நான் பேசுவதை மீடியா எப்படி சித்தரிக்கும் என்று எனக்கு தெரியும்! - நடிகை பார்வதி

திரையில் வெற்றி மற்றும் தோல்விகளை மாறி மாறி பார்த்துவந்த பார்வதி திடீரென திரையுலகிலிருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. அதற்கு அவர் தனது மனதில் தோன்றும் அனைத்தையும் எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படையாக பேசுவதுதான் காரணம் என்றும் கூறப்பட்டது.

Update:2024-08-13 00:00 IST
Click the Play button to listen to article

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தங்கலான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தின் போஸ்டர் வெளியானதிலிருந்தே படத்தின்மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்தது. அதற்கு காரணம் படத்தில் நடிகர் விக்ரமின் கெட்டப்தான். குறிப்பாக பா. ரஞ்சித்தின் படம் என்றாலே சமூக கருத்து இல்லாமலா? என்ற கேள்விதான் அனைவரின் மனதிலும் தோன்றும். அதனை உறுதிப்படுத்தும்விதமாக கடந்த மாதம் படத்தின் ட்ரெய்லரும் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே தங்களுடைய சிறப்பான பங்கை அளித்திருக்கிறார்கள் என்பதை ட்ரெய்லரிலிருந்தே புரிந்துகொள்ள முடிந்தது. அதிலும் குறிப்பாக, நீண்ட நாட்களாக தமிழ் திரையுலகின் பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகை பார்வதி திருவோத்து இந்த படத்தில் விக்ரமின் மனைவியாக நடித்திருக்கிறார். பொதுவாகவே சமூக பிரச்சினைகள், அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசும் பார்வதி, ‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழாவிலும் அதேபோன்றதொரு சம்பவத்தை செய்திருக்கிறார். சில காலம் ஒட்டுமொத்த திரையுலகிலுமிருந்தே அவர் விலகியிருப்பதாக பேசப்பட்ட நிலையில், மீண்டும் பொது பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளிலும் சிக்கிவருகிறார். பார்வதி ஒரு வெற்றிகரமான நடிகையாக இருந்தாலும் விரைவில் அரசியலுக்கு வருவார் என மோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. பார்வதியின் கெரியர் குறித்தும், அதிகம் சர்ச்சைக்குள்ளான டாக்ஸ் குறித்தும் இப்பதிவில் காணலாம்.

சக்சஸ்ஃபுல் ஹீரோயின்!

கேரளாவைச் சேர்ந்த பார்வதி திருவோத்து முதலில் ஒரு வெற்றிகரமான டிவி தொகுப்பாளராக பணியாற்றி பின்பு வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர். முதலில் அப்போதைய முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில்தான் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இப்படி ஓரிரு படங்களில் நடித்த பார்வதிக்கு, சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றி நடிக்கும் நடிகை என்ற நற்பெயரானது அப்போதே கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கதாநாயகியாக கன்னடத்தில் அறிமுகமானார். 2007ஆம் ஆண்டு புனீத் ராஜ்குமாருடன் கதாநாயகியாக அறிமுகமான ‘மிலானா’ திரைப்படம் வணிகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்று இவருக்கு ராசியான ஹீரோயின் என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.


‘பூ’ திரைப்படத்தில் பார்வதி

அடுத்த ஆண்டே தமிழிலும் ‘பூ’ திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார். முதல் படத்திற்கே சிறந்த தமிழ் நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது பார்வதிக்கு கிடைத்தது. எந்த மொழியானாலும், அதில் எப்படிப்பட்ட வட்டார வழக்கு பேச்சு நடையாக இருந்தாலும் சிறிது நேரம் அவர்களுடன் பேசினால் உடனே அந்த பேச்சு நடை தனக்கும் ஒட்டிக்கொள்ளும் என்று பலமுறை பார்வதியே கூறியிருக்கிறார். இந்த திறமைதான் இவருக்கு ஒவ்வொரு மொழியிலும் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தையும் உள்வாங்கி அந்த இடத்தின் பெண்ணாகவே திரையில் வாழ்ந்துகாட்ட உதவுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். தமிழில் அவ்வப்போது தலைகாட்டினாலும், தனுஷுடன் இவர் ஜோடிசேர்ந்த ‘மரியான்’ திரைப்படத்தை இன்றுவரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆழமான மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் பார்வதியின், ‘பெங்களூரு டேஸ்’, ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘சார்லீ’ மற்றும் ‘கூடே’ போன்ற மலையாளப் படங்கள் மற்ற மொழி ரசிகர்களையும் பெரிதளவில் கவர்ந்தன. அதனாலேயே பார்வதி இந்திய அளவில் பரிச்சயப்பட்ட நபராக மாறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னு நிண்டே மொய்தீன் மற்றும் சார்லீ போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றதால் திடீரென நான் மக்கள் கண்களுக்கு தெரிய ஆரம்பித்தேன். அதற்கு முன்பும் நான் பல திரை விருது விழாக்களுக்கு போயிருக்கிறேன். ஆனால் யாரும் என்னை கண்டுகொள்ள மாட்டார்கள். திடீரென தோல்விகளுக்கு மத்தியில் வெற்றியும் புகழும் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் நான் அனைத்தையும் என் தலைக்குள் எடுத்துக்கொள்ளாமல் எப்படி தன்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் யோசித்தேன். இருப்பினும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்ததால் நான் மிகவும் பிஸியாக ஓடினேன். இப்போது மீண்டும் பழையபடி எப்படி ஆரம்பித்தேனோ அங்கேயே வந்துவிட்டேன்" என்று கூறியிருந்தார். இப்படி திரையில் வெற்றி மற்றும் தோல்விகளை மாறிமாறி பார்த்துவந்த பார்வதி திடீரென திரையுலகிலிருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. அதற்கு அவர் தனது மனதில் தோன்றும் அனைத்தையும் எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படையாக பேசுவதுதான் காரணம் என்றும் கூறப்பட்டது.


ப்ளாக் பஸ்டர் படமான ‘சார்லி’யில் டெஸ்ஸாவாக...

நார்த்தில் கங்கனா! சவுத்தில் பார்வதி!

ஒருசில நடிகர் நடிகைகள் திரைப்படங்களைத் தாண்டி, சமூக பிரச்சினைகள் குறித்தும் நாட்டில் நிகழும் வன்முறைகள் குறித்தும் எப்போதும் கருத்துகளை தெரிவிப்பதுண்டு. அதுபோன்று தனது கருத்துகளை தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் நடிகை கங்கனா ரனாவத். நடிகர் நடிகைகள் குறித்தும், பாலிவுட் நெபோட்டிசம் குறித்தும், அரசின் திட்டங்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடியவர். இப்போது பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாகவும் உருவெடுத்திருக்கிறார். வடக்கில் சர்ச்சைகளுக்கு கங்கனாவின் பெயர் எப்படி பிரசித்தமோ அதுபோலத்தான் தெற்கில் பார்வதி திருவோத்து என்ற சொல்லப்படுவதுண்டு. காரணம், நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறித்தும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் பார்வதி அதிகம் பேசுவதுண்டு. குறிப்பாக, ஹிஜாப் பிரச்சினையின்போது, ‘நம் நாட்டில் பெண்களின் உடை குறித்து எழுந்த சர்ச்சைக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. இதில் நம் நாடு மக்களாட்சி வேறு’ என்று கூறியிருந்தார். அதேபோல், ஈரானில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து கேட்டபோது, உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான் சமூகத்தை சரியான பாதையில் கொண்டுபோக முடியும். முதலில் உள்ளூர் விவகாரங்களில் நாம் தலையிடவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதுபோல் ராமர் கோயில் விவகாரம், அன்னப்பூரணி படம் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டது குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுபோக, பல்வேறு மலையாளப் படங்கள் குறித்த தனது விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவித்து மோலிவுட்டில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தார். குறிப்பாக, மம்மூட்டியின் ‘கசபா’ திரைப்படம் குறித்து, பெண் வெறுப்பு கதைகளில் நடிப்பதை மூத்த நடிகர்கள் தவிர்க்கவேண்டும் என்று கூறிவிட்டார். இதனால் மம்மூட்டி ரசிகர்கள் பார்வதியை சமூக ஊடகங்களில் மோசமாக விமர்சித்ததுடன், பட வாய்ப்புகளும் அவருக்கு குறைந்துபோனது. இருப்பினும், ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் அதன் இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ படங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுவதாக வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார்.


முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் குறித்து தைரியமாக கருத்து தெரிவிக்கும் பார்வதி

இதுபோன்று அடிக்கடி மனதில் தோன்றும் கருத்துகளை பொதுவெளியில் தெரிவிப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் பேசும் அனைத்தையும் தங்களுடைய தேவைக்காக மீடியா எப்படி சித்தரிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வு எனக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனாலேயே நான் எந்த கருத்தை எங்கு தெரிவிக்கவேண்டும் என்பதை நன்றாக அறிந்திருக்கிறேன் என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். நான் பேசுபவற்றை சிலர் திரித்து காண்பிக்கும்போது நான் சில நேரங்களில் மிகவும் கோபப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற கருத்துகளை சொல்லி, அதனால் சர்ச்சைகளுக்கு ஆளாக வேண்டுமா என்றுகூட யோசித்திருக்கிறேன். ஆனால் இப்போது அதையும் ஜாலியாக எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். இப்படி அனைத்துக்கும் கருத்து தெரிவிக்கும் பார்வதி, சமீபத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதனாலேயே மத்தியில் ஆளும்கட்சிக்கு எப்போதும் கங்கனா ஆதரவு தெரிவிப்பதைபோலத்தான், இப்போது பார்வதியும், மாநில கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எந்த எதிர்மறை கருத்துகளையும் சொல்லாமல் அமைதி காக்கிறார் என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் ஒலிம்பிக்ஸின் கடைசி சுற்றில் பங்கேற்க முடியாமல் போன வினேஷ் போகத்திற்கு ஆறுதல் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில், “வினேஷ் நீங்கள்தான் எங்கள் தங்கப் பதக்கம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் பார்வதி பேச்சு!

வயநாடு உயிரிழப்பு குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில்தான் ‘தங்கலான்’ திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அங்கு ரஞ்சித்தின் படையில் இருப்பது தனக்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார். அவர் பேசியபோது, “கங்கம்மாள் கதாபாத்திரத்திலிருந்து என்னால் வெளியே வரவே முடியாது. ரஞ்சித்துடன் வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. இதற்கு முன்பாக வாய்ப்பு கிடைத்தும் என்னால் பணியாற்ற முடியவில்லை. ஆனால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நான் கங்கம்மாளாகத்தான் இருக்கவேண்டும் என எங்கோ எழுதப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்காக அவர் எனக்கு போன் செய்தபோது, நான் உடனே ஓகே சொல்லலாம் என்று இருந்தேன்.


‘தங்கலான்’  திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பார்வதியின் பேச்சு

இருப்பினும் நிறைய கேள்வி கேட்டு அவரை டார்ச்சர் செய்துவிட்டேன். கங்கம்மாள் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல; அவர் உருவாக்கிய உலகங்கள், கதைகள் மற்றும் அரசியல் அனைத்துக்கும் நான் துணைநிற்கிறேன். இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு நடிகர் தனது டீம் மற்றும் உடன் நடிப்பவர்களுடன் தன்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதற்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பவர் சியான் விக்ரம். எனவே என்னுடைய கங்கம்மாவிற்கு எப்போதுமே நீங்கள் தங்கலான்தான்” என்று கூறியிருந்தார்.

மேலும், “சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால் நம் வாழ்க்கையில் எது பண்ணினாலும் அது அரசியல்தான். ‘தங்கலான்’ ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸாவது தற்செயலானது கிடையாது. விடுதலை, அடக்குமுறை போன்ற வார்த்தைகளை நாம் சாதாரணமாக பயன்படுத்துகிறோம். ஆனால் இதுபோன்ற சமத்துவமின்மை ஏன் இருக்கிறது? என்பது பற்றி நாம் படித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதில் எவ்வளவு அசௌகர்யங்கள் இருந்தாலும் அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல்தான், கலையும் அரசியல்தான். அதற்கு ரஞ்சித் ஒரு ஆர்மியை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். நான் அந்த படையில் ஒரு படை வீராங்கனையாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியிருந்தார். ஏற்கனவே ரஞ்சித் அரசியலுக்கு வரப்போகிறார் என பேச்சு அடிபடும் நிலையில், பார்வதியின் இந்த பேச்சு பலரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. திரையில் வெற்றிபெற்ற கதாநாயகியாக வலம்வரும் இவர் விரைவில் அரசியலுக்கும் வரலாம் என்று சொல்லப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்