நடிகை ஆனதே மறக்க முடியாத நிகழ்ச்சிதான்! - நடிகை பவானி
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து, கன்னடப் படத்தில் அறிமுகமாகி, தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருப்பவர், பவானி.
(10.04.1977 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து, கன்னடப் படத்தில் அறிமுகமாகி, தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருப்பவர், பவானி. "பத்திரகாளி" படத்தில், சிவகுமாருக்கு 2-வது மனைவியாக நடித்த பவானி, இப்பொழுது "சொன்னதை செய்வேன்”, “மதர் இந்தியா" ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
நடிகையின் பேத்தி!
பவானி குடும்பத்துக்கும், கலை உலகுக்கும் நீண்ட தொடர்பு உண்டு. ஒரு காலத்தில் 'ஓகோ' என்று விளங்கிய நடிகை ருஷ்யேந்திர மணியின் பேத்திதான், பவானி. "எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை முதலில் ஏற்படவில்லை. நடனம் கற்றுக்கொண்டு இருந்தேன். எனது நடனத்தை பார்த்த ஒரு கன்னட தயாரிப்பாளர், என்னை படத்தில் நடிக்க அழைத்தார்.
கலை உலகில் முதிர்ந்த அனுபவம் பெற்ற என் பாட்டியும் என்னை உற்சாகப்படுத்தினார். அதனால், சினிமா உலகில் அடியெடுத்து வைத்தேன்" என்று சொன்னார், பவானி. பவானியின் அம்மா பெயர் ராஜலட்சுமி., அப்பா சுப்பிரமணியம். அரசாங்க அதிகாரியாக இருக்கிறார். பவானிக்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள்.
"முத்துச்சிப்பிகள்" என்னும் மலையாள திரைப்படத்தில் பவானி
அரங்கேற்றம்
எம்.ஜி.ஆர். தலைமையில் நடன அரங்கேற்றம் நடத்திய பவானிக்கு, தமிழில் எம்.ஜி.ஆர். படத்தில்தான் ("உழைக்கும் கரங்கள்”) முதல் வாய்ப்பும் கிடைத்தது. பவானி இப்பொழுது தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
"நீங்கள் எப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்" என்று நிருபர் கேட்டார்.
“குடும்பப் பாத்திரத்தில் நடித்து புகழ்பெறவே, பெரிதும் விரும்புகிறேன். அதற்காக இந்த பாத்திரத்தில்தான் நடிப்பேன் என்று, பிடிவாதம் செய்யவும் மாட்டேன். நடிகையாகிவிட்டால், எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் பிழைக்க முடியும்” என்று கூறினார், பவானி.
நிருபர்; "பத்திரகாளி" வெற்றிப் படத்துக்குப் பிறகு, உங்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது?
பவானி: அதிகமாக எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. அதற்காக நான் சோர்ந்து போய்விடவில்லை. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். அதற்கு ஏற்ப எனது முயற்சிகளும் தொடருகின்றன.
இருமாறுபட்ட தோற்றங்களில் நடிகை பவானி
மறக்கமுடியாத நிகழ்ச்சி
நிருபர்: சினிமா உலகில் உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி எதுவும் நடந்ததா?
பவானி: நான் நடிகை ஆனதே மறக்க முடியாத நிகழ்ச்சிதான்; புதுமையான அனுபவம்தான். அது ஒரு தொடர்கதை!! குறிப்பிட்டு எதையும் கூற முடியாது!
நிருபர்: உங்கள் பொழுதுபோக்கு என்ன?
பவானி: வீட்டில் இருக்கும்போது, எனக்கு என் பாட்டி நடிப்பு சொல்லித் தருவார்கள். மற்ற நேரங்களில், சினிமா பார்ப்பேன். புத்தகம் படிப்பேன்.