நல்ல கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் நடிப்பேன் - ரீ என்ட்ரிக்கு தயாராகும் ரம்பா!
வீட்டில் முடிவெடுப்பதற்கு முன்பே எனக்கு இவரை மிகவும் பிடித்துப்போனதால், ஒருநாள் அதிகாலை 3 மணியளவில் அண்ணாவின் செல்போனை திருடி, இவருக்கு போன் செய்து கிட்டத்தட்ட 5 மணிநேரம் பேசினேன். அப்போதே எனக்கு பிடித்துவிட்டது.
1990களின் கனவு கன்னியாக வலம்வந்தவர் நடிகை ரம்பா. கிட்டத்தட்ட 8 மொழிகளில் மாறி மாறி நடித்து இந்தியா முழுக்க பிரபலமான இவர், தனது ரசிகர்களால் ‘தொடை அழகி’ என அன்பாக அழைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஒட்டுமொத்த திரையுலகிலும் கொடிகட்டி பறந்த ரம்பா, பிறகு கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தனது குடும்பம் மற்றும் பிசினஸ் குறித்த அப்டேட்ஸ்களை ரசிகர்களுக்கு தவறாது கொடுத்துவருகிறார். மேலும் ரியாலிட்டி ஷோக்களிலும் அவ்வப்போது தலைகாட்டி வரும் இவர், சமீபத்தில் நடிகர் விஜய்யை அவரது வீட்டில் சந்தித்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு ட்ரெண்டானார். இந்நிலையில் பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் தவிர்த்துவந்த இவர், பிடித்த கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் திரைத்துறையில் கொடிகட்டி பறந்த ரம்பாவின் வெற்றிகள், திருமண வாழ்க்கை மற்றும் பிசினஸ் குறித்து ஒரு க்ளான்ஸ்.
திரை அறிமுகமும் வெற்றிகளும்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள ஒரு தெலுங்கு குடும்பத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்தவர் விஜயலட்சுமி. இவர் 7ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளி ஆண்டு விழாவில் அம்மன் கெட்டப்பில் நடித்திருக்கிறார். அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஹரிஹரன் அப்போதே விஜயலட்சுமியின் கான்டாக்டை வாங்கியதுடன், தான் வாக்கு கொடுத்ததைப் போலவே 1992ஆம் ஆண்டு ‘சர்கம்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த காலகட்டத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் ஏற்கனவே நடிகைகள் இருந்ததால், தனது பெயரை முதலில் அம்ருதா என மாற்றினார். பிறகு, ‘ஆ ஒக்காட்டி அடக்கு’ என்ற தெலுங்கு படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டிருந்த ரம்பா என்ற பெயரையே தனது பெயராக மாற்றிக்கொண்டார் விஜயலட்சுமி. முதல் தெலுங்கு படமே மாபெரும் வெற்றிபெற தொடர்ந்து பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவந்தது. அதனால் 15 வயதிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
‘சர்கம்’ என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியாக ரம்பா அறிமுகம்
1993ஆம் ஆண்டு ‘உழவன்’ படத்தின்மூலம் தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அடிமை சங்கிலி’, ‘அருணாச்சலம்’, ‘ராசி’, ‘விஐபி’ போன்ற படங்களால் தமிழில் தனக்கென தனியிடத்தை பிடித்தார். அதே சமயத்தில், தெலுங்கிலும், ‘ரவுடி அன்னயா’, ‘பைரவ தீபம்’, ‘அல்லரி ப்ரேமிகுடு’ போன்ற படங்களால் பிரபலமடைந்தார். இடையிடையே ‘சம்பகுளம் தச்சன்’, ‘சர்வர் சோமன்னா’, ‘கேம்பியா ஐபிஎஸ்’ போன்ற மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் தோன்றினார். இருப்பினும் ‘நினைத்தேன் வந்தாய்’, ‘காதலா காதலா’, ‘மின்சார கண்ணா’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’ போன்ற படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன. அப்போது உச்சத்தில் இருந்த கமல், ரஜினி, அஜித், விஜய், கார்த்திக் போன்ற ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். ரம்பாவின் நளினம் மற்றும் உடல்வாகு ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது.
குறிப்பாக, ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தில், கார்த்திக்குடன் இவர் சேர்ந்து ஆடிய ‘அழகிய லைலா’ பாடலால் ரசிகர்களால் ‘தொடை அழகி’ என்று வர்ணிக்கப்பட்டார். இப்படி அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்த ரம்பாவுக்கு திரைப்படங்கள் தவிர எதுவுமே தெரியாதாம். எப்போதும் ஷூட்டிங்கிற்கு குடும்பத்துடன்தான் வருவாராம். தனது ஷூட்டிங் அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ரம்பா கலகலப்பாக பேசியிருந்தார். அதில், “நான் மிகவும் இளம்வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் என்னுடைய அப்பா, அம்மா இருவருமே எப்போதும் என்னுடன் ஷூட்டிங்கிற்கு வருவார்கள். நிறைய நேரங்களில் அண்ணாவும் வருவார். என்னிடம் யாரும் நெருங்காதவாறு குடும்பத்தினர் பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள். எனக்கு நடிப்பு தவிர வேறு எதுவுமே தெரியாது” என்று கூறியிருந்தார். இப்படி சினிமா மட்டுமே தனது கனவு என்று ஓடிக்கொண்டிருந்த ரம்பா, 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கெரியரில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தனக்கு குடும்பம்தான் முக்கியம் என்று சொல்லி நடிப்பதற்கு எண்ட் கார்டு போட்டார்.
நடிகர் விஜய்யுடன் ஹிட் படங்களை கொடுத்த ரம்பா
கணவர் குறித்து...
2000களின் முன்னணி ஹீரோயின்கள் அடுத்தடுத்து தங்களுடைய காதல் மற்றும் திருமணம் குறித்து அறிவித்துவந்த நிலையில் கவர்ச்சி மற்றும் நடனத்துக்கு பெயர்போன ரம்பா, எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தனர். அந்த சமயத்தில்தான் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரும் திரைப்பட தயாரிப்பாளருமான இந்திரகுமார் என்பவரை சத்தமின்றி காதலித்து விமரிசையாக திருமணமும் செய்துகொண்டார். திருமணத்துக்கு முன்புவரை ரம்பா வாழ்க்கையில் இப்படியொரு நபர் இருக்கிறாரா என்ற சந்தேகமே எழாதவண்ணம் நடந்துகொண்ட இவர், திருமணமான பிறகு கணவருடன் கனடாவிலேயே செட்டிலாகிவிட்டார். தங்களுடைய காதல் மற்றும் திருமணம் குறித்து மனம்திறந்த ரம்பா, “பல மொழிகளில் நடித்து முன்னணி ஹீரோயினாக நான் வலம்வந்த சமயம் அது. எனக்கு திருமணம் செய்வதற்கு வீட்டில் பல வருடங்களாக மாப்பிள்ளை தேடினார்கள். ஆனால் நான் நடிகை என்பதாலேயே என்னை திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரவில்லை. இருப்பினும் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்பதால் நல்ல கணவர் கிடைக்கவேண்டுமென்று பிரார்த்தித்துக்கொண்டே இருந்தேன்.
ஒருமுறை ஷூட்டிங்கிற்காக சிகாகோ சென்றபோது காதலர் தினத்தன்று ஒரு மாலுக்கு குடும்பத்துடன் போயிருந்தேன். அங்கு ஒரு காதலர் தின கிஃப்ட் கார்டு ஒன்றை பார்த்துவிட்டு வாங்கவேண்டுமென மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் நான் பணம் எதையும் கையில் வைத்துக்கொள்ளமாட்டேன் என்பதால் பெற்றோரிடம் கேட்கவும் பயமாக இருந்தது. என்னுடைய மேக்கப் மேனிடம் எனக்கு கொஞ்சம் பணம் வேண்டுமென்று கேட்டு பெற்றோருக்கு தெரியாமல் அந்த கார்டை வாங்கிவிட்டேன். ஒருவழியாக அதை வீட்டிற்கும் கொண்டுவந்து ஒளித்துவைத்துக்கொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று அந்த கார்டை எடுத்து அதில் எனது வருங்கால கணவருக்காக எனக்கு பிடித்த வரிகளை எழுதிவிட்டு மீண்டும் ஒளித்துவைத்துவிடுவேன். இப்படி கார்டு முழுவதும் எழுதிவிட்டு, கடைசி ஒரு வரி மட்டும்தான் அதில் எழுதும் அளவிற்கு கேப் இருந்தது.
திரைப்பட ஷூட்டிங்கின்போது கணவர் இந்திரகுமாரை சந்தித்த அனுபவம் குறித்து மனம்திறந்த ரம்பா
அந்த சமயத்தில்தான் இந்திரகுமாரின் அறிமுகம் கிடைத்தது. எனது படத்தின் தயாரிப்பாளர் இவர்தான் என தாணு அவர்கள் அறிமுகப்படுத்தினார். அவர்தான் இந்திரனிடமும் ‘என்னுடைய மகனாக உன்னை நினைத்து இந்த பெண்ணை உனக்கு பார்க்கலாமென்று இருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். இதுபற்றி எனது பெற்றோரிடமும் அவர் கூறினார். வீட்டில் முடிவெடுப்பதற்கு முன்பே எனக்கு அவரை மிகவும் பிடித்துப்போனதால், ஒருநாள் அதிகாலை 3 மணியளவில் அண்ணாவின் செல்போனை திருடி, இந்திரகுமாருக்கு போன் செய்து கிட்டத்தட்ட 5 மணிநேரம் பேசினேன். அப்போதே எனக்கு பிடித்துவிட்டது. அதன்பிறகு வீட்டில் இந்த பையன் ஓகேவா என கேட்டபோது, உடனே ஓகே சொல்லிவிட்டேன். திருமணத்திற்கு பிறகு, நான் எழுதி வைத்திருந்த கார்டில் கடைசி வரியை மட்டும் எழுதி அவரிடம் கொடுத்தேன்” என்று கூறினார். திருமணத்திற்கு முன்பிருந்தே பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுவந்த ரம்பா, திருமணத்திற்கு பிறகும் அவ்வப்போது ஷோக்களில் மட்டும் பங்கேற்றுவந்தார். மேலும் கணவரின் பிசினஸிலும் உறுதுணையாக இருந்துவந்தார். இந்நிலையில்தான் கடந்த ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் குடும்பத்துடன் அடிக்கடி இந்தியா வந்துசென்றார். சில மாதங்களுக்கு முன்பு ரம்பாவின் கணவர் இந்திரன், தனது பிசினஸ் விரிவாக்கத்திற்காக சென்னைக்கு அடிக்கடி வந்ததுடன், ‘ஏன் சென்னையிலேயே இருக்கக்கூடாது?’ என்று தோன்றியதாகவும், அதனால் இங்கேயே தனது நிறுவனத்தை தொடங்கிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
விஜய்யை சந்தித்து வாழ்த்து
இப்படி சென்னையில் செட்டிலாக ரெடியாகிவரும் ரம்பா - இந்திரன் தம்பதி, சமீபத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த புகைப்படங்கள்தான் சமூக ஊடகங்களில் இன்றுவரை வலம்வந்து கொண்டிருக்கின்றன. ‘கோட்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் மற்றொருபுறம் தனது அரசியல் கட்சியை வலுப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே விஜய்யின் குடும்பம் லண்டனில் செட்டிலாகிவிட்டதால் சென்னையிலேயே மிகப்பெரிய அபார்மெண்ட் ஒன்றை வாங்கி அவர் வசித்துவருகிறார்.
குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்த ரம்பா
அங்குதான் ரம்பா விஜய்யை தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து புகைப்படங்களும் எடுத்திருக்கிறார். அதை அவர் தனது சோஷியல் மீடியாக்களில் பகிரவே, ரம்பா, விஜய் கட்சியில் சேரப்போகிறாரா என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பினர். ஆனால் சென்னையில் செட்டிலாகும் ரம்பாவும் அதே அபார்மெண்ட்டில்தான் வீடு ஒன்றை வாங்கியிருக்கிறாராம். திரைத்துறையிலிருந்து விலகிவிட்டாலும் சக நடிகர்களுடன் எப்போதும் நட்பிலிருக்கும் ரம்பா, தனது நீண்டகால நண்பரான விஜய்யை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்தாராம். இந்த அபார்ட்மெண்ட்டில்தான் திரிஷா, துல்கர் சல்மான், ஆர்யா போன்றோரும் தனி குடியிருப்புகளை வாங்கியுள்ளனராம். ஒவ்வொரு வீட்டிலும் தியேட்டர், தனி லிப்ஃப், பிரைவேட் நீச்சல் குளம் கொண்ட ஒரே அபார்ட்மெண்ட் சென்னையில் இதுதானாம்.
மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா
இப்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்துவரும் ரம்பாவிடம் மீண்டும் நடிப்பது குறித்து கேட்டபோது, “நான் சினிமாவைவிட்டு விலகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய சக நடிகைகளிடம் பேசும்போது, சினிமா இண்டஸ்ட்ரி முன்புபோல இல்லை, முற்றிலும் மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். நாங்கள் நடிக்க வந்தபோதும், எங்களுக்கு முந்தைய செட் நடிகைகளும் அதேதான் சொன்னார்கள். மாற்றம் இருந்துகொண்டேதான் இருக்கும். அது நல்லதும்கூட. அப்போதே நான் நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். நன்றாக டான்ஸ் ஆடியிருக்கிறேன். அதனுடன் ஒப்பிடும்போது இப்போதுள்ள நடிகைகள் அதைவிட குறைவுதான். அதனால் என்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இப்போது நடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. ஏற்கனவே பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டேன். ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைத்து நல்ல கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதேசமயம் அதற்காக நான் என்னை மெருகேற்றவேண்டும்” என்று கூறியிருக்கிறார். இதனால் மீண்டும் ரம்பாவை நல்ல கதாபாத்திரத்தில் திரையில் பார்க்கலாம் என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.