மகிழ்ச்சியான தருணத்தில் ஷோபாவின் வாழ்க்கையில் நுழைந்த பாலுமகேந்திரா!
பள்ளிக்கூட மாணவி ஒருத்தி, மனைவி ஆவதுதான் "ஏகாகிணி" படத்தின் கதை! எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய கதை, இது. "அந்தப் பாத்திரத்துக்கு ஷோபா பொருத்தமாக இருப்பாள்" என்று கூறி, ஷோபாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார், பணிக்கர்.
(26.10.1980 மற்றும் 02.11.1980 ஆகிய தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
பள்ளிக்கூட மாணவி ஒருத்தி, மனைவி ஆவதுதான் "ஏகாகிணி" படத்தின் கதை! எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய கதை, இது. "அந்தப் பாத்திரத்துக்கு ஷோபா பொருத்தமாக இருப்பாள்" என்று கூறி, ஷோபாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார், பணிக்கர். கதாநாயகன் ரவி மேனன். எனக்கு உள்ளம் குளிர்ந்தது! துணைப் பாத்திரங்களில் நடித்துக்கொண்டு இருந்த என் மகள், கதாநாயகி ஆகிவிட்டாளே!
பணிக்கர், "ஃபிலிம் இன்ஸ்டியூட்”டில் படித்தவர். சில காலம் லண்டனில் டி.வி.யில் பணியாற்றிவிட்டு, தனது சொந்த முயற்சியில். "ஏகாகிணி" படத்தை எடுத்தார். குறுகியகாலத்தில் படத்தை எடுத்து முடிக்கவும் திட்டமிட்டு இருந்தார். அதனால் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. கேரளாவில் படப்பிடிப்பு!
2 மணிவரை
படத்தில் நடித்த நடிகர் - நடிகைகள், கலைஞர்கள் எல்லோரையும் பணிக்கர் தனது வீட்டிலேயே தங்க வைத்தார். பணிக்கரே எல்லோருக்கும் காபி போட்டுக் கொடுப்பார். கதாநாயகி ஷோபாவுக்கு மட்டும் ஓர் ஓட்டலில் அறை எடுத்து கொடுத்தார்கள். ஆனால், ஷோபா ஓட்டலில் தங்க மறுத்து விட்டாள். மற்ற நடிகர்- நடிகைகளுடன் பணிக்கரின் வீட்டிலேயே தங்கினாள். ஒரு சிறிய அறையை எங்களுக்கு தனியே ஒதுக்கிக் கொடுத்தார்கள். அதற்குள் பெட்டிகளை வைத்துவிட்டால், கால்நீட்டி படுக்க மட்டுமே இடம் இருந்தது. படப்பிடிப்பு முடியும்வரை, அந்த அறையிலேயே தங்கினாள், ஷோபா. சில நாள், இரவு ஒரு மணி, இரண்டு மணிவரை படப்பிடிப்பு நடக்கும்! ஒரு காட்சி எடுத்து முடித்து அடுத்த காட்சிக்கு தயாராவதற்குள், உட்கார்ந்த இடத்திலேயே தூங்கிப்போவாள், ஷோபா. ஆனால், டைரக்டர் "ஷாட் ரெடி" என்று குரல் கொடுத்ததும், சட் என்று எழுந்து கேமரா முன் போய் நின்று விடுவாள். அப்போது, அவள் முகத்தில் தூக்கச் சாயலே இருக்காது. அவ்வளவு சுறுசுறுப்பாக நடந்துகொள்ளுவாள்.
'ஏணிப்படிகள்' திரைப்படத்தில் நடிகர் சிவகுமாருடன் ஷோபா
முதல் ஆள்
அதுபோல, இரவு எந்நேரம் படுத்தாலும், அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்து சாமி கும்பிட்டுவிட்டு, 5 மணிக்கு எல்லாம் படப்பிடிப்புக்குத் தயார் ஆகிவிடுவாள். மற்றவர்களை எழுப்பிவிடுவதும் அவள்தான். "பணிக்கர் அங்கிள்! நான் தயார்” என்று முதலாவதாகப் போய் ஆஜர் கொடுப்பாள். "உன் கதாநாயகனை எழுப்பி விடு" என்பார், பணிக்கர்.
காலில் விழுவார்
ரவி மேனன் சரியான “தண்ணி” வண்டி! 5 மணி ஆனாலும் யாராவது தட்டி எழுப்பினால்தான் எழுந்திருப்பார். தினசரி ரவி மேனனை எழுப்பி விடுவதே ஷோபாவுக்கு பெரிய வேலை ஆகும்.! "ரவி அங்கிள்! படப்பிடிப்புக்கு நேரமாச்சு. சீக்கிரம் எழுந்திருங்கள்" என்று ஷோபா குரல் கொடுத்ததும், ரவி மேனன் அப்படியே எழுந்து, "என்னை மன்னித்துவிடு ஷோபா, இனிமேல் நான் குடிக்க மாட்டேன். இது சத்தியம்" என்று அவளது காலில் விழுவார். "சரி போதும், எழுந்திருங்கள்" என்று ஷோபா சொன்னால்தான் காலை விடுவார்! இது அன்றாடம் நடக்கும் விளையாட்டு. ஷோபாவிடம் சொன்னதற்காக ரவி மேனன் குடியை நிறுத்தியது இல்லை. ஆனால் குடித்துவிட்டால், ஷோபா முன் நிற்க பயப்படுவார். ஓடி ஒளிந்து கொள்வார்.
ரவி விளையாட்டு
ஷோபாவின் அப்பா வழியில் ரவி மேனன் எங்களுக்கு தூரத்து உறவு. அதனால், எப்போதும் ஷோபாவை சீண்டிக் கொண்டே இருப்பார். ஷோபா! இனிமேல் என்னை "ரவி அங்கிள்" என்று கூப்பிடாதே! "அங்கிள்” என்றால், வயதைக் கூட்டி காட்டுகிறது. “ரவி ஏட்டா" (ரவி அண்ணன்) என்று கூப்பிடு என்று அடிக்கடி கூறுவார். ஷோபா என்னோடு இருப்பதை பார்த்தால், என்னிடம் வந்து, “அம்மாயி! (அத்தை) நான்தான் ஷோபாவை கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன்” என்று சொல்லுவார்!.
நடிப்பில் பலமுறை மற்றவர்களை அழவைத்த நடிகை ஷோபா
உடனே ஷோபா "இந்த தொந்தி வயிறுகாரரை எவள் கட்டுவாள் என்பாள். எனக்கு உங்களை விட நல்ல அழகான மாப்பிள்ளை கிடைப்பார். நீங்கள் வேறு ஆளைப்பாருங்கள்" என்று கேலி செய்வாள். அப்போது, "ஷோபா-மேனன், ஷாட் ரெடி, வாருங்கள்" என்று டைரக்டர் குரல் கொடுப்பார். "பார்த்தாயா? அவர்களே உன்னை "ஷோபா மேனன்" என்று ஜோடி சேர்த்து கூப்பிடுகிறார்கள்” என்பார், ரவி மேனன். "இனிமேல் இப்படிச் சொன்னால், நான் உங்களை வாடா, போடா என்றுதான் கூப்பிடுவேன்" என்று கோபப்படுவாள், ஷோபா. ரவி மேனன் அப்போதும் விளையாட்டை நிறுத்தமாட்டார். "ஏடி! நான்தானே உன்னை புடவைக்கட்ட வச்சேன்” என்பார். ஷோபாவுக்கு "டி" போட்டு கூப்பிடுவது அறவே பிடிக்காது! கோவம் தலைக்கு ஏறிவிடும். நீங்கள் "டி" போட்டு கூப்பட்டால், நான் "டா" போட்டு அழைப்பேன்" என்று கத்துவாள்.
மகளே!
ரவி மேனன் ஒருவர்தான் இப்படி. மற்றவர்கள் அவளை "ஷோபா" என்று பெயர் சொல்லிக்கூட அழைக்க மாட்டார்கள். “மோளே!" (மகளே) என்றுதான் கூப்பிடுவார்கள். அவர்கள் எல்லோரும் ஷோபாவை குழந்தையில் இருந்து பார்த்தவர்கள்! அதனால், அவளை தங்கள் மகளாகவே கருதினார்கள்! பொதுவாக, வெளிப்புறப் படப்பிடிப்பில் நடிகர்-நடிகைகள் ஒன்று சேர்ந்தால் “செக்ஸ்” பேச்சுக்கும், கேலி-சிரிப்புக்கும் குறையிருக்காது! ஆனால், அந்த இடத்தில் ஷோபா இருந்தால் "செக்ஸ்" பேச்சே எழாது.
அப்படி பேசி விளையாடிக் கொண்டு இருக்கும்போது ஷோபா வந்தாள் என்றாலும், பேச்சை மாற்றி விடுவார்கள். அந்த அளவு, ஷோபா மீது எல்லோரும் பாசத்தைப் பொழிந்து, வளர்த்தார்கள். அவளை, தங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தையாகவே நினைத்தார்கள்! ஷோபாவும், "அங்கிள் - ஆன்டி' என்று எல்லோரிடமும் குழந்தை உள்ளத்தோடு பழகி வந்தாள். ஷோபாவின் பருவத்தில் அவளை கெட்ட எண்ணத்தோடு யாரும் பார்த்தது இல்லை. அவள் முகத்தைப் பார்த்தால், மனிதத்தன்மை உள்ள யாருக்கும் அப்படி ஓர் எண்ணம் ஏற்படாது. மூத்த நடிகர் - நடிகைகள், கலைஞர்களுக்கு அவள் ஒரு மகளாகவும், இளைய தலைமுறையினருக்கு உடன் பிறவா ஒரு சகோதரியாகவும் பழகிக்கொண்டு இருந்த அந்த நேரத்தில் தான், “மகளே! மகளே!” என்று எங்கள் குடும்பத்தில் வந்து ஒட்டினார், ஒருவர். அவருக்கு, உதட்டில்தான் "மகள்" பாசம்; உள்ளத்தில் இழிகுணம் என்பதை அப்போது நாங்கள் உணரவில்லை.
மகிழ்ச்சி வேளையில்!
"ஏகாகிணி" என்ற படத்தில் கணவனும், மனைவியும் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு காட்சி படமாக்க வேண்டியிருந்தது. படுக்கையில் கணவனுடன் மனைவி எப்படி எப்படி எல்லாம் பழகவேண்டும் என்று ஷோபாவுக்கு விளக்கும் முன், டைரக்டர் பணிக்கரும் மற்றவர்களும் பட்டபாடு பெரும்பாடு! முதலில் பணிக்கர் ஷோபாவிடம் சென்றார். "ஷோபா...நீ..." என்றார். அதற்குமேல் விளக்க முடியவில்லை. வெட்கப்பட்டுக் கொண்டு போய்விட்டார். அடுத்து ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு போனார். “ஷோபா!” என்றவர், "ரவி மேனன், நீயே சொல்லேன்" என்று அவரும் திரும்பிவிட்டார்! ரவி மேனனுக்கு ஷோபாவிடம் எப்படிச் சொல்வது என்ற பயம்! "ஷோபா! நானும்... நீயும் படுக்கையில்... என்றவர், எப்படி சொல்வது என்று தெரியவில்லை" என்று ஓடிவிட்டார்!
பாம்போடு நடிக்க பயந்த ஷோபா
ஷோபாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "மூணு பேரும் வந்தீங்க, ஒண்ணும் சொல்லவில்லை. நான் எப்படி நடிப்பது?" என்று கேட்டாள்! அப்போது ரவி மேனன் வேறு பக்கமாக திரும்பி நின்று கொண்டு, "ஷோபா! நீயும் நானும் படுக்கை அறையில் கட்டிப் பிடித்துக் கொஞ்சுகிறோம்... அணைத்துக் கொள்கிறோம். ஒருவர் மீது ஒருவர் புரளுகிறோம்...என்று வாய்ப்பாடு ஒப்புவிப்பது போல மட மட என்று சொல்லி முடித்தார்! ஷோபாவுக்கு வந்ததே கோபம்! "என்ன, ரவி அங்கிள்!" என்று கண்களை உருட்டினாள். ரவி மேனன் பயந்து போனார். "அப்படி நான் சொல்லல. டைரக்டர் சொன்னார்" என்றார். "அவ்வளவுதானே! சரி, நடியுங்கள்" என்று படுக்கைக்குச் சென்றாள், ஷோபா. "என்ன அம்மாயி!" என்று ரவி மேனன் என்னைப் பார்த்தார். "ஒன்றும் சொல்லமாட்டாள் தைரியமாக நடியுங்கள்” என்று, நான் ரவி மேனனுக்கு தைரியம் சொன்னேன். ஒருவழியாக படுக்கையறைக் காட்சியை எடுத்து முடித்தார்கள்.
"பாம்பு"டன்
"சோட்டானிக்கர அம்மா” என்ற படத்தில் ஷோபா முதல் முறையாக பாம்போடு நடிக்கவேண்டியிருந்தது. கரப்பான் பூச்சியைக் கண்டாலே ஷோபா தலைதெறிக்க ஓடுவாள்! பாம்பு என்றால் சொல்லவும் வேண்டுமா? ஷோபா காலில் பாம்பு கடிக்கிறது. அவள் அப்படியே தரையில் விழுகிறாள். அந்தப் பாம்பு, ஷோபா மீது ஏறி ஊர்ந்து, வேறு பக்கம் செல்கிறது. இதுதான் ஷோபா பாம்போடு நடிக்கவேண்டிய காட்சி! பாம்பாட்டி கையில் பாம்பை பார்த்ததும். ஷோபா நடுங்கிப்போனாள். “டைரக்டர் அங்கிள்! இந்தக் காட்சியை "டூப்" போட்டு எடுத்து விடுங்களேன்" என்றாள்.
"பாம்பு கடிப்பதை “டூப்” போட்டு படமாக்கலாம். உன் மீது ஊர்ந்து செல்வதற்கு “டூப்" போட முடியாதே" என்றார், டைரக்டர் கிராஸ்பெல்ட் மணி. “அங்கிள்! பிளீஸ், எனக்கு பயமாக இருக்கிறது” என்று ஷோபா கெஞ்சினாள். "சரி, பாம்பு கடிப்பதற்கு “டூப்” போட்டுவிடுகிறேன். பாம்பு ஊர்ந்து செல்வதற்கு நீதான் படுக்க வேண்டும்" என்றார். கேமராமேன் தாராவின் கால், ஷோபாவின் காலைப் போல இருந்தது. அவர், ஷோபாவின் பாவாடையைக் கட்டிக் கொண்டு, பாம்பு கடிக்க "போஸ்" கொடுத்தார். அடுத்த காட்சிக்கு, ஷோபாவை கெஞ்சிக் கூத்தாடி, வைக்கோல் போர் அருகே படுக்க வைத்தார்கள்! பாம்பாட்டி, பாம்பை திறந்துவிட்டான்! பாம்பைப் பார்த்ததும், படுத்து இருந்த ஷோபா, அலறி அடித்துக்கொண்டு எழுந்துவிட்டாள். ஒரு திட்டு மீது ஏறி நின்று கொண்டு, அங்கிள் பாம்பு வேண்டாம்... வேண்டாம் என்று அலறினாள். நானும், டைரக்டரும் ஷோபாவுக்கு தைரியம் ஊட்டினோம். “பாம்புக்கு வாயைத் தைத்து இருக்கிறார்கள்: பல்லை பிடுங்கி விட்டார்கள்" என்று பாம்பை தூக்கிக்காட்டி அவளை மீண்டும் படுக்க வைத்தோம்.
"நடிகை என்றால் நீதான்” என டைரக்டர் பாலகிருஷ்ணனிடம் பாராட்டு வாங்கிய ஷோபா
காய்ச்சல்
ஷோபா பல்லைக் கடித்துக்கொண்டு, தரையில் படுத்தாள். மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் காட்சியை படமாக்கி முடித்தார் டைரக்டர்.! ஆனால், அன்று இரவே ஷோபாவுக்கு பயத்தில் காய்ச்சல் வந்துவிட்டது. மூன்று நாள் அவளால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலவில்லை.
சிரித்த முகம்
ஷோபா எப்பொழுதும் சிரித்த முகமும் சிங்காரமுமாக இருப்பாள். இது எல்லோருக்கும் நிரம்பப் பிடித்தது!. அதற்காக, அவளை டைரக்டர் பாலகிருஷ்ணன், எப்போதும் "ரெஷ்மி" (ஒளி மிகுந்தவள்) என்று அழைப்பார். ஆனால், அந்த ஒளி மிகுந்த முகம், அப்போதே நடிப்பில் பல தடவை மற்றவர்களை அழவைத்து இருக்கிறது! “ராஜ பரம்பரை” என்ற படத்தில், ஷோபா காதல் தோல்வியால் விஷம் குடித்துவிடுகிறாள். காதலன் (நடிகர் ராகவன்) ஆஸ்பத்திரிக்கு ஓடிச் சென்று, ஷோபாவின் கையைப் பிடித்துக் கொண்டு, "என் காதலியை காப்பாற்றிக் கொடுங்கள்... காப்பாற்றிக் கொடுங்கள்” என்று அழுகிறான். ஷோபா ஒருமுறை கண்திறந்து, காதலனை பார்க்கிறாள். "காலங்கடந்து வந்து இருக்கிறீர்கள்” என்று கூறிவிட்டு அவள் உயிர்விடுவது போன்று படமாக்க வேண்டும். அந்தக் காட்சியில், உயிர் பிரியும் முன் ஏற்படும் கடைசித் துடிப்பை ஷோபா முகத்தில் காட்டியபோது, சுற்றி நின்ற எல்லாக் கலைஞர்களும் அழுதுவிட்டார்கள். டைரக்டர் பாலகிருஷ்ணனுக்கே அழுகையை அடக்க முடியவில்லை. "நடிகை என்றால் நீதான் ” என்று ஷோபாவை கட்டிப் பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார்.
'முள்ளும் மலரும்' திரைப்பட குழுவுடன் நடிகை ஷோபா
குட்டை
“அபிமானம்” என்ற படத்தில் சோமனுக்கு ஜோடியாக ஷோபா நடித்தாள். சோமனும், ஷோபாவும் சேர்ந்து நின்றால், அவருடைய தோள் உயரத்துக்குக்கூட, ஷோபா இருக்கமாட்டாள்! இதை வைத்துக் கொண்டு “இவ்வளவு குட்டையாக இருக்கிறாயே!? நாம் எப்படி ஜோடியாக நடிப்பது?” என்று ஷோபாவிடம் சோமன் கேட்டார். மறுநாள், ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த, (அப்போது "ஜெயபாதுரி ஹீல்ஸ்” என்று அழைக்கப்பட்ட) குதிகால் உயர்ந்த செருப்பை தயாராக எடுத்து வைத்துக்கொண்டாள், ஷோபா. சோமன் செட்டுக்கு வந்ததும். ஷோபா குனிந்து உட்கார்ந்து கொண்டு, “அங்கிள்! இப்படி வாருங்களேன்! உயரம் பார்க்க வேண்டும்” என்றாள்! சோமன் அருகே வரவும், ஷோபா “பட்” என்று எழுந்து நின்றாள். அப்போது அவள், சோமனின் கழுத்துக்குமேல் இருந்தாள்!
“ஒரேநாளில் வளர்ந்து விட்டாயே!" என்று சோமன் வியந்தபடி, ஷோபாவின் பாவாடையை சிறிது உயர்த்தியபோதுதான் குட்டு வெளிப்பட்டது! ஷோபாவின் காலில் அந்த அரை அடி உயரச் செருப்பு!. “ஓ... ஐ.சி. மேலே நிற்கிறாயா?" என்று சோமன் கூறவும், எல்லோரும் சிரித்துவிட்டார்கள்! ஷோபாவின் வாழ்க்கை, இப்படி மகிழ்ச்சியும் பூரிப்புமாக கடந்து கொண்டு இருந்தபோதுதான், எங்கள் குடும்பத்துக்கு அறிமுகமானார் கேமராமேன் பாலுமகேந்திரா.
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்…