விரைவில் தமிழில் அறிமுகமாகிறாரா ‘சென்சேஷனல் நாயகி’ ஸ்ரீலீலா?
இந்த ஆண்டு வெளியான ‘குண்டூர் காரம்’ படத்தில் குர்ச்சி மடதாபெட்டி என்ற பாடலில் மகேஷ்பாபுவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடனமாடி தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த பாடலில் ஸ்ரீலீலாவின் உடை, டான்ஸ் மூவ்ஸ் என அனைத்தையும் அப்படியே காப்பி செய்து ரீல்ஸ் செய்து இணையத்தையே தெறிக்கவிட்டனர் இணையவாசிகள்.
தனது அழகு மற்றும் திறமையால் 2கே கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீலீலா. 22 வயதே ஆன இளம் நடிகையான ஸ்ரீலீலா தெலுங்கில் இதுவரை 10க்கும் குறைவான படங்களே நடித்திருந்தாலும் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். இப்போது வெளியாகிய பெரும்பாலான படங்கள் பான் இந்தியா படமாகவே தயாரிக்கப்படுவதால் அனைத்துமொழி ரசிகர்களையும் நடிகர் நடிகைகள் எளிதில் பெற்றுவிடுகிறார்கள். அப்படி சமீபத்தில் வெளியான தெலுங்குப்படமான ‘குண்டூர் காரம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘குர்ச்சி மடதாபெட்டி’ என்ற பாடலில் தனது அசாத்தியமான நடனத்திறமையை வெளிக்காட்டி இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றார் ஸ்ரீலீலா. இந்த பாடலில் ஸ்ரீலீலாவின் உடை மற்றும் அசைவுகளால் ஈர்க்கப்பட்ட பல இன்ஸ்டாவாசிகள் இன்றளவும் அதேபோல் ரீல்ஸ் செய்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இந்த பாடல் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானதால் அடுத்து தமிழ் திரையுலகிலும் ஸ்ரீலீலாவை இறக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறதாம். யார் இந்த ஸ்ரீலீலா? இளம்வயதில் முன்னணி நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றது எப்படி? என்பது குறித்தெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.
மருத்துவத்தை விட்டுவிட்டு நடிப்பில் இறங்கிய ஸ்ரீலீலா
தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீலீலா 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். ஸ்ரீலீலாவின் அம்மா ஸ்வர்ணலதா ஒரு மகளிர் நல மருத்துவர். அப்பா ஒரு தொழிலதிபர். ஆனால் ஸ்ரீலீலா பிறப்பதற்கு முன்பே அவருடைய அப்பாவை பிரிந்துவிட்டார் ஸ்வர்ணலதா. அதனால் சிறுவயதிலேயே பெங்களூருவுக்கு வந்து செட்டிலாகிவிட்டதால் ஸ்ரீலீலா அங்குதான் வளர்ந்தார். சிறுவயதிலிருந்தே நாட்டியத்தின்மீது ஆர்வம் இருந்ததால், பள்ளிக்காலத்திலேயே பரதநாட்டியம் கற்றிருக்கிறார். தனது தாயாரை போலவே மருத்துவம் பயின்றிருக்கும் ஸ்ரீலீலாவுக்கு, மிகவும் இளம்வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தனது தாயார் ஸ்வர்ணலதாவுடன் ஸ்ரீலீலா - நாட்டிய அரங்கேற்றம் மற்றும் சிறுவயதில் ஸ்ரீலீலா
2017ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே ‘கிஸ்’ என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். 2019ஆம் ஆண்டு இப்படத்தின்மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். முதல் படமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. ஸ்ரீலீலாவின் புகைப்படங்களை பார்த்தவுடன் இயக்குநர் ஏ.பி அர்ஜூனுக்கு அவரை மிகவும் பிடித்துபோய் விட்டதாம். அதனாலேயே தனது படத்தில் அவரை நடிக்கவைத்தாராம். முதல் படத்திலேயே ஸ்ரீலீலாவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் மிகவும் ஸ்டைலாக இருப்பதாகவும், தனது நடிப்பில் தனித்து நிற்பதாகவும் விமர்சகர்கள் அவரை புகழ்ந்தனர். தொடர்ந்து ‘பாரதே’ என்ற மற்றொரு கன்னட படத்தில் நடித்த ஸ்ரீலீலா, அடுத்து ‘பெல்லி சண்டாடி’ என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். இந்த படத்திலேயே ‘மதுரா நகரிலோர்’ பாடலில் அற்புதமாக ஆடி அசத்தினார் ஸ்ரீலீலா. ஆரம்பத்திலேயே தெலுங்கு வாய்ப்புகள் வந்தபோதிலும் தான் வளர்ந்தது எல்லாம் பெங்களூரு என்பதாலும், படிப்பை கருத்தில்கொண்டும் முதலில் கன்னட படங்களில் மட்டும் நடிக்க ஒப்பந்தமானதாக ஸ்ரீலீலா நேர்க்காணலில் தெரிவித்திருந்தார். ‘பெல்லி சண்டாடி’ திரைப்படத்திற்குப் பிறகு, ‘பை டூ லவ்’ மற்றும் ‘ஜேம்ஸ்’ போன்ற கன்னட படங்களில் நடித்த ஸ்ரீலீலா, அடுத்து ‘தமாகா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இப்படத்தில் ரவிதேஜாவுடன் சேர்ந்து ‘பல்சர்’ என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பட்டிதொட்டியெங்கும் இவரை பிரபலமாக்கியது. டான்ஸ் என வந்துவிட்டால் உடலை வில்லாக வளைத்து நளினம் மாறாமல் ஆடும் ஸ்ரீலீலாவின் நடனத்திறமையை ரசிகர்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.
ஸ்ரீலீலா நடிப்பில் ஹிட்டடித்த தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள்
தொடர்ந்து நந்தமுரி பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், விஜய் தேவரகொண்டா மற்றும் மகேஷ் பாபு என தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியானார் ஸ்ரீலீலா. குறிப்பாக, இந்த ஆண்டு வெளியான ‘குண்டூர் காரம்’ படத்தில் குர்ச்சி மடதாபெட்டி என்ற பாடலில் மகேஷ்பாபுவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடனமாடி தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த பாடலில் ஸ்ரீலீலாவின் உடை, டான்ஸ் மூவ்ஸ் என அனைத்தையும் அப்படியே காப்பி செய்து ரீல்ஸ் செய்து இணையத்தையே தெறிக்கவிட்டனர் இணையவாசிகள். அந்த பாடலால் இந்திய அளவில் சென்சேஷனல் நாயகியாக கவனம் பெற்றார். குறிப்பாக, தெலுங்கு திரையுலகிலிருந்து நேஷனல் க்ரஷ்ஷாக உருவெடுத்த ராஷ்மிகாவையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் ஸ்ரீலீலா என பாராட்டப்பட்டார். என்னதான் திரைத்துறையில் அடுத்தடுத்து வெற்றிகளும் வாய்ப்புகளும் கிடைத்தாலும் ஸ்ரீலீலாவின் குடும்ப பிரச்சினை அவ்வப்போது பொதுவெளிகளில் வருவதும் சர்ச்சைக்குள்ளாவதுமாக இருக்கிறது.
நடிகை ஸ்ரீலீலாவின் தந்தையும் தொழிலதிபருமான சுபாக்கர ராவ்
பெற்றோரின் பிரிவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா பிறக்கும் முன்பே அப்பா - அம்மா இருவரும் பிரிந்துவிட்டதால், ஸ்ரீலீலாவின் அப்பா எனக் கூறப்பட்ட சுரபனேனி சுபாக்கர ராவ் 2021ஆம் ஆண்டு ப்ரஸ் மீட் ஒன்றில், ஸ்ரீலீலா தனது மகளே இல்லை என கூறிவிட்டார். தெலுங்கை பூர்வீகமாகக் கொண்ட சுபாக்கர ராவ் பெங்களூருவில் பல்வேறு நிறுவனங்களை வைத்திருக்கிறார். தொழிலதிபரான இவரும், ஸ்ரீலீலாவின் அம்மா ஸ்வர்ணலதாவும் 20 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டனர். இப்போது ஸ்ரீலீலா தனது பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துவிட்டார் சுபாக்கர ராவ். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ஸ்ரீலீலா எனது முன்னாள் மனைவியின் மகள். எங்களுடைய பிரிவுக்கு பிறகுதான் அவர் பிறந்தார். அப்போதிருந்தே அவர் எனக்கு மகள் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பே என்னிடமிருந்து பிரிந்து சென்றுவிட்ட ஸ்வர்ணலதா, அப்போதே தேவையானதை என்னிடமிருந்து பெற்றுவிட்டார். இருந்தும் மீண்டும் அதிக ஜீவனாம்சம் பெற நிறைய நீதிமன்றங்களை அணுகினார். இப்போது என்னுடைய சொத்துக்களில் பங்கு கேட்கவே ஸ்ரீலீலா பொதுவெளிகளில் என்னை அப்பா எனக் கூறிவருகிறார்” என்று தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சைக்கு பிறகு முறைப்படி விவாகரத்து தரக்கோரி, மனைவி ஸ்வர்ணலதா மீது பெங்களூரு காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார் சுபாக்கர ராவ். இந்த சர்ச்சைகளால் ஒருபுறம் பாதிக்கப்பட்டாலும், அதுகுறித்து பொதுவெளிகளில் அதிகம் பேசாத ஸ்ரீலீலா தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலேயே கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, அந்த சர்ச்சைக்குப் பிறகு கன்னட படங்களில் நடிக்கவில்லை.
Dream girl of South Indian Cinema விருதுடன் நடிகை ஸ்ரீலீலா
தமிழில் ஒப்பந்தமாகிறாரா ஸ்ரீலீலா?
தற்போது தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்திவரும் ஸ்ரீலீலாவுக்கு ஒரு படத்திற்கு ஒரு கோடி சம்பளம் வழங்கப்படுகிறதாம். மற்ற திரையுலகுகளுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் ஹீரோயின் என்றால் டோலிவுட்டில் ஒரு கோடி என்பது சாதாரணம்தான். அறிமுக ஹீரோயினாக இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் நாயகி என்பதாலேயே ஸ்ரீலீலாவுக்கு சம்பளம் கொடுப்பதில் தயாரிப்பாளர்களுக்கு வருத்தமில்லை என்கின்றன தெலுங்கு வட்டாரங்கள். முன்னணி ஹீரோக்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கோடி என்பது ஒரு விஷயமே இல்லை என்கின்றன. ‘குர்ச்சி மடதாபெட்டி’ பாடலுக்குப் பிறகு ஸ்ரீலீலாவுக்கு கோலிவுட்டிலிருந்து வரிசையாக வாய்ப்புகள் தேடிப்போகிறதாம். இதற்கிடையே தனியார் தமிழ் ஊடகம் ஸ்ரீலீலாவை தமிழ்நாட்டிற்கே அழைத்து dream girl of South Indian Cinema என விருது வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறது. இன்னும் தமிழில் நடிக்கவே இல்லை என்றாலும் உடைந்த தமிழில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகிறார் ஸ்ரீலீலா. அறிமுக நாயகியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருக்கும் ஸ்ரீலீலா, அடுத்து தமிழில் முன்னணி ஹீரோ ஒருவருடன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமாகிவிட்ட ஸ்ரீலீலா, தமிழில் எந்த ஹீரோவுடன் ஜோடி சேர்வார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். விரைவிலேயே இவருடைய தமிழ்ப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.