வெள்ளி விழா ஆண்டில் அஜித், ஷாலினி காதல்! - மலரும் நினைவுகள்!

திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்த நடிகர் அஜித்தும் - ஷாலினியும் தற்போது தங்கள் காதலில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர்.

Update:2024-03-26 00:00 IST
Click the Play button to listen to article

காதல் என்பது அபூர்வமான அதே நேரம் மிகவும் அழகான ஒரு வார்த்தையும் கூட. அதிலும் ஒரு ஆணுக்கும் - பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது நகமும், சதையையும் போன்றது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை எனலாம். அப்படிப்பட்ட அந்த காதலால் ஈர்க்கப்பட்டு திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்த நடிகர் அஜித்தும் - ஷாலினியும் தற்போது தங்கள் காதலில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். ரசிகர்கள் மிகவும் விரும்பும் நட்சத்திர தம்பதிகளான இவர்கள் அண்மையில் சிறந்த காதலர்களாக 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு அந்த வெள்ளி விழா நிகழ்வை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்படிப்பட்ட இந்த தம்பதிகளின் காதல் கதை பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும், இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இவர்கள் காதல் எங்கிருந்தது எப்படி ஆரம்பித்தது? சந்தித்து பேச ஆரம்பித்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்ன? இந்த 25 ஆண்டுகளில் இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சந்தித்த வெற்றி தோல்விகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அஜித், ஷாலினி முதல் அறிமுகம்

பார்ப்பவர்கள் அனைவரும், பிறந்தால் ‘பேபி ஷாலினி’ மாதிரியான குழந்தைதான் எங்களுக்கு பிறக்க வேண்டும் என்று ஏங்கும் அளவுக்கு எல்லோரது மனங்களிலும் ஒரு குழந்தை நட்சத்திரமாக பதிந்து போனவர் திடீரென்று ஒருநாள் யாரும் எதிர்பார்க்காத வகையில் கதாநாயகியாக மலையாளத் திரையுலகில் ‘அணியதிப்ரவு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அங்கு முதல் படத்திலேயே ஷாலினிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த இயக்குநர் பாசில், மீண்டும் தமிழில் அதே படத்தினை விஜய்யை வைத்து இயக்கியபோது இங்கும் கதாநாயகியாக அவரே களமிறங்கினார். இப்படி 1997-ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக அறிமுகமாகி ஹிட் கொடுத்த அவருக்கு தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் படவாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதன்படி 4, 5 படங்களில் நடித்தவருக்கு அப்படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாகவும், அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உண்டாக்கின. இருப்பினும் சிறுவயதில் இருந்து நடிக்கும் அவருக்கு மேற்கொண்டு நடிக்க விருப்பம் இல்லாமல், இனி நடிப்பு வேண்டாம், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்று முடிவெடுத்தபோதுதான் ‘அமர்க்களம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. 1999-ஆம் ஆண்டு வெளிவந்த அமர்க்களம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க கேட்டு, இயக்குநர் சரண் ஷாலினியை அணுகியபோது 'சின்ன வயசுல இருந்தே சினிமாவில் தொடர்ந்து நடித்து எனக்கு போர் அடித்துவிட்டது, மேற்கொண்டு படிக்கலாம் என்று முடிவு செய்திருக்கேன். அதனால், படம் வேண்டாம் ப்ளீஸ்' என்று மறுத்துவிட்டாராம்.


நடிகை ஷாலினி மற்றும் "அமர்க்களம்படத்தில் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" பாடல் காட்சி 

பிறகு படத்தில் கதாநாயகியாக நடிக்க கேட்டு ஷாலினியை சென்று சந்தித்தது பற்றி இயக்குநர் சரண் அஜித்திடம் சொல்ல, அதனை கேட்ட அஜித் அடுத்த நிமிடமே ஷாலினியை தொடர்பு கொண்டு, தன்னோடு சேர்ந்து நடிக்கும்படி கேட்கவும், பின்னர் நீண்ட யோசனைக்கு பிறகு மறுப்பேதும் சொல்லாமல், தனக்கும் தன் தோழிகளுக்கும் பிடித்த நடிகர் என்பதால் ‘அமர்க்களம்’ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். இப்படி இயக்குநர் சரண், நடிகர் அஜித், தோழிகள் என அனைவரின் வற்புறுத்தல்களுக்குப் பிறகு ‘அமர்க்களம்’ படத்திற்குள் நடிக்க வந்த ஷாலினியின் எதிர்கால வாழ்க்கை இங்குதான் தீர்மானமாகப்போகிறது என்பது அப்போது அவருக்கே தெரிந்திருக்காது. முதலில் ஷாலினி தனியாக நடிக்க வேண்டிய காட்சிகளை படக்குழு படமாக்கிக்கொண்டிருக்கும் போதே தனக்கு அதில் வேலை ஏதும் இல்லை என்றாலும், அஜித் தினமும் அந்த இடத்திற்கு வந்து படப்பிடிப்பை பார்த்துவிட்டுச் செல்வாராம். இதற்கு பிறகுதான் அஜித் - ஷாலினி இருவரையும் ஒன்றாக வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை படமாக்க தொடங்கினார்களாம். அந்த தருணம்தான் இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும்படியான சந்திப்புக்கு வழிவகுத்தது.

குறும்போடு மலர்ந்த காதல்

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறத் தொடங்கிய சில நாட்களில் படத்தில் அஜித் - ஷாலினி இருவரும் இடம்பெறும் ஒரு முக்கியமான காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அப்போது கதைப்படி, சீனிவாசா தியேட்டரில் ஓடும் 'அண்ணாமலை' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஷாலினி எடுத்து வந்து தன் வீட்டில் ஒளித்து வைத்துக்கொள்வார். அப்போது கோபமாக கையில் கத்தியுடன் வரும் அஜித் அவரிடம் சண்டை போட்டு படப்பெட்டியை பிடுங்குவார். இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்பாக ரிகர்சல் பார்க்கத் தொடங்கினராம் இயக்குநர் சரண். அந்த காட்சியை படமாக்கும்போது, அஜித், ஏய்! என்ற அலறலோடு கடுமையாக சண்டைபோட அவர் கையில் இருந்த கத்தி திடீரென ஷாலினி கையில் கிழித்து ரத்தம் வந்துள்ளது. அதனை கண்ட மொத்த படக்குழுவும் பதறிப்போக, அஜித்தோ அதிர்ச்சியாகி ஒரே ரகளை செய்துவிட்டாராம். அவர் செய்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு ஆஸ்பத்திரியையே பட யூனிட்டுக்கு கொண்டுவந்து ஷாலினிக்கு தேவையான முதலுதவியை செய்தாராம் அஜித். அந்த நிமிடம்தான் 'ஒருத்தருக்கு ஒண்ணுன்னா இவ்ளோ துடிச்சிப் போறாரே' என்று, அஜித் மீது ஷாலினிக்கு பிரியம் வந்ததாம்.


'அமர்க்களம்' படத்தில் அஜித் - ஷாலினி இடம்பெறும் காதல் காட்சிகள் 

இங்கு ஆரம்பித்த பிரியம் நாளடைவில் காதலாகவும் மாறியது. நாட்கள் செல்ல செல்ல இருவரும் தங்களையே அறியாமல் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த நேசம் ஒருகட்டத்தில் அஜித் வாயிலாக காதலாகவும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. அப்படி அஜித் கூறிய முதல் ப்ரோபோசல் மிகவும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வாகவே நடந்தேறியுள்ளது. அது என்னவென்றால் ஒருநாள் ஷூட்டிங் அன்று, ஓய்வு நேரத்தில் இயக்குநர் சரண் நடுவில் அமர்ந்திருக்க அவருக்கு இரண்டு புறத்திலும் அஜித்தும், ஷாலினியும் உட்கார்ந்து இருந்தார்களாம். அப்போது திடீரென அஜித் இயக்குநர் சரணிடம் ‘அமர்க்களம்' படத்தை ஒரே ஷெட்யூலில் ஷூட்டிங் நடத்தி முடிச்சிடுங்க சரண். நான் வேறு படங்களுக்குக் கொடுத்திருக்கிற கால்ஷீட் தேதிகளை எல்லாம் கூட இதுக்கே கொடுத்து விடுகிறேன். காரணம் என்னன்னா ரொம்ப நாள் இந்தப் படத்தில் நடிச்சேன்னா, எங்க ஷாலினியை காதலித்து விடுவேனோன்னு பயமா இருக்கு. அதனாலேயே ஷூட்டிங்கை சீக்கிரம் முடிச்சிருங்க' என்று ஷாலினிக்கும் கேட்கும்படி சத்தமாகச் சொன்னாராம். அஜித் அப்படி கூறியதை கேட்டதும், ஷாலினி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு மாதிரி ஒரே சந்தோஷப் புன்னகையாம். காரணம் அவர் மனதிலும் ஏற்கனவே அஜித் மீது காதல் வந்திருந்தது.

இதேபோல் படத்தின் ஒரு காட்சியில், ஷாலினியைக் காதலிக்கும்படியும், அவருக்குப் பொக்கே தரும்படியும் நடிகர் ரகுவரன், அஜித்திடம் சொல்வார். ரசிகர்களின் மிகவும் விருப்பமான அந்த காட்சியை படமாக்கும் பொழுது அஜித், இயக்குநர் சரணிடம் எனது காதலை நிஜமாகவே வெளிப்படுத்தப்போகிறேன். அதனால் ஷாலுவுக்கு தரவேண்டிய பொக்கேவை கம்பெனி பணத்தில் வாங்க வேண்டாம், நானே சொந்தப் பணத்தில் வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டாராம் . சொன்ன மாதிரியே அடுத்த நாள் பொக்கே வாங்கிக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அஜித் வந்துவிட, அதனை ஷாலினியின் அப்பாவுக்கு தெரியாமல் எப்படி மறைப்பது என்று இயக்குநரும் அஜித்தும் தவித்துள்ளனர். இந்த நேரம், அந்த பொக்கே நமக்கு தர வாங்கியதுதான் என்பதனை தெரிந்துகொண்ட ஷாலினி, அப்பாவிடம் எதையோ சொல்லி சமாளித்து அதனை வாங்கிக்கொண்டாராம். படத்தில் வரும் அந்த காட்சியில் உண்மையாகவே அஜித் ஷாலினிக்கு பொக்கே கொடுத்து காதலை வெளிப்படுத்தியிருப்பார். தன் காதலுக்காக ஷாலினிக்கு அஜித் கொடுத்த முதல் காதல்பரிசு அந்த பொக்கேதானாம். அதுமட்டுமின்றி 'அமர்க்களம்' படப்பிடிப்பின் இடைவேளைகளில் அஜித்தும், ஷாலினியும் தனியாக அமர்ந்து பேசி சிரிக்கும் காட்சிகளை அவர்களுக்கே தெரியாமல் படமாக்கினாராம் இயக்குநர். அதனாலேயே படத்தில் இருவரும் கதாபாத்திரங்களாக இல்லாமல் காதலர்களாவே வாழ்ந்திருப்பார்கள்.

திருமண வைபோகம்


அஜித் - ஷாலினி திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படம் 

இப்படியே சென்று கொண்டிருந்த இருவரின் காதலை, திருமணம் என்ற அடுத்து கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு முதலில் இருவீட்டு பெரியவர்களிடம் பேசி சம்மதம் பெற வேண்டும் என்ற முடிவுக்கு அஜித்தும், ஷாலினியும் வந்தனர். அதன்படி ஷாலினி, அஜித்திடம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், நான் எப்போதும் அப்பா பொண்ணு, அதனால் நம் காதலுக்கு அப்பாவின் சம்மதம் முதலில் முக்கியம், நீங்கள் வந்து அப்பாவிடம் பேசுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாகவே ஷாலினி தன் தந்தையிடம் அஜித் மீதான காதல் குறித்து பேசி சம்மதம் வாங்கிவிட்டார் என்பது தெரியாமல், அவரின் வீட்டிற்கு ஒருவித பதட்டத்துடனேயே சென்ற அஜித்துக்கு பச்சைக்கொடி காட்டி ஒட்டுமொத்த குடும்பமும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு வீட்டாரும் ஒன்றாக அமர்ந்து கலந்து பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க, இன்னொரு புறம் படப்பிடிப்பு வேளைகளில் அஜித், ஷாலினி இருவரும் பிஸியாக இருந்தனர். அதிலும் ஷாலினி, தான் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்த மற்ற படங்களையும் நடித்து முடித்து கொடுப்பதில் மிகவும் முனைப்புடன் இருந்தார். காரணம் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில்லை என்ற தீர்க்கமான முடிவை அவர் எடுத்திருந்ததால்தான்.

1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று அமர்க்களம் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சொன்னது போலவே மற்ற படங்களையும் முடித்து கொடுத்து விட்டு 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று தான் நினைத்தது போலவே அஜித்தை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு அஜித்தை கவனித்துக்கொள்வது, வீட்டை கவனிப்பது என ஒட்டுமொத்த பொறுப்பையும் எடுத்துக்கொண்டு முழு குடும்ப பெண்ணாகவே மாறினார். எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பது போல் வெற்றி, தோல்வி என மாறி மாறி இவர்களின் வாழ்க்கையிலும் இருந்தாலும் எந்த தருணங்களிலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காது ராமனுக்கு ஏற்ற சீதையாக ஷாலினியும், சீதைக்கு ஏற்ற ராமனாக அஜித்தும் அனைவரும் பார்த்து பொறாமைப்படும் படியான வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட இந்த அழகான ஜோடிகளின் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக 2008-ல் அனௌஷ்கா என்ற மகளும் ,2015-ல் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.

காதலில் வெள்ளி விழா


வெவ்வேறு காலகட்டங்களில் அஜித் - ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 

‘அமர்க்களம்’ படத்திற்கு முன்பாக ஷாலினி கதாநாயகியாக நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக அமைந்ததால் அவர் மீதான கிரேஸ் என்பது எல்லோருக்குமே அதிகமாக இருந்தது. அதுமட்டுமின்றி ‘அமர்க்களம்’ மோகனா என்ற பாத்திரம் இன்னும் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்று அமர வைத்தது. இதனாலேயே அவரை நோக்கி நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ஆனாலும் அனைத்து படங்களையும் ஒப்புக்கொள்ளாது குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லி நடித்த ஷாலினியின் அனைத்து வேடங்களும் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அப்படிப்பட்ட இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லையே என்ற ஏக்கம் இன்றுவரை ரசிகர்களிடம் இருந்துவருகிறது. ஷாலினி நடிக்காமல் போனதற்கு அஜித்தும் ஒரு காரணம் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் இனி நடிக்க மாட்டேன் என்ற முடிவை எடுத்தது ஷாலினிதான். திருமணத்திற்கு முன்பே நடிப்பதை பெரிதும் விரும்பாதவர், திருமணத்திற்கு பிறகு எப்படி நடிக்க விரும்புவார். முழுநேரமும் அஜித்திற்கு நல்ல மனைவியாக இருந்து அவரை வழிநடத்தவே விரும்பினார். அதில் அவர் ஜெயித்தும் காட்டிவிட்டார். உடன் நடிக்கும் நடிகர், நடிகை ஒருவருக்கொருவர் காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் புதிதில்லை என்றாலும் எத்தனை காதல் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்றிருக்கிறது. அந்த வகையில், தங்களது காதலில் வெற்றிபெற்ற தம்பதிகளாக அஜித்தும், ஷாலினியும் அதே மாறாத அன்புடன் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளனர். இதனை கொண்டாட நினைத்த இருவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு ரெசார்ட் ஒன்றிற்கு சென்று தங்களது காதல் வெள்ளி விழாவை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது அவர்களின் ஃபேவரைட் பாடலான உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்கிற பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டுள்ளனர். இந்த கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த ஜோடி வெள்ளி விழா மட்டுமல்லால் நூற்றாண்டு கண்டு பலருக்கும் எடுத்துக்காட்டான ஜோடிகளாக என்றென்றும் வாழ வாழ்த்துவோம்.

Tags:    

மேலும் செய்திகள்