மாஸ் கிளப்பும் 'பைசன்' - கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறும் துருவ் விக்ரம்

தந்தை வழியை பின்பற்றி இன்றைய தலைமுறை பெண்களும் பார்த்து பொறாமைப்படும் படியாக தந்தையை மிஞ்சிய அழகனாக வலம் வருபவர்தான் துருவ் விக்ரமும்.

Update:2024-05-14 00:00 IST
Click the Play button to listen to article

எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதே என்ற இந்த வார்த்தையை பலரும் பலவிதமாக சொல்லி கேட்டிருப்போம். ஆனாலும் தமிழ் திரையுலகில் ஒரு தந்தை மகன் இருக்கிறார்கள். குரல் மட்டுமல்ல உடல் மொழி, நடை, உடை என அனைத்தும் தந்தையை போன்ற சாயலிலேயே இருக்கும். அதுமட்டுமின்றி அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அப்பா - மகன் உறவு என்பது பலரும் பார்த்து பொறாமைப்படும் படியாகவே இருக்கும். அந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும், பாசமும் அபரிமிதமானது . அவர்கள் வேறு யாரும் இல்லை 90-களில் பல பெண்களின் கனவுகளை தொலைத்து கொள்ளையிட்டு போன காதல் நாயகன் சியான் விக்ரமும், அதே தந்தை வழியை பின்பற்றி இன்றைய தலைமுறை பெண்கள் பார்த்து பொறாமைப்படும் தந்தையை மிஞ்சிய அழகனாக வலம் வரும் துருவ் விக்ரமும்தான். தந்தை சியான் விக்ரமின் வழிகாட்டுதலில் ‘வர்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நுழைந்த துருவ் தற்போது பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய மாரி செல்வாஜுடன் புதிய படம் ஒன்றில் கைகோர்த்துள்ளார். துருவ் விக்ரம் நடிக்கவுள்ள அந்த புதிய படம் குறித்தும், தந்தை வழிகாட்டுதல் இருந்தாலும் தன் தனிப்பட்ட முயற்சியால் எப்படியான சவால்களை சந்தித்து திரைத்துறைக்குள் நுழைந்தார் என்பது குறித்தும், முதல் படத்திலேயே அவர் சந்தித்த நெகட்டிவான விமர்சனங்கள் என்னென்ன? அதையும் மீறி 'மகான்' படத்தில் மாஸ் கிளப்பிய நிகழ்வு குறித்தும் இந்த கட்டுரையில் காணலாம்.

வர்மாவால் வந்த சர்ச்சை


 ‘வர்மா’ படத்தில் துருவ் விக்ரமின் காட்சிகள் 

1990-ஆம் ஆண்டு ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சியான் விக்ரம் ஒன்பது ஆண்டுகால போராட்டங்கள், அவமானங்களுக்கு பிறகுதான் இயக்குநர் பாலாவின் ‘சேது’ படத்தின் வாயிலாக மிகச்சிறந்த ஹீரோ என்ற அடையாளத்தினை அதுவும் நிலையானதொரு இடத்தினை தமிழ் சினிமாவில் பெற்றார். அந்த வெற்றிதான் அவரை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு சென்று இன்றும் ஒரு மிகச்சிறந்த நடிகராக உலாவர செய்து கொண்டிருக்கிறது. அந்த ஒரு சென்டிமென்ட் தானோ என்னவோ, தன் மகன் துருவை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்த போது, மகனின் முதல் படத்தினை தன் நண்பரும், புகழ்பெற்ற இயக்குநராகவும் அறியப்படும் பாலாவே இயங்கினாள் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி அதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டார். மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தினை தன் மகனுக்காக தேர்வு செய்த விக்ரம், தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் எடுக்கும் உரிமையை பெற்றார். பின்னர் பாலாவின் இயக்கத்தில், E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எடுக்கப்பட்ட இப்படம் குறித்து அந்த சமயம் நெகட்டிவான விமர்சனங்களும், ஒரு சில தரப்பில் பாசிட்டிவான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அது என்னவென்றால் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த படத்தில் தன் மகனை நடிக்க வைக்க விக்ரம் ஆசைப்பட்டு அந்த கதையை தேர்வு செய்தது நல்லதுதான் என்றாலும், அந்த படத்தின் கதைபோக்கு கொஞ்சம் விமர்சனத்திற்கு உள்ளாகக்கூடிய ஒன்று என்ற முரண்பாடான கருத்துக்களை பலரும் முன்வைத்ததுதான். இருந்தும் முன்வைத்த காலை பின் வைக்காமல் அனைத்து விமர்சனங்களையும் ஓரம் வைத்துவிட்டு முழு மூச்சில் மகனுடன் இருந்து நடிப்பு சொல்லி கொடுத்து படத்தினை பாலாவின் உதவியுடன் எடுத்து முடித்த விக்ரமிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.


 ‘ஆதித்ய வர்மா’ படத்தில் மதுவுக்கு அடிமையான டாக்டர் கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் 

படத்தின் படத்தொகுப்பு வேலைகள் முடிந்து அதன் முதல் பிரதியை பார்த்த விக்ரமிற்கு அது பிடிக்காமல் போகவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும், இதனால் இயக்குநர் பாலாவுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு அந்த பிரச்சினையை பெரிய அளவில் பொதுவெளிக்கு கொண்டு வராமல் இருவருக்குள்ளும் பேசி முடித்து பிரிந்து விட்டதாகவும் அந்த தருணம் சொல்லப்பட்டது. எது எப்படியாயினும் மகனை ஹீரோவாக்கும் முடிவில் உறுதியாக இருந்த விக்ரம் மீண்டும் அந்த கதையை வேறொரு இயக்குநரை வைத்து ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் எடுத்து வெளியிட்டார். 2019-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படமும் பெரிய எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், படத்தில் டாக்டர் ஆதித்ய வர்மாவாக வரும் துருவிற்கு சரியாக நடிக்க தெரியவில்லை என்ற விமர்சனங்களும் சினிமா விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டன. இதனால், ஒரே படத்தினை இரண்டு முறை எடுத்த விக்ரமிற்கு 17 கோடி ரூபாய்க்கும் மேலாக நஷ்டம் மட்டுமே மிஞ்சியது. இதனை தொடர்ந்து, மற்றொரு முயற்சியாக முதலில் பாலாவை வைத்து எடுத்திருந்த ‘வர்மா’ படத்தினை வெளியிட முடிவு செய்த தயாரிப்பு நிறுவனமான E4 என்டர்டெயின்மென்ட் அதனை 2020-ஆம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், அப்போதும் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.

மாற்றம் தந்த 'மகான்'

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம், பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சிம்ரன் நடிப்பில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் ‘மகான்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜின் படம், சியான் விக்ரமின் படம், துருவ் விக்ரமின் படம் என்று பல்வேறு எதிர்பார்ப்புகளோடு பெரிய திரையில் இல்லாமல், கொரோனா காரணமாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. காந்திய கொள்கைகளை பின்பற்றும் குடும்பத்தில் பிறக்கும் ஒருவன் தான் நினைத்தபடி வாழ முடியாமல் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறான், ஒரு கட்டத்தில் தான் நினைத்தபடி வாழ ஆசைப்பட்டு மதுவுக்கு அடிமையாவதோடு அதனால் தன் மனைவி மற்றும் மகனை பிரிந்து, தன் பால்யகால நண்பனோடு சேர்ந்து ஆசிரியராக இருக்கும் நாயகன் விக்ரம் எப்படி சாராய சாம்ராஜ்யத்தின் மன்னன், அதாவது தொழிலதிபராக மாறுகிறார் என்பதுதான் படத்தின் முதல் பாதி கதை. இதன் பிறகு தாதா என்ற அறிமுகத்தோடு போலீஸ் அதிகாரியாக வரும் துருவ் தந்தையின் ராஜ்யத்தை உடைத்து அவரது முயற்சிகளை முறியடித்தாரா, அவரின் வருகைக்கு பின் தன் மகன்தான் துருவ் என தெரிய வரும்போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது மீதி கதை. ஒரு நல்ல நடிகனுக்கு தேவை அவனது திறமையை வெளிக்கொண்டு வரும்படியான கதாபாத்திரம். அது இப்படத்தில் விக்ரமுக்கு மிகச் சரியாக பொருந்தி இருந்தது. கோபம், அழுகை, விரக்தி, மகிழ்ச்சி என விக்ரமின் நடிப்புக்கு தீனி போடும் படியான வேடத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விக்ரமிற்கு வழங்கியிருந்தது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகப்பெரிய காம்பேக்கை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்திருந்தது.


'மகான்' படத்தில் தந்தை சியான் விக்ரமுடன், நடிகர் துருவ் 

இது விக்ரமிற்கு மட்டுமல்ல இப்படத்தில் நடித்திருந்த அவரின் மகன் துருவிற்குமே மிகப்பெரிய மாற்றத்தை அவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தியது. அதிலும் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக தேர்ந்த நடிப்பினை வழங்கியிருந்த துருவ் விக்ரம் ஒவ்வொரு இடங்களிலும் நடிப்பில் தந்தையை மிஞ்சிய தனயனாக விக்ரமிற்கு நிகராக ஸ்கோர் செய்திருந்தார். அதிலும் தன் முதல் படத்தில் எந்த துருவிற்கு அவ்வளவாக நடிக்க தெரியவில்லை என்ற விமர்சனங்களை சில விமர்சகர்கள் முன் வைத்தார்களோ, அதே விமர்சகர்கள்தான் தந்தையையே தூக்கி சாப்பிட்டு விடுவார் போல, ஒன்று வெடிக்கிறார்... அல்லது நடித்துக்கொண்டே இருக்கிறார். அதிலும் தந்தை விக்ரமின் நடிப்பையே ஓவர்டேக் செய்து போகிறார் என்றெல்லாம் கூறினார்கள். துருவை பற்றிய அந்த பாசிட்டிவான விமர்சனங்கள் தானோ என்னவோ துருவை நோக்கி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி ‘மகான்’ படம் வெளிவந்த சிறிது நாட்களிலேயே மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால், அதற்குள்ளாக உதயநிதியுடன் ‘மாமன்னன்’ படத்தில் இணைந்ததால் துருவ் விக்ரமுடன் இணைந்து பணியாற்றுவது தள்ளிப்போனது.

மாரி இயக்கத்தில் துருவ்

‘மாமன்னன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு குழந்தைகளை மையமாக கொண்ட கதைக்களத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோரை வைத்து ‘வாழை’ என்றொரு படத்தினை இயக்கிவரும் மாரி செல்வராஜ், ஏற்கனவே அறிவித்தபடி துருவ் விக்ரமுடன் இணைந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய அறிவிப்பு போஸ்டர் கடந்த மே 6-ஆம் தேதி அன்று வெளியானது. கபடியை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இவர்களுடன் லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். துருவ் விக்ரமின் மூன்றாவது படமாக வெளிவரவுள்ள இப்படத்திற்கு ‘பைசன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மே 6-ஆம் தேதி வெளியான போஸ்டரில் மிகப்பெரிய காளை சிலை அதாவது காளமாடன் என்ற கடவுளின் முன்பாக படத்தின் நாயகனான துருவ் விக்ரம் அமர்ந்திருப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. போஸ்டர் வெளியீட்டை தொடர்ந்து திருநெல்வேலி அருகே படப்பிடிப்பு பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. அதே பகுதியில்தான் துருவின் தந்தையான நடிகர் விக்ரம் நடித்து வரும் ’வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருவதால், மகனின் முதல் நாள் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம், ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளை துருவுக்கு தெரிவித்துள்ளனர்.


 'பைசன்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துடன் நடிகர் துருவ் 

இப்படத்தில் கபடி வீரராக துருவ் வருவதால் சில காலம் அந்த பகுதியிலேயே தங்கி அதற்கான பயிற்சிகளும் அவர் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதேபோன்று சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜும் படப்பிடிப்பு பணிகள் 60 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கியுள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார். மேலும் இது யாருடைய பயோபிக் படமாகவும் இல்லாமல், கபடியை மட்டுமே முன்னிலைப்படுத்தி எடுக்கப்படவிருப்பதாக தெரிவித்துள்ளார். எது எப்படி இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஏற்கனவே கபடியை முன்னிறுத்தி பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றிருப்பது போலவே துருவின் ‘பைசன்’ காளமாடன் திரைப்படமும் வெற்றி பெரும் என்று விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்