சூரிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லட்சுமி! திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை என ஓபன் டாக்!

வாழ்க்கை பற்றியும் தற்போது மிகப்பெரிய தெளிவு ஏற்பட்டிருப்பதால், எது சரி? எது தவறு? என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் தனக்கு ஏற்பட்டிருப்பதாகவும், தனக்கென குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை தான் வைத்திருப்பதால் அதற்குள் தன்னால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவிற்குத்தான் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாக கூறியுள்ளார்.

Update: 2024-12-23 18:30 GMT
Click the Play button to listen to article

திறமை இருந்தால் எந்த துறையிலும் சாதிக்கமுடியும், அதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ஏனெனில் ஆண்கள் கொஞ்சம் வயதான பிறகு நடிக்கவந்தாலும் ஹீரோவாக நடிக்கலாம், வயதாகிவிட்டாலும் ஹீரோவாக தொடர்ந்து நடிக்கமுடியும். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. மிகவும் இளம்வயதில் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தாலும், பெரும்பாலும் 10 வருடங்களுக்குள் கதாநாயகி அந்தஸ்தை இழந்துவிடுவார்கள். குறிப்பாக திருமணமாகிவிட்டாலே அக்கா, அம்மா கதாபாத்திரங்களுக்கு தானாக தள்ளப்பட்டுவிடுவார்கள் என்ற நிலை நீண்டகாலமாக இருந்துவந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் அது மாறியிருக்கிறது. அதற்கு, திரிஷா, நயன்தாரா போன்றோர் முன்னுதாரணங்களாக திகழ்கின்றனர். அந்த வரிசையில் சற்று தாமதமாக திரையுலகில் அறிமுகமாகியிருந்தாலும் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே தனது திறமையால் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மருத்துவ படிப்பு, மாடலிங், நடிகை, தயாரிப்பாளர் என அடுத்தடுத்து முன்னேறி, தற்போது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் கலக்கிவருகிறார். ‘தக் லைஃப்’ படத்திற்காக பிற படங்களில் கமிட்டாகாமல் தவிர்த்துவந்த இவர், தற்போது சூரிக்கு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

வாழ்க்கை குறித்து ஐஸ்வர்யா!

கேரளாவில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா, அங்கேயே எம்பிபிஎஸ் படிப்பும் பயின்று முடித்துள்ளார். மருத்துவத்துறைதான் தன்னுடைய கெரியர் என்று நினைத்திருந்த நேரத்தில் மாடலிங் வாய்ப்பு கிடைத்ததால் அதனை பயன்படுத்தி திரைத்துறையிலும் நுழைந்தார். நடிக்க வருவேன் என்று தான் ஒருபோதும் நினைத்ததேயில்லை என்று எப்போது கூறினாலும் திரையில் இவரை பார்க்கும் யாருக்கும் அப்படி தோன்றவே தோன்றாது. அந்த அளவிற்கு திரையில் ஆத்மார்த்தமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் நடிக்கக்கூடியவர். இவருடைய திறமைக்கான வாய்ப்பு 26வது வயதில்தான் இவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டதால்தான் தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். தற்போது 34 வயதாகும் ஐஸ்வர்யாவுக்கு வயது பற்றி பேசினாலே பயமாக இருக்குமாம். காரணம், சிறுவயதிலிருந்தே பெற்றோர் மிகவும் கட்டுப்பாடுகளுடனும், கண்டிப்புடனும் வளர்த்துள்ளனர். மேலும் தான் மிகவும் சென்சிட்டிவான நபர் என்பதால் தனிப்பட்ட முறையில் தனது மெச்சூரிட்டியை வளர்த்துக்கொள்ள அவருக்கு நீண்டகாலம் எடுத்ததாக பல நேர்காணல்களில் அவரே தெரிவித்திருக்கிறார். அதனால் மனதளவில் முதிர்ச்சியடைய தனக்கு நீண்டகாலம் தேவைப்பட்டதால் அதன்பிறகு வயது குறித்து வெளியில் பேசுவதற்கே ஒருவித பயம் உருவாகிவிட்டதாக கூறியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் தான் இருப்பதற்கும், தான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களுக்குமிடையே பெரும்பாலும் ஒற்றுமை இல்லாவிட்டாலும் அவற்றை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டு நடிப்பதாக கூறும் ஐஸ்வர்யா, தன்னைப்பற்றி பொதுவெளியில் அதிகமாக பகிர்வதை விரும்புவதில்லை. வாழ்க்கை பற்றியும் தற்போது மிகப்பெரிய தெளிவு ஏற்பட்டிருப்பதால், எது சரி? எது தவறு? என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் தனக்கு ஏற்பட்டிருப்பதாகவும், தனக்கென குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை தான் வைத்திருப்பதால் அதற்குள் தன்னால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவிற்குத்தான் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதாக கூறியுள்ளார். மேலும் தான் ஒரு தயாரிப்பாளராகவும் இருப்பதால் கதைகளை தேர்ந்தெடுக்கும்போது கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பாராம். தமிழில் ‘கார்கி’ படத்தை தயாரித்த இவர், அதன்பிறகு மலையாளத்திலும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார்.


‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் அசத்திய ஐஸ்வர்யா

திருமணம் குறித்து ஐஸ்வர்யா!

நடிப்பு, தயாரிப்பு என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்துவைக்க அவருடைய அம்மா பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார். நடிகைக்கான வயது என்று வரையறுக்கப்பட்டுள்ள வயதைத் தாண்டி தான் ஹீரோயினானதால், இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார். 32 வயதுவரை பெற்றோருக்காக திருமணம் செய்துகொள்ளலாம் என்று யோசித்திருந்தாலும் அதன்பிறகு, இனிமேல் அந்த பேச்சே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். ஆனால் அதற்கு முன்பு தன்னுடைய அம்மா, திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் மேட்ரிமோனியலில் பதிவுசெய்த அனுபவத்தை அவரே பகிர்ந்துள்ளார். “அம்மா திருமணம் குறித்து பேசிக்கொண்டே இருந்ததால் மேட்ரிமோனியலில் பதிவுசெய்யுமாறு அவரிடம் கூறினேன். அங்கு என்னுடைய புரொஃபைலை பார்த்த பலரும் அதை போலி என்றே நினைத்தனர். அதனாலேயே என்னிடம் யாரும் அப்ரோச் செய்யவில்லை. 25 வயதுவரை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது என்னுடைய கனவு. அதுவும், குருவாயூரில் வைத்து திருமணம் செய்யவேண்டும் என்று யோசித்திருந்தேன். ஆனால் வயதாக வயதாக திருமணத்தின் மீதான என்னுடைய பார்வை மாறியது. என்னை சுற்றியிருக்கும் திருமணமானவர்களில் பலர் மகிழ்ச்சியாக இல்லை. ஒருசிலர் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எனக்கு இப்போது 34 வயதாகிறது. ஒரு கட்டத்திற்கு பிறகுதான் திருமண வாழ்க்கை குறித்த விழிப்புணர்வும், தெளிவும் எனக்குள் வந்தது” என்று பகிர்ந்திருந்தார்.


அர்ஜுன் தாஸுடன் பகிர்ந்த புகைப்படத்தால் கிளம்பிய வதந்தி

அர்ஜுன் தாஸுடன் காதல்?

பொதுவாகவே தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்களிடம் நல்ல நட்புறவை வளர்த்துக்கொள்ளும் நடிகரான அர்ஜுன் தாஸ், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அர்ஜுனுடன் ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் ஹார்ட்டினும் போட்டிருந்தார். அதற்கு அர்ஜுன் தாஸும் லைக் போட்டிருந்தார். இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. அர்ஜுன் தாஸ் தனது புதுப்பட நடிகைகளுடன் இதுபோன்று போஸ்ட் போடுவார் என்பதால் ஒருவேளை அடுத்த படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்களோ என்றுகூட கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும், மற்றபடி காதல் எதுவும் இல்லை என்றும், தற்போதைக்கு தனக்கு திருமணம் குறித்த எண்ணம் எதுவும் இல்லை என்றும் அர்ஜுன் தாஸ் விளக்கமளித்தார். அதற்கு முன்பே ஐஸ்வர்யாவும், அர்ஜுன் தாஸ் தன்னுடைய நல்ல நண்பர் என்றும், தாங்கள் வெளியிட்ட புகைப்படம் இந்த அளவிற்கு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், தங்களுக்கிடையே எதுவும் இல்லை என்றும், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கமளித்தார். மேலும், அடுத்தடுத்த பேட்டிகளில் திருமணம் மற்றும் காதல் குறித்த தனது பார்வையை வெளிப்படையாக பேசவே இந்த வதந்திக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


சூரிக்கு கதாநாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி

சூரிக்கு ஜோடியாகும் ஐஷு!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ‘தக் லைஃப்’ படத்தில் பிஸியாக இருந்த ஐஸ்வர்யா, அடுத்தடுத்து வந்த 3 பட வாய்ப்புகளை நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. ‘விலங்கு’ வெப் சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜன் இப்படத்தை இயக்குகிறார். ‘மாமன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘விடுதலை’ மற்றும் ‘கருடன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு சூரி ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படம் இது. மலையாளத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்போது தமிழில் சூரியுடன் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார். ‘மாமன்’ திரைப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ‘கட்டா குஸ்தி’யைப் போன்றே இந்த படத்திலும் ஐஸ்வர்யாவை ஒரு துணிச்சலான அதேசமயம், காமெடி கலந்த கதாபாத்திரத்தில் எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்