“ஷோபாவும் நானும் திருமணம் செய்து கொண்டோம்” - நிருபர்களிடம் கூறிய பாலுமகேந்திரா!
பாலுவை பலவந்தமாக விரட்ட வேண்டும் என்று, நாங்கள் ஒரு போதும் எண்ணியது இல்லை. அவர் விவரம் தெரிந்த கலைஞர். சொல்லுவதைக் கேட்டு, அல்லது நிலைமையைப் புரிந்துகொண்டு தானாக விலகிக் கொள்வார் என்று எதிர்பார்த்தோம்.
(01.03.1981 மற்றும் 08.03.1981 ஆகிய தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
பாலுவை பலவந்தமாக விரட்ட வேண்டும் என்று, நாங்கள் ஒரு போதும் எண்ணியது இல்லை. அவர் விவரம் தெரிந்த கலைஞர். சொல்லுவதைக் கேட்டு, அல்லது நிலைமையைப் புரிந்துகொண்டு தானாக விலகிக் கொள்வார் என்று எதிர்பார்த்தோம். குடும்பமாகப் பழகி விட்டு, தெருச் சண்டை போட்டால், நாலுபேர் நாலுவிதமாகப் பேசுவார்கள் என்று நாங்கள் எண்ணியதும் அதற்கு ஒரு காரணம்! ஏனென்றால், நாங்கள் பாலுவை வெறுத்த போதும், அகிலா வீட்டுக்கு வந்துகொண்டுதான் இருந்தாள்! அதனால், சண்டை என்று போடாமல், நயமாக எடுத்துச்சொல்லி, பாலுவை திருத்த முயன்றோம். ஆனால், நாங்கள் சொன்னவற்றை பாலு காதில் போட்டுக்கொள்ளவில்லை.
கள்ளிக்கோட்டை "கல்பகா" லாட்ஜியில் வைத்து, "இனிமேல் இங்கே வராதீர்கள்" என்று ஷோபா அப்பா சொல்லியும், பாலு, ஷோபாவோடு உள்ளே வந்தார். பாலு படப்பிடிப்பு நடந்த இடத்துக்குப் போகவில்லை. லாட்ஜ் வாசலில் நின்று இருக்கிறார். ஷோபா காரில் இருந்து இறங்கவும், வழக்கமாக நாலுபேர் முன்னிலையில் செய்வது போல, அவள் தோளில் கை போட்டுக் கொண்டு அறைக்கு வந்தார். ஷோபாவின் அப்பாவுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
ஒரே பேச்சு
ஷோபா வேகவேகமாக வேறு ஆடை அணிந்துகொண்டு சாப்பிட்டு முடித்தாள். அதுவரை பாலு சோபாவில் உட்கார்ந்து இருந்தார். பிறகு ஷோபாவும் சென்று, பாலுக்கு ஓரமாகக் கிடந்த மற்றொரு சோபாவில் அமர்ந்து, அலுப்போடு சாய்ந்தாள். சிறிது நேரம் பாலுவோடு பேசினாள். அவளுக்கு தூக்கம் வந்தது. கொட்டாவி விட்டுக்கொண்டே இருந்தாள். அதனால், "ஷோபா! நீ போய்ப் படுத்துத் தூங்கு. காலையில் படப்பிடிப்புக்குப் போக வேண்டும்" என்று அவள் அப்பா கூறினார். ஷோபா, "சரி அங்கிள்! நான் படுக்கப் போகிறேன்" என்று எழப்போவாள்! பாலு, அப்போதுதான் சீரியஸாக எதாவது கேட்பார். உடனே, அவள் உட்கார்ந்துவிடுவாள்.
விழிகளில் பேசும் நடிகை ஷோபா
இரவு மணி 3
நேரம் விடியற்காலை மூன்று மணி ஆகியது. அப்போதும் பாலு எழுந்திரிக்கவில்லை. ஷோபா அரைத்தூக்கமாக சோபாவில் கிடந்தாள். மகளுக்காக, அவரும் (ஷோபா அப்பா) தூங்காமல் இருந்து இருக்கிறார்! அதற்குமேல், ஷோபா அப்பாவுக்கு பொறுமை இல்லை. "பாலு! உங்களுக்குத் தான் வேலை இல்லை. ஷோபா காலையில் படப்பிடிப்புக்குப் போக வேண்டும். நீங்கள் எழுந்து போங்கள். அவள் தூக்கத்தைக் கெடுக்காதீர்கள்" என்று கொஞ்சம் கண்டிப்பாகவே சொன்னார்! அதை பாலு சட்டை செய்யவில்லை. "அங்கிள்! நான் தூங்கப் போகிறேன்" என்று ஷோபா எழுந்தாள் . உடனே பாலு, கடுமையாக ஷோபாவைப் பார்த்தார். அவள் பயந்தவள் போல உட்கார்ந்துவிட்டாள்!
நீங்கள் யார்?
ஷோபா அப்பாவுக்கு கோபம் வந்தது. “பாலு! இனிமேலும் நீங்கள் இங்கே இருப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று சொன்னார். “நீங்கள் யார் என்னை அனுமதிப்பதற்கு?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் பாலு!. “நான் ஷோபாவுக்கு அப்பா!” என்று பதில் அளித்தார், அவர். அதன்பிறகும், பாலு எழுந்து போகவில்லை.
கெஞ்சல்
ஷோபா அப்பாவுக்கு அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. தன்மானத்தை விட்டு பாலுவின் கையைப் பிடித்து, "பாலு! ஷோபா பச்சைக் குழந்தை. கள்ளங்கபடம் தெரியாதவள். என்னை நம்பி வந்த அவள் தாய்க்கு நான் கொடுத்த சொத்தும் செல்வமும் ஷோபா மட்டும்தான். அந்தத் தாயிடம் இருந்து மகளை பிரித்துவிடாதே! நீ எதையோ செய்து, என் மகளை எங்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்துக்கொண்டு இருக்கிறாய். அவளும் உன்னை யோக்கியன் என்று நம்பிக்கொண்டு இருக்கிறாள். தயவுசெய்து அவளை கெடுத்துவிடாதே! ஷோபாவை அவள் தாயிடமே திரும்பக் கொடுத்து விடு" என்று கெஞ்சினார்!
கோபமான காட்சி ஒன்றில் நடிகை ஷோபா
பாலு கொஞ்சமும் இரக்கப்படவில்லை. ''எனக்கு ஷோபா மீது ஏற்பட்டுள்ள உறவை பிரிக்க முடியாது" என்று குனிந்துகொண்டு சொன்னார். "அவளை மகள், மகள் என்று ஊரெல்லாம் சொன்னாய். எனக்கு துபாய்க்கு கடிதம் போட்டாய். நீங்கள் ஒருவராவது நான் ஷோபா மீது வைத்திருக்கும் உண்மையான பாசத்தை புரிந்து கொண்டீர்களே. அது போதும்” என்று எல்லாம் எழுதினாயே! என்று அவர் சொன்னார்.
இரத்த உறவா?
ஷோபா எனக்கு இரத்த உறவு மகளா? என்று மிகவும் சாதாரணமாகக் கேட்டார், பாலு. "இதே வார்த்தையை உன் குடும்பத்தில் பழகி, உன் முன்னேயே நான் சொல்லியிருந்தால் உனக்கு எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தாயா?” என்று ஷோபா அப்பா திருப்பிக் கேட்டார். "அவங்க விருப்பப்பட்டால், எனக்கு அது பற்றி கவலை இல்லை” என்றார் பாலு.
"ஆனால், நான் அப்படி செய்யமாட்டேன். என் உடம்பில் நல்ல இரத்தம் ஓடுகிறது என்று சூடாகச் சொல்லிவிட்டு, நீ இப்படி செய்வதைவிட, உன்னை ஒரு யோக்கியன் என்று நம்பிப் பழகினார்களே, அவர்கள் எல்லோருக்கும் விஷத்தை கொடுத்து இருக்கலாம்" என்று சொன்னார். "நீங்கள் எப்படி காவல் இருந்தாலும், என்னை ஷோபாவிடம் இருந்து பிரிக்க முடியாது" என்றார், பாலு. அதுவரை சோபாவில் சாய்ந்து தூங்கிக்கொண்டு இருந்த ஷோபா, அப்போது கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்தாள்.
ஷோபா எழுந்ததும், "அங்கிள்! நீங்கள் இன்னும் எழுந்து போக வில்லையா?” என்று கேட்டாள். "ஏன், நான் போக வேண்டுமா? என்று கோபமாகக் கேட்டார், பாலு. எனக்கென்ன? இங்கேயே இருங்கள். நான் தூங்குகிறேன்" என்று மீண்டும் சோபாவில் படுத்தாள், ஷோபா. பாலுவின், பிடிவாதத்தால், ஒழுங்கான தூக்கம் இல்லாமல் அன்றைய இரவு (ஜனவரி முதல் தேதி) கழிந்தது. ஷோபா அதிகாலை 5 மணிக்கு எழுந்து படப்பிடிப்புக்குப் புறப்பட்டாள். அதன்பிறகுதான், பாலு எழுந்து போனார். இதுபோல்தான், சென்னையில் வைத்தும் பாலு பலமுறை நடந்து கொண்டார். ஒருமுறை, சிங்கப்பூரில் இருந்து, என் அக்காள் (ஷோபாவின் பெரியம்மா) குடும்பத்தோடு வந்து இருந்தாள். வேறு சில நண்பர்களும் வந்து இருந்தார்கள்.
ஷோபா அப்பாவிடம் தர்க்கம் செய்த பாலுமகேந்திரா
அவர்கள் எல்லோரும் ஷோபாவை சின்ன வயதில் பார்த்தது! அதனால், ஆசையோடு வந்து இருந்தார்கள். அந்த நாட்களிலும், பாலு வீட்டுக்கு வந்து, ஷோபாவை மற்றவர்களிடம் விடாமல், பிடித்து வைத்து பேசிக்கொண்டு இருந்தார். எங்களுக்கு ஒரே ஆத்திரம். பாலுவை வெளியேற்ற என் தம்பி ஜோதி மட்டும் போதும். ஆனால், வந்த இடத்தில் சண்டை போட்டு, அதனால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, நான் ஜோதியை அறைக்குள் பூட்டி வைத்து இருந்தேன்.
பாலு புத்தி
ஒருநாள் நான் (தாயார் பிரேமா) பாலுவின் வீட்டுக்குச் சென்று, "பாலு! உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள், அகிலா இருக்கிறாள். அவள் தங்கை நளினி இருக்கிறாள். என் வீட்டிலும் ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து, அகிலாவிடமோ அல்லது நளினியிடமோ இரவு முழுவதும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?” என்று கோபமாக கேட்டேன். பாலு உடனே, "அதற்கு அவர்கள் (அகிலா, நளினி) தயார் என்றால், எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று பதில் கூறினார். அப்போதுதான், பாலுவின் புத்தி முழுமையாகப் புரிந்தது.
குறி
அதுவரை பணத்துக்காகத்தான் பாலு, ஷோபாவை எங்களிடம் இருந்து பிரிக்க முயலுகிறார் என்று நாங்கள் நினைத்து இருந்தோம். ஏனென்றால், அப்போது பாலு அடிக்கடி ஷோபாவிடம், "நீ கஷ்டப்பட்டு உழைக்கிறாய். வீட்டில் உள்ளவர்கள் இரக்கம் இல்லாமல் இருந்து தின்னுகிறார்கள்" என்று சொல்லி வந்ததாக ஷோபாவே எங்களிடம் ஒருநாள் தெரிவித்தாள். அதன் பிறகு, "ஷோபா! நீ மேஜர் ஆகிவிட்டாய். இனிமேல், நீ உன் இஷ்டப்படி வாழலாம். எங்கும் போகலாம். உன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்கலாம்” என்று பாலு அடிக்கடி கூறத் தொடங்கினார்.
அதனால், பாலுவின் குறி, ஷோபா சம்பாதிக்கும் பணம் மீதுதான் என்று நாங்கள் எண்ணினோம்!. நான் பாலு வீட்டுக்குச் சென்று பேசிய பிறகுதான், அவரிடம் கெட்ட எண்ணம் இருப்பதும் தெரிந்தது. அவர், "மகள் மகள்" என்று சொன்னதற்கு நல்ல அர்த்தம் எடுத்து, அவரை உயர்ந்த மனிதனாக நினைத்து ஒரே குடும்பமாகப் பழகியதை நினைத்து நாங்கள் அவமானப்பட்டோம்.! "துஷ்டனைக் கண்டால் தூர விலகி நில்" என்பார்கள். இதை இப்பொழுது நினைத்துக்கொள்கிறேன். பாலு ஒதுங்கவில்லை. நாங்கள் ஒதுங்க நினைத்தாலும் அவர் விடவில்லை. ஜனவரி முதல் தேதி, "கல்பகா" லாட்ஜில் வைத்து, ஷோபா அப்பாவோடு தர்க்கம் செய்த பிறகு, பாலுவின் நோக்கம் எங்களுக்கு முழுமையாகப் புரிந்தது! எப்படியோ, குழந்தையை பாம்பு சுற்றிக் கொண்டது. பாம்பை அடித்து விரட்ட வேண்டும். அப்படி விரட்டும்பொழுது, அடி குழந்தை மீதும் பட்டுவிடக் கூடாது! குழந்தையையும் பாம்பு கொட்டிவிடக் கூடாது. இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.
இருமாறுபட்ட தோற்றங்களில் நடிகை ஷோபா
இதற்கு இடையில், ஜனவரி 1, 2 தேதிகளில் "கல்பகா" லாட்ஜியில் இருந்த பாலுவை திடீரென்று காணவில்லை. பாலு ஒதுங்கிப்போய் விட்டார் என்றே ஷோபா அப்பா எண்ணியிருக்கிறார். ஆனால், ஒரு பத்து நாளில், பாலு மீண்டும் லாட்ஜுக்கு வந்தார். சிறிது நேரம் ஷோபாவிடம் பேசிவிட்டு போய் விட்டார். ஷோபாவுக்கு ஜனவரி 20-ந் தேதி வரை, 'சாலினி எண்ட கூட்டுக்காரி” என்ற படத்துக்கு ''கால்ஷீட்டு" கொடுத்து இருந்தேன். ஆனால் படபிடிப்பு முடியாததால், கூடுதலாக ஒரு நாள் கேட்டார்கள். அதனால் கூடுதலாக ஒருநாள் நடித்து கொடுத்துவிட்டு, ஜனவரி 21ம் தேதி மங்களூர் ரயிலில் புறப்பட்டு, 22-ந் தேதி காலையில் சென்னை வந்து சேருவதாக இருந்தாள். இதற்கு இடையில் அகிலாவிடம், "பெங்களூர் படவிழாவுக்குச் சென்று விட்டு, 20-ந் தேதி திரும்புவேன்" (அவர் கள்ளிக்கோட்டையில் அலைந்தது வேறு விஷயம்) என்று சொல்லிவிட்டுப் போன பாலு, 19-ந் தேதியே திரும்பினார்.
கோவிலை சுற்றினோம்!
அப்போது பாலு வீட்டில் இல்லை. "பிரேமா! அவர் 20-ந் தேதி வருகிறார். அதற்குள் கருமாரி அம்மன் கோவில், மாங்காட்டு அம்மன் கோவில், ஆஞ்சனேயர் கோவிலுக்கு எல்லாம் போக வேண்டும்" என்று அகிலா என்னிடம் கேட்டு இருந்தாள். தனியே கோவில்களுக்குப் போய் பழக்கம் கிடையாது என்றும் கூறினாள். அதனால் விரும்பி கேட்கிறாளே என்று நான் அழைத்துப் போனேன். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது! நாங்கள் பாலு மீது கண்டிப்பாக இருந்ததால், "பிரேமா வீடு கெட்ட வீடு. நீ அங்கே போகக் கூடாது" என்று கொஞ்ச நாளாக அகிலாவை பாலு தடுத்து இருந்தார். அதனால், பாலு இல்லாத போது மட்டும் அகிலா, வந்து போய்க்கொண்டு இருந்தாள். ”அவர் இப்படி கெட்ட உணர்வோடுதான் மகள் மகள் என்று சொல்கிறார் என்பது எனக்கும் தெரியாது. கடவுள் தான் அவருக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும்” என்று அகிலா அடிக்கடி சொன்னாள்.
மனைவி அகிலாவுடன் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா
ஏற்கனவே, நாங்கள் ஷோபாவுக்காக எல்லா கோவில்களிலும் வேண்டுதல் செய்துகொண்டு இருந்தோம். அகிலாவும் அவள் கணவருக்கு நல்ல புத்தி வரும்படி வேண்டுதல் செய்ய விரும்பியதால் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். வீடு பூட்டி கிடக்கவும், பாலு பயந்து போய் அகிலாவை எங்கெங்கோ தேடியிருக்கிறார். அகிலா மகனுக்கு “டியூஷன்” எடுக்கும் வாத்தியார் மூலம், பாலு வந்திருக்கும் செய்தி எங்களுக்கு தெரியவந்தது. அகிலா, அவளாகவே கோவிலுக்குச் சென்றுவிட்டு வருவது போல, வீட்டுக்குப் போனாள்!
நாங்கள் எந்த கோவிலில் வேண்டி, என்ன பிரயோஜனம்! பாலுவின் திட்டம்தான் அரங்கேறியது! ஜனவரி 22-ந் தேதி, ஷோபாவும் அவள் அப்பாவும் மங்களூர் ரயிலில் சென்னைக்குத் திரும்பினார்கள். அவள் வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்தில், “ஷோபாவும் நானும் திருமணம் செய்துகொண்டோம்” என்று நிருபர்களிடம் பாலு சொன்னார்! ஆனால், உண்மையில் நடந்த நாடகம் என்ன தெரியுமா?
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்…..