நகைச்சுவை உலகின் மாமன்னன் நடிகர் விவேக்! - பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு

தமிழக மக்களின் நெஞ்சில் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும் ஒரு அற்புதமான மனிதர், சின்னக் கலைவாணர் விவேக். தனது நகைச்சுவை நடிப்பால் மட்டுமல்லாமல், சமூகப் பணிகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் இன்று நம்மிடையே இல்லை.

Update:2024-11-19 00:00 IST
Click the Play button to listen to article

தமிழக மக்களின் நெஞ்சில் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும் ஒரு அற்புதமான மனிதர், சின்னக் கலைவாணர் விவேக். தனது நகைச்சுவை நடிப்பால் மட்டுமல்லாமல், சமூகப் பணிகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் இன்று நம்மிடையே இல்லை. இருப்பினும் தன் நகைச்சுவை உணர்வால் இன்றும் நம் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் விவேக் ஒரு நாடகக் கலைஞராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கி, பிறகு தன் திரைப்படங்கள் வாயிலாக நகைச்சுவையோடு கூடிய பல சமூகக் கருத்துக்களை நம் ஒவ்வொருவர் மனதிலும் விதைத்து, அதன்முலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வியக்க வைத்த ஒரு பொக்கிஷம். ஏதோ ஒரு படத்தை பார்க்க வந்தோம், ரசித்தோம் என்று சாதாரணமாக கடந்து போய்விட முடியாதபடி எப்போதும் ஆழமான, அதேநேரம் அழுத்தமான சிந்தனைகளை தன் நகைச்சுவையில் புகுத்தி தனித்துவம் பெற்ற நடிகரான விவேக்கின் 63-வது பிறந்தநாள் இன்று (19.11.24). சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த நடிகர் விவேக்கின் சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

சினிமாவில் அறிமுகம்


‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் சுஹாசினியின் சகோதரராக விவேக் 

தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவரான நடிகர் விவேக், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பெருங்கோட்டூரில் 1961-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சிவ. அங்கையா பாண்டியன், மணியம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் விவேகானந்தன். சிறு வயதிலிருந்தே கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், படிப்பிலும் சிறந்து விளங்கினார். அதன்படி, தனது பள்ளிப்படிப்பை ஊட்டி கான்வென்ட்டில் படித்து முடித்தவர், பின்னர் அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியல் பாடப் பிரிவில் பி.காம் மற்றும் எம்.காம் பட்டங்களைப் பெற்றார். படிப்பை முடித்த பிறகு, மதுரையில் சிறிது காலம் தொலைபேசி ஆபரேட்டராக பணியாற்றிய விவேக், பின்னர் சென்னை வந்து டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வில் வெற்றி பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். ஆனால், என்னதான் அரசு பணி கிடைத்து அவர் ஒரு பிடிப்போடு பணியில் அமர்ந்திருந்தாலும், அவருடைய மனதில் நடிப்பின் மீது எப்போதும் ஒரு ஆர்வம் இருந்து கொண்டே வந்துள்ளது. இதனால் மேடை நாடகங்களில் அவ்வப்போது நடித்து வந்த விவேக்கிற்கு, இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இயக்குநர் கே.பாலசந்தரும் இவரது திறமையை உணர்ந்து, தனது படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார். அதுதான் சுஹாசினியின் சகோதரராக இவர் நடித்து 1987-ஆம் ஆண்டு வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படம். அதன் பிறகு 1989-ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார் பாலசந்தர். இதில் விவேக் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரை மிகவும் பிரபலப்படுத்தியதோடு, திரையுலகிலும் அடுத்த கட்டத்திற்கு பயணிக்க பேருதவியாக இருந்தது.

நகைச்சுவையில் கலக்கல்


'காதல் மன்னன்' திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் ஒய்யாவாக வரும் விவேக் 

திரைத்துறையில் அறிமுகமாகி துவக்கத்தில் ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விவேக், 'மேல் மாடி காலி' போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வெகுஜன மக்களிடையே பிரபலமானார். பின்னர் 1990-களின் இறுதியில் தனது திரைப்பயணத்தில் வேகமெடுத்த விவேக் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிப்போனார். குறிப்பாக ‘காதல் மன்னன்’, ‘நினைவிருக்கும் வரை’, ‘வாலி’, ‘ஆசையில் ஓர் கடிதம்’, ’முகவரி’ போன்ற பல படங்கள் இவரது வளர்ச்சிக்கு பெரிதும் கைகொடுத்தன. இதனால் ஒரு கட்டத்தில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர்களாக திகழும் விஜய் மற்றும் அஜித்தின் ஆரம்பகாலப் படங்கள் அனைத்திலும் விவேக்கின் நகைச்சுவை காட்சி மிக முக்கிய இடம் பிடிக்க துவங்கியது. இதில் அள்ளித் தந்த வானம்’, ‘ஷாஜகான்’, ‘யூத்’, ‘ரன்’, ’சாமி’ போன்ற படங்களில் விவேக்கிற்கென்று தனியாக ஒரு நகைச்சுவைப் பகுதியே ஒதுக்கப்பட்டதோடு, அது அப்படங்களின் வெற்றிக்கும் பெரிதும் கை கொடுத்தது.


'சிவாஜி' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் விவேக் 

ஒருபுறம் ரஜினியுடன் ‘சிவாஜி’, அடுத்த சில ஆண்டுகளிலேயே தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ என காலத்திற்கேற்ப தனது நகைச்சுவை திறனை தகவமைத்து பயணித்த விவேக் அதிலும் தனி முத்திரை பதித்தார். இருந்தும் என்னதான் விவேக் ஒரு காமெடி நடிகராக இருந்தாலும், அவரது நகைச்சுவை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; சமூக விழிப்புணர்வு மிக்கதாகவும் அன்றிலிருந்தே இருந்து வந்தது. லஞ்சம், மக்கள்தொகை பெருக்கம், அரசியல், ஊழல் போன்ற சமூகப் பிரச்சினைகளை தனக்கே உரிய நகைச்சுவையோடு அவர் பேசியவிதம் பலரை சிந்திக்க வைத்ததோடு, மக்களும் அதனை ரசித்து கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும் நடித்து வந்த விவேக் ஹீரோவாகவும் களமிறங்கினார்.. கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை இயக்கிய ‘பஞ்ச்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விவேக், அதன் பிறகு ‘சொல்லி அடிப்பேன்’ படத்திலும் நாயகனாக நடித்தார். இருந்தும் இப்படங்கள் பெரியளவில் வெற்றி பெறாததால் தொடர்ந்து நகைச்சுவை நடிகராகவே நடித்து வந்தவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு 'நான்தான் பாலா', 'பாலக்காட்டு மாதவன்', 'வெள்ளைப் பூக்கள்' போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் 'வெள்ளைப் பூக்கள்' படத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.


'பாலக்காட்டு மாதவன்' திரைப்படத்தில் நடிகை சோனியா அகர்வாலுடன் விவேக் 

அப்துல் கலாமின் மாணவன்

விவேக்கின் நகைச்சுவை காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், மக்களை சிந்திக்க வைக்கும் வகையிலும் இருந்ததால் 'சின்னக் கலைவாணர்', 'மக்களின் கலைஞன்' போன்ற பட்டங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டு, ரசிகர்களும் அவ்வாறே அவரை அன்போடு அழைத்தனர். எப்போதுமே தனது சக நடிகர்களை மனதார பாராட்டுவது, விழிப்புணர்வு செய்திகளை பகிர்வது, விவேகானந்தர், அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது போன்றவைகளையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்த விவேக், தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் நேர்மறையான செய்திகளை பகிர்ந்து பலரது மதிப்பிற்குரியவராக மாறிப்போனார். மேலும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தனது சொந்த வாழ்க்கையிலும் விவேக் சமூக நலனில் அதிக அக்கறை காட்டிய விதம் பலரால் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் மிகப்பெரிய அபிமானியான விவேக், கலாம் பெயரில் ‘கிரீன் கலாம்’ என்கிற அமைப்பினை 2010-ஆம் ஆண்டு ஆரம்பித்து, அந்த அமைப்பின் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் முன்னெடுப்பை, கலாமின் வழிகாட்டுதலின் படி இந்தியா முழுவதும் தொடங்கினார்.


ஏபிஜே அப்துல் கலாமின் மிகப்பெரிய அபிமானியான விவேக்

அதற்காக சமூக வலைதளங்கள் மூலம் தன்னார்வலர்களை ஒன்றிணைத்த விவேக் தன் முதல் முயற்சியில் வெற்றியையும் பதிவு செய்தார். அப்துல் கலாம் இறந்தபோது மட்டும் சுமார் 3 கோடியே 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு சாதனை செய்த நடிகர் விவேக், தான் மறையும் வரை, பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு இந்த பூமியை குளுமை படுத்திய பெருமைக்குரியவர். 2018-ஆம் ஆண்டு பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எதிரான தமிழக அரசின் பிரச்சார தூதராகவும் நியமிக்கப்பட்ட விவேக், அதோடு தன் சமூகப் பணியை நிறுத்திக் கொள்ளாமல், கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 2021 தொடக்க காலத்தில், தடுப்பூசி போடுவதன் அவசியத்தை மக்களிடையே வலியுறுத்தி பிரச்சாரமும் செய்தார். இப்படி தன் மக்களுக்காக பல சமூக பணிகளை முன்னெடுத்து வெற்றிகண்டு வந்த விவேக்கிற்கு அருள்செல்வி என்ற மனைவியும், தேஜஸ்வினி, அம்ரிதா நந்தினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். ஏற்கனவே, விவேக்கின் மகன் பிரசன்னகுமார் 2015 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். விவேக்கின் பிள்ளைகளில் மூத்த மகள் தேஜஸ்வினிக்கு கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி அன்று சென்னையில் பிரம்மாண்டாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் அப்பாவின் விருப்பமான பணிகளில் ஒன்றான மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தம்பதிகள் இணைந்து செய்ததோடு, திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு பரிசாகவும் வழங்கி அப்பாவின் கனவை நிறைவேற்றினர்.


திருமணத்தன்று மரக்கன்று நட்ட விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி

விருதுகளும், வேதனையும்

தமிழக அரசின் கலைவாணர் விருது, பத்மஸ்ரீ விருது என பல விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ள விவேக், 'உன்னருகே நானிருந்தால்', 'ரன்', 'பார்த்திபன் கனவு', 'அந்நியன்', 'சிவாஜி' போன்ற திரைப்படங்களுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பெற்றுள்ளார். மேலும், 'ரன்', 'சாமி', 'பேரழகன்' உள்ளிட்ட படங்களுக்காக 'ஃபிலிம்ஃபேர்' விருதையும் பெற்று தனது திறமையை நிரூபித்திருக்கிறார். இது தவிர சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான ‘எடிசன் விருது’, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தேசிய தமிழ் திரைப்பட விருது’, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஐ.டி.எஃப்.ஏ விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ள விவேக், தன்னுடைய சமூக நல பணிகளுக்காகவும் பல மேடைகளில் விருதுகள் பெற்றுள்ளார்.


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கையால் விருது பெற்ற சின்ன கலைவாணர் நடிகர் விவேக்  

திரைத்துறையில் ரஜினி துவங்கி விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு , விஷால், கார்த்தி என எத்தனையோ முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள விவேக், உலகநாயகன் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். விவேக்கின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த அந்த கனவு, ஷங்கர் இயக்கத்தில் கமலின் நடிப்பில் வெளிவந்த 'இந்தியன் 2' படத்தின் மூலம் அவருக்கு கை கூடியது. இருந்தும் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. கொரோனா நேரத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், சிகிச்சை பலனின்றி 2021 ஏப்ரல் 17 அன்று காலமானார். அவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு ஒரு பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது. விவேக், தனது சிரிப்பின் மூலம் மக்களை மகிழ்வித்தவர் மட்டுமல்ல, தனது சமூக விழிப்புணர்வு கொண்ட வசனங்களின் மூலம் பலருக்கு உத்வேகம் அளித்த மாமனிதர் ஆவார். அப்பேர்பட்டவரின் பிறந்த நாளில் அவரது பெருமைகளை பேசியதில் பெருமை கொள்கிறது ராணி.

Tags:    

மேலும் செய்திகள்