பாடகி ஸ்ரேயா கோஷலின் இசைப்பயணம் - பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!

என்றும் மறக்க முடியாத ஒருவர், இசையரசி என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றவர், தமிழ் இசை உலகை இன்னும் ஆண்டு வரும் பாடகி ஸ்ரேயா கோஷல்.;

Update:2025-03-11 00:00 IST
Click the Play button to listen to article

1990 மற்றும் 2000-களில் தமிழ் திரையிசை ரசிகர்களை தனது இனிய குரலால் மயக்கிய பாடகிகள் பலர் இருந்தாலும், அவர்களில் சிலரின் குரல் தலைமுறைகளைக் கடந்தும் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நிலைத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் என்றும் மறக்க முடியாத ஒருவர், இசையரசி என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றவர், தமிழ் இசை உலகை இன்னும் ஆண்டு வரும் பாடகி ஸ்ரேயா கோஷல். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ள ஸ்ரேயா, தனது இசை நடையில் தனித்துவத்தைக் காட்டி, எண்ணற்ற ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். தனது பாடல்களுக்காக பல விருதுகளையும் பெற்ற இவர், திரைப்படப் பாடல்களுக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட இசை ஆல்பங்களிலும் குரல் கொடுத்து, இந்திய இசை உலகில் முக்கியமான பாடகியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தன் இனிய குரலால் இசை ரசிகர்களை இன்புறச் செய்யத் தவறாத ஸ்ரேயா கோஷல், 12.03.2025 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு நாளில், அவரது திரையிசைப் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர் பெற்ற விருதுகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆரம்பகால வாழ்க்கை


பாடகி ஸ்ரேயா கோஷல் 'ச ரி க ம ப'  இசை நிகழ்ச்சியில் பங்குபெற்ற தருணம்

இளம் வயதிலேயே மிகப்பெரிய புகழை பெற்ற பாடகியாக விளங்கும் ஸ்ரேயா கோஷல், 1984 மார்ச் 12ஆம் தேதி மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் பிஸ்வாஜித் கோஷல் மற்றும் சர்மிஸ்தா கோஷல். இவரது தந்தை இந்திய அணுசக்தி நிறுவனத்தில் மின்பொறியாளராக பணியாற்றியதால், குடும்பம் முழுவதும் ராஜஸ்தானின் கோட்டா நகரில் குடியேறியது. இதனால், ஸ்ரேயாவின் ஆரம்பக் கல்வி ராஜஸ்தானில் உள்ள ராவட்பட்டா அணுசக்தி மத்திய பள்ளியில் தொடங்கியது. பின்னர், மும்பையில் உள்ள SIES கலை, அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் கலைப்பிரிவில் பட்டம் பெற்றார். ஸ்ரேயா கோஷலுக்கு இசை ஆர்வம் குழந்தைத் தொட்டே இருந்தது. நான்கு வயதிலேயே இசைப் பயிற்சி தொடங்கிய அவர் முதலில் தன் தாயிடம் பாடல் பயிற்சி பெற்றார். பின்னர் பத்மஸ்ரீ விருது பெற்ற கல்யாண்ஜி பாயிடம் சங்கீதம் பயின்றார். 1995ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற அகில இந்திய லைட் வோக்கல் இசைப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். இதன் பின்னர் மும்பைக்கு குடிபெயர்ந்த ஸ்ரேயா, அங்கு மறைந்த பாடகர் முக்தா பாயிடம் இந்திய பாரம்பரிய இசையில் மேற்பயிற்சி பெற்றார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது 14ஆம் வயதில், 1998ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி, 14 பாடல்களைக் கொண்ட 'பெந்தேச்சி பீனா' என்ற தனது முதல் இசைத் தொகுப்பை வெளியிட்டார். இந்த இசைத் தொகுப்புக்கு கிடைத்த வரவேற்பின் பேரில், 'ச ரி க ம ப' என்ற பிரபலமான இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரது பாடல் திறமை அனைவரையும் கவர்ந்ததால், இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியால், ஸ்ரேயா கோஷல் இந்தியத் திரையுலகின் முக்கியமான பின்னணிப் பாடகியாக உயர்ந்து, தனது இனிமையான குரல் மூலம் கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் இதயங்களை வென்றார்.

திரையிசை உலகின் ராணி


‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் “முன்பே வா என் அன்பே வா” பாடலை பாடி தமிழில் புகழ்பெற்ற ஸ்ரேயா

தனது பதினாறு வயதில் ஸ்ரேயா கோஷல் பாலிவுட்டில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். அப்போது, பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற பாடகர் உதித் நாராயணனுடன் இணைந்து, "பைரி பியா" என்ற தனது முதல் பாடலை பாடினார். அந்தப் பாடல் அவரது இனிமையான குரலை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு, ஸ்ரேயா பல இந்திய மொழிகளில் தனது குரலால் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி, போஜ்புரி, குஜராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, உருது மற்றும் மலாய் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் தேன் மழையைப் பொழிந்தன. ஒவ்வொரு மொழியிலும், அவர் பாடிய பாடல்கள் அந்தந்த மண்ணின் கலாச்சாரம் மற்றும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக, தமிழில் அவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்களாக மாறின. தென்னிந்திய இசைத்துறையில் அவர் தனது பயணத்தை வஸந்தபாலன் இயக்கிய ‘ஆல்பம்’ திரைப்படத்தில் “என் செல்லம்” என்ற பாடலின் மூலம் தொடங்கினார். பின்னர், ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அவர் பாடிய “முன்பே வா என் அன்பே வா” பாடல் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.


'பிதாமகன்', 'விண்ணைத் தாண்டி வருவாயா' படங்களில் ஸ்ரேயா பாடிய "இளங்காத்து வீசுதே" மற்றும் "மன்னிப்பாயா" பாடல் காட்சிகள்

இது தவிர இசைஞானியுடன் சேர்ந்து 'ஜூலி கணபதி' படத்தில் "எனக்குப் பிடித்த பாடல்", 'பிதாமகன்' படத்தில் "இளங்காத்து வீசுதே", 'விருமாண்டி' திரைப்படத்தில் "உன்னவிட இந்த உலகத்துல உசந்தது ஒண்ணுமில்ல" என பல இனிமையான பாடல்களை பாடியவர், யுவன் சங்கர் ராஜா இசையில், '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் "நினைத்து நினைத்து பார்த்தால்", 'சண்டகோழி' படத்தில் "தாவணி போட்ட தீபாவளி", 'பருத்திவீரன்' படத்தில் கிராமத்து பின்னணியில் "அய்யய்யோ", போன்ற பாடல்களை பாடி, தனது தனித்துவமான குரலால் பலரின் உள்ளங்களை கொள்ளைக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், டி. இமான், ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து பல சிறப்பமான பாடல்களை வழங்கியுள்ள ஸ்ரேயாவுக்கு, 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் "மயிலாஞ்சி மயிலாஞ்சி", 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் "மன்னிப்பாயா", 'வெயில்' படத்தில் "உருகுதே மருகுதே", போன்றவை தனித்த அடையாளத்தை பெற்று தந்தன. மேலும், மேற்கண்ட இசையமைப்பாளர்களுக்கு அப்பாற்பட்டு மணிசர்மா, கார்த்திக் ராஜா, கீரவாணி, வித்யாசாகர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, விஜய் ஆண்டனி, தேவி ஸ்ரீ பிரசாத், சாம் CS, ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பல பாடல்களை பாடியுள்ள ஸ்ரேயா கோஷல், தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் தனித்துவமான முத்திரையை பதித்து, இனிய குரலால் தமிழ் திரையுலகில் தனது சிறப்புமிக்க இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

விருதுகளும் வெற்றிகளும்


"பைரி பியா" பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது பெற்ற ஸ்ரேயா

2002 ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘தேவதாஸ்’ திரைப்படத்தில் ஐந்து பாடல்களைப் பாடும் வாய்ப்பு ஸ்ரேயா கோஷலுக்கு கிடைத்தது. இதில் "டோலா ரே டோலா" என்ற பாடல் மூலம் புகழ் பெற்ற ஸ்ரேயா, தான் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும், சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம் பேர் விருதையும் வென்றார். இந்த விருது ‘தேவதாஸ்’ படத்தில் அவர் பாடிய "பைரி பியா" என்ற பாடலுக்காக கிடைத்தது. ‘தேவதாஸ்’ திரைப்படத்திற்கு’ பிறகு, ஸ்ரேயா கோஷல் பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி, இசைத்துறையில் தன் தனித்துவத்தைக் காட்டினார். அவர் பாடிய ‘பஹேலி’ (ஹிந்தி) திரைப்படத்தின் “தீரே ஜல்னா”, ‘ஜப்வீ மேட்’ (ஹிந்தி) திரைப்படத்தின் “யே இஷ்க் ஹாயே”, ‘ஜோக்வா’ (மராத்தி) திரைப்படத்தின் “ஜீவா டாங்க்லா” மற்றும் ‘அந்தஹீன்’ (பெங்காலி) திரைப்படத்தின் “பேராரி மோன்” ஆகிய பாடல்கள் தேசிய விருது பெற்ற சிறப்புமிக்க பாடல்களாக உள்ளன. இதற்கு பிறகு 2003, 2004, 2008, 2009, 2016, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் எட்டு ஃபிலிம்பேர் விருதுகளை பெற்ற இவர், பல்வேறு மாநில அரசு விருதுகளையும் வென்றவர் ஆவார். தென்னிந்தியத் திரைப்படத் துறையிலும் மிகுந்த அங்கீகாரம் பெற்ற ஸ்ரேயா, ஏழு ஃபிலிம்பேர் சௌத் விருதுகளையும், IIFA, ஜீ சினி, ஸ்க்ரீன், அப்சரா, மிர்ச்சி மியூசிக் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்று பாராட்டுகளை பெற்றுள்ளார்.


பாடகி ஸ்ரேயா கோஷல்

மேலும் 2010-ஆம் ஆண்டு, ஸ்வராலயா யேசுதாஸ் விருது அவருக்கு வழங்கப்பட்டதோடு, அமெரிக்காவின் ஓஹியோ மாநில ஆளுநர் டெட் ஸ்ட்ரிக்லாண்ட், ஜூன் 26ஆம் தேதியை "ஸ்ரேயா கோஷல் தினம்" என அறிவித்தது, அவரது புகழுக்கு ஒரு வைர கிரீடமாக அமைந்தது. இசை தவிர, 2003-ஆம் ஆண்டு ‘சாயா’ திரைப்படத்தில் “ஹர் தரஃப்” பாடலை பாடும்போது திரையிலும் தோன்றியுள்ள ஸ்ரேயா, 2011-ஆம் ஆண்டு ஆபரணக் கடை விளம்பரங்களில் ஐந்து மொழிகளில் (ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம்) நடித்தும் புகழ் பெற்றார். அத்துடன், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக செயல்பட்டு, இளம் பாடகர்களை ஊக்குவித்து வரும் அவர், 2015-ஆம் ஆண்டு தனது பால்ய நண்பரான ஷிலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேவ்யான் என்ற மகன் உள்ளார். பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, இசை ரசிகர்களின் இதயங்களை வென்ற ஸ்ரேயா கோஷல், தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இத்தகைய திறமைசாலிக்கு ராணி குழுமம் தனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது!

Tags:    

மேலும் செய்திகள்