திரைத்துளிகள்: விஜய், சிவகார்த்திகேயனை மிஞ்சுவாரா கவின்?

தனது கடைசி படமான ‘தளபதி 69’ -ஐ முடித்துவிட்டால் அதன்பிறகு விஜய்யை திரையில் பார்க்கமுடியாது என்ற வருத்தத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள். அதனாலேயே அந்த படத்தின் மீதான ஆர்வம் மிகவும் கூடியிருக்கிறது.

Update:2024-02-20 00:00 IST
Click the Play button to listen to article

நீண்ட இடைவெளிக்கு பின் பாலிவுட்டில் - குஷ்பு மகிழ்ச்சி!

சினிமா, அரசியல் என மாறி மாறி கலக்கிவரும் குஷ்பு 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிக்கவிருக்கிறார். பாஜகவில் இணைந்த குஷ்பு தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கிறார். பிஸியான அரசியல் வாழ்க்கைக்கு மத்தியில் அவ்வப்போது தென்னிந்திய திரைகளில் சிறப்பு மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துவந்தார். இந்நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டில் தற்போது நடிக்கவிருக்கிறார். 35 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியபோது, “நான் பாலிவுட்டில் நடித்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘ப்ரேம் டான்’ என்ற இந்தி படத்தில் 1989-இல் நடித்திருந்தேன். அதன்பிறகு இந்தி படங்களில் நடிக்கவில்லை. இப்போது நான் முற்றிலும் புதியவளாக உணர்கிறேன். நானா படேகருடன் இணைந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகப்பெரிய நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். முன்பு தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் என்னால் இந்தியில் நடிக்க முடிக்கவில்லை. அழுத்தமான கதாபாத்திரம் கொண்ட ஒரு படம் என்பதால் மீண்டும் இந்தியில் நடிப்பதை முக்கியமாக கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.


நடிகை குஷ்பு மற்றும் பாலிவுட் இயக்குநர் அனில் ஷர்மா

‘ஜர்னி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘கடார் 2’ படத்தை இயக்கிய அனில் ஷர்மா இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்த நானா படேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குஷ்பு 8 வயதாக இருக்கும்போதே 1980ஆம் ஆண்டு வெளியான ‘தி பர்னிங் ட்ரெய்ன்’ என்ற இந்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பிறகு இரண்டு வருடங்கள் தொடர்ந்து இந்தியில் நடித்த இவர், 1988ஆம் ஆண்டு வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தளபதி 69 இயக்குநர் இவர்தான்!

நடிகர் விஜய் அரசியலில் இறங்கிவிட்டார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தற்போது ஒப்பந்தமாகியுள்ள திரைப்படங்களை முடித்து கொடுத்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கவிருப்பதாக ஏற்கனவே தெரிவித்துவிட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘G.O.A.T' திரைப்படத்தில் விஜய் நடித்துவருகிறார். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மைக் மோகன், பிரபு தேவா, ஜெயராம், அஜ்மல், வைபவ், ப்ரேம்ஜி, லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி போன்ற பல பிரபலங்கள் இணைந்திருக்கின்றனர் என்ற செய்தி வெளியானது. இதனையடுத்து தனது கடைசி படமான ‘தளபதி 69’ -ஐ முடித்துவிட்டால் அதன்பிறகு விஜய்யை திரையில் பார்க்கமுடியாது என்ற வருத்தத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள். அதனாலேயே அந்த படத்தின் மீதான ஆர்வம் மிகவும் கூடியிருக்கிறது.


இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் - நடிகர் விஜய் - இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்

இந்நிலையில் விஜய்யின் கடைசிப் படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்விதான் சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. வெற்றிமாறன்தான் இயக்குவார் என்ற செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருப்பதாக மற்றொருபுறம் செய்திகள் பரவின. இந்நிலையில் ‘தளபதி 69’ படத்தை தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மகேஷ் பாபுவை வைத்து இவர் இயக்கிய ‘குண்டூர் காரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து விஜய்யின் கடைசி படத்தை இவர் இயக்குவார் என்ற செய்தி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. ஆனால் ஏற்கனவே ஒரு தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர் என்பதையும் மறுக்கமுடியாது. என்னதான் வதந்திகள் பரவினாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு யாரிடமிருந்தும் வரலாம்.

அமிதாப்பின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அதிலும் சூப்பர் ஸ்டார்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து 4-வது முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவிவகித்து வருகிறார். இந்நிலையில் 5-வது முறையாக அவர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். கடந்த 13-ஆம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்ததிலிருந்தே அவருடைய சொத்து மதிப்புதான் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.


நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன்

தனக்கும், தனது கணவருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1578 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதில் தன்னிடம் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார், ரூ.41 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அதுவே தனது கணவர் அமிதாப் பச்சனின் வங்கிக்கணக்கில் ரூ.130 கோடிக்கும் மேல் பணமும், ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ், போர்ஷ் போன்ற விலையுயர்ந்த 17 சொகுசு கார்களும், கிட்டத்தட்ட ரூ.55 கோடி மதிப்பிலான நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த தம்பதியிடம் ரூ.849.11 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.729.77 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவற்றில் மும்பை, நொய்டா, புனே, போபால், அகமதாபாத் மற்றும் பிரான்ஸ் போன்ற பல்வேறு இடங்களில் சொகுசு பங்களாக்களும், பல்வேறு இடங்களில் இருக்கும் வேளாண் நிலங்களும், தயாரிப்பு நிறுவனங்களும் அடக்கம். இதுதவிர திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரப் படங்களில் அதிக சம்பளங்களில் நடித்து வருகின்றனர் இத்தம்பதியர்.

சிவகார்த்திகேயன் இடத்தை பிடிப்பாரா கவின்?

சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற கனவோடு வரும் பலருக்கும் அந்த வாய்ப்பானது சுலபத்தில் கிடைப்பதில்லை. அப்படி சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்வரை சீரியல், ஷோக்கள் என தங்கள் திறமையைக் காட்டி அதன்மூலம் பெரியத்திரைக்குள் நுழைந்து சாதித்துக்கொண்டிருக்கின்றனர் சிலர். பிரியா பவானி சங்கர், சிவகார்த்தியேன், ரியோ போன்றோர் வரிசையில் ஆரம்பத்தில் சீரியலில் தனது கேரியரைத் தொடங்கி தற்போது சினிமாவில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்றிருக்கிறார் கவின். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடிவர, கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார் கவின். இந்நிலையில் தற்போது கவின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்டார்’ திரைப்படத்தை இயக்கிவருகிறார் இளன். இவர்தான் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தையும் இயக்கியவர்.


நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் கவின்

ஸ்டார், கிஸ் மற்றும் பெயரிடப்படாத அடுத்த படம் என 3 படங்களைத் தொடர்ந்து கவின் நடிக்கவிருக்கும் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் பரவிவருகின்றன. அப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் என்பவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்துவருகின்றன. ஏற்கனவே நடிகர் விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவரது பாணியிலேயே சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் கவின், சிவகார்த்திகேயனின் இடத்தை விரைவில் பிடிப்பார் என்ற டாக்குகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

என்னா நடிப்புடா! - மணிகண்டனை பாராட்டிய இயக்குநர்

காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸான படம்தான் ‘லவ்வர்’. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்த இவர் தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. கடந்த ஆண்டு அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான ‘குட் நைட்’ திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது ‘லவ்வர்’ திரைப்படமும் இந்த காலத்து இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருப்பதாக பாராட்டுகளை பெற்றுவருகிறது.


நடிகர் மணிகண்டன் மற்றும் இயக்குநர் செல்வராகவன்

இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “லவ்வர் திரைப்படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த தலைமுறை காதல் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் படம் பார்க்கிறேன் என்பதையே சில நிமிடங்களில் மறந்துவிட்டேன். அந்த அளவிற்கு ரியலாக இருந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்கு மணிகண்டனும், “மிகவும் நன்றி செல்வராகவன் சார். என்னுடைய படம் உங்களுக்கு பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘லவ்வர்’ போன்ற படத்தை எடுக்க நீங்கள் மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்தீர்கள்” என பதிலுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அடுத்தடுத்த வெற்றிப்படங்களால் மணிகண்டனுக்கு வாய்ப்பு தேடிவந்திருக்கிறது. அடுத்து பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறாராம். இப்படம் தொடர்பான அறிவிப்பானது விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்