‘அன்பே வா’ திரைப்படத்தின்போது காணாமல்போன ஷோபா! - தாயார் பிரேமா!

"தட்டுங்கள் திறக்கப்படும்" படத்தில் நடித்த பிறகு, ஷோபாவின் நடை உடை பாவனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

Update: 2024-09-23 18:30 GMT
Click the Play button to listen to article

(27.07.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

"தட்டுங்கள் திறக்கப்படும்" படத்தில் நடித்த பிறகு, ஷோபாவின் நடை உடை பாவனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பெரிய நடிகை போலவே நடந்துகொண்டாள்! முன்பு, சினிமா பாட்டைக் கேட்டால்தான் ஆடுவாள், அபிநயம் பிடிப்பாள்! இப்பொழுது, அவள் கையில் புத்தகத்தை தூக்குவதே ஒரு “ஸ்டைல்"-ஆக இருந்தது.

நடிப்பு

பாடம் படிக்கும்பொழுது, தலை அங்கும் இங்கும் ஆடும்! சில நேரம் உலாவிக்கொண்டு படிப்பாள்! அப்போது கால் நேரே நடக்காது. அப்படியும் இப்படியுமாக "ஸ்டெப்" போட்டுக்கொண்டே நடப்பாள்! கணக்கு போடும்போது, கைவிரல்களை விரித்து மடக்குவாள். அதுவும் இப்பொழுது நடிப்பு ஆகியது. அவளது ஒவ்வோர் அசைவிலும் நடிப்பு தெரிந்தது. ஷோபா அப்படி செய்யும்பொழுது எல்லாம், ஷோபாவின் அப்பா என் மீது கோபப்படுவார். "சினிமா வேண்டாம் என்றேன். நீ கேட்கவில்லை. இப்பொழுது பார், படிக்கும்பொழுதும், சாப்பிடும்பொழுதும் குழந்தை நடிக்கத் தொடங்கிவிட்டது” என்று கத்துவார். ஆனால், ஷோபா நடிப்பில் ஆர்வம் காட்டினாலும் படிப்பில் சோடை போகவில்லை. நன்றாகப் படித்தாள். அதனால், அவளது கலை ஆர்வத்துக்கு நான் அணை போடவில்லை. இந்த நேரத்தில், ஷோபாவை பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப்போகவும், அழைத்து வரவும் என் சித்தி மகள் தேவியை வீட்டோடு வைத்து இருந்தோம். ஷோபாவுக்கு விளையாட்டுத் தோழியும் தேவிதான்!


நடிப்பில் ஆர்வம் காட்டினாலும் படிப்பில் ஷோபா சோடை போகவில்லை - அம்மா பிரேமா

ஆடை

ஷோபாவுக்கு நகை அணிவது பிடிக்காது. ஆனால், விதவிதமாக உடுத்திக்கொள்வது என்றால் நிரம்பப் பிடிக்கும்!. துணிக் கடைக்கு அவளை அழைத்துச் சென்றால், 3 செட் துணி எடுத்தாக வேண்டும். ஒன்று எடுத்ததும், மம்மி! நீங்கள்... என்பாள். அதாவது, என் சார்பாக ஒன்று எடுத்துக்கொடுக்க வேண்டும். அதன் பிறகு, டாடா! என்பாள். அப்பா தனது சார்பாக ஒரு துணி எடுத்துக்கொடுத்த பிறகுதான் திருப்தி அடைவாள்.

"டுவிங்கிள்” என்ற புதுவகை துணி அப்போது விற்பனைக்கு வந்திருந்தது. பளபள என்று மின்னும்! "டுவிங்கிள்” துணியில் கவுன் தைத்து போட்டுக்கொள்வது என்றால், ஷோபாவுக்கு நிரம்பப் பிடிக்கும். கோவிந்தன் என்ற தையல்காரர் அப்போது எங்களுக்கு துணி தைத்து கொடுத்துக்கொண்டு இருந்தார். அவரை "ஜி ஜி அங்கிள்" என்று ஷோபா அழைப்பாள். அவள் விருப்பப்படி எல்லாம் அவர் துணி தைத்துக் கொடுப்பார். அவள் கேட்டாள் என்பதற்காக, இரண்டு கவுனில் “பை” வைத்து தைத்துக் கொடுத்துவிட்டார்.

அதில் இருந்து வெளியே எங்கே சென்றாலும், அந்தக் கவுனைத்தான் போட வேண்டும் என்று அடம்பிடிப்பாள், ஷோபா. அதோடு வெளியே அழைத்துப் போனால் பைக்குள் ஏதாவது வாங்கிப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்! இதற்காக, ஒருநாள் வெளியே புறப்படுவதற்கு முன், அந்த இரண்டு கவுனையும் எடுத்து, அழுக்குக் கூடைக்குள் மறைத்து வைத்தேன். ஆனால், அந்த கவுன் போட்டால்தான் வருவேன் என்று ஜட்டியோடு அடம் பிடித்து, உட்கார்ந்துவிட்டாள் ஷோபா. கடைசியில், கூடைக்குள் கசக்கிப் போட்ட கவுனை எடுத்து, அவளுக்கு அணிவித்து அழைத்துப் போனேன். அதில் இருந்து, அலமாரியில் கவுனை காணோம் என்றால், அவளே கூடைக்குள் தேடி எடுத்துவிடுவாள்.


ஷோபாவின் ஒவ்வோர் அசைவிலும் நடிப்பு தெரிந்தது - தாயார் பிரேமா

வீடு மாற்றம்

இதற்கு இடையில், நாங்கள் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருந்து, நுங்கம்பாக்கம் குமரப்ப முதலி தெருவில் உள்ள வக்கீல் கமலக்கண்ணன் வீட்டுக்கு குடிபோனோம். அப்போது, ஒரு விடுமுறையில், என் கணவரின் முதல் மனைவியின் குழந்தைகள் கோவையில் இருந்து வந்து இருந்தார்கள். அந்த நேரம், எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி நடித்த “அன்பே வா" படம் கிருஷ்ணவேனி தியேட்டரில் நடந்து கொண்டு இருந்தது. குழந்தைகள், படம் பார்க்க வேண்டும் என்றார்கள். திடீர் என்று, எல்லோரும் “அன்பே வா” படத்துக்குப் புறப்பட்டோம். எங்களோடு வக்கீல் கமலக்கண்ணன், அவருடைய தம்பி ஆகியோரும் வந்தார்கள். படம் தொடங்க சிறிது நேரமே இருந்தது!.

அவசரமாக பஸ் பிடித்தோம்! பஸ்ஸில் ஷோபாவை, என் கணவரின் முதல் மனைவியின் மூத்த மகன் ராஜன் வைத்து இருந்தான்! பஸ் கிருஷ்ணவேனி தியேட்டர் நிறுத்தத்தில் நின்றதும், எல்லோரும் அவசரமாக இறங்கினோம். டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதற்காக, நான் முதலில் இறங்கி ஓடினேன். நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்தபோது "டைட்டில்" ஓடிக்கொண்டு இருந்தது! எல்லோரையும் வரிசையாக இருக்கையில் அமர்த்திய பிறகுதான் ஷோபாவின் நினைவு வந்தது!. “ஷோபாவை எங்கே?” என்று ராஜனிடம் கேட்டேன்! "இறங்கி வந்தாளே" என்று ராஜன் சொன்னான். மற்றவர்கள் விழித்தார்கள். நானும், வக்கீல் கமலக்கண்ணனும் எழுந்து, வெளியே ஓடி வந்தோம்! ஷோபா, இறங்காமல், பஸ்ஸிலேயே சென்றுவிட்டாளோ! படம் பார்க்கும் அவசரத்தில், ஒரு நிமிடம் மகளை மறந்துவிட்டேனே! எனக்கு தலை சுற்றியது!

(இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் தொடரும்)

Tags:    

மேலும் செய்திகள்