காந்தாரா நாயகனுக்கு காதல் பரிசு!

கிராமத்தில் பிறந்த ரிஷப் ஷெட்டி கல்லூரியில் படிக்கும் போதே ‘யக்ஷகானா’ மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார்

Update:2023-07-25 09:45 IST
Click the Play button to listen to article

காதல் கணவருக்கு ‘அறக்கட்டளை’ பரிசு

ரிஷப் ஷெட்டி

காந்தாரா படம் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ரிஷப் ஷெட்டி. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கெராடி கிராமத்தில் பிறந்த ரிஷப் ஷெட்டி கல்லூரியில் படிக்கும் போதே ‘யக்ஷகானா’ மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். யக்ஷகானா என்பது கர்நாடக மாநிலத்தின் நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்று. இது நமது தமிழ்நாட்டின் தெருக்கூத்தனை ஒத்த ஒரு நாடகக்கலை வடிவமாகும். அந்த நாடகக்கலையில் கிடைத்த வெற்றிதான் அவருடைய சினிமா ஆசையை துளிர்விட செய்தது.

அறிமுகம்

கல்லூரிப் படிப்புக்கு பின் அவர் வாட்டர் கேன் விற்பனை, ரியல் எஸ்டேட், ஹோட்டல் பணி என பல்வேறு வேலைகளை செய்து வந்தார். இதற்கிடையே சினிமா வாய்ப்புகளையும் தேடி வந்தார். அவர் வேலை செய்து கொண்டே பெங்களூரு அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிலையத்தில் டிப்ளமோ பட்டமும் பெற்றார்.


துக்ளக் படத்தில் ரிஷப் ஷெட்டி

‘துக்ளக்’ என்ற கன்னடப் படத்தில் 2012 இல் வில்லனாக அறிமுகமான ரிஷப் ஷெட்டி. சில படங்களில் சிறு வேடங்களில் நடித்த பிறகு, ரக்ஷித் ஷெட்டி இயக்கிய ‘உலிதவரு கண்டந்தே’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு ‘கிரிக் பார்ட்டி’ மூலம் இயக்குநராக அவதானித்தார். இந்த படம் தொழில் ரீதியாக வெற்றி பெற்றது. ‘பெல் பாட்டம்’, ‘கருட கமன விருஷப வாகனா’ ஆகிய படங்கள் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரையும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. இவ்விதம் கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் என சுறுசுறுப்புடன் முன்னேறி வந்தார்.

காந்தாரா

2022 ஆம் ஆண்டு ‘காந்தாரா’ படத்தை இயக்கி நடித்ததோடு தயாரிப்பிலும் பங்கு கொண்டார். இந்த படம் முதலில் கன்னடத்தில் மட்டுமே வெளியானது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பிற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ‘காந்தாரா’ படம் மூலம் ரிஷப் ஷெட்டி இந்திய அளவில் மிகவும் பிரபலமாகி விட்டார்.


காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி

காதல் திருமணம்

ரிஷப் ஷெட்டி முதன் முறையாக இயக்கிய ‘ரிக்கி’ படத்தில் அவரது நண்பரான ரக்ஷித் ஷெட்டி நடித்திருந்தார். ரக்ஷித் ஷெட்டியின் ரசிகராக இந்த படத்தை பார்க்க வந்திருந்த இடத்தில் பிரகதி ஷெட்டி எதேச்சையாக அங்கு வந்திருந்த படக்குழுவினரை சந்தித்தார். அப்போது பிரகதி ஷெட்டியின் முகம் ஏற்கனவே பரிட்சயமானது போல் உள்ளதே என்று ரிஷப் ஷெட்டி யோசித்தார். பின்னர் அவருடைய ‘பேஸ்புக்’ தளத்தில் சென்று பார்த்தபோதுதான் பிரகதி ஷெட்டி ஏற்கனவே ஃபாலோ ரிக்வஸ்ட் கொடுத்திருந்ததைக் கண்டார்.


பிரகதி ஷெட்டியுடன் ரிஷப் ஷெட்டி

 இப்படி சமூக வலைதளம் வழியே மலர்ந்த நட்பு காதலாக கனிந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு கல்யாணம் குறித்த பேச்சு வந்தபோது முதலில் பிரகதி வீட்டில் ரிஷப் ஷெட்டியின் சினிமா பின்புலத்தை காரணம் காட்டி மறுத்தனர். இருப்பினும், இருவரும் காதலில் உறுதியுடன் நின்று 2020 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

பிறந்தநாள் பரிசு

பிரகதி ஷெட்டி தனது காதல் கணவரான ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளான ஜூலை 7 ஆம் தேதி ‘ரிஷப் பவுண்டேஷன்’ என்ற ஒரு அறக்கட்டளையை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளித்திருக்கிறார்.


ரிஷப் ஷெட்டி பவுண்டேசன்ஸ் லோகோ

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகதி ஷெட்டி, "ரிஷப் ஷெட்டி ஏற்கனவே அரசுப் பள்ளிகளுக்கு நிறைய உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய இந்த சமூக பங்களிப்புக்கு உதவும் வகையில் அதிகாரப்பூர்வமாக ஒரு அறக்கட்டளையை நிறுவ வேண்டும் என நினைத்து இந்த அறக்கட்டளையை நிறுவியிருக்கிறோம். இதன்மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்கு பங்களிப்பு அளிக்க முடியும். இந்த அறக்கட்டளை குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படும்” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி பேசுகையில், “சினிமா துறையில் சாதிக்க வேண்டுமென ஒரு கிராமத்திலிருந்து வந்த இளைஞனுக்கு நீங்கள் அளிக்கும் அன்பு அளப்பரியது. குறிப்பாக ‘காந்தாரா’ படத்திற்கு பிறகு நீங்கள் செலுத்தும் அன்பை நான் எப்படி கையாள்வது என்றே எனக்குத் தெரியவில்லை. உங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு மிக்க நன்றி” என முத்தாய்ப்பாக கூறி முடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்