CGI உதவியுடன் மீண்டும் திரையில் சில்க் ஸ்மிதா..! மார்க் ஆண்டனி ஸ்பெஷல்

சில்க் ஸ்மிதாவை போலவே ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது மீண்டும் திரையுலகில் நுழைந்து மார்க் ஆண்டனி என்ற படத்தின் மூலம் கால்பதித்திருக்கிறார்.

Update:2023-09-12 00:00 IST
Click the Play button to listen to article

பெண்களும் விரும்பும் கவர்ச்சி குயின்.... பல ஆண்களின் தூக்கத்தை கலைத்த தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் கனவுக்கன்னி... தமிழகத்தின் மர்லின் மன்றோ... என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஒரே நடிகை... அவர் வேறு யாருமில்லை, தன்னுடைய காந்தக் கண்களாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகை சில்க் ஸ்மிதாதான்... இவரது இடத்தை நிரப்ப எத்தனையோ நடிகைகள் போட்டி போட்டு வந்தாலும் இன்றுவரை அது சாத்தியமாகவில்லை . அவ்வப்போது இவரை நினைவுப்படுத்தும் விதமாக சில நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரகாசிக்காமல் சென்றாலும், அச்சு அசல் அவரைப் போலவே ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது மீண்டும் திரையுலகில் நுழைந்து மார்க் ஆண்டனி என்ற படத்தின் மூலம் கால்பதித்திருக்கிறார். இந்த முறை வித்தியாசம் என்னவென்றால் சில்க் ஸ்மிதாவாகவே அவர் திரையில் தோன்றுவது தான். இதுகுறித்த சுவாரஸ்யமான தொகுப்பை இங்கே காணலாம்.

என்றுமே மறக்க முடியாத காந்தக் கண்ணழகி சில்க் ஸ்மிதா

ஆந்திர மாநிலம் ஏலூரு பகுதியில், 1960 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் விஜயலட்சுமி என்ற இயற்பெயருடைய சில்க் ஸ்மிதா. 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையை துவங்கிய போதும், ஒரு நடிகையாக தமிழில் அறிமுகம் செய்தவர், இயக்குனரும், நடிகருமான வினுசக்கரவர்த்தி தான். அவர் இயக்கிய 'வண்டிச்சக்கரம்' என்ற படத்தில் சாராயம் விற்கும் பெண்ணாக அறிமுகம் ஆனார் சில்க் ஸ்மிதா. பின்னாளில் அந்த படத்தில் வந்த 'சில்க்' என்ற பெயரே அவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இப்படத்திற்கு பிறகு ஒரு நடிகைக்கான அத்தனை தகுதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டவர், 1980 துவங்கி 1990களின் இறுதிவரை தன் ஆட்டத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டார். சில்க் ஸ்மிதா ஆட்டம் போட்ட "ஆடி மாசம் காத்தடிக்க...", "நேத்து ராத்திரி யம்மா...", "பொன்மேனி உருகுதே..." இன்றளவும் ரசிகர்களை கிறங்க வைக்கும் முக்கியமான பாடல்கள். 1990 களுக்கு பிறகு கதாநாயகிகளே கவர்ச்சி நடனங்களையும் கையில் எடுத்த போதும், சில்க்கின் கிரேஸ் மட்டும் குறையவே இல்லை. அப்படிப்பட்டவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்களால் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் இன்றுவரை அவரது ரசிகர்கள் சில்க்கை மறக்கவில்லை. சில்கின் மறைவிற்கு பிறகே எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் தமிழ் சினிமாவில் வந்து போயிருந்தாலும், அவரது இடத்தை மட்டும் யாராலும் இன்றுவரை நிரப்பவே முடியவில்லை.


வித்தியாசமான தோற்றங்களில் சில்க் ஸ்மிதா 

சில்க் ஸ்மிதாவின் வெற்றிடத்தை நிரப்ப முயன்ற நடிகைகள்

சில்க் இருந்த அதே காலகட்டத்தில் அனுராதா, டிஸ்கோ சாந்தி, குயிலி என பல கவர்ச்சி நடன மங்கைகள் இருந்த போதும், அத்தனை பேரும் தனக்குப் போட்டி என்று தெரிந்தும் அவர்கள் அனைவருடனும் நல்ல நட்பை வைத்திருந்தார் சில்க் ஸ்மிதா. ஏன் அவர்களை வைத்து தனது தயாரிப்பில் சில படங்களை கூட தயாரித்தார். ஆனால் அவர்கள் எல்லாம் சில்க் அளவிற்கு நிலைத்து நின்றார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில்க் ஸ்மிதாவின் மறைவிற்கு பிறகும் தமிழ் சினிமாவில் ஷர்மிலி, விசித்ரா, மும்தாஜ் என வரிசையாக ஒவ்வொரு காலகட்டத்திலும் கவர்ச்சி கன்னிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. அவர்களும் தங்கள் பங்கிற்கு கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கவரவும், சில்க்கின் இடத்தை நிரப்பவும் முயற்சி செய்திருந்தாலும், சில்க் தமிழ் திரையுலகில் தொட்ட உயரத்தை நெருங்கி கூட பார்க்க முடியவில்லை. இவர்களை தொடர்ந்து இன்னும் பல நடிகைகள் பல மொழிகளில் இருந்தும் வந்து தமிழ் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டிருந்தாலும் அவர்களும் ஒன்றிரண்டு பாடல்களுடன் இருக்கும் இடம் தெரியாமலே காணாமல் போய்விட்டார்கள்.


கவர்ச்சி நடிகைகள் அனுராதா, டிஸ்கோ சாந்தி, விசித்ரா, ஷர்மிலி, மும்தாஜ் 

மார்க் ஆண்டனியில் மீண்டும் சில்க் ஸ்மிதா

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவின் அலை மீண்டும் வீச துவங்கியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையில், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் மார்க் மற்றும் ஆண்டனியாக வரும் விஷால், எஸ்.ஜே.சூர்யாவுடன் சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 70களில் விஷால் மற்றும் சூர்யா கேங்ஸ்டர்களாக, ஜாஸ்ஸி ஆடைகளை அணிந்து கொண்டு எதிரிகளை ஸ்டைலாக பந்தாடும் ட்ரைலரை பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை ஆராயப்படாத, கேங்ஸ்டர் அறிவியல் டைம் டிராவல் கதையை மையமாகக்கொண்டு குழப்பமான, வன்முறையான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் எல்லா கமர்சியல் விஷயங்களும் நிறைந்து வெளிவரவுள்ள இப்படத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், காந்த கண்ணழகி சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளது.

சில்க் ஸ்மிதாவை CGI முறையில் படக் குழுவினர் கொண்டு வந்திருக்கின்றனர் என ஒருபுறம் கூறினாலும், இன்னொரு புறம் அந்த கதாபாத்திரத்தில் அச்சு அசல் சில்க் ஸ்மிதா போன்றே இருக்கும் விஷ்ணு ப்ரியா காந்தி என்பவர்தான் நடித்துள்ளார். ட்ரெய்லரில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ரீட்ரோ பாடலுக்கு சில்க் ஸ்மிதா நடனம் ஆடுவது போன்று வரும் காட்சிகளில் அவர் இடம்பெற்றிருப்பது உண்மையில் சில்க்கின் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சில்க் ஸ்மிதா

யார் அந்த விஷ்ணு ப்ரியா 

மார்க் ஆண்டனி படத்தில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஷ்ணு ப்ரியா திருப்பதியை பூர்வீகமாகக் கொண்டவர். பார்ப்பதற்கு அப்படியே சில்க் ஸ்மிதா போன்றே இருக்கும் இவர் இன்றைய சமூக ஊடங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளார். தற்போது மார்க் ஆண்டனி படக்குழு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் சில்க் பாத்திரத்தில் நடித்துள்ள விஷ்ணு பிரியா மீடியாக்களை சந்தித்து பேசி வருகிறார். அப்படி மார்க் ஆண்டனியில் தனது கதாபாத்திரம் குறித்து பேசிய அவர், “படத்தில் எனது தோற்றத்தை சில கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் அப்படியே சில்க் ஸ்மிதாவைப் போலவே கொண்டு வந்துள்ளனர். தோற்றத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் எங்கள் இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பாக சாதாரணமாக எல்லோரையும் போன்று நானும் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டேன். அது வைரலாகிவிட்டது. அதில் வந்த கமெண்ட்டுகள் அனைத்திலும் நான் சில்க் ஸ்மிதாவை போல் இருப்பதாக பலரும் கூறினர். சில்க்கை போலவே எனது சொந்த ஊரும் திருப்திதான். அவர் 1996ல் இறந்தார். நான் 1997ல் பிறந்தேன். அவருடைய பிறந்தநாள் டிசம்பர் 2. என்னுடைய பிறந்தநாள் டிசம்பர் 13. என்னை எல்லோரும் சில்க் ஸ்மிதாவின் மறு பிறவி என்று சொல்வார்கள். சில்க் எனது கனவில் பல முறை வந்திருக்கிறார்” என்று விஷ்ணு பிரியா கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும் இவர் சில்க்கை போன்று உருவத்தில் மட்டுமல்ல திரையிலும் பிரகாசிப்பாரா என்பது ரசிகர்கள் அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவை பொறுத்தே அமையும்.


சில்க் ஸ்மிதா போன்றிருக்கும் விஷ்ணு ப்ரியா 

Tags:    

மேலும் செய்திகள்