ஷோபாவை தன் பக்கம் இழுக்க பாலுமகேந்திரா செய்த முயற்சி!
வழக்கம் போல ஒரு நாள். பாலுமகேந்திராவின் தலைமுடியில் ஷோபா விளையாட முயன்றாள். "அம்மு! (ஷோபாவை பாலு "அம்மு" என்று செல்லமாக அழைப்பார்) இந்த விளையாட்டுட்டு எல்லாம் வேண்டாம்" என்று பாலு கண்டிப்பாகக் கூறினார்.
(21.12.1980 மற்றும் 28.12.1980 ஆகிய தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
வழக்கம் போல ஒரு நாள், பாலுமகேந்திராவின் தலைமுடியில் ஷோபா விளையாட முயன்றாள். "அம்மு! (ஷோபாவை பாலு "அம்மு" என்று செல்லமாக அழைப்பார்) இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம்" என்று பாலு கண்டிப்பாகக் கூறினார். ஷோபா கோபமாக அங்கிருந்து எழுந்து போய்விட்டாள். அன்றில் இருந்து இரண்டு நாள் அவள் பாலுவுடன் பேசவில்லை. "உம்" என்று இருந்தாள். மூன்றாம் நாள், "அம்மு! நீ இப்படி பேசாமல் இருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது" என்றார், பாலு. "நான் விளையாடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை, பிறகு ஏன் பேச வேண்டும்?” என்றாள், ஷோபா. "எங்கள் அங்கிள் (என் தம்பி ஜோதி) கோபப்படவே மாட்டார். அதை நினைத்துதான் நான் உங்களிடம் விளையாடினேன்" என்றும் சொன்னாள். "ஷோபா! அங்கிளை (பாலுவை) ஏன் அழ வைக்கிறாய் பேசு" என்று கூறினாள், அகிலா. "விளையாட்டை "சீரியஸ்" ஆக எடுத்தால் எனக்குப் பிடிக்காது" என்றாள், ஷோபா. பிறகு எல்லோரும் வற்புறுத்தவே, ஷோபா, பாலுவிடம் சென்று, "சாரி அங்கிள்" என்றாள். கோபம் தாபம் எல்லாம் அந்த நிமிடத்தோடு மறைந்தது. அன்று மாலை எல்லோரும் சேர்ந்து சினிமாவுக்குச் சென்றோம். இப்படி நாங்கள் சேர்ந்து வெளியே செல்வது அதிகமானது.
கிசு கிசு
இந்த நேரத்தில் ஒரு வாரப் பத்திரிகையில், பாலுவோடு ஷோபாவை இணைத்து ஒரு "கிசு கிசு" வெளியிட்டு இருந்தார்கள். அந்தச் செய்தியைப் படித்துவிட்டு, நான் அழுதுகொண்டு இருந்தேன். ஷோபா சாப்பிடாமல் இருந்தாள். பாலுவிடம் செய்தியைச் சொன்னேன். அவர் தனக்கே உரிய பாணியில், அந்தப் பத்திரிகையைத் திட்டிவிட்டு, எனக்கும் ஷோபாவுக்கும் ஆறுதல் சொன்னார். என்னதான் அவர் தேற்றினாலும், கெட்ட பெயர் என் மகளுக்குத் தானே! நான் கொஞ்சம் கொஞ்சமாக சிந்திக்கத் தொடங்கினேன். அப்போது ஒருநாள் காலையில், படம் சம்பந்தமாகப் பேச, இரண்டு மூன்று பேர் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். பாலுவும் வீட்டில் இருந்தார். ஷோபா குளித்துக்கொண்டு இருந்தாள். நான் வந்தவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன்.
இரு மாறுபட்ட தோற்றங்களில் நடிகை ஷோபா
தோள் மீது கை
நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, ஷோபா குளித்து முடித்து விட்டு, ஈரத்தலையோடு அங்கு வந்தாள். அங்கு இருந்தவர்களுக்கு "குட் மார்னிங்" கூறிவிட்டு, "ஹலோ அங்கிள்" என்றாள். உடனே பாலு எழுந்து போய், ஷோபா தோள் மீது ஒரு கையைப் போட்டு, அவளை ஒரு பக்கமாகத் தன் மீது சாய்த்துக் கொண்டு, அவள் நெற்றியில் முத்தமிட்டார். எனக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. வந்தவர்களை பேசி அனுப்பிவிட்டு, பாலுவை அறைக்குள் அழைத்தேன். நான் சற்று கோபமாக, "பாலு, உங்கள் அன்பு மனதில் இருந்தால் போதாதா? நாலு பேருக்கு முன், வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டுமா? நமக்கு அவள் குழந்தை, மற்றவர்களுக்கு அவள் ஒரு பெண். இனிமேலாவது பிறர் முன்னிலையில் ஷோபாவை தொடுவதை நிறுத்துங்கள்" என்றேன்.
"பிரேம்! இப்பவும் நீங்கள் என்னை தப்பா நினைக்கிறீங்க. உங்கள் தம்பியைப் போல என்னை எண்ணவில்லை" என்றார், பாலு. "பலர் முன்னிலையில் ஜோதி இப்படி செய்ய மாட்டான். அப்படி செய்தால், அவனையும் கண்டிப்பேன்" என்றேன், நான். "அவள் குழந்தை. குழந்தைத்தனமாக அவள் நடந்து கொண்டாலும், பெரியவங்க நீங்கள்தான் புத்தி சொல்ல வேண்டும்" என்றும் கூறினேன். அவ்வளவுதான், பாலு அழுதுவிட்டார். உங்கள் மகளின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் சொன்னேன். இதற்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று நான் அவரை தேற்றினேன்.
பாலுமகேந்திராவுடன் நடிகை ஷோபா
சிறிது நேரம் யாருடனும் பேசாமல் பாலு உட்கார்ந்து இருந்தார். பிறகு, “போய்விட்டு வருகிறேன்” என்று எவரிடமும் சொல்லாமல் எழுந்து போய்விட்டார். பாலு சென்ற அரை மணி நேரத்தில், பாலு வீட்டு வேலைக்காரப் பெண் இந்திரா வந்தாள். "அகிலா அம்மா உங்களை உடனே வரச்சொன்னார்கள்” என்று இந்திரா என்னை அழைத்தாள். நானும் உடனே புறப்பட்டுப் போனேன். அகிலாவின் முகத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை. “நீ உன் பிரதரை (பாலுவை) என்ன சொன்னாய்? கட்டிலில் விழுந்து மாக்கு மாக்கு என்று அழுகிறார்” என்றாள், அகிலா. "பாலு என்ன சொன்னார்?" என்று நான் அகிலாவிடம் கேட்டேன். “நான் ஷோபா மீது உயிரையே வைத்து இருக்கிறேன். ஆனால், பிரேம் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று அழுதார். “பிரேமாவுக்கு விருப்பம் இல்லாவிட்டால், நீங்கள் ஏன் ஷோபாவை தொடுகிறீர்கள்? பத்திரிகையில் செய்தி வந்ததால் அப்படி சொல்கிறாள்” என்று நான் (அகிலா) சொன்னேன்.
அகிலா! உன் தாலி மீது சத்தியமாக சொல்லுகிறேன். ஷோபாவை என் மூத்த மகளாகவே கருதுகிறேன் என்று, என் தாலியை எடுத்து சங்கி (மகன் கவுரி சங்கர்) தலை மீது வைத்து, அவர் (பாலு) சத்தியம் செய்தார். "அவர்களுக்கு ஷோபாவின் எதிர்காலம் தான் முக்கியம். உங்களுக்கு என்று ஒரு பெண் இருத்தால், அப்படி சொல்ல மாட்டார்கள்” என்று நான் (அகிலா) கூறினேன். "படுக்கையில் விழுந்து அழுதுகொண்டு இருக்கிறார். நீ போய்தான் உன் பிரதரை தேற்ற வேண்டும்" என்று நடந்ததை சொல்லி முடித்தாள், அகிலா. நான் (பிரேமா) அறைக்குள் சென்றபோது, பாலு படுக்கையில் குப்புறக் கிடந்தார்.
உங்கள் மகள்
"என்ன பாலு! இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறீர்கள்? உங்கள் மகளின் நன்மைக்காகத்தானே சொன்னேன்? எழுந்து முகத்தைத் துடையுங்கள்" என்று, பாலுவை எழுந்திருக்கச் செய்தேன். "பிரேம்! என் மகளோடு வீட்டில் ஒரு மாதிரியும், வெளியில் ஒரு மாதிரியும் எனக்கு நடக்கத் தெரியாது. எனக்கு இன்னொரு குழந்தை பிறந்து, அது பெண்ணாக இருந்து விட்டால், ஷோபா மீது உள்ள பாசம் குறைந்து விடுமே என்பதற்காகவே, இன்னொரு குழந்தை வேண்டாம்" என்று, அகிலாவிடம் கூறி வருகிறேன். ஆனால், நீ என்னை தவறாக நினைக்கிறாய் என்று பேசினார், பாலு. எனக்கு, பாலுவை ஏன் அப்படி கடிந்துகொண்டோம் என்பது போல ஆகிவிட்டது.
ஷோபாவை தன் தத்து மகள் என்று கூறிய பாலுமகேந்திரா!
தத்து புத்திரி
"உங்கள் மகளின் பெயர் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொண்டால் சரி தான்" என்று நான் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். உடனே பாலு, “இன்று முதல் ஷோபா என் தத்து புத்திரி" என்றார். அன்றில் இருந்து பாலு மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இன்னும் அதிகமானது. தொடக்கத்தில் பாலுவையும், அகிலாவையும் நாங்கள் மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் பொழுது, "இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள், எங்களுக்கு மிகவும் வேண்டியவர்கள்" என்று சொல்லி வந்தோம். ஒருநாள் பாலு, "பிரேம்! நாங்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும், மற்றவர்களிடம் கூறும்பொழுது, கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லுங்கள்" என்று சொன்னார். பாலு ஏன் இப்படிச் சொல்ல சொல்கிறார் என்ற ஆராய்ச்சியில் அப்போது நாங்கள் ஈடுபடவில்லை.
படக்கதை
ஷோபாவுக்கு "காமிக்ஸ்" (படக்கதை) புத்தகம் படிப்பது நிரம்பப் பிடிக்கும். பாலு தன் மகன் கவுரி சங்கருக்கு "காமிக்ஸ்" புத்தகங்கள் வாங்கும்பொழுது, ஷோபாவுக்கும் ஒன்று வாங்கி வருவார். அதில், "என் இனிய மகள் ஷோபாவுக்கு அரவணைத்த அன்பு முத்தங்களுடன் அப்பா பாலுமகேந்திரா" என்று தனது கைப்பட எழுதி ஷோபாவிடம் கொடுப்பார். இப்படியாக "அங்கிள்” உறவு முறையை பாலுவே, "அப்பா" ஆக மாற்றினார்.
அண்ணன் மகள்
மற்றவர்களிடம் சொல்லும் பொழுதும், ஷோபாவை "என் அண்ணன் மகள்" என்று கூறத் தொடங்கினார். இதை அகிலாவே ஒரு நாள் கிண்டல் செய்தாள். இவருக்கு (பாலுமகேந்திராவுக்கு) ஒண்ணுமே தெரியவில்லை. என்னை (அகிலாவை) மேனனுக்கு (ஷோபாவின் அப்பாவுக்கு) தங்கை என்று சொன்னாலும் "அங்கிள், ஆன்டி" என்று உறவு சொல்வதற்கு வசதியாக இருக்கும். நாலுபேர் நம்பவும் செய்வார்கள். இவரை (பாலுவை) மேனனுக்கு தம்பி என்று சொன்னால், யார் நம்புவார்கள்? என்றாள் அகிலா. பாலு திடீர் என்று, ஷோபா அப்பாவை, அண்ணன் என்று உறவு சொன்னது எஙகளுக்கு எப்படியோ இருந்தது!. ஆனாலும், எங்களால் அதைத் தடுக்க முடியவில்லை. கடைசியில், நானே பாலுவை, ஷோபாவின் அப்பாவுக்கு தம்பி என்று சொல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஷோபா அப்பாவை, அண்ணன் என்று உறவு கொண்டாடிய பாலுமகேந்திரா!
அதற்குக் காரணம்,
அந்த நேரத்தில் "தினத்தந்தி" பத்திரிகையில் ஷோபாவையும் பாலுமகேந்திராவையும் இணைத்து ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார்கள். சினிமாப் பகுதியில் உள்ள "சினிமா துளி"களில் அந்தச் செய்தி இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. உடனே "தினத்தந்தி" சினிமா நிருபருக்கு போன் செய்தேன். "அப்பாவையும், மகளையும் இணைத்து செய்தி போட்டு இருக்கிறீர்களே, இது நியாயமா சார்?" என்று அவரிடம் கேட்டேன். ஷோபாவுக்கு பாலு என்ன உறவு என்று தெரியாமல் எழுதி விட்டேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று வருத்தம் தெரிவித்த நிருபர், "பாலுவுக்கும் ஷோபாவுக்கும் என்ன உறவு?" என்று என்னிடம் கேட்டார். "பாலு, ஷோபாவின் அப்பாவுக்கு தம்பி. ஷோபாவுக்கு சித்தப்பா உறவு" என்று அவருக்கு நான் விளக்கம் கொடுத்தேன். இப்படியாக விளம்பரப்படுத்திய அப்பா உறவுக்கு நாங்கள் "ஆமாம்" போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அப்போதும் பாலுவை நாங்கள் முழுமையாக நம்பினோம்.
சாப்பாடு
பாலு வீட்டுக்கு வந்து சாப்பிட உட்கார்ந்தால், ஷோபா, அகிலாவுக்கும் பாலுவுக்கும் மத்தியில் உட்கார்ந்து கொள்வாள். பாலுவிடம் ஒரு வாயும், அகிலாவிடம் ஒரு வாயுமாக வாங்கி சாப்பிடுவாள். பாலுவின் மகன் சங்கியை (கவுரிசங்கர்) தன் சொந்தத் தம்பியாகவே நினைத்தாள் ஷோபா. என் தம்பி ஜோதியின் இரண்டு மகன்களை கண்டிப்பது போலவே சங்கியையும் கண்டிப்பாள். மூன்று பேரையும் வைத்துக் கொண்டு, "ஒருவனை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டும்; ஒருவன் வக்கீல்; மற்றொருவன் என்ஜினீயர்" என்பாள். பாலுவும் அகிலாவும் வெளியே நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது வழியில் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அப்போது, அகிலாவின் சேலையோ, அலங்காரமோ சீராக அமையாவிட்டால், ஷோபா, அகிலாவை உள்ளே அழைத்து போய், அவளை வேறு சேலை கட்ட வைப்பாள் அல்லது அலங்காரத்தை சீர்படுத்தி அனுப்புவாள்!.
துணி
நாங்கள் துணிக் கடைக்குச் சென்றால், எங்களோடு பாலு, அகிலா, சங்கி எல்லோருக்கும் துணி எடுப்போம். அதுபோல, பாலு தன் மகனுக்கு துணி எடுத்தால், ஷோபாவுக்கும் துணி எடுத்து வருவார். அகிலா இலங்கைக்குப் போய்விட்டு வரும்பொழுது எனக்கு (பிரேமா) ஒரு சேலை கொண்டு வந்தாள். பாலுவையும் அகிலாவையும் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவராக நினைத்தோம். ஓணம் போன்ற பண்டிகைகளுக்கு பாலுவை அழைத்துக் கொண்டாடினோம்.
கேரள அரசின் சிறந்த துணை நடிகைக்கான பரிசு பெற்ற ஷோபா
பாலுவுக்கு பரிசு
1977-ல் பாலுவுக்கு, டெல்லி அரசின் சிறந்த கேமராமேன் பரிசு கிடைத்தது. ஷோபாவும் கமலஹாசனும் நடித்த "கோகிலா" என்ற கறுப்பு வெள்ளை கன்னடப் படத்துக்காக "சிறந்த கேமராமேன்" ஆக பாலு தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தார். பத்திரிகையில் செய்தியைப் படித்ததும் எங்களுக்கே பரிசு கிடைத்தது போல நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். இதைப் பாராட்டி, பாலுவுக்கு முன்னதாக அறிவிக்காமலே எங்கள் வீட்டில் திடீர் வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்தோம். வெளியே தெரியாமல், வீட்டுக்குள் கலர் பேப்பரால் தோரணம் கட்டினார்கள். பலூன் ஊதி தொங்கவிடும் வேலையும் நடந்தது. பாலு வந்ததும் வெட்டுவதற்கு "கேக்" வாங்கியாகிவிட்டது! வரவேற்பு வேலை மும்முரமாக நடந்து கொண்டு இருந்த போது, மாலையில் இன்னொரு இனிக்கும் செய்தி கிடைத்தது. “ஓர் மகள் மரிக்குமோ" (மலையாளம்) என்ற படத்தில் நடித்ததற்காக ஷோபாவுக்கு கேரள அரசின் சிறந்த துணை நடிகைக்கான பரிசு கிடைத்து இருப்பதாக செய்தி வந்தது.
வரவேற்பு
அப்பாவுக்கும், மகளுக்கும் ஒரே நாளில் பரிசு கிடைத்தது எங்களுக்கு, இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. வரவேற்பு வேலைகள் முடிந்ததும், “அங்கிள்! சினிமாவுக்குப் போகணும். உடனே புறப்பட்டு வாருங்கள்" என்று பாலுவுக்கு ஷோபா போன் செய்தாள். பாலு வருவதற்குள், ஷோபாவும், என் தங்கை ரமாவும் நிறைய பலூன்களை ஊதி கையில் வைத்துக் கொண்டு வீட்டுக்குள் கதவுக்கு இருபுறமும் நின்றார்கள். கதவு பூட்டி இருந்தது. பாலு வந்து அழைப்பு மணியை அழுத்தினார். நான் (பிரேமா) மெதுவாகச் சென்று கதவைத் திறந்தேன். பாலுவும் அகிலாவும் உள்ளே நுழையவும், ஷோபாவும், ரமாவும் கையில் இருந்த பலூன்களை பட்.. படார்... என்று உடைத்தார்கள். மற்றவர்கள் கைதட்டி வரவேற்றார்கள். அந்த வரவேற்பை பார்த்து பாலு திகைத்துப் போனார். ''ஏன், எதற்காக, இந்த வரவேற்பு?" என்று, கேட்டார். "அப்பாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பரிசு கிடைத்து இருக்கிறதே, அந்த சந்தோசத்துக்காக" என்று நான் விளக்கினேன். ஆண்டி! எங்கள் அங்கிளுக்கு அவார்டு கிடைத்து இருக்கிறது பார்த்தீர்களா? என்று அகிலாவிடம் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டு கம்பீரமாகச் சொன்னாள், ஷோபா. “நான் பெருமையால் ஆகாயத்தில் பறந்து கொண்டு இருக்கிறேன்" என்றும் கூறினாள்.
இருவேறு படங்களில் புன்னகையுடன் காட்சியளிக்கும் ஷோபா
வழி அனுப்பு
பாலு, பரிசு பெறுவகற்காக டெல்லிக்குப் புறப்பட்டபோது, அகிலா இலங்கையில் இருந்தாள். நாங்கள் விமான நிலையத்துக்குச் சென்று உற்சாகமாக வழி அனுப்பினோம். அவர் வாங்கி வந்த பரிசு (கேடயம்) அகிலா இலங்கையில் இருந்து திரும்பி வரும்வரை எங்கள் வீட்டிலேதான் இருந்தது.
ஆமாம் சாமி
பாலுவுக்கு நானும் அகிலாவும் வைத்த பெயர், "சாமி மாடு" என்பது! அதற்குக் காரணம், அவர் எப்பொழுதும் ஷோபாவுக்கு "ஆமாம்" போடுவதுதான்! ஷோபா சாப்பிடும் பொழுது குழந்தைத்தனமாக அடம்பிடிப்பாள்! அவளை சாப்பிட வைக்கும் முன் பெரும்பாடு ஆகிவிடும்! அதனால், சில நேரங்களில் அவளை கடிந்துகொள்வேன். இப்படியே சாப்பிடாமல் இருந்தால் உடம்பு எதற்கு ஆகும் என்று. அப்போது பாலு, பெரிய மனிதருக்கு உரிய இடத்தில் இருந்து, "ஷோபா! சாப்பிடாமல் படுக்கக்கூடாது. போய் சாப்பிடு!" என்று அவளுக்கு புத்தி சொல்லமாட்டார். "ஒருநாள் சாப்பிடாமல் படுத்தால் குழந்தை செத்தா போய் விடும்?" என்று ஷோபாவுக்கு ஆதரவாகப் பேசுவார். சாப்பிட உட்கார்ந்தால், ஷோபாவைப் போலவே, பாலுவும் சாப்பிடப் பிடிக்காதது போல இருப்பார். அதுபோல, துணிக் கடைக்குச் சென்றால், ஏதாவது ஒரு துணியை எடுத்து வைத்துக்கொண்டு, அங்கிள்! இந்தத் துணி அழகாக இருக்கிறது அல்லவா? என்று ஷோபா கேட்பாள். உண்மையிலேயே அந்த நிறம் பாலுக்கு பிடித்து இருக்காது. ஆனால், ஷோபா பிடித்து இருக்கிறது என்று சொன்னதற்காக, "வெரி நைஸ்... எடுத்துக்கொள்" என்று அவர் தாளம் போடுவார்.
ஷோபாவின் செல்ல சிணுங்கல் காட்சி
அதன்பிறகு, “அந்த துணி வேண்டாம்” என்று நாங்கள் சொன்னால், ஷோபா கேட்கமாட்டாள். சிலநாள் படப்பிடிப்பில் இருந்து நேரத்தோடு திரும்பிவிட்டால், "மம்மி! இரவு சினிமாவுக்குப் போகலாமா?" என்று ஷோபா, கேட்பாள். "காலையில் நாலு மணிக்கு எழுந்திருக்க வேண்டும். இரவு சினிமா பார்த்தால், தூக்கம் கெட்டுப்போகும். படுத்துத் தூங்கம்மா" என்று அவளை நான் தாஜா செய்வேன். உடனே ஷோபா, "அங்கிள்! மம்மியிடம் சொல்லுங்கள். சினிமாவுக்குப் போகலாம்" என்று பாலுவிடம் கூறுவாள். “ஓ... போகலாமே! அதனால் என்ன...!" என்று புறப்பட்டுவிடுவார் பாலு.
இழுக்கும் முயற்சி
நான் பலதடவை பாலுவிடம் சொன்னேன். "ஷோபா குழந்தை. அவள் தவறு செய்யும்பொழுது அதை நாம் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும். அது செய்யாமல், அவளுக்கு தலை ஆட்டுவது நன்றாக இல்லை" என்று. அகிலாவும் சொன்னாள். "ஷோபாவுக்கு அதிகம் செல்லம் கொடுத்து கெடுத்து விடாதீர்கள்” என்று. ஆனால் பாலு எங்கள் சொல்லை காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஷோபா என்ன சொன்னாலும் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தார். ஷோபாவை தன் பக்கம் இழுக்க பாலு செய்த முயற்சிதான், "சாமி மாடு” வேலை என்பதை அப்போது நாங்கள் புரிந்துகொள்ளவில்லை.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்…..