கமல் குரலில் கேட்ட அந்த ஒரு பாடல் - எமோஷனலான ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யாவிடம் திருமணமாகிவிட்டதா என்று கேட்கப்பட்டதற்கு, கண்டிப்பாக தனது திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்றும், தனது காதலனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் வெளிப்படையாக கூறினாலும், அந்த காதலன் யார்? என்பது பற்றி கூறவில்லை.

Update: 2024-09-30 18:30 GMT
Click the Play button to listen to article

‘ஊதா கலர் ரிப்பன்’ என்று சொன்னதுமே நம் அனைவரின் கண்முன்னும் வந்து நிற்பார் ஸ்ரீதிவ்யா. எப்போதும் முகத்தில் சிரிப்புடன், எளிமையாகவும், மேக்கப் இன்றியும் இருக்கவே ஆசைப்படும் இவரை பிடிக்காதவர்கள் இருக்கமுடியாது. தனது முதல் படத்திலேயே பெயர் சொன்னால் தெரியும் அளவிற்கு ஃபேமஸான இவர் தெலுங்கை பூர்விகமாகக் கொண்டிருந்தாலும், இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம். காரணம், பார்ப்பதற்கு அப்படியே பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதுதான். என்னதான் இங்கு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் இவருக்கு ஏனோ சினிமா வாய்ப்புகள் குறைந்துபோனது. குறிப்பாக, தெலுங்கில் சுத்தமாக மார்க்கெட்டை இழந்த நிலையில், ‘மருது’ படத்திற்கு பிறகு தமிழிலும் ஸ்ரீதிவ்யா காணாமல் போய்விட்டதாக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டார். இதற்கிடையே ஸ்ரீதிவ்யா சைலன்ட்டாக திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார் என்றும் கூறப்பட்ட நிலையில், கம்பேக் கொடுக்கும்விதமாக, இப்போது ‘மெய்யழகன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கார்த்தி - அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ‘96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதில் கார்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யாவை மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சி என கூறிவருகின்றனர் அவருடைய ரசிகர்கள். குறிப்பாக, இந்த கதாபாத்திரம் நிச்சயம் மக்கள் மனதில் நிற்கும் என்று கூறிவருகின்றனர். நடிகை ஸ்ரீதிவ்யாவை அடையாளம் காட்டிய படங்கள் மற்றும் தமிழ் சினிமாவில் அவருடைய கம்பேக் எப்படி இருக்கப் போகிறது? என்பது குறித்து பார்க்கலாம்.

தெலுங்கு டூ தமிழ்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தெலுக்கு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஸ்ரீதிவ்யா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக அறிமுகமாவது சினிமாவில் ஒன்றும் புதிதல்ல; அப்படி 2000-ம் ஆண்டு ‘ஹனுமன் ஜங்ஷன்’ என்ற படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தின் குழந்தைப்பருவ வேடத்தை ஏற்று நடித்தார். அந்த படத்தில் கிடைத்த வரவேற்பால் அதே ஆண்டு வெளியான ‘யுவராஜு’ என்ற படத்திலும் நடித்தார். அதன்பிறகு 2003-ம் ஆண்டு ‘வீடே’ என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், ஸ்ரீதிவ்யா என்ற குழந்தை நட்சத்திரத்தை மக்கள் மனதில் இடம்பிடிக்கச் செய்தது ‘பாரதி’ திரைப்படம். பாரதி என்ற குழந்தையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நந்தி விருதை பெற்றார். எப்போதும் ஒரு வீட்டில் பெற்றோர் நடிப்புத்துறையில் இருந்தால் அவர்கள்மூலம் வாரிசு நடிகர் நடிகைகள் திரைத்துறைக்கு வருவதுண்டு. ஆனால் ஸ்ரீதிவ்யா வீட்டிலோ அதற்கு எதிர்மறையாக நடந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இவர்மூலம், இவருடைய அக்காவான ஸ்ரீ ரம்யாவிற்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. 2008-ம் ஆண்டு அவரும் ‘1940லோ ஒக்க கிராமம்’ என்ற படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இடையே பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்திவந்த ஸ்ரீதிவ்யா, அதன்பிறகு 2010-ம் ஆண்டு ‘மனசார’ என்ற படத்தின்மூலம் ஹீரோயினாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அடுத்தடுத்து ‘பஸ் ஸ்டாப்’ மற்றும் ‘மல்லேலா தீரம் லோ சிரிமல்லே புவ்வு’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், நினைத்த அளவிற்கு வாய்ப்புகள் அங்கு கிடைக்கவில்லை. அதன்பிறகுதான் தமிழில் அறிமுகமாகும் வாய்ப்பு தேடிவந்தது.


‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா

முதல் படமே சூப்பர் ஹிட்!

பொன்ராம் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்லாமல் அறிமுக நாயகியான ஸ்ரீதிவ்யாவிற்கும் சிறப்பான படமாக அமைந்தது. படத்தில் சிவனாண்டி - போஸ் பாண்டி - கோடி ஆகிய கதாபாத்திரங்களில் சத்யராஜும், சிவகார்த்திகேயனும், சூரியும் தங்களது நகைச்சுவையை தாராளமாக அள்ளி கொடுத்திருப்பார்கள். இந்த படத்தில் சிவனாண்டியின் மகள் லதா பாண்டியாக நடித்தார் ஸ்ரீதிவ்யா. படத்தின் ஒவ்வொரு சீனும் தியேட்டர்களில் கைத்தட்டுகளை வாங்கின. குறிப்பாக, ‘ஊதா கலரு ரிப்பன்’, ‘பாக்காத பாக்காத’, ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்’ போன்ற பாடல்கள் இன்றளவும் நிறையப்பேரின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கின்றன. இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து ‘ஜீவா’, ‘வெள்ளைக்கார துரை’, ‘காக்கிச்சட்டை’ என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நல்ல பெயரெடுத்த ஸ்ரீதிவ்யா மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு ‘வாரதி’ மற்றும் ‘ஆராதனா’ போன்ற படங்களில் நடித்தாலும் மார்க்கெட் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் தமிழுக்கே வந்தார். 2015ஆம் ஆண்டு வெளியான ‘ஈட்டி’ படம் சுமாராக ஓடியிருந்தாலும், ‘பெங்களூரு நாட்கள்’, ‘பென்சில்’, ‘மருது’, ‘ரெமோ’ (கேமியோ ரோல்), ‘காஷ்மோரா’, ‘மாவீரன் கிட்டு’ என ஒரே ஆண்டில் 6 படங்களில் நடித்து அசத்தினார்.


ரீமேக் படங்களில் நடிப்பது குறித்து ஸ்ரீதிவ்யா கருத்து

ரீமேக்கால் இழந்த வாய்ப்புகள்

இருப்பினும் ஸ்ரீதிவ்யாவை கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் மட்டும் பார்ப்பதையே ரசிகர்கள் அதிகம் விரும்பியதால் அவற்றில் பல படங்கள் கைகொடுக்கவில்லை. குறிப்பாக, ஒருசில படங்களில் கேமியோ ரோல் மற்றும் ரீமேக் படங்களில் நடித்ததாலேயே மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. ரீமேக் படங்களில் நடிப்பது சற்று கடினமானது என்றும், வேறு மொழியில் ஏற்கனவே வெளியாகி மாஸ் ஹிட்டடித்த படங்களை ரீமேக் செய்யும்போது, அந்த படத்தைவிட ரீமேக் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குநர்கள் கமர்ஷியல் எலமண்டுக்காக தேவையில்லாத ரொமான்ஸ், சண்டைக்காட்சிகள் மற்றும் ஐட்டம் பாடல்களை சேர்ப்பதாக கூறினார். ஆனால் தான் நடித்த படங்களில் தனக்கு அதுபோல் நடந்ததில்லை என்று கூறி சமாளித்தாலும், ‘பெங்களூரு நாட்கள்’ படம் முதலில் மலையாளத்தில் நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘பெங்களூர் டேஸ்’ அளவிற்கு வெற்றிபெறாத ஆதங்கத்தில் அவர் அப்படி பேசுவதாக சமூக ஊடகங்களில் பரவின. அதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தில் நடித்தார். அந்த படம் தோல்வியை தழுவிய நிலையில் மொத்தமாக மார்க்கெட்டை இழந்தார் ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு 5 ஆண்டுகள் சினிமாவை விட்டே விலகியிருந்த இவர், யாரையோ ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும், அதனால்தான் சினிமாவை விட்டு விலகியிருப்பதாகவும் வதந்திகள் பரவிய நிலையில், அவரிடம் திருமணமாகிவிட்டதா என்று கேட்கப்பட்டதற்கு, கண்டிப்பாக தனது திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்றும், தனது காதலனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் வெளிப்படையாக கூறினாலும், அந்த காதலன் யார்? என்பது பற்றி கூறவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு ‘ஜன கன மன’ என்ற மலையாள படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் ‘ரெய்டு’ என்ற தமிழ்ப்படம் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக ‘மெய்யழகன்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.


‘மெய்யழகன்’ திரைப்படத்தில் கார்த்திக்கு மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா 

மார்க்கெட்டை பெற்றுத்தருமா ‘மெய்யழகன்’?

கார்த்தியின் 27வது திரைப்படமான ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. அரவிந்த் சாமி மற்றும் கார்த்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்தில் மீண்டும் அழகிய கிராமத்து மனைவியாக ஸ்ரீதிவ்யாவை பார்ப்பது நன்றாக இருப்பதாக அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீதிவ்யா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை அணுகியபோது, பிஸியாக இருந்ததால் நோ சொல்லிவிட்டாராம். மீண்டும் இயக்குநர் பிரேம்குமார் அவரை தொடர்புகொண்டு கார்த்தியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டாராம். இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்தும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அதிலும் குறிப்பாக, கமல்ஹாசன் குரலில் வந்திருக்கும் பாடலை முதன்முறை கேட்டுவிட்டு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அழுததாகவும், அந்த பாடல் தன்னை எமோஷனலாக பாதித்ததாகவும் கூறினார். குறிப்பாக தனது சிறுவயது ஞாபகம் தனக்கு வந்துவிட்டதாகவும், அந்த வயதில் கிடைத்த உண்மையான அன்பு இப்போது கிடைக்கவில்லை என்றும் கூறி தனது நெகிழ்ச்சி தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தலைகாட்டியிருக்கும் ஸ்ரீதிவ்யா, மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்