மீண்டும் "ரத்தக்கண்ணீர்"! ‘எம்.ஆர். ராதா கெட்டப்பில் துல்கர் சல்மான்’! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘காந்தா’!
துல்கர் சல்மான், தனது தனித்துவமான நடிப்புத் திறன், அழகு மற்றும் கதாபாத்திரத் தேர்வுகளால் தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த நடிகர் ஆவார்.
துல்கர் சல்மான், தனது தனித்துவமான நடிப்புத் திறன், அழகு மற்றும் கதாபாத்திரத் தேர்வுகளால் தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த நடிகர் ஆவார். 2012ஆம் ஆண்டு 'செகண்ட் ஷோ' திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான இவர், வெகு குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்று, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இன்று அனைத்து மொழி படங்களிலும் நடிக்கும் அளவுக்கு ஒரு பான் இந்திய ஸ்டாராக வளர்ந்துள்ளார். எத்தனையோ வெற்றிகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என திரைத்துறையில் பயணித்து வரும் துல்கர் தற்போது, தனது 13 ஆண்டு திரைப் பயணத்தைக் கொண்டாடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக துல்கர் நடிக்கும் ‘காந்தா’ என்ற புதிய படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், இந்த தொகுப்பில் துல்கர் சல்மானின் திரைப்பயணம் மற்றும் ‘காந்தா’ படம் குறித்த முழு தகவலை காணலாம்.
13ஆம் ஆண்டில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான், தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் பன்முகத் திறமையாளர். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் திரையுலகில் இவர் நுழைந்திருந்தாலும், தனது கடின உழைப்பாலும், தனித்துவமான நடிப்புத் திறமையாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர். 2012ஆம் ஆண்டு வெளியான ‘செகண்ட் ஷோ’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான துல்கர் சல்மான், குறுகிய காலத்திலேயே தனது நடிப்புத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு, தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ’தீவ்ரம்’, ‘பட்டம் போலே’, ‘சலலாஹ் மொபிலஸ்’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘3 சுந்தரிகள்’ போன்ற பல படங்களில் நடித்து மிகுந்த கவனம் பெற்றார். இதில் ‘சார்லி ‘, ‘ஏபிசிடி’, ‘பெங்களூர் டேஸ்’ போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதன் பிறகு மலையாளத் திரைப்படங்களைத் தாண்டி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்த துல்கர் சல்மான் அங்கும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். தமிழ் திரையுலகில் துல்கர் சல்மான் ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் நடித்த அவர், அந்தப் படத்திலும் பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தினார்.
'வாயை மூடி பேசவும்' திரைப்பட ஸ்டில் மற்றும் கிங் ஆஃப் கொத்தாவில் வரும் துல்கர்
இதன் பிறகு ‘சோலோ’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ போன்ற படங்களில் நடித்தவர், பிறகு தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தினார். அதில், குறிப்பாக 2022-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தென்னிந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லாக துல்கர் சல்மானுக்கு அமைந்தது. அதேபோல், கடந்த ஆண்டு வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படமும் 100 கோடிக்கும் மேலான வசூலுடன் மாபெரும் வெற்றிபடமாக மாறியது. மேலும் ஓடிடியில் வெளியானபோதும், இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. இது தவிர, ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளராகவும் தனது திறமையை நிரூபித்துள்ள துல்கர் சல்மான், தனது தயாரிப்பு நிறுவனமான ‘வேஃபேரர் ஃபிலிம்ஸ்’ மூலம் ‘சல்யூட்’, ‘கிங் ஆஃப் கொத்தா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இப்படி சினிமாவில் பல வெற்றிப் படங்களையும் மறக்க முடியாத நடிப்புகளையும் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த துல்கர் சல்மான், தற்போது சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது அவரது ரசிகர்களிடத்தில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தோற்றம் புதிய பரிமாணம்
பொதுவாகவே துல்கர் சல்மானின் திரைப்படங்கள் பெரும்பாலும் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக தனது நடிப்புத் திறன், அழகு மற்றும் திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் திறன் மூலம் தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தை இவர் பிடித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி போன்ற பல்வேறு கோணங்களில் இவர் நடித்திருந்தாலும், இவரது கதாபாத்திரங்கள் எப்போதும் இயல்பாகவும், அனைவரும் தங்களை அதனுடன் இணைத்துக் கொள்ளும் வகையிலும் இருக்கும். அந்த வகையில் இவர் நடித்த ஒவ்வொரு படமும், ஒவ்வொரு உணர்வை நம்மிடம் கடத்திய படங்களாகவே இருக்கின்றன. அதில் குறிப்பாக 2015ஆம் ஆண்டு வெளியான ‘சார்லி’ திரைப்படத்தில், மர்மமும் வசீகரத்தன்மையும் நிறைந்த சார்லி எனும் கதாபாத்திரத்தை தனக்கே உரிய விதத்தில் உயிரோட்டமாக துல்கர் வழங்கியிருப்பார். அதிலும் இதில் இவரது உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு ஆகியவை பெரிதும் பாராட்டும்படியாக அமைந்திருக்கும். குறிப்பாக திரையில் ஒரு சுதந்திரப் பறவையைப் போல அவர் காணப்பட்ட விதம் ரசிகர்களை பெரிதும் வசீகரித்தது. ஆனால் அடுத்த ஆண்டே, அதற்கு மாறாக, ‘கலி’ படத்தில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் சித்தார்த் என்ற கதாபாத்திரத்தை மெய்சிலிர்க்கும் வகையில் கொண்டு வந்தார். இந்த கதாபாத்திரத்தில் அவரது கண்களின் வெளிப்பாடு, உடல் அசைவுகள், வசனத்தின் தாக்கம் ஆகியவை கோபத்தின் தீவிரத்தைக் கொண்டு சேர்க்கும் விதமாக இருந்தன. இது ரசிகர்களுக்கு ஆழமான அனுபவமாகவும் மாறியது.
‘கலி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ பட காட்சிகள்
அதேபோல் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ஆதி என்ற நவீன இளைஞனாக திரையில் தோன்றி காதலை மிகவும் இயல்பாக ஒரு கவிதையைப் போல அழகாக நம் மனதில் எழுதிய துல்கர், 2021ஆம் ஆண்டு வெளிவந்த ’குருப்’ படத்தில் சுகுமார குருப் என்ற மர்மமுள்ள கதாபாத்திரத்தில் தோன்றி யாருமே நினைத்து பார்க்க முடியாத ஒருவித திகிலை ஏற்படுத்தி அச்சமூட்டி இருந்தார். அதிலும் இப்படத்தில் அவரது பார்வை, பேச்சு, சிரிப்பு என எல்லாமே ஒரு குற்றவாளியின் மனநிலையை துல்லியமாக வெளிப்படுத்தி பெருமளவில் பாராட்டப்பட்டது. பிறகு மீண்டும் அடுத்த ஆண்டே நேர்மையான போலீஸ் அதிகாரியாக கடமையை உணர்ந்து அமைதியாக செயல்படும் அரவிந்த் கருணாகரன் கதாபாத்திரத்தில் ‘சலூட்’ படத்தில் சிறப்பாக தோன்றி நடித்தவர், 2022ஆம் ஆண்டு வெளிவந்த ‘சீதா ராமம்’ படத்தில் ராம் என்ற ராணுவ வீரனாக வந்து தேசப்பற்று, காதல், தியாகம் என பல உணர்வுகளை தனது நடிப்பில் வெளிப்படுத்தி கலங்க வைத்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் சீதாவுடனான அவரது காதல் காட்சிகள் நம் மனதை நெகிழ செய்ததோடு துல்கரின் நடிப்பு இந்த படத்தை ஒரு காவியமாக மாற்றியது. இது தவிர அவரது சொந்த தயாரிப்பில் வெளிவந்த ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் துல்கர் சல்மானின் நடிப்பில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இப்படத்தில் அவர் வெளிப்படுத்திய அதிரடி மற்றும் ஆக்ஷன் காட்சிகள், அவரை சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது . மேலும் கடந்த ஆண்டு வெளிவந்த ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் பாஸ்கர் என்ற நடுத்தர குடும்பத் தலைவராக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்த துல்கர், அப்பா கதாபாத்திரத்திலும் அசத்தியிருந்தார். பணத்துக்காக நேர்மையான ஒருவன் தடம் மாறும்போது ஏற்படும் பதற்றம், குடும்பத்துக்காக ஆரம்பித்து பணம் எனும் போதைக்கு அடிமையாவது என அனைத்து உணர்வுகளையும் அழகாகக் இப்படத்தில் கடத்தி இருந்த துல்கர், மொத்தப் படத்தையும் தன் நடிப்பால் தாங்கி பிடித்திருந்தார். இப்படி ஒவ்வொரு படத்திலும் புதிய தோற்றங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களை உணர்வுப்பூர்வமாக அணுகி நடித்துவரும் துல்கர், தற்போது ‘காந்தா’ என்கிற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
'காந்தா' துல்கர் மற்றும் ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா
எம்.ஆர். ராதா கெட்டப்பில் துல்கர்
துல்கர் சல்மான் தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, மம்முட்டியின் மகனாக மட்டும் அல்ல, திறமையான நடிகராகவும் தன்னை எப்போதுமே நிலைநிறுத்தி வருபவர். ஏற்கனவே நாக் அஸ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா ஆகியோருடன் இணைந்து நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தில் ஜெமினி கணேசனாக நடித்து தன் அபாரமான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த துல்கர், தற்போது ‘காந்தா’ திரைப்படத்திலும் ஒரு வித்தியாசமான விண்டேஜ் தோற்றத்தில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தப் போஸ்டரில் துல்கர் சல்மான், எம்.ஆர். ராதாவைப் போல் கோட்-சூட் அணிந்து, அவருக்கே உரிய முகபாவனைகளுடன் தோன்றியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இது ‘ரத்தக்கண்ணீர்’ படத்தின் ரீமேக்கா? அல்லது எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமா? என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த படத்தை ராணா டகுபதி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்க, செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் மற்றும் 'காந்தா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இதற்கு முன்பு ‘ஹன்ட் ஆஃப் வீரப்பன்’ வெப் தொடரின் கதையாசிரியராக பணியாற்றியவர். இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். துல்கர் சல்மான் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் 'காந்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு "இந்தப் படத்தில் நான், காலத்தால் அழியாத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது என் 13 வருட திரைப்பயணத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு!" என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்திருந்தார். அதேபோல் படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ் கூறுகையில்,"நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘காந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்களுக்குக் கொடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த திரைப்படம் துல்கரின் பயணத்தைப் போலவே பல பரிமாணங்களையும், சவால்களையும், அர்ப்பணிப்புகளையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இது அவருக்கு முக்கியமான படமாக நிச்சயம் அமையும்!" என குறிப்பிட்டிருந்தார். இவற்றை எல்லாம் பார்க்கும் போது இது நாம் யூகிக்கும் படியே எம்.ஆர். ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’ படத்தின் ரீமேக்காகதான் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தாலும், எப்போதுமே தனது ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களின் மனதில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறும் வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்திவரும் துல்கர் சல்மானுக்கு இந்த 'காந்தா' திரைப்படமும் அவரது திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.