நான் நடிகையானது பிருந்தா மாஸ்டருக்கு பிடிக்கல - ‘மெட்டி ஒலி’ சாந்தி

90-களில் அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடன் சேர்ந்து நடனம் ஆடி மிகச்சிறந்த குரூப் டான்சராக வலம் வந்தவர்தான் ‘மெட்டி ஒலி’ சாந்தி.

Update:2024-09-24 00:00 IST
Click the Play button to listen to article

90-களில் அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடன் சேர்ந்து குரூப்பில் நடனம் ஆடும்போது, அவர்களே பார்த்து பொறாமைப்பட்டு செல்லமாக திட்டும் அளவுக்கு மிகச்சிறந்த குரூப் டான்சராக வலம் வந்தவர்தான் ‘மெட்டி ஒலி’ சாந்தி. பிறகு நடன கலைஞராக தன்னை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் இப்போது நடனத்தை தாண்டி நடிப்பில் மிளிர்ந்து வருகிறார். இந்தநிலையில், தன் திரை அனுபவங்கள் குறித்து ராணி நேயர்களுக்காக அவர் அளித்திருந்த சுவாரஸ்யமான நேர்காணலின் இரண்டாம் பாதியின் தொகுப்பை இங்கே காணலாம்.

ஒரு நடன கலைஞரா இருந்த நீங்கள் திடீரென சீரியல் நடிகையாக அறிமுகமானீங்க. அந்த மாற்றம் எபப்டி நிகழ்ந்தது?

என்னுடைய சீரியல் பயணமுமே எதிர்பாராமல் நடந்த ஒன்றுதான். ஒருநாள் நாதஸ்வரம் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு என்னை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய இயக்குநர் திருமுருகன் சாரை சந்தித்தேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னை பார்த்ததும் மாஸ்டர் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். எனக்கோ நடிப்பது என்றால் சுத்தமாகவே வராது. நான் சினிமாவில் பாடலில் நடனம் ஆடும்போது கூட நிறைய நடிப்பு வாய்ப்புகள் வந்தன. அந்த மாதிரி காட்சிகளில் நின்று நடிக்கும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் ஓடிவிடுவேன். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் 4 நாயகிகளில் ஒருவராகவும், ஸ்நேகிதியே திரைப்படத்தில் ஒரு முக்கியமான ரோலிலும் நடிக்க கேட்டு வாய்ப்புகள் வந்தன; ஆனால், நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இருந்தது இல்லை. அதனால் நடிக்கவும் இல்லை. மழையோ, வெயிலோ எவ்வளவு வேண்டுமானாலும் நடனம் ஆடுவேன். அப்படி இருந்த என்னிடம் திருமுருகன் சார் நடிக்க கேட்டதும்; ‘சார் நானெல்லாம் நடிப்பனான்னு தெரிலையே” என்றதும், உடனே அவர் “அதெல்லாம் நடிப்பீங்க மாஸ்டர்; வாய்ப்பு கொடுத்தா நடிக்க நீங்க ரெடி தானே” என்று கேட்டார். நானும் அவர் ஏதோ சும்மா சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டு சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.


திருமுருகனின் 'குலதெய்வம்' தொடர் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்த சாந்தி அரவிந்த் 

பிறகு, ஒரு ஆறு மாதம் கழித்து உண்மையிலேயே என்னை அழைத்து ‘குலதெய்வம்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். அப்போது அங்கு வந்திருந்த எல்லோரையும் நடித்துகாட்ட சொல்லி வீடியோ ஷூட் நடத்தி கொண்டிருந்தார்கள். எனக்கோ திருமுருகன் சார் வெறும் ஃபோட்டோ ஷூட் மட்டும்தான் நடத்தினார். அதையெல்லாம் பார்த்த எனக்கு அவ்வளவுதான், இனி நமக்கு வாய்ப்பு ஏதும் இல்லை போல; நம்மை கூப்பிட மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால், ஒரு இரண்டு மாதத்திற்கு பிறகு, என்னை அழைத்து நடிக்க தேதி சொன்னது மட்டுமின்றி வடிவுக்கரசி - மௌலி இருவருக்கும் மகளாக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்கு ஒரு ஷாக். ஒரு நிமிடம் பயந்து ஐயோ சார் அவங்களுக்கு நான் மகளா! என்று கேட்கவும் ஆமா மாஸ்டர் வாங்க பார்த்துக்கலாம் என்று சார் கூறினார். அப்படி வந்ததுதான் ‘குலதெய்வம்’ தொடர். அதிலும் முதல் நாளே வடிவுக்கரசி அம்மாவை திட்ட வேண்டிய கட்சியைத்தான் எடுத்தார்கள். “டேய் அந்த பொம்பளைய முதலில் வெளிய போக சொல்லுடா; அந்த பொம்பள கோயிலுக்குள்ள வந்துச்சு அவ்ளோதான்” அப்டின்னு பேசணும். எனக்கா அவங்கள பார்த்ததும் ஒரே பயம். பேசவே முடியல. ஏற்கனவே ஒரு சீரியலில் வடிவுக்கரசி அம்மாக்கு டைட்டில் சாங் ஒன்று நடன அமைப்பு செய்திருந்த அறிமுகம் இருந்ததால், அவர்கள் என்னிடம் மாஸ்டர் நடனம் சொல்லி கொடுக்கும்போது மைக்கை கையில் எடுத்து எல்லோரையும் அலறவிடுவீங்க; நீங்க பயப்படலாமா? தைரியமா நடிங்கன்னு சொன்னாங்க. அப்படி அவங்க கொடுத்த அந்த ஒருதுளி தைரியமான்னு தெரில அப்டியே தொடர்ந்துக்கிட்டு இருக்கு. இப்போ நான் ஒரு ப்ரொஃபஷனல் நடிகையாகவே மாறிட்டேன். என் நடன தோழிகளே என்னிடம் பேசும் போதெல்லாம் இது நீதானான்னு எங்களை நாங்களே கிள்ளி பார்த்துக்குறோம்; இது நம்ம சாந்திதானா? இவளா இப்படியெல்லாம் நடிக்குறா? அந்த பாத்திரமாவே மாறிப்போயிடுறா! நல்லா நடிக்குறா! அப்டின்னு பாராட்டி சொல்லுவாங்க. அதை கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

சின்னத்திரையில் பயணம் செய்துகிட்டு இருந்த நீங்க, திடீர்னு லியோ திரைப்படம் மூலமாக வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தீங்க... அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?


விஜய்யின் 'லியோ' திரைப்படத்தில் மிஷ்கினின் மனைவியாகவரும் சாந்தி

இரவு 9 மணி இருக்கும். தூங்கபோகும் தருணத்தில் திடீரென்று எனக்கு ‘லியோ’ திரைப்படத்தின் மேனேஜரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவரின் படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்க சொன்னார்; இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது என்று கூறினார். நான், இரண்டு நாட்களில் படப்பிடிப்பா? என்று கேட்கவும், ஆமாம்.. விஜய் சாரின் ‘லியோ’ திரைப்படம் என்று சொன்னதுதான் தாமதம். டக்கென படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து சிறிதும் யோசிக்காமல் நம்ம விஜய்சார் படம்; யாராவது வேண்டாம் என சொல்லுவோமா… அடுத்த நிமிடமே ஓகே சொன்னேன். விஜய் சாரோட நடிக்கப்போகிறோம் என்று நிறைய கனவுகளோடு படப்பிடிப்பு தளத்திற்கு போன எனக்கு அங்கு ஒரே ஷாக். ஒரு டெட் பாடிய போட்டுவச்சு அது முன்னாடி உட்கார்ந்து அழச் சொன்னார்கள். நானும் சரி அடுத்தடுத்து ஏதாவது காட்சிகள் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அதில் நடித்தேன். பிறகு பேக் அப் மாஸ்டர் அவ்வளவுதான் என்று சொல்லவும், என்னது என்பது போல் இருந்து. சரி இன்னொரு நாள் அழைப்புவரும் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன். ஆனால், அழைப்பே வரவில்லை. டப்பிங் பேச போகும் போதுதான் தெரிந்தது; ஒரு சீன்தான் இந்த படத்தில் நமக்கு என்று. ஆனால், ஒரு தொழில்நுட்ப கலைஞராக எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால், ஒரு சீன் வந்தாலும், ரசிகர்களுக்கு தெரியும்படி அந்த காட்சியில் திரை முழுக்க நான்தான் ஆக்கிரமித்து இருப்பேன். மிஷ்கின் சாரோடு நடிக்காவிட்டாலும் அவரோட மனைவியா அதில் நான் நன்கு பரிட்சயமானேன். லோகேஷ் சார் இயக்கத்தில், விஜய் சார் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட்டேன் என்பதே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.

முழுநேர நடிகையாக மாறிய பிறகு நடனத்திலும் உங்களால் கவனம் செலுத்த முடிகிறதா? தொடர்ந்து கொரியோகிராபி செய்கிறீர்களா?


முழுநேர நடிகையாக மாறிய பிறகும், நடனத்திலும் கவனம் செலுத்தி வருகிறேன் - சாந்தி 

நடிப்பு ஒரு புறம் இருந்தாலும் நடனத்தில் வரும் வாய்ப்புகளையும் ஏற்று கொரியோகிராபி செய்துகொண்டுதான் இருக்கிறேன். கன்னடத்தில் வெளிவந்த ‘காந்தாரா’ திரைப்படத்தில்கூட கன்னடப்பாடல் ஒன்றுக்கு நடனம் அமைத்தேன். தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரப் படங்கள் நிறையவற்றுக்கு நான்தான் நடனம் அமைக்கிறேன். முழு நேரமாக அதை செய்யாவிட்டாலும், வரும் வாய்ப்புகளை ஏற்று அதிலும் என் பயணத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், என்னுடைய குருநாதர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டருக்கு கொஞ்சம் வருத்தம். என்னை திட்டவும் செய்தார்கள். “நீ ஏன் முழுநேர நடன மாஸ்டராக பயணிக்காமல், நடிகையாகிவிட்டாய்?” என்று... இன்னமும் என்னிடம் பேசும்போதெல்லாம் அதைத்தான் சொல்லி திட்டிக் கொண்டிருக்கிறார்.

உங்களுடைய பிள்ளைகளுக்கு நடனத்தின் மீது ஆர்வம் இருக்கிறதா?

என் பிள்ளைகளுக்கு நடனத்தின் மீது ஆர்வம் இருக்கிறது. ஆனால், நான் எதுவும் கற்றுக் கொடுக்கவில்லை. மகளை பரதநாட்டியம் வகுப்பில் சேர்த்துவிட்டேன். மூன்று மாதம் கற்றுக்கொண்டாள். பிறகு அவளுக்கு அதில் பெரிதாக ஆர்வம் இல்லை. வெஸ்டன் நடனம் கற்றுக்கொள்கிறேன் என்று கூறினால். அதிலும் சேர்த்துவிட்டேன். ஆனால், அதையும் தொடர முடியவில்லை. அதற்கு காரணம் என்னுடைய வேலை. நான் வேலைக்கு சென்றுகொண்டே அவர்களை நடனப்பள்ளிக்கு அழைத்துச்சென்று, கூட்டிவர முடியவில்லை. பிள்ளைகளிடம் கேட்டேன் சீரியஸாக நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று. ஆனால், அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இப்போது படிப்பில் முழு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னையும், எனது கணவரையும் பொறுத்தவரையில் படிப்பு மிகவும் முக்கியம். படிப்பை முடித்துவிட்டு பிறகு உங்களுக்கு பிடித்ததை செய்துகொள்ளுங்கள் என்பதுதான் எங்கள் கருத்து. அறிவார்ந்து செயல்பட படிப்பு என்பது அவசியமான ஒன்று என்று நான் நினைக்கிறன். அதிலும் இப்போது இருக்கும் காலகட்டத்திற்கு படிப்பு என்ற ஒன்று இருந்தால் எளிதில் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். அதற்காக படித்தவர்கள்தான் சாதிக்கிறார்கள் என்றில்லை.

இப்போது இருக்கும் கதாநாயகிகளில் சூப்பர் டான்சர் என்றால் யாரை சொல்லுவீர்கள்?


 நடனத்தில் நடிகைகள் ஸ்ரீ தேவி மற்றும் பானுப்பிரியாவை மிகவும் பிடிக்கும் - சாந்தி அரவிந்த் 

என்னை பொறுத்தவரை நான் சிம்ரனைத்தான் சொல்லுவேன். நான் பணியாற்றிய அந்த 90 கால கட்டங்களில் எல்லா ஸ்டைல் நடனங்களையும் ஆடுபவர் அவர்தான். அதற்கு முன்பாக எனக்கு நடிகை ஸ்ரீ தேவி, பானுப்பிரியா ஆகியோரை மிகவும் பிடிக்கும். இதில் நான் திரையில் அதிகம் பார்த்து ரசித்தது பானுப்பிரியாவைத்தான்.

ஹீரோயினாக நீண்ட நாட்களாக திரையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர்கள் திரிஷா, நயன்தாரா.. இவர்களில் சிறந்த டான்சர் யார்?

திரிஷா, நயன்தாரா இருவருமே நன்கு நடனம் ஆடுவாரக்ள். ஆனால், சூப்பர் டான்சர் என்பதெல்லாம் கிடையாது. ஓரளவு ஆடுவார்கள். ஹீரோக்கள் என எடுத்துக்கொண்டால் விஜய், சிம்பு, சாந்தனு இவர்களை சொல்லலாம். இப்ப இருக்கிற காலகட்டத்துல சூர்யா, தனுஷ் இப்படி எல்லாருமே நல்லா டான்ஸ் ஆடுறாங்க. ஆனால், ஒரு படி மேல போய் எல்லாவிதமான ஸ்டைலும் ஆடக்கூடிய பெஸ்ட் டான்சர்னா அது விஜய் மற்றும் சிம்புதான்.


திரிஷா, நயன்தாரா இருவருமே சூப்பர் டான்சர்கள் கிடையாது - சாந்தி அரவிந்த் பளிச் பதில் 

குரூப் நடனத்தில் இருந்துதான் நீங்களும் வந்து இருக்கிறீர்கள். மற்றவர்கள் சொல்வதுபோல் அதில் நிறைய போராட்டங்கள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

திரைத்துறையே நிறைய மாறிவிட்டது. 90-களில், தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நாங்கள்தான் பணியாற்றுவோம். வெயில், மழை, கிண்டல், கேலி என பலவிதங்களில் கஷ்டப்பட்டு இருக்கிறோம். ஆனால், இதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால் மிகவும் பிசியாக ஓடி ஓடி உழைப்போம். அந்த நேரம் இருந்த குரூப் டான்சர் யாரும் வேலையில்லாமல் இருந்தார்கள் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. ஆனால், இப்போது இருக்கும் டான்சர்ஸ் நிறைய கஷ்டப்படுகிறார்கள். படங்கள் குறைவாக வருகிறது. அதற்கு ஏற்றார் போன்று பாடல்களும் குறைவாகத்தான் இடம்பெறுகிறது. இதை தாண்டி இப்போது அந்தந்த துறைகளில் நிறைய டான்சர்ஸ் வந்துவிட்டார்கள். அதனால், அவர்களுக்கான வேலை, வருமானம் என்பது குறைந்துவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்