"தேசிய விருதுகளின் நாயகி ஷோபனா" - பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!

தனது வீட்டில் வேலைசெய்துகொண்டிருந்த பெண், பணத்தை திருடியது தெரிந்தும், அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக திருடிவிட்டதாக குற்றத்தை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் உடனே அவரை மன்னித்ததுடன், மீண்டும் அவரை வேலையில் சேர்த்துக்கொண்டததுதான்.;

Update:2025-03-18 00:00 IST
Click the Play button to listen to article

ஒரே ஒரு படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகள் இன்றுவரை நம் மனதில் நீங்கா பிடித்திருக்கின்றனர். ஆனால் ஒரு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலைக் கேட்டாலே ஒரு நடிகை இன்றும் இளமையும் அழகும் எழிலும் பொங்க நம் கண்முன் வந்து நிற்பார். இந்தியாவின் சிறந்த பரதநாட்டிய கலைஞர்களில் ஒருவர், 200க்கும் மேற்பட்ட படங்களின் நாயகி, நடிப்பு மற்றும் நடனத்திற்கென்று பத்மஸ்ரீ, பத்மபூஷண் உட்பட எண்ணற்ற விருதுகள் என பல புகழ்களுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி ‘யமுனை ஆற்றிலே’ என்ற பாடலை கேட்டாலே நம் மனக்கண் முன் தோன்றும் நடிகைதான் ஷோபனா. ‘கேரளாவில் என்னை பலருக்கும் தெரிந்தது போன்று தமிழ்நாட்டில் அவ்வளவாக தெரியாது’ அவரே தன்னடக்கமாக சொன்னாலும், நாம் யாரும் அவரை மறக்கமுடியாத அளவுக்கு தனது ஆழமான நடிப்பை ‘தளபதி’ படத்தின்மூலம் நமக்கு கொடுத்துவிட்டார். திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லும் இவர், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது இவருக்கு 54 வயதாகி இருந்தாலும் இன்றும், தனது உயிரினும் மேலாக கருதும் பரதநாட்டியத்தை மேடைகளில் அரங்கேற்றுவதுடன், நடனப்பள்ளியும் வைத்து பலருக்கும் சொல்லிக்கொடுத்து வருகிறார். வருகிற 20ஆம் தேதி பிறந்தநாளை காணும் ஷோபனாவின் திரை வாழ்க்கை மற்றும் நடனத்தின்மீதான பற்று குறித்து சற்று திரும்பி பார்க்கலாம்.

80களின் கனவு கன்னி!

பிளாக் & ஒயிட் காலத்திலிருந்தே நாட்டியத்துக்கு புகழ்பெற்ற ‘திருவிதாங்கூர்  சகோதரிகள்’ என்று அழைக்கப்படுகிற லலிதா, பத்மினி, ராகிணி குறித்து அனைவருக்குமே நன்கு தெரியும். இவர்களின் சகோதரரான சந்திரகுமாரின் ஒரே மகள்தான் ஷோபனா. கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் சிறுவயதிலேயே சென்னை மயிலாப்பூருக்கு வந்துவிட்டார். தனது பாட்டி வீட்டில் தங்கி, அத்தைமார்களை பார்த்து வளர்ந்த ஷோபனாவிற்கு ரத்தத்திலேயே ஊறியிருந்தது நடனக்கலை. இரண்டரை வயதிலிருந்தே பரதநாட்டிய பயிற்சி பெற்ற ஷோபனாவுக்கு, சென்னையிலுள்ள செயிண்ட் தாமஸ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் பிரபல பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனின்கீழ் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. மிகச்சிறிய வயதிலேயே நாட்டியத்தை கற்றுத்தேர்ந்த இவர், அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிற அபிநயத்திற்கென்றும் தனியாக பயிற்சி பெற்றிருக்கிறார். தனது மூன்று அத்தைமார்களில் லலிதாவும், ராகிணியும் ஷோபனாவின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் பத்மினியுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அப்படி தனது அத்தை வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் நடிகை ஹேமமாலினியின் அம்மா ஜெயா சக்கரவர்த்தி, ஷோபனாவை பார்த்துவிட்டு அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தார். இப்படி 1980ஆம் ஆண்டு வெளியான ‘மங்கள நாயகி’ என்ற படத்தின்மூலம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.


தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிசேர்ந்த ஷோபனா

இதன்மூலம் கிடைத்த புகழால் அடுத்து 4 ஆண்டுகள் கழித்து ‘ஏப்ரல் 18’ என்ற மலையாளப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து தனது 14 வயதில் ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்த தென்னிந்திய மொழிகளில் அறிமுகம் கிடைத்தாலும், இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமாக்கியது என்னவோ ரஜினியுடன் ஜோடி சேர்ந்த ‘சிவா’ திரைப்படம்தான். அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அடுத்து விஜயகாந்துடன் ‘பொன்மன செல்வன்’, சத்யராஜுடன் ‘மல்லு வேட்டி மைனர்’ போன்ற படங்களில் நடித்தார். தமிழில் ஒருபுறம் முன்னணி நடிகர்களுடன் ஜோடிசேர்ந்தாலும் அதுபோலவே, மலையாளம் மற்றும் தெலுங்கிலும் அப்போதைய முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக நடித்துவந்தார். இப்படி பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்திருந்தாலும் ஷோபனா என்று சொன்னாலே தமிழ் ரசிகர்களின் நினைவில் வந்து நிற்கிற ‘தளபதி’ படம்தான் இன்றும் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கிறது. 1991ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரஜினியுடன் ஜோடி சேராவிட்டாலும் இருவருக்குமிடையேயான கெமிஸ்ட்ரி இன்றுவரை பேசப்படுகிறது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற ‘யமுனை ஆற்றிலே’ மற்றும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன.

தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்!

இப்படி தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் நடிப்பா? நடனமா? என்று வந்துவிட்டால் ஷோபனாவை பொருத்தவரை நடனத்திற்குத்தான் முதலிடம். அதனாலேயே தனது 20வது வயதில் சென்னையில் ‘கலார்ப்பணா’ என்ற பெயரில் நாட்டியப்பள்ளி ஒன்றைத் தொடங்கி அதில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அதன்பிறகு, கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் நடிக்காமல் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதுவரை ஒரு வருடத்தில் பல மொழிகளில் 10க்கும் மேற்பட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாகிவந்த நிலையில், நடனப்பள்ளி தொடங்கியப்பிறகு அவை கணிசமாக குறைந்தன. குறிப்பாக, மலையாள திரைப்படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்திவந்த இவருக்கு 1993ஆம் ஆண்டு மோகன்லாலுடன் சேர்ந்து நடித்த ‘மணிச்சித்திரத்தாழ்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களை ஏற்றிருந்தார். ஒருபுறம் தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்துவந்தாலும் மற்றொரு புறம் நாட்டியப்பள்ளி மற்றும் அரங்கேற்றம் என தொடர்ந்து பிஸியாக இருந்த ஷோபனாவிற்கு 2006ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஷோபனாவிற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்த தருணம்

குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாம் கையால் இந்த விருதை பெற்றார் ஷோபனா. அதனையடுத்து திரைத்துறையில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்துவரும் இவரை கௌரவிக்கும் விதமாக 2025ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதும் ஷோபனாவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு விருதுகளை வென்றாலும் அவைகுறித்து எப்போதும் பெருமை பாராட்டிக்கொள்ளாத ஷோபனா தொடர்ந்து திரைத்துறையில் தனது பங்களிப்பை கொடுத்துவருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் சிறப்பு விருந்தினராகவும், ஜட்ஜாகவும் இவர் கலந்துகொண்டுள்ளார். ஷோபனாவிற்கு பொதுவாகவே இலகிய குணம் இருப்பதாக திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கூறியுள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம், தனது வீட்டில் வேலைசெய்துகொண்டிருந்த பெண், பணத்தை திருடியது தெரிந்தும், அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக திருடிவிட்டதாக குற்றத்தை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் உடனே அவரை மன்னித்ததுடன், மீண்டும் அவரை வேலையில் சேர்த்துக்கொண்டததுதான்.

திருமணம் செய்துகொள்ளாதது ஏன்?

நடனம், நடிப்பு என சிறந்து விளங்கினாலும் ஷோபனாவிற்கு திருமணத்தின்மீது நம்பிக்கை இல்லை என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார். எனவே, திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்துவருகிறார். அந்த குழந்தைக்கு தனது அம்மாவின் நினைவாக அவர்களுடைய பெயரையே ஆனந்த நாராயணி என்று சூட்டியுள்ளார். எப்போது இவரிடம் திருமணம் குறித்து கேட்டாலும் தனது வாழ்க்கையையே நடனத்திற்கு அர்ப்பணித்துவிட்டதால் அதுவே போதுமானதாக இருப்பதாகவும், இப்போது வாழும் வாழ்க்கையே அவருக்கு மனநிறைவை கொடுப்பதாகவும் கூறுகிறார். மேலும் இந்த கேள்வியை பலரும் தன்னிடம் கேட்கும்போது என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை என்கிறார். இப்படி திருமண வாழ்க்கையை தவிர்த்து நடனத்தையே உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்துவரும் இவர், பல்வேறு நாடுகளிலும் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார்.


பரதநாட்டியம் மற்றும் அபிநயத்தின்மீது ஷோபனாவிற்கு இருக்கும் ஈடுபாடு

குறிப்பாக, மலேசியாவின் மன்னர் மற்றும் ராணி முன்பு தனது நடன நிகழ்ச்சியை அரங்கேற்றி உலகெங்கும் பேசப்பட்டார். அதேபோல், 1999ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோர் இணைந்து ஜெர்மனியில் நடத்திய ‘மைக்கேல் ஜாக்சன் & ஃப்ரண்ட்ஸ்’ என்ற நடன - இசை நிகழ்ச்சியில் தனது தனித்துவமான நடனத்தை அரங்கேற்றியதன்மூலம் உலகப்புகழ்பெற்ற நடனக்கலைஞர் என்ற சிறப்பை பெற்றார் ஷோபனா. இப்படி தொடர்ந்து நடனத்தின்மீது மட்டுமே கவனம் செலுத்திவந்த இவர், அவ்வப்போது திரைப்படங்களில் வந்துபோனார். இந்த சமயத்தில்தான் நடிகை ரேவதி இயக்கிய ‘மித்ர், மை ஃப்ரண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தில் தனது ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இரண்டாவது முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். அதேபோல் 2011ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் இவர் பெற்றிருக்கிறார். 2014ஆம் ஆண்டு கேரள அரசின் கலா ரத்னா விருதும் இவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு 2019ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வருகிற மார்ச் 20ஆம் தேதி 55 வயதுக்குள் அடியெடுத்து வைக்கும் இவர், விரைவில் குடியரசுத் தலைவர் கையால் பத்ம பூஷண் விருதும் பெறவுள்ளார் என்பது மேலும் சிறப்பு!

Tags:    

மேலும் செய்திகள்