அடுத்த விருதுக்கு தயாராகும் அபர்ணா பாலமுரளி!
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. நடிகர் சூர்யாவுடன் இணைந்து ‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்ததன் மூலம் சுந்தரி என்ற பொம்மியாக தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா உலகத்தினரின் கவனத்தையும் ஈர்த்து தேசிய விருதினை தட்டிச் செல்லும் அளவுக்கு உச்சம் பெற்றார். சினிமாவுக்குள் வந்து சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கும் அழகோ, உடல் அமைப்போ முக்கியம் இல்லை, திறமை இருந்தால் போதும் என்பதனை நிரூபித்துக்காட்டி பலருக்கும் ரோல் மாடலாக இருந்துவரும் அபர்ணா தற்போது நடிகர் தனுஷ், தானே இயக்கி நடித்துவரும் அவரின் 50-வது படமான ராயனில் இணைந்துள்ளார். ஏற்கனவே ‘சர்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு அடையாளம் பெற்ற நடிகையான துஷாரா விஜயன் இப்படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது அபர்ணாவும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளி குறித்தும், அவரின் திரைப்பயணத்தில் இதுவரை கண்டுள்ள வெற்றிகள் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.
அபர்ணா பாலமுரளியின் தொடக்க காலம்
அபர்ணா பாலமுரளியின் இளமைக்கால புகைப்படங்கள்
சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொண்டு ரசிகர்களிடம் நல்லதொரு நட்புறவை பாராட்டிவரும் நடிகையான அபர்ணா பாலமுரளி, கேரள மாநிலம், திருச்சூரில் கே.பி.பாலமுரளி - ஷோபா பாலமுரளி ஆகியோருக்கு மகளாக 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பிறந்தார். இவருக்கு விஷ்ணு என்ற ஒரு சகோதரரும் உள்ளார். அபர்ணாவின் தந்தை பாலமுரளி தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். அம்மா ஷோபா ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞராகவும், அண்ணன் தொழிலதிபராகவும் பணியாற்றி வருகின்றனர். இப்படி நன்கு படித்த குடும்பத்தில் பிறந்த அபர்ணா, தான் பிறந்த திருச்சூரிலேயே தேவமாதா சி.எம்.ஐ பப்ளிக் பள்ளியில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பிறகு, கேரளாவின் பாலக்காட்டில் உள்ள குளோபல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்க்கிடெக் கல்லூரியில் சேர்ந்து கட்டிடக்கலை தொடர்பான பட்டப்படிப்பை முடித்தார். இதற்கிடையில், தந்தை பாலமுரளி இசையமைப்பாளராக இருந்ததால், குழந்தை பருவத்தில் இருந்தே நடிப்பின் மீதும், இசையின் மீதும் அதீத நாட்டம் கொண்டு இசை, பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற கிளாசிக்கல் நடனங்கள் மற்றும் நடிப்பு தொடர்பான விஷயங்கள் என அனைத்தையும் நன்கு கற்றுக் கொண்டார். இதனாலேயே குடும்பத்தினரின் விருப்பத்திற்காக ஆர்க்கிடெக் தொடர்பான படிப்பை தேர்ந்தெடுத்து படித்தவர், அத்துறையில் பயணிக்காமல் சினிமா துறையிலேயே பயணிக்க முடிவு செய்து, அதன்படி தனது 20-வது வயதிலேயே மலையாள சினிமாவில் நுழைந்து ஒரு நடிகையாக தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
அபர்ணாவின் முதல் திரைப் பிரவேசம்
‘ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா’ படத்தில் பள்ளி சீருடையில் வினீத் ஸ்ரீனிவாசனுடன் அபர்ணா
சிறந்த நடிகை என்பதை தாண்டி பாடகியாகவும் அவ்வப்போது தன்னை அடையாளப்படுத்தி வரும் அபர்ணா, 2015-ஆம் ஆண்டு ‘ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். இப்படத்தில் அமிர்தா உன்னிகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அபர்ணா தனது நடிப்பின் வாயிலாக முதல் படத்திலேயே புகழ் பெற்றது மட்டுமின்றி மலையாள ரசிகர்களிடம் நன்கு அறியப்பட்ட நடிகையாகவும் மாறிப்போனார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அபர்ணா பாலமுரளியை தேடிவர ஆரம்பிக்க அதன்படி 2016 ஆம் ஆண்டில், ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ஒரு முத்தச்சி கட’ என இரண்டு படங்களில் நடித்தார். இவ்விரு படங்களுமே அபர்ணாவுக்கு வெற்றிப்படமாகவும், புகழை பெற்றுத்தரும் படமாகவும் அமைந்தது. இதனால் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா இயக்குநர்களின் கவனத்தையும் பெற்று தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அப்படி 2017-ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘சண்டே ஹாலிடே’, ‘சர்வோபரி பலக்கரன்’, ‘திருச்சிவப்பேரூர் கலிப்தம்’ என நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தமிழில் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வர, அதையும் ஏற்று முதல் முறையாக இங்கும் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஸ்ரீ கணேஷ் என்பவரது இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் வெற்றி, மணிகண்டன் ஆகியோருடன் இணைந்து மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு படம் வெற்றிப்படமாக அமைந்தது.
‘சூரரைப்போற்று’ படத்தில் நடிகர் சூர்யாவுடன் - ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் தேசிய விருது பெற்ற தருணம்
இதற்கு பிறகு, மலையாளத்தில் மிகவும் பிசியாக இயங்கி வந்த அபர்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜிவ் மேனன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ‘சர்வம் தாளமயம்’ என்ற படத்தில் சாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் அபர்ணா நடித்த முதல் இரண்டு படங்களும் நடிப்புக்கு தீனி போடும் படங்களாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அபர்ணா என்ற நடிகையை அடையாளப்படுத்தும் படங்களாக அமைந்தன. இதனால், அடுத்த ஆண்டே சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா என்ற மிகப்பெரிய நட்சத்திர ஹீரோவுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து ‘சூரரைப்போற்று’ என்ற வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் நடித்தார். இதில் நடிகர் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளியுடன் மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குறைந்த செலவில் அனைத்து தரப்பு மக்களும் விமான சேவையைப் பெற வேண்டும் என்ற நோக்கில் ஜி.ஆர்.கோபிநாத் என்ற விமானி சொந்த விமான நிறுவனத்தை எப்படி உருவாக்கினார் என்பதை கதைகளமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் 2020-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
இதில் சுந்தரி நெடுமாறன் என்ற பொம்மியாக வரும் அபர்ணாவின் நடிப்புத்திறனை கண்டு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா உலகமும் பாராட்டியது. மேலும் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவிலும் இடம்பெற்ற இப்படம், சிறந்த இயக்குநர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர் என மொத்தம் 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்தது. அதில் தனது சிறந்த நடிப்பிற்காக அபர்ணாவும் தேசிய விருதினை பெற்றது ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது. இதனையடுத்து அடுத்த ஆண்டே தமிழில் ‘தீதும் நன்றும்’, ‘வீட்ல விசேஷங்க’, என இரண்டு படங்களில் நடித்தார். இருந்தும் தமிழை விட மலையாளத் திரையுலகில்தான் அபர்ணாவுக்கு அதிகமான வாய்ப்புகள் வந்தன. இதனால் அசோக் செல்வனுடன் இணைந்து ‘நித்தம் ஒரு வானம்’ என்றொரு படத்தில் நடித்ததற்கு பிறகு முழுக்க முழுக்க தனது தாய் மொழியான மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த அபர்ணாவுக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் அதுவும் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோவான நடிகர் தனுசுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்து நடித்துள்ளார். அந்த படம்தான் இரண்டாவது முறையாக தனுஷ் இயக்குநராக அவதாரம் எடுத்து இயக்கி வரும் ‘ராயன்’ திரைப்படம்.
நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் அபர்ணா
நடிகர் தனுஷ் மற்றும் அபர்ணா பாலமுரளி
2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் உலக அளவில் 104 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இந்த நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படம் தயாரிப்பில் இருக்கும் போதே தனுஷின் அடுத்த படம் என்ன, அதனை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனால் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தனது 50-வது படத்தினை தானே இயக்கி நடிக்கப் போவதாக நடிகர் தனுஷ் அறிவித்தார். ‘ப.பாண்டி’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தனுஷ் D50 என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ‘ராயன்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
'ராயன்' பட போஸ்டர் மற்றும் அழகிய புன்னகையுடன் காட்சியளிக்கும் அபர்ணாவின் புகைப்படம்
இந்த நிலையில், ‘ராயன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த படத்தில் நடித்து வரும் முக்கிய கதாபாத்திரங்கள் யார் யார் என்பதை போஸ்டர் வாயிலாக படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோரின் உருவங்கள் இடம்பெற்றிருந்த போஸ்டர்கள் வெளியாகியிருந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி இப்படத்தில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளியின் போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ‘ராயன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அளித்தது தொடர்பாக நடிகர் தனுஷிற்கு நன்றி தெரிவித்து, நடிகை அபர்ணா பாலமுரளி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தனுஷிற்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உங்களின் தீவிர ரசிகையான நான் உங்களுடன் சேர்ந்து நடித்திருப்பதன் மூலம் என் கனவு நினைவாகிவிட்டது. நிச்சயம் நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன். இது என்னை பொறுத்தவரையில் ரொம்பவே ஸ்பெஷலான நிகழ்வு என்று கூறியுள்ளார். நடிகை என்பதை தாண்டி தனது சோஷியல் மீடியா பக்கத்தில், நண்பர்களுடன் இணைந்து ‘ஹிப்ஸ்வே’ என்ற ஆடை விற்பனையகத்தை தொடங்கி, விற்பனையாளராகவும், தொழில் முனைவோராகவும் களமிறங்கியுள்ள அபர்ணா பாலமுரளி ‘ராயன்’ படத்தின் மூலம் மீண்டும் ஒரு சரித்திர சாதனையை படைக்க வேண்டும், விருதுகளை அள்ளிக்குவிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.