நடுவிரலை காட்டியபடி சமந்தா புகைப்படம்! விஜய்யின் கடைசி படம் 100% கமர்ஷியல்தான்! - திரைத்துளி
‘நீண்ட வருடங்களுக்குப் பிறகு எனது தலைசிறந்த வழிகாட்டியான அஜித்குமார் சாரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என கேப்ஷனிட்டு எஸ்.ஜே சூர்யா பகிர்ந்த புகைப்படம்தான் தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த வாரம் முழுவதும் நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து சமந்தாவின் ரியாக்ஷனுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு டைமிங் கன்டென்ட் கொடுத்திருக்கிறார் சமந்தா. அதேபோல் 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஒரு தமிழ் படத்திற்குக்கூட தேசிய விருது கிடைக்காத நிலையில் இந்த ஆண்டு 2 தமிழ்ப்படங்களுக்கு 6 விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எந்தெந்த படங்கள் மற்றும் யார் யாருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்தும் இப்பகுதியில் பார்க்கலாம்.
ஹெச். வினோத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்!
முழுநேர அரசியலில் ஈடுபட தயாராகிவரும் விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே இவருடைய கடைசி படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்நிலையில் விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாக சமீபத்திய விழா ஒன்றில் அவர் தெரிவித்திருக்கிறார். கடைசி படம் என்பதால், படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாகத்தான் இருக்கவேண்டும் என்றும், படத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது அரசியல்வாதியையோ தாக்கும் காட்சிகள் இடம்பெறக்கூடாது என்றும் விஜய் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம்.
விஜய்யின் கடைசி பட அப்டேட் கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத்
அதனால் அனைத்து தரப்பினரும் பார்க்கும்விதமாக லைட்டான கதையுடன் 100% கமர்ஷியல் படமாகத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் ‘இளைய தளபதியை’ மீண்டும் திரையில் பார்க்கலாம் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ‘கோட்’ ரிலீஸுக்குப் பிறகு இப்படம் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமந்தாவின் நியூ போஸ்ட்!
நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் நடந்ததிலிருந்தே சமூக ஊடகங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது சமந்தாவின் ரியாக்ஷன்தான். ஆனால் கடந்த வாரம் முழுவதும் அதுகுறித்து கண்டுகொள்ளாத சமந்தா, எப்போதும்போல், வழக்கமான போஸ்ட்டுகளையே போட்டுவந்தார். இதனால் சமந்தாவே அதை கண்டுகொள்ளவில்லை என ரசிகர்கள் ஒருபுறம் அமைதியாகிவிட, அடுத்து ‘சிட்டாடல்’ வெப் தொடரின் இயக்குநர் ராஜ் என்பவரை சமந்தா டேட்டிங் செய்து வருவதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது.
சமந்தாவின் இன்ஸ்டா போஸ்ட் - நாக சைதன்யா, சோபிதா நிச்சயதார்த்த புகைப்படம்
அதுவரை அமைதி காத்த சமந்தா, திடீரென, The museum of peace and quiet என்ற வாசகம் பதியப்பட்ட டீஷர்ட்டை அணிந்துகொண்டு நடுவிரலை புருவத்தின்மேல் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார். இது சமந்தாவின் திருமணம் பற்றிய வதந்திகளுக்கா அல்லது நாக சைதன்யா - சோபிதாவிற்கா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்த பதிவை கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் லைக் செய்திருக்கின்றனர்.
ஆஸ்கரே கொடுத்தாலும் நடிக்கமாட்டேன்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இப்போது இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கவனம் செலுத்திவருகிறார். தமிழிலும் அறிமுகமாக கதைகளை கேட்டுவருகிறார். விரைவில் ஸ்ரீதேவியின் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனது அம்மா குறித்த நினைவலைகளை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே ஜான்வியின் நீண்ட தலைமுடியை பராமரிக்க 4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வாராம் ஸ்ரீதேவி.
தனது அம்மா ஸ்ரீதேவி குறித்து ஜான்வி கபூர் பேசியபோது
முதல் படத்தில் நடிப்பதற்காக சிறிது முடியை வெட்டியபோது மிகவும் கோபப்பட்டாராம். அதனாலேயே ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றாலும்கூட மொட்டை அடித்து மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும் தனது அம்மா இப்போது இல்லாவிட்டாலும் தலைமுடியை பராமரிப்பதில் தான் அதிக கவனம் செலுத்திவருவதாகவும் ஜான்வி தெரிவித்திருக்கிறார்.
விஜய்யின் ப்ராண்டு நியூ கார்!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியதிலிருந்தே இறக்குமதி வரி, நுழைவு வரி போன்ற பல்வேறு சிக்கல்கள் அவருக்கு ஏற்பட்டன. இருப்பினும் பல கார்கள் இருந்தாலும் இந்த காரின்மீது விஜய்க்கு அலாதி பிரியமாம். இந்நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கார் 2.6 கோடிக்கு விற்பனைக்கு வந்தது. இதையடுத்து லெக்சஸ் LM சீரிஸ் காரை விஜய் புதிதாக வாங்கியிருக்கிறாராம்.
விஜய்யின் லெக்சஸ் LM சீரிஸ் புதிய கார்
இதன் விலை 2.5 கோடி என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் விஜய் வீட்டிலிருந்து இந்த கார் வெளியேவரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகின. இந்த காரிலும் பல்வேறு ஆடம்பர தொழில்நுட்ப வசதிகள் இருக்கிறதாம். கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் இதே காரைத்தான் சமீபத்தில் வாங்கியிருக்கிறாராம்.
மீண்டும் ‘வாலி’ காம்போ?
‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பானது ஹைதராபாத்திலிருக்கும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்திருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. ‘நீண்ட வருடங்களுக்குப் பிறகு எனது தலைசிறந்த வழிகாட்டியான அஜித்குமார் சாரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என கேப்ஷனிட்டு எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த புகைப்படம்தான் தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை சந்தித்த எஸ்.ஜே. சூர்யா
காரணம், ‘வாலி’ படத்தில் தன்னை இயக்குநராக்கி அழகு பார்த்தவர் அஜித்தான் என எஸ்.ஜே. சூர்யா பலமுறை கூறியிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் ‘விடா முயற்சி’ அல்லது ‘குட் பேட் அக்லி’யில் அஜித்துக்கு வில்லனாகிறாரா எஸ்.ஜே. சூர்யா என கமெண்ட் செய்துவருகின்றனர். சமீபகாலமாகவே பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாகிவரும் எஸ்.ஜே. சூர்யாவை அஜித்துடன் திரையில் பார்க்க ஆவலாக இருக்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.
HAPPIEST MOMENT AFTER SO MANY YEARS WITH MY MENTOR #AK THE GREAT pic.twitter.com/J8JzcbXYO3
— S J Suryah (@iam_SJSuryah) August 15, 2024
70வது தேசிய விருதுகள்!
ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஒரு தமிழ்ப்படத்திற்குக்கூட விருது கிடைக்காத நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளில் ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சிறந்த நடிகைக்கான விருதானது ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய விருது பெற்றிருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படங்கள்
அதேபோல் சிறந்த பின்னணி இசைக்கான விருது ‘பொன்னியின் செல்வன்1’ படத்திற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கும், அதே படத்திற்கு சிறந்த ஒலி வடிவமைப்பிற்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும் கிடைத்துள்ளது. சிறந்த நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்கு பெறுகின்றனர். சிறந்த தமிழ் படத்திற்கான விருதை ‘பொன்னியின் செல்வன் 1’ பெறுகிறது. இதன்மூலம் தமிழ் சினிமாவை பொருத்தவரை இரண்டு படங்களுக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன.