"ஸ்கிரீன்பிளே"தான் திரைப்படத்தின் ஹீரோ! - தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

ஒரு தயாரிப்பாளராக யோசித்தால், ஒரு படத்திற்கு ஹைப் கொடுப்பது நல்லதல்ல. அதனால்தான் பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தால் ப்ரொமோஷன் செய்வதை நான் விரும்புவதில்லை. அதுவே சிறிய பட்ஜெட் அல்லது அறிமுக நடிகர்களின் படமாக இருக்கும்போது அதற்கு கட்டாயம் ப்ரொமோஷன் தேவைப்படும்

Update: 2024-09-16 18:30 GMT
Click the Play button to listen to article

சினிமாவில் எந்த அளவிற்கு பொழுதுபோக்கு இருக்கிறதோ அதே அளவிற்கு பிசினஸும் இருக்கிறது. ஒரு படத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு பின்னால் ஆயிரக்கணக்கானவர்களின் உழைப்பு இருக்கிறது. சுமார் 6 முதல் ஒன்றிரண்டு வருடங்கள்வரை நடைபெறும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு ப்ரீ ப்ரொடக்‌ஷன், ப்ரொடக்‌ஷன், போஸ்ட் ப்ரொடக்‌ஷனுக்குள் கிராபிக்ஸ், லொகேஷன், நடிகர் நடிகைகளின் சம்பளம், கேமிராக்கள், உணவு, தங்கும் வசதிகள் தொடங்கி, போஸ்டர்கள், ரீலீஸ் வரையிலான ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள், தியேட்டர்களுக்கு விநியோகம்வரை என ஒரு திரைப்பட யூனிட்டிற்கு ஏகப்பட்ட பணம் செலவழிக்கவேண்டி இருக்கும். இவை அனைத்தையும் படத்தை தயாரிக்கும் நிறுவனம் பார்த்துக்கொள்ளும் என்று எளிதில் சொல்லிவிடுவார்கள். ஆனால் இத்தனை செலவுகளையும் செய்து ஒரு படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அதன் லாபமும் நஷ்டமும் தயாரிப்பு நிறுவனத்தை பெருமளவில் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடிப்பு, இயக்கம் போன்றவற்றிற்கு திறமையும், சாமர்த்தியமும் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு திட்டமிட்டு பணத்தை செலவிடுதலுக்கும் திறமை கட்டாயம் தேவை என்கிறார் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி. மிக இளம்வயதிலேயே பெரிய நட்சத்திரங்கள் முதல் அறிமுக நடிகர்கள்வரை என அனைத்து தரப்பு நடிகர்களையும் வைத்து தயாரித்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இவர், தியேட்டர் மற்றும் தயாரிப்பு பிசினஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். பொதுவாக பட தயாரிப்பாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள், பொதுவெளியில் அதிகம் தலைகாட்ட மாட்டார்கள் என்ற ஸ்டீரியோடைப்பை உடைத்து, அனைவராலும் விரும்பப்படுகிற ஒரு தயாரிப்பாளராக வலம்வருகிறார் அர்ச்சனா. குறிப்பாக, ‘லவ் டுடே’ பட ரிலீஸின்போது, வைரல் ப்ரொடியூசர், ட்ரெண்டிங் ப்ரொடியூசர் என சமூக ஊடகங்களில் ட்ரெண்டான இவர், இப்போது ‘கோட்’ திரைப்படத்தின்மூலம் மீண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

அர்ச்சனாவின் பிசினஸ் அறிமுகம்!

2006ஆம் ஆண்டு வெளியான ‘திருட்டுப் பயலே’ திரைப்படத்தை தயாரித்ததன்மூலம் உருவானது ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட். முதல் படம் சுமாராக ஓடினாலும் அடுத்து 2008ஆம் ஆண்டு வெளியான ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ இந்நிறுவனத்திற்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘மதராசப்பட்டினம்’, ‘எங்கேயும் காதல்’, ‘அவன் இவன்’ போன்றவை வெற்றிப்படங்களாக அமைய, இடையிடையே வெளியான ‘மாசிலாமணி’, ‘பலே பாண்டியா’ போன்ற படங்களால் ஈட்டமுடியாத லாபத்தை அவை சமன்செய்தன.


ஏஜிஎஸ் தயாரிப்பில் ஹிட்டடித்த ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ - ‘தனி ஒருவன்’ படக்குழுவுடன் அர்ச்சனா

அதுவரை கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் அவருடைய சகோதர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எனும் முக்கியப் பொறுப்பை ஏற்றார் அர்ச்சனா கல்பாத்தி. சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் வெல்த் மேனேஜ்மென்ட் படித்துமுடித்த கையோடு அப்பாவின் பிசினஸில் இறங்கிய அர்ச்சனா, ‘எங்கேயும் காதல்’ மற்றும் ‘அவன் இவன்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினார். அப்போதே திரைப்படங்கள் எப்படி செயல்படுகின்றன மற்றும் லாபம் ஈட்டாவிட்டாலும் நஷ்டம் ஏற்படாமல் எப்படி பேலன்ஸ் செய்வது என்பது போன்ற நுணுக்கங்களை கற்றுவந்த அர்ச்சனா, அவற்றை தனது அடுத்தடுத்த படங்களான ‘அனேகன்’, ‘தனி ஒருவன்’ மற்றும் ‘கவண்’ போன்ற படங்களில் செயல்படுத்தவும் தொடங்கினார். அந்த படங்களின் வெற்றிக்குப் பிறகு, அர்ச்சனாவிற்கு இயக்குநர் அட்லீயின் நட்பு கிடைத்தது. 2019ஆம் ஆண்டு ஏஜிஎஸ் தயாரிப்பில் ‘பிகில்’ படம் உருவானது. இப்படத்தை இயக்கிய அட்லீ, தயாரிப்பாளர் என்றாலும் பிற தயாரிப்பாளர்களை போல் இல்லாமல் ஒரு படத்தின் தொடக்கம் முதல் ரிலீஸ் வரை படக்குழுவுடனே பயணிக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்தாராம். மேலும் ஒரு படம் என்றால் அதில் எவ்வளவு செலவு ஆகிறது என்று மட்டுமே பார்க்காமல் அது எப்படி எடுக்கப்படுகிறது? என்னென்ன வேலைகள் அங்கு நடக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும் என அர்ச்சனாவிடம் சொல்ல, அதன்பிறகு தங்களுடைய தயாரிப்பில் உருவாகும் எந்த படமாக இருந்தாலும் ஷூட்டிங்கிற்கு சென்று கூடவே இருப்பதை வழக்கமாக வைத்திருக்கும் அர்ச்சனா, இப்போது ‘கோட்’ படத்தில் கிரியேட்டிவ் ப்ரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.


ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம்

ஆண்டாண்டு காலமாக இருக்கும் பல பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவிற்கு ஏஜிஎஸ் நிறுவனம் வளர்ந்ததில் அர்ச்சனாவின் பங்கு அளப்பரியது. தயாரிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்ட ஏஜிஎஸ், அர்ச்சனாவின் தலையீட்டுக்குபின், 2013ஆம் ஆண்டு தியேட்டர் மற்றும் விநியோக பிசினஸ்களிலும் இறங்கியது. ஏஜிஎஸ்ஸின் முதல் தியேட்டர் வில்லிவாக்கத்தில் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஓ.எம்.ஆர் மற்றும் தி.நகரிலும், 2018ஆம் ஆண்டு மதுரவாயலிலும் திறக்கப்பட்டன. இதனால் தயாரிப்பையும் தாண்டி, தியேட்டர் பிசினஸ் நல்ல வருமானம் ஈட்டிக்கொடுத்ததாக சொல்கிறார் அர்ச்சனா. மேலும் தாங்கள் தயாரிக்கும் படங்கள் தவிர, ஏஜிஎஸ் ஒரு விநியோகஸ்த நிறுவனமாகவும் இருப்பதால் ஒரு படம் ஓடுமா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள தங்களுடைய தியேட்டர்களே சோதனைக்கூடங்கள்போல் இருப்பதாகவும் கூறியிருக்கிறார் அவர். எந்த படமாக இருந்தாலும் முதலில் வில்லிவாக்கம் தியேட்டரில் சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அங்குதான் ஏ, பி, சி என அனைத்து தரப்பு மக்களும் படம் பார்க்க வருவதாகவும், அதனால் அங்கு முதல்நாளில் பாக்ஸ் ஆபீஸ் எடுத்துவிட்டால், அந்த படம் நிச்சயம் அனைத்து இடங்களிலும் நன்றாக ஓடும் என்பது அர்ச்சனாவின் கணிப்பாக இருக்கிறது. அதை வைத்து, தங்களுடைய தயாரிப்பாக இருந்தாலும் அல்லது தாங்கள் விநியோகம் செய்யும் படங்களாக இருந்தாலும் அதை எந்த அளவிற்கு லாபம் வைத்து விற்கலாம் என்பதையும் இதன்மூலம் தெரிந்துகொள்வதாக கூறியிருக்கிறார்.


தியேட்டர்களுக்கு ஓடிடி போட்டியல்ல - அர்ச்சனா

கொரோனாவால் முடங்கிய தியேட்டர்கள்

கொரோனா காலத்தில் அனைத்து துறைகளுமே முடங்கிய நிலையில் சினிமா துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் அதிகம். அதற்கு ஏஜிஎஸும் விதிவிலக்கல்ல. ஊரடங்கு சமயத்தில் ஷூட்டிங் இல்லாததால் படங்கள் எடுக்கப்படவில்லை. தியேட்டர்களும் மூடப்பட்டன. இதனால் வருமானம் பூஜ்ஜியமானது. பல நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்தன. பலருக்கு வேலை பறிபோனது. ஆனால் அந்த சமயத்தில் தங்களுடைய நிறுவனத்தை நம்பி வேலைசெய்பவர்களுக்கு சம்பளத்தை குறைக்கக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் அர்ச்சனா. இருப்பினும், வேறு இடத்தில் பணம் வாங்கிய தயாரிப்பாளர்கள், அதற்கான வட்டியை கட்டித்தான் ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த சமயத்தில் ஓடிடி தளங்கள் சூடுபிடித்தன. ஏற்கனவே வெளியான படங்களை எப்படி சாட்டிலைட் உரிமத்துக்கு விற்பனை செய்தார்களோ அதேபோல், ஓடிடி தளங்களுக்கும் விற்பனை செய்தனர். இதனால் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர்களால் சம்பாதிக்க முடிந்தது. அதேசமயம் ஊரடங்கு முடிய முடிய அதுவே தியேட்டர் பிசினஸில் இருப்பவர்களுக்கு பெரும் சவாலான போட்டியாக மாறியது. அந்த சமயத்தில் பல தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் ஓடிடி தளங்களுக்கு படங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் அதனை கண்டுகொள்ளாமல் ஓடிடி பக்கம் கவனம் செலுத்தியபோது, தியேட்டர்களுக்காக குரல் கொடுத்த ஒரே தயாரிப்பாளர் என அனைவராலும் புகழப்பட்டார் அர்ச்சனா. ஒரு படம் எப்படி ஓடுகிறது? என்பதையும் மக்கள் ஒரு படத்தை எந்த அளவிற்கு விரும்புகிறார்கள்? என்பதையும் தியேட்டர்களை வைத்துதான் கணிக்கமுடியும் என்று கூறிய அவர், தியேட்டர்களில் வெளியிடாமல் ஒரு படத்திற்கு போட்ட பணத்தை தயாரிப்பாளரால் எடுக்கவே முடியாது என்றும் பொதுவெளிகளில் பேசத் தொடங்கினார். மேலும் ஓடிடி, தியேட்டர்களுக்கு போட்டியல்ல என்றும், இரண்டும் வெவ்வேறு ரசனை கொண்ட ரசிகர்களுக்கானது என்றும் தெரிவித்தார். இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் அனைவருக்காகவும் குரல்கொடுத்த ஒரு தயாரிப்பாளர் என்பதாலேயே நடிகர்களைப்போலவே அர்ச்சனாவும் அனைவருக்கும் பரிச்சயமான நபராக மாறினார்.


கொரோனாவுக்கு பின் ஏஜிஎஸ்க்கு லாபத்தை ஈட்டிகொடுத்த ‘லவ் டுடே’

கிரியேட்டிவ் ப்ரொடியூசராக...

கொரோனாவிற்கு பின், ஏஜிஎஸுக்கு வெற்றிப்படமாக அமைந்தது 2022ஆம் ஆண்டு வெளியான ‘லவ் டுடே’. பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடித்த இப்படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் செலவைவிட பல மடங்கு வருமானத்தை ஈட்டிக்கொடுத்தது. குறிப்பாக, ஜென்சி தலைமுறையின் காதலை மையப்படுத்திய படம் என்பதால் தமிழ் தவிர, இந்தியா முழுக்கவும் அனைவராலும் விரும்பப்பட்ட படமாக அமைந்தது. அதன்பிறகு, மீண்டும் விஜய்யை வைத்து ‘கோட்’ படத்தை தயாரித்தார் அர்ச்சனா. இந்த இரண்டு படங்களுக்குமே ப்ரொடியூசர் என்பதையும் தாண்டி, தன்னை கிரியேட்டிவ் ப்ரொடியூசர் என்றுதான் அறிமுகப்படுத்திக்கொண்டார். கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோட்’ படத்திற்கு பெரியளவில் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை என்றாலும், படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் தனி ஒருவராகவே ப்ரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டார். ஒரு படத்தை தயாரிக்க ஒத்துக்கொள்ளும் முன்பு, அவர் எப்படி கதையை கேட்பார் என்பதை கூறியிருக்கிறார் அர்ச்சனா. “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான படங்கள் ஆடியன்ஸ்களால் விரும்பப்படுகின்றன. சமீபகாலமாக தெரிந்த கதையாக இருந்தாலும் அதன் ஸ்கிரீன்பிளே நன்றாக இருந்தால் அதை ரசிகர்கள் கொண்டாடுகிறார். என்னை பொருத்தவரை ஸ்கிரீன்பிளே, கதை ஆகியவற்றுக்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுப்பேன். 90% பணம் அப்பாவிடமிருந்துதான் வரும். அவர்தான் தயாரிப்பாளர். அவரிடமிருந்து பணத்தை வாங்கி அதை தினசரி வேலைகளுக்கு ஏற்ப பிரித்து கொடுப்பதுதான் என் வேலையாக இருக்கும். மேலும் பட்ஜெட்டை கணக்கிட்டு எனக்கு தெரிந்த வகையில் குறிப்பிட்ட சீன்கள் மற்றும் ஷாட்களை எப்படி எடுக்கலாம் என இயக்குநர்களிடம் கலந்துரையாடுவேன். ஆனால் அதை அவர்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கமாட்டேன். ஒரு தயாரிப்பாளராக யோசித்தால், ஒரு படத்திற்கு ஹைப் கொடுப்பது நல்லதல்ல. அதனால்தான் பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தால் ப்ரொமோஷன் செய்வதை நான் விரும்புவதில்லை. அதுவே சிறிய பட்ஜெட் அல்லது அறிமுக நடிகர்களின் படமாக இருக்கும்போது அதற்கு கட்டாயம் ப்ரொமோஷன் தேவைப்படும்” என்கிறார்.


நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான அர்ச்சனா கல்பாத்தி

ஏஜிஎஸ் இப்படித்தான் செயல்படுகிறது!

மேலும், தங்களுடைய நிறுவனம் எப்படி கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கிறது என்பதை அவரே பல நேர்காணல்களில் விளக்கியிருக்கிறார். “ஒரு தயாரிப்பு நிறுவனம் பட்ஜெட் திட்டமிடுதலுக்கு எப்போதும் முதன்மை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பொதுவாக நிறைய தயாரிப்பு நிறுவனங்கள் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும்போது விநியோகஸ்தர்களிடம் முன்கூட்டியே படத்தை விற்பனை செய்வதுண்டு. ஆனால் அப்படி செய்தால் குறைந்த விலைக்கு சிலநேரங்களில் விற்க நேரிடும். அதுவே படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட அதிகமாக போய்விட்டால் அது தயாரிப்பு நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் அல்லது படம் வெற்றிபெற்றாலும் ஏற்கனவே குறைந்த விலைக்கு விற்றுவிட்டதால் சரியான லாபத்தை ஈட்டமுடியாது. எனவே படத்தை தயாரிக்க பண பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக நாங்கள் எங்களுடைய படத்தை முன்கூட்டியே விற்பனை செய்யமாட்டோம். ஏஜிஎஸ்ஸை பொருத்தவரை எங்களுடைய சொந்த பணம் அல்லது தேவைப்பட்டால் வங்கிகளில் மட்டும்தான் கடன் வாங்குவோம். அதேபோல் தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு 10% கமிஷன் கிடைக்கும் வகையில்தான் படங்கள் கொடுக்கப்படுகின்றன. அதேபோலத்தான் நாங்களும் ஒரு படத்தை அட்வான்ஸாக விற்பனை செய்யும்போது அதிக தொகைக்கு விற்பதில்லை. ஏனென்றால் அந்த படம் நன்றாக ஓடாவிட்டால், நாங்கள் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். யாரும் வாங்க முன்வரமாட்டார்கள்.


ஏஜிஎஸ் நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பகிர்ந்த அர்ச்சனா

எங்களுக்கும் தியேட்டர்கள்தான் முதன்மை பிசினஸ் என்பதால், பிறருடைய திரைப்படங்களை வாங்கும்போது முதலில் அதை பார்த்து, அந்த படம் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை வந்தபிறகுதான் பிறருக்கு விநியோகம் செய்வோம். அப்படி இல்லாவிட்டால் அதுபோன்ற படங்களை விற்பதே இல்லை. படம் தயாரிப்பது ஒருபுறம் என்றால், ஏஜிஎஸ் நிறுவனத்தின்கீழ் பிறருடைய படங்களை விநியோகம் செய்வதும் எங்களுக்கு முக்கியமான ஒன்று. அதேபோல் சில தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை முடிக்கும் முன்னரே ரிலீஸ் தேதியை தோராயமாக கணித்து அறிவித்துவிட்டு பிறகு மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஏஜிஎஸ் எப்போதும் சொன்ன ரிலீஸ் தேதியை கட்டாயம் பின்பற்றுவோம். மேலும் ஒரு படத்தை தயாரிக்கும்போது ஆடியோ, ஓடிடி மற்றும் சாட்டிலைட் என அனைத்து உரிமங்களையும்கூட பட்ஜெட்டில் சேர்த்துதான் கவனிக்க வேண்டும். படத்திற்கு செலவுசெய்த பணத்தை தியேட்டர்கள்மூலம் எடுக்கவேண்டும் என்பதுதான் எங்களின் குறிக்கோளாக இருக்கும். தியேட்டர் வருமானத்தை மட்டும்தான் லாபம் என கணக்கில் எடுத்துக்கொள்வோம். ஓடிடி, ஆடியோ மற்றும் சாட்டிலைட் போன்றவை இதர வருமானங்களாக மட்டும்தான் இருக்கும். ஏஜிஎஸ்ஸின் ஓடிடி பாட்னராக நெட்ப்ளிக்ஸ் செயல்படுவதால் எங்களுடைய படங்களை தியேட்டர் வெற்றியை பொருத்து பேரம்பேசி அவர்களிடம் விற்பனை செய்துவிடுவோம்” என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்