திரைப்பிரபலங்கள் ஒன்று கூடிய நடிகை ராதா மகளின் திருமணம்!
கேரளாவில் நடந்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் மற்றும் ரோகித் மேனனின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கேரளாவில் நடந்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் மற்றும் ரோகித் மேனனின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் 1980-களில் நடிகையாக புகழின் உச்சத்தைத் தொட்டவர்தான் நடிகை ராதா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சிவாஜி கணேசன் போன்ற தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களோடு நடித்த இவரது திரைப் பயணமானது பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் மூலம் துவங்கியது. அவ்வாறு அறிமுகமான பத்து ஆண்டுகளிலேயே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பட்டையை கிளப்பிய ராதா, 1991-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ராதாவுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என இரு மகள்களும், விக்னேஷ் நாயர் என்ற மகனும் உள்ளார். மகள்கள் இருவருமே திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
ராதாவின் மூத்த மகளான கார்த்திகா, கே.வி. ஆனந்த் இயக்கிய ‘கோ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கொடி’ மற்றும் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ போன்ற மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதனைப்போலவே ராதாவின் இரண்டாவது மகளான துளசி, மணிரத்னம் இயக்கிய 'கடல்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு ‘யான்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
கார்த்திகா நாயரின் திருமணம்
கார்த்திகா நாயர் குறிப்பிட்ட சிலத் திரைப்படங்களுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி, பின்பு படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவ்வாறு இருக்கையில் கார்த்திகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்ட தனது நிச்சயதார்த்தம் குறித்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வந்தது. ஆனால் மாப்பிள்ளை யார் என்ற தகவலை அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் கேரளாவில் கடற்கரையோரமாக இருக்கும் ஹோட்டல் ஒன்றில் திரைப்பிரபலங்கள் பலரும் சூழ ராதாவின் மகள் கார்த்திகாவின் திருமணமானது வெகு விமரிசையாக நடந்தது. திருமணத்தில், ராதிகா சரத்குமார், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சுகாசினி மணிரத்னம், ரேவதி, பாக்யராஜ், மேனகா சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.
மேலும் கார்த்திகா தனது கணவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை கண்ட ரசிகர்களும், திரைபிரபலங்களும் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.