல் இருந்து வந்துள்ளனர். அவர் யாரையாவது பார்த்தால் உணர்ச்சிவசப்படுவார். அது அவரது உடலுக்கு நல்லதல்ல என்று கூறி யாரையும் அனுமதிக்கவில்லையாம்.

இதற்கு முன்பே விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ராதா ரவி கூட அவரது குடும்பத்தினர் அனுமதிக்காதது பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார். மேலும் அவரது குடும்பத்தினர் அவரை தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் பலமுறை மீடியாக்களில் கூறியிருந்தார்.


விஜயகாந்த் இறப்பிற்கு காணொளியில் வருத்தம் தெரிவித்த பிரபலங்கள்

கடைசியில் பார்க்க முடியவில்லையே... வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட பிரபலங்கள்

கேப்டனின் மறைவு திரையுலகில் பெரும் சோக அலையையே ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரிடமும் இயல்பாக பழகும் விஜயகாந்தை பிடிக்காதவர்கள் இருக்கமுடியாது. இவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலகட்டத்தில் திரை கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அதனாலேயே அவருடைய இறப்புக்கு திரை கலைஞர்கள் அனைவருமே சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் சில நடிகர்கள் வெளிநாட்டுக்கு படபிடிப்புக்கு சென்றுள்ளதால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லையே என்ற வருத்தத்தை கண்ணீர் மல்க வீடியோ பதிவுகள் மூலம் வெளியிட்டுள்ளனர்.


இறப்புக்குக்கூட வராத அளவிற்கு என்ன ஈகோ என்று அஜித் குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், அவர் ‘விடாமுயற்சி’ படபிடிப்பிற்காக அசர்பைஜான் சென்றிருப்பதாகவும், அதனால் நேரில் வர முடியவில்லை என்று கூறி, பிரேமலதா மற்றும் அவர்களது மகன்களை போனில் தொடர்புகொண்டு பேசி ஆறுதல் படுத்தியுள்ளார் அஜித். அதேபோல் நடிகர் சிம்புவும் வெளிநாட்டில் மாட்டிக்கொண்டதால், வரமுடியவில்லை என்றும், அவர் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும், அவரது தந்தை டி. ஆர் ராஜேந்திரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தகவலறிந்த விஷால், தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், உடனே வர முடியவில்லை எனவும் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதேபோல் நடிகர் கார்த்தி ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருப்பதாகவும், தனுஷ் ஜெர்மனியில் மாட்டிக்கொண்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் தமிழகத்தில் பெரிய நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அர்ஜூன், விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ராதா ரவி, மன்சூர் அலிகான், விஜயகுமார், லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், பார்த்திபன், இளையராஜா, பா. ரஞ்சித், சுகன்யா, குஷ்பூ உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.


நடிகர் பிரபுவுடன் விஜயகாந்திற்கு இருந்த உறவு 

‘நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்’ - நடிகர் பிரபு உருக்கம்

விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு, கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது தனது அப்பா சிவாஜி கணேசன் இறந்தபோது விஜயகாந்த் தங்களுக்கு எப்படி உதவினார் என்பதை கண்ணீர் மல்க பகிர்ந்தார். அந்த பேட்டியில், “என் அப்பா சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தின்போது கடைசிவரை உறுதுணையாக நின்றவர் அண்ணன் விஜயகாந்த். நான் செய்யவேண்டிய கடமையை அண்ணன் நின்று செய்தார். அடக்கம் செய்யும்வரை கூடவே இருந்துவிட்டு, என் அம்மாவையும் பார்த்து எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டுதான் போனார். அவரும் சிவாஜிக்கு ஒரு மகன்தான்” என்றார்.

2001ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்தபோது நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதியது. அதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு மக்கள் கூட்டத்தை சமாளித்ததுடன், சிவாஜி கணேசனின் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டியை ஏற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்