சினிமாவுக்கு டாட்டா! அரசியலில் என்ட்ரி! - ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் விஜய்!

"தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Update: 2024-02-05 18:30 GMT
Click the Play button to listen to article

டீப் ஃபேக் - ராஷ்மிகா

கடந்த சில மாதங்களாகவே டோலிவுட் பிரபலங்களான ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அதற்கு ஏற்றாற்போல் இருவரும் ஒரே மாதிரி உடை அணிவது, ஒரே இடத்தில் தனித்தனியாக எடுத்த போட்டோக்களை பதிவிடுவது, வெளிநாடுகளுக்கு ஒன்றாக செல்வது என ரசிகர்களுக்கு கன்டென்ட் கொடுத்து வந்தனர். இருவரும் எப்போது தங்கள் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவீர்கள்? என நெட்டிசன்கள் நச்சரித்த நிலையில், “எனக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஊடகங்கள் திருமணம் செய்து வைக்கின்றன” என்று கூறி அனைவரின் வாயையும் அடைத்தார் தேவரகொண்டா. இதனால் நெட்டிசன்கள் இவர்கள் பக்கம் செல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது ராஷ்மிகாவே வீணாக வாய் கொடுத்து மாட்டியிருக்கிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “என் வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் செய்வேன். நான் என்ன சொன்னாலும் அதற்கு அவர் ஆம் சொல்ல மாட்டார். எது நல்லது? எது கெட்டது? என்பதை எடுத்துச் சொல்வார். என் வாழ்க்கையில் எல்லோரையும்விட அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். மேலும் நான் உண்மையில் மதிக்கக்கூடிய நபர்களில் ஒருவர் அவர்” என்று கூறியிருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே சம்திங் சம்திங் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது என ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்.


ராஷ்மிகா மந்தானா - விஜய் தேவரகொண்டா

தொடர்ந்து டீஃப் ஃபேக் டெக்னாலஜி குறித்து பேசிய ராஷ்மிகா, “இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதைப்பற்றி பேசினால், விரும்பித்தானே இந்த வேலைக்கு வந்தீர்கள்? என்கிறார்கள். ஆனால் நான் ஒரு நடிகையாக இல்லாமல் ஒரு பெண்ணாக இதை எதிர்கொண்டால் என்னவாகும்? உண்மையில் இதனால் பாதிக்கப்படும் பெண்களை நினைத்தால் பயம் ஏற்படுகிறது. ஒருவேளை நான் அதுபற்றி பேசினால், டீப் ஃபேக் குறித்த குறைந்தபட்ச விழிப்புணர்வாவது மக்களுக்கு சென்றடையும்” என்றார்.

குழந்தை குறித்து நடிகர் சாந்தனு 

பிரபல நடிகர் பாக்யராஜின் மகன் என தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் சாந்தனு. ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை தராததால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து 2015இல் திருமணமும் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இதுகுறித்து அவ்வப்போது கேள்விகள் எழுந்த நிலையில், முதன்முறையாக மனம்திறந்துள்ளனர் இத்தம்பதியர்.


சாந்தனு - கீர்த்தி விஜய் தம்பதி

சமீபத்தில் சாந்தனு நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, சாந்தனு ஒரு நேர்க்காணலில் பேசியிருந்தார். அதில், “நாங்கள் திருமணங்களுக்கு சென்றாலே எப்போ குழந்தை பெத்துக்க போறீங்க என்று கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார்கள். நாங்கள் இப்போது கெரியரில் கவனம் செலுத்துகிறோம். அதேசமயம் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று முடிவு எடுக்கவில்லை. எது வரவேண்டுமோ அது சரியான நேரத்தில் வரும்” என்று கூறியிருக்கிறார்.

ராஜ்கிரண் வளர்ப்பு மகள் கண்ணீர் பேட்டி

சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் முனீஸ்ராஜா. தொடர்ந்து சில சினிமாக்களில் நடித்த இவருக்கு வாய்ப்புகள் பெரிதளவில் கிடைக்காததால், கடந்த சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியையும் தழுவினார். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவுடன் காதல் மலர்ந்தது. ஆனால் இருவரும் வெவ்வேறு மதத்தினர் என்பதால் இருவர் வீட்டிலும் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய பிரியா 2022ஆம் ஆண்டு முனீஸ்ராஜாவை திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, பிரியா தன்னுடைய வளர்ப்பு மகள்தான் என்றும், தனது பெயரை கெடுக்கவே சின்னத்திரை நடிகர் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், மேலும் தனது பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் அதிரடியாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார் ராஜ்கிரண்.


கணவர் முனீஸ் ராஜா மற்றும் ராஜ் கிரண் குடும்பத்தினருடன் ஜீனத் பிரியா

இந்நிலையில் தற்போது ராஜ்கிரணின் மகள் பிரியா கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் முனீஸ் ராஜாவும் பிரிந்துவிட்டோம். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். ஆனால் எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை. இந்த திருமணத்திற்கு பிறகு என்னை வளர்த்த அப்பாவை மிகவும் காயப்படுத்திவிட்டேன். நான் அப்படி செய்தபோதும் எனக்கு ஒரு பிரச்சினை வந்தபோது என்னை கைவிடாமல் காப்பாற்றினார். இது நான் எதிர்பாராத கருணை. எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னித்துவிடுங்கள் டாடி” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருவதுடன், இதற்குத்தான் பெற்றோர் பேச்சை கேட்கவேண்டும் என நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு அட்வைஸ் செய்துவருகின்றனர்.

வீட்டை விட்டு வெளியேறிய ப்ரியங்கா சோப்ரா

2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அதன்மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் பிரியங்கா சோப்ரா. எந்தவொரு திரை பின்னணியும் இல்லாமல் சினிமா உலகில் நுழைந்த இவர் நெபோட்டிசம் குறித்து பொதுவெளியில் தைரியமாக பேசும் நபர்களில் ஒருவராக அறியப்பட்டார். கடின உழைப்பால் தற்போது பாலிவுட்டில் பிரபலமடைந்திருக்கும் இவர், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மல்டி மேரி என்ற மகளும் உள்ளார். திருமணமான பிறகு இந்த தம்பதியர் 2019ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வீடு வாங்கி அங்கு குடியேறினர். அந்த வீட்டின் மதிப்பு 20 மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய ரூபாயில் 160 கோடிக்கும் அதிகம்.


பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸின் பிரம்மாண்டமான வீடு

7 பெட்ரூம், 9 பாத்ரூம், ஸ்பா, ஜிம், தியேட்டர் என சகல வசதிகளும் இருந்தும் ஏன் அந்த வீட்டைவிட்டு வெளியேறினார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? கோடிகளை கொட்டி வாங்கிய அந்த வீட்டில் நீர்க்கசிவு ஏற்பட்டு பூஞ்சை தொற்றுகள் உருவாகியிருக்கிறதாம். இதனால் வீட்டிலுள்ளவர்களுக்கு உடல்நல பிரச்சினைகள் வரக்கூடும் என்ற அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறது ஜோனஸ் குடும்பம். மேலும் இவர்களுக்கு அந்த வீட்டை விற்பனை செய்தவர்கள்மீது வழக்கு தொடர்ந்திருக்கின்றனர் ஜோனஸ் - பிரியங்கா தம்பதியர். இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

‘தமிழக வெற்றிக் கழகம்’ - கட்சி பெயரை வெளியிட்ட விஜய்

சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் இறங்கப்போவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஜய். கடந்த சில நாட்களாகவே இதுகுறித்து பரவலாக பேசப்பட்டு வந்து நிலையில், கடந்த மாதம் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போதே கட்சி குறித்து பேசியிருந்தார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயரிட்டு கட்சியைத் தொடங்கியுள்ளார் விஜய். தற்போது கமிட் ஆகியிருக்கும் படங்களை மட்டும் நடித்து முடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார். இது தளபதி ரசிகர்களை ஒருபுறம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


கட்சி தொடங்கியது குறித்து நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற பல்வேறு உதவிகளையும் நலத்திட்டங்களையும் செய்துவருவதாகவும், இருப்பினும் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர, அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது எனவும் கூறியிருக்கிறார். மேலும் தற்போது ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் ஒருபுறம் என்றால், சாதி மத பேதங்கள் நிறைந்த பிளவுவாத அரசியல் கலாசாரம் மறுபுறம் என்று நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டைகள் நிறைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். தொடர்ந்து ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக்கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றிக் கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும் தற்போது நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட போவதில்லை எனவும், அதேசமயம் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை குறிவைத்தே தங்கள் கட்சி செயல்படும் என்றும் தெளிவாக கூறியிருக்கிறார் விஜய். தவிர, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றபின், கட்சிக்கான கோட்பாடுகள், கொள்கைகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து ஆலோசித்து நம் அரசியல் பயணம் துவங்கும் என்றும் கூறியிருக்கிறார்.

சினிமாவை போன்றே அரசியலிலும் சாதிக்க விஜய்க்கு வாழ்த்துகள்!

Tags:    

மேலும் செய்திகள்