எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த ஷோபா! - அம்மா பிரேமா

நான் (பிரேமா) பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சிங்கப்பூரில்தான். எனக்கு பத்து வயது நடக்கும் பொழுது, எங்கள் பூர்வீக ஊரான பாலக்காடு அருகே உள்ள ஆலத்தூரில் குடியேறினோம்.

Update:2024-11-05 00:00 IST
Click the Play button to listen to article

(14.09.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

நான் (பிரேமா) பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சிங்கப்பூரில்தான். எனக்கு பத்து வயது நடக்கும் பொழுது, எங்கள் பூர்வீக ஊரான பாலக்காடு அருகே உள்ள ஆலத்தூரில் குடியேறினோம். பதினேழு வயது நடக்கும் பொழுது நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். இதுவரை ஏறக்குறைய 200 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்டேன். ஆனால், எந்தப் படத்திலும் என் நடிப்பு “ஓகோ” என்று அமைந்தது இல்லை. நடிப்புக்காக பரிசு பெற்றதும் இல்லை. "ஏதோ நடிக்கிறாள்” என்று சொல்லும்படிதான் எனது நடிப்பு இருந்தது. ஷோபா நடித்து காட்டினாள் துன்பக் காட்சியில் நடிப்பது என்றால், மூக்கை விம்மி புடைக்கச் செய்வேன். அழும் காட்சியில் வாய் பெரிதாக விரிந்து விடும்.

எனது இந்த நடிப்பை ஷோபா மிகவும் உன்னிப்பாக கவனித்திருக்கிறாள். அவளுக்கு சகிக்கவில்லை போலும். ஒருநாள், அப்படி நான் நடித்துக் கொண்டு இருந்தபோது, "என்ன மம்மி, நடிக்கிறீங்க! இப்படியா மூக்கை விரிப்பது? வாயை இப்படி பிளக்கிறீர்களே! நன்றாகவே இல்லை" என்று பட் என்று கூறினாள். அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று, செய்தும் காட்டினாள். எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து நான் விடுபடும் முன், அருகே நின்ற டைரக்டர், "ஷோபா நடிப்பதுதான் சரி, நீங்கள் அப்படியே நடியுங்கள்" என்று என்னிடம் சொன்னார்.


ஷோபாவின் தாயார் பிரேமா 

எனக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை. "இப்பொழுது எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்” என்று, ஷோபா செய்து காட்டியபடியே 'நான் நடித்துக் காட்டினேன்'. "வெரிகுட்! இப்படித்தான் நடிக்க வேண்டும்" என்று டைரக்டர் என்னை பாராட்டினார்.

கேலி

அதுமுதல், ஷோபா நடிக்கும் படத்தில், அவளோடு சேர்ந்து நடிப்பது என்றால் நான் மிகவும் யோசிப்பேன். சரியாக நடித்து, படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் நிம்மதி ஏற்படும். வெளிப்புற படப்பிடிப்பின்போது நடக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை, ஷோபா அதோடு விடமாட்டாள். வீட்டுக்கு வந்ததும் அவள் அப்பாவிடம் சொல்லி சிரிப்பாள். "டாடா! மம்மிக்கு நடிப்பு வரவில்லை. நான்தான் சொல்லிக் கொடுத்தேன்” என்று பெருமை பேசுவாள். மகளோடு சேர்ந்து, அவரும் சிரிப்பார்.

பரிசு

எனது சினிமா வாழ்க்கையில் நான் வாங்கியது ஒரே ஒரு "கேடயம்" தான். அதுவும் நடிப்புக்காக கிடைத்தது இல்லை. நான் நடித்த "புனர் ஜென்மம்" என்ற படம் நூறு நாள் ஓடியது. அதற்காக அளித்த கேடயம்தான் அது. அந்தக் கேடயத்தை வாங்கப் போவதற்கு, நான் மிகவும் அலங்காரமாக உடுத்தினேன். அதையும் கேலி செய்தாள் ஷோபா. "டாடா! நன்றாக நடித்ததற்காகவா மம்மிக்கு பரிசு கொடுக்கப்போறாங்க? நூறு நாள் படம் ஓடியதுக்கு கேடயம் வழங்கப் போறாங்களாம். அதை வாங்கப் போவதற்கு "ஸ்டைலை" பார்த்தீர்களா?" என்று அவள் அப்பாவிடம் கூற, அவர் மகளுக்கு தாளம் போட, ஒரே கேலியும் சிரிப்புமாக இருந்தது. நான் அவர்களது கேலியை சட்டை செய்யவில்லை. எனது எண்ணம் எல்லாம் விழா மீதுதான் இருந்தது. கேடயத்தை வாங்கி வந்து அலமாரியில் வைத்த பிறகுதான், எனக்கு நிம்மதி ஏற்பட்டது.


அம்மா பிரேமாவுக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்த ஷோபா

ஷோபாவின் கேடயம்

ஏற்கனவே, அலமாரியில் ஒரு கேடயம் இருந்தது. அது, "சிந்தூரச் செப்பு" என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஷோபாவுக்கு கேரள அரசு வழங்கிய கேடயம். நான், ஷோபாவின் கேடயத்தை எடுத்து சற்று பின்னால் வைத்துவிட்டு, என் கேடயத்தை "பளிச்" என்று தெரியும்படி முன்னால் வைத்தேன். "மம்மிக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லை. யாராவது படம் நூறு நாள் ஓடியதற்காக கிடைத்த கேடயத்தை கொண்டு போய் முன்னால் வைப்பார்களா? பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்" என்று ஷோபா, அப்பாவிடம் கூறினாள். அவளது கேலியை தாங்கமுடியாமல் ஒருநாள் எனது கேடயத்தை எடுத்து பீரோவுக்குள் வைத்து பூட்டிவிட்டேன். "நல்லதாகப் போச்சு. இனிமேல் யாரும் என்னை கேலி செய்யமாட்டார்கள்" என்று, அவளது கேடயத்தை எடுத்து முன்னுக்கு வைத்தாள், ஷோபா. ஷோபாவின் இது போன்ற கேலி விளையாட்டுகள், வீட்டில் அடிக்கடி நடக்கும். அதற்காக நான் கோபப்படுவது இல்லை. அவளைக் கண்டிப்பதும் இல்லை. அவள் கேலி பேசி விளையாட அப்போது வீட்டில் என்னைத் தவிர வேறு யாரும் இல்லையே! அவளுக்கு தோழியும் நான் தானே! குறும்பு விளையாட்டுகளை அவள் என்னோடுதானே வைத்துக்கொள்ள வேண்டும். என் ஒரே மகளின் கேலி விளையாட்டுக்கு மட்டும் அல்ல; ஆசைகளுக்கும் நாங்கள் குறுக்கே நின்றது இல்லை!

சூழ்ச்சி


துரோகத்தின் சூழ்ச்சிக்கு பலியான ஷோபா 

பின்னால், எங்கள் குடும்பத்தோடு உறவாடி, என் மகளை என்னிடம் இருந்து பிரிக்க சூழ்ச்சி நடந்தது. அந்த துரோகத்தை நாங்கள் புரிந்துகொண்டு, விலகமுயன்றோம். ஆனால், அதை புரிந்துகொள்ளாத ஷோபா, தனக்கே உரிய குழந்தை உள்ளத்துடன் பேசினாள்; பழகினாள். துரோகத்தின் சூழ்ச்சிக்கு அவள் பலியாகி விடுவாளோ என்று நாங்கள் பயந்தோம். அப்போது கூட "நீ பேசாதே; பழகாதே" என்று அவளை நாங்கள் கடுமையாக கண்டிக்கவில்லை. அப்படி செய்தால், மகளின் மனம் புண்படுமே என்று சாடை மாடையாக எடுத்துச் சொன்னோம். அவள் புரிந்து கொள்ளவில்லை. துரோகம் அவளை பலிகொண்டது. அதனாலேயே, இன்று என் மகளை பறிகொடுத்துவிட்டு நிற்கிறேன். ஷோபா சின்ன வயதில், நீச்சல் பழக வேண்டும் என்றாள்.

உடனே, சென்னை உட்லண்ஸ் ஓட்டலில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்தில் நீச்சல் பழக ஏற்பாடு செய்தோம். ஷோபாவின் அப்பா, தினமும் காலையில் அவளை நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போவார். சிறுவர் நீச்சல் குளத்தில் பயிற்சி முடிந்த பிறகு தான், பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும். ஷோபா, சிறுவர் பயிற்சியை முடித்து, முதல் தடவையாக பெரிய நீச்சல் குளத்தில் இறங்கினாள். தண்ணீரில் மூழ்கிய ஷோபா மேலே வரவில்லை. நாங்கள் பதறிப்போனோம். உடனே நீச்சல் குள மாஸ்டர், குளத்துக்குள் “குபீர்” என்று பாய்ந்து, ஷோபாவை மேலே தூக்கி வந்தார். அதைத் தொடர்ந்து, இன்னொரு பெரிய விபத்தில் ஷோபா சிக்கினாள். அதை அவளுக்கு ஏற்பட்ட ஒரு கண்டம் என்றே சொல்ல வேண்டும்.

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்….

Tags:    

மேலும் செய்திகள்