ஃபர்ஸ்ட் லுக்கில் பட்டையை கிளப்பும் அஜித்! பதறவைக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?
கடந்த ஆண்டு வெளிவந்த ‘துணிவு’ ’படத்தின் வெற்றிக்குப் பிறகு, மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துவந்த அஜித் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வந்தார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரங்களில் முதன்மையானவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். விஜய்க்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர், தனது படங்களில் எப்போதும் தான் ஏற்று நடிக்கும் வேடங்களை மிகவும் கவனமுடன் தேர்வு செய்து நடிக்கும் பழக்கம் கொண்டவர். காரணம் இவரின் ரசிகர்கள், இவர் நடிக்கும் படங்களில் அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்து அதனை அப்படியே பின்பற்றி நடப்பவர்கள் என்பதால்தான். இதனாலேயே கதைகளை தேர்வு செய்யும்போது சமூக பொறுப்புடன் தன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் அஜித், 'மங்காத்தா' போன்ற ஒரு சில படங்களை தவிர பெரும்பாலான படங்களில் பாசிட்டிவான ஹீரோவாகவே நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த ‘துணிவு’ ’படத்தின் வெற்றிக்குப் பிறகு, மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துவந்த அஜித் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வந்தார். படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் படப்பிடிப்பு என்ன நிலையில்தான் இருக்கிறது என்ற குழப்பத்தில் அஜித் ரசிகர்கள் இருந்துவந்த நேரத்தில்தான் ‘மார்க் ஆண்டனி’ பட புகழ் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. ‘குட் பேட் அக்லி’ என பெயர் வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தபோதும் சில நெகட்டிவ்வான விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. இது குறித்த முழுமையான தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.
'மார்க் ஆண்டனி' தந்த வாய்ப்பு
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் காட்சிகள்
நடிகர், பாடகர், எழுத்தாளர் என்று பன்முகங்களை கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் 2015-ஆம் ஆண்டு ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜி.வி. பிரகாஷ் குமார், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன், விடிவி கணேஷ் என பலரும் நடித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருந்தார். இன்றைய தலைமுறையினரின் காதல் எப்படியான நிலையில் இருக்கிறது, அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை தெளிவாக அடல்ட் காமெடி ஜானரில் திரையில் காட்டியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கினார். திரைக்கு வந்த அந்த படத்தினை பார்த்த ரசிகர்களும், விமர்சகர்களும் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை என்று அவரவர் பங்குக்கு விமர்சனங்களை அள்ளித் தெளித்தனர். இதனால், படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது மட்டுமின்றி இயக்குநருக்கும், சிம்புவுக்கும் இடையில் நிறைய மனக்கசப்புகளையும் ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துகொள்ளும் அளவுக்கு சூழல் சென்றது. இது ஒரு புறம் இருக்க படத்தின் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பனும் சிம்புவிற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளிக்க, இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. இதற்கு பிறகு, பிரபுதேவா இயக்கத்தில், சல்மான் கானின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘தபாங் 3’ படத்தில் டயலாக் அதாவது வசனகர்த்தாவாக பணியாற்றினார் ஆதிக். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிரபு தேவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து 2023-ஆம் ஆண்டு ‘பஹீரா’ என்றொரு படத்தினை இயக்கினார். சைக்காலஜிக்கல் ரொமான்டிக் திரில்லர் படமாக வெளிவந்த இப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது.
‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் பேருந்தில் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இடம்பெறும் காட்சி
தொடர்ந்து தோல்விப்படங்களாக கொடுத்துவந்த இந்த நேரத்தில்தான் ஆதிக் ரவிச்சந்திரனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மாபெரும் வெற்றியை பதிவு செய்த படமாக வந்து அமைந்தது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம். 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளிவந்த இப்படத்தில் நாயகனாக விஷால், வில்லனாக நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இரு துருவங்களாக நடித்து நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தனர். 1995 கால கட்டங்களில் வாழும் இரண்டு இளைஞர்கள் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்தில் இருக்கும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு 1975-ல் வாழ்ந்த தங்களின் அப்பாக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி, நிகழ்கால வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த முயலும் போட்டிதான் கதைக்களம். டைம் ட்ராவல் பின்னணியில் ஆக்சன் கலந்த மசாலா படமாக வெளிவந்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார்தான் இசையமைத்திருந்தார். விஷால், மார்க் மற்றும் ஆண்டனியாகவும், எஸ்.ஜே.சூர்யா ஜாக்கி பாண்டியன் மற்றும் மதன் பாண்டியனாகவும், இருவரும் இரட்டை வேடங்களில் வந்து நடிப்பில் அதகளம் செய்திருந்தனர். அதிலும் கதையின் நாயகன் விஷால்தான் என்றாலும், படத்தினை முழுமையாக தாங்கி நின்றது என்னவோ எஸ்.ஜே.சூர்யாதான் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. குறிப்பாக சில்க் வரும் காட்சிகளில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும், பின்னனியில் ஒலிக்கும் “அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி” பாடலில் அவர் ஆடும் நடனமும் என்றுமே மறக்க முடியாத காட்சிகளாக அப்படியே ரசிகர்களின் மனதில் பதிந்து போனது. இப்படி ஒவ்வொரு காட்சியையும் ரசனையோடு எடுத்து ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்திருந்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இப்படம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தந்த படமாக அமைந்தது. அதிலும் முதல் முறையாக விஷாலின் கேரியரிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்த பெருமையையும் பெற்று தந்த படமாக அமைந்தது. இந்த வெற்றிதான் அடுத்ததாக தல அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பையும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பெற்றுக்கொடுத்தது.
பச்சை சட்டையில் பளபளக்கும் அஜித்
2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன் போட்டி போட்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததுதான் நடிகர் அஜித்தின் 'துணிவு' திரைப்படம். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்து பணியாற்ற போவதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பினை தொடர்ந்து கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கின. பின்னர் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நேரத்தில், திடீரென இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் அஜர்பைஜான் நாட்டிலேயே தொடங்குவதாகவும் அதற்காக அஜித், த்ரிஷா ஆகியோர் புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகி அஜித்தின் ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஆனால், இன்னொருபுறம் ‘விடாமுயற்சி’ படத்தை தயாரித்த லைகா நிறுவனம் பண பிரச்சினையால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படி ‘விடாமுயற்சி’ படத்தினை பற்றி அவ்வப்போது புது புது தகவல்கள் உலாவர, திடீரென ஒருநாள் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்வதற்காக சென்ற அஜித்தை பரிசோதித்த மருத்துவர்கள், காதில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பதாக சொல்லி அறுவை சிகிச்சை செய்தனர்.
வித்தியாசமான கெட்டப்பில் அஜித் இடம்பெற்றுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இதன் பிறகு உடல்நலம் தேறிய அஜித் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க அவரோ பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றலாவுக்கு புறப்பட, ரசிகர்களோ ‘விடாமுயற்சி’ படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லையே என்று கவலைப்பட ஆரம்பித்தனர். இந்த நிலையில்தான் ஏற்கனவே கூறியிருந்தபடி, அஜித்தின் 63-வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து படப்பிடிப்பை தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அஜித்தின் வீரம் படத்திற்கு பிறகு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தினை, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்திருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19-ஆம் தேதி வெளியாகி அவரின் ரசிகர்களை திருவிழாபோல் கொண்டாடவைத்துள்ளது. இந்த போஸ்டரில் அஜித் பச்சை கலர் சட்டையில் வித்தியாசமான தோற்றங்களில் மூன்று கெட்டப்புகளில் இடம்பெற்றுள்ளார். அதில், ஒரு அஜித் மட்டும் முகம் சுளிக்கும்படியான ஒரு செய்கையை செய்து காண்பித்து இருப்பது சினிமா விமர்சகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், லைகா நிறுவன தரப்பிலிருந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுவிட்டதால் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் மீண்டும் தொடங்கி ஒரே ஷெட்யூலில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றியா? வில்லங்கமா?
நடிகர் அஜித் குமாருடன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
எப்போதுமே ஆதிக் ரவிச்சந்திரன் படங்கள் என்றாலே அதில் விரசமான காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் அதிகமாக இடம்பெற்றிருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதற்கு உதாரணமாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் துவங்கி ‘பஹீரா’ வரை அவர் இயக்கிய படங்களை சொல்லலாம். இதில் விதிவிலக்காக 'மார்க் ஆண்டனி' படம் மட்டும் வில்லங்கம் இல்லாமல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படியான நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் அவர்களை வைத்து ‘குட் பேட் அக்லி’ படத்தினை இயக்க தொடங்கியுள்ளார். இதில் ஒரு fan பாயாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து படத்தை நல்ல படியாக எடுப்பார் என்ற போதிலும் ஆதிக்கின் முந்தைய படத்தில் இடம்பெற்றிருந்த வில்லங்கமான காட்சிகள் போன்று இதிலும் இடம்பெற வாய்ப்பிருக்குமா என்ற கேள்வியும் பலருக்கு எழுந்துள்ளது. காரணம் அண்மையில் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் வைத்துள்ள விரல் செய்கை மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றிருப்பதால்தான். ஏற்கனவே பல படங்களில் பல முன்னணி ஹீரோக்கள் மோசமான வசனங்களையும், இப்படியான செய்கைகளையும் செய்திருக்கிறார்கள் என்றாலும் படத்தில் வரும் காட்சியின் சூழலை பொறுத்து ரசிகர்கள் அதனை எளிதாக கடந்து சென்றிருக்கிறார்கள். இருப்பினும் கடந்த ஆண்டு 'லியோ' படத்தில் நடிகர் விஜய் பேசிய ஒற்றை வசனம் எத்தகைய விமர்சனத்தை சந்தித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
I’m working with the most versatile ⭐️performer ever, who can deliver Good Bad Ugly at the same time❤️Magic of life is, sticking my Star’s poster in my cupboard and placing banners in theatres. And now presenting this first look poster not only as a fan boy, but also as a fan… pic.twitter.com/hIXde5CrcR
— Adhik Ravichandran (@Adhikravi) May 19, 2024
இப்படியான சூழலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பதறவைக்கும் சம்பவத்தை செய்திருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், முழு படத்திலும் அப்படியான விஷயத்தை செய்திருக்க மாட்டார், 'மார்க் ஆண்டனி' போன்ற ஜனரஞ்சகமான படத்தைதான் எடுப்பார் என அஜித் ரசிகர்கள் நம்புகின்றனர். ஏற்கனவே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்த ஆனந்தி, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்த சிம்பு என ஆதிக் இயக்கத்தில் நடித்த பல நடிகர்கள் சில சங்கடத்தை சந்தித்துள்ள நிலையில், அதே நிலை நடிகர் அஜித்துக்கும் வந்துவிடக் கூடாது என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ள இப்படம் அவரின் ரசிகர்கள் மேல் அவர் வைத்துள்ள அன்பு, மரியாதைக்கு பங்கம் விளைவிக்காத வகையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல சினிமா விமர்சகர்களும் கூறிவருகின்றனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் கொண்ட அஜித், இதில் வெற்றி பெறுவாரா இல்லை பல வில்லங்கங்களை சந்திப்பாரா என்பது ஒருபுறம் இருந்தாலும் அஜித் அணிந்துள்ள இந்த புது கலர் சட்டை நிச்சயம் கல்லா கட்டும் என நம்பப்படுகிறது.