மாஸ், கிளாஸ், பாஸ், ஃப்யூஸ் - 2024 தமிழ் திரைப்படங்கள் ஒரு ரீவைண்ட்
2024-ம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் பல திருப்பங்கள் நிகழ்ந்த ஒரு ஆண்டாக அமைந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்ததை விடவும் மேலாக, பல படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன.
2024-ம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் பல திருப்பங்கள் நிகழ்ந்த ஒரு ஆண்டாக அமைந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்ததை விடவும் மேலாக, பல படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. சிறிய பட்ஜெட்டில் உருவான சில படங்கள் தங்களது திரைக்கதையின் வலிமையால் பெரும் வரவேற்பை பெற்றன. ஆனால், அதே சமயம் பெரிய பட்ஜெட்டில் உருவான சில படங்கள் ரசிகர்களை ஏமாற்றியதும் உண்மை. இந்த கட்டுரையில், 2024-ல் வெளியான படங்களை மாஸ், கிளாஸ் மற்றும் கலவையான விமர்சனங்களை பெற்ற படங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.
மாஸ் ஹிட் அடித்த படங்கள்
தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்: தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் GOAT என்கிற ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம். முன்னாள் சிறப்புப் படையின் அதிகாரியான எம்.எஸ்.காந்தி தனது கடந்த கால செயல்களால் ஏற்பட்ட பிரச்சினைகளால் தனது மகனை தொலைக்கிறார். பிறகு மீண்டும் தனது மகனை சந்திக்கும் போது அவரது வாழக்கையில் ஏற்படும் பாதிப்புகள்தான் படத்தின் மையக்கரு. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, ஆக்ஷனில் கலக்கி இருந்தாலும், கதாபாத்திர வளர்ச்சி குறித்த விமர்சனங்களும் ரசிகர்களிடம் எழுந்தன. இருப்பினும் இப்படம் 2024-ல் அதிக வசூல் செய்த தமிழ் படமாகவும், உலகளவில் வெற்றி பெற்ற படமாகவும் இருந்தது. குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த "விஸில் போடு" மற்றும் "சின்ன சின்ன கண்கள்" பாடல்கள் ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்ததோடு, மறைந்த நடிகர் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு மூலம் படத்தில் இடம்பெற்றது சிறப்பான அம்சமாக பார்க்கப்பட்டது.
'கோட்' திரைப்படத்தில் விஜய் மற்றும் AI தொழில்நுட்பத்தில் வரும் விஜயகாந்த்
அமரன்: 2024 தீபாவளி நாள் அன்று வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் 'அமரன்'. இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை வாழ்க்கையை திரையில் கொண்டு வந்து பிரமிப்பை ஏற்படுத்திய இப்படம் விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தில், சிவகார்த்திகேயன் முகுந்தாகவும், சாய் பல்லவி அவரது மனைவி ரெபக்கா வர்கீசாகவும் நடித்து இருந்தனர். ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கை, அவரது காதல், தியாகம் மற்றும் நாட்டுப்பற்றை உணர்ச்சிகரமாக சொல்லி வெளிவந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசைக்கு பெரியளவில் பாராட்டுகள் குவிந்தன. வணிக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்து 2024-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் இரண்டாவது இடம் பிடித்தது.
அமரன் படக் காட்சி
மகாராஜா: விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளிவந்து இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘மகாராஜா’. தன் மகளுக்கு நடந்த பாலியல் கொடுமைக்கு எதிராக ஒரு தகப்பன் எடுக்கும் அதிரடி செயல்கள்தான் இப்படத்தின் கதை. அதனை வித்தியாசமான கோணத்தில் இயக்குநர் நிதிலன் சாமிநாதன் படமாக்கிய விதம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. குறிப்பாக இதில் விஜய் சேதுபதி தனது சிறப்பான நடிப்பால் மகாராஜாவாகவே வாழ்ந்து பலரையும் கலங்க வைத்திருந்தார். அவருடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி சுப்ரமணியம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற அதேவேளையில், சீனாவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.
'மகாராஜா' திரைப்படத்தில் விஜய் சேதுபதி
அரண்மனை 4: 'அரண்மனை' திரைப்படத் தொடரின் நான்காவது பாகமாக வெளிவந்து இந்த ஆண்டு சூப்பர் ஹிட் ஆன படம் 'அரண்மனை 4' சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, கோவை சரளா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அசாமில் நடக்கும் ஒரு மர்மமான சம்பவம், செல்வி என்ற பெண்ணின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடுகிறது. அவளுடைய குடும்பத்தில் தொடர்ந்து நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை கதாநாயகன் எப்படி கண்டறிந்து சரி செய்கிறான் என்பது தான் படத்தின் கதை. திகில் கலந்த நகைச்சுவை படமாக வெளிவந்த இப்படம் ரிலீசிற்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் படம் வெளியான பின், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
'அரண்மனை 4' திரைப்படத்தில் கோவை சரளா, யோகிபாபு மற்றும் விடிவி கணேஷ்
டிமான்டி காலனி 2: 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படம் அனைவரையும் திகிலூட்டிய நிலையில், அதன் இரண்டாம் பாகம் இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த திரைப்படத்தையும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவே இயக்கியிருந்தார்.முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் திரைக்கதை திருப்பங்களும் பரபரப்பான காட்சிகளும் பார்வையாளர்களை மிரள வைத்தன. குறிப்பாக, சாம் சி.எஸ்சின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தின் தொடர்ச்சியாக, ‘டிமான்டி காலனி’ தொடரின் மூன்றாம் பாகம் உருவாக்கப்பட இருப்பதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்படி ‘டிமான்டி காலனி 3: தி எண்ட் இஸ் டூ ஃபார்’ என்ற தலைப்பில் மூன்றாம் பாகத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது.
'டிமான்டி காலனி 2'-ல் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர்
கிளாஸாக சாதித்த படங்கள்
லப்பர் பந்து: இந்த ஆண்டு எதிர்பார்ப்பே இல்லாமல் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘'லப்பர் பந்து'. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் முதல் படைப்பாக வெளிவந்த இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், 'அட்டகத்தி' தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிரிக்கெட் மற்றும் குடும்ப உறவுகளின் பின்னணியில், படத்தின் நாயகன் அன்பு, தனது காதல், கிரிக்கெட் ஆர்வம் மற்றும் சமூக சவால்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த இப்படம் உணர்வுபூர்வமாக பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தது. குறிப்பாக இத்திரைப்படத்தில், அட்டகத்தி தினேஷ் 'கெத்து' என்ற கதாபாத்திரத்தில் தீவிர விஜயகாந்த் ரசிகராக வருவார். அப்போது அவருக்கான பில்ட்டப் பாடலாக விஜயகாந்த் நடித்த 'பொன்மனச் செல்வன்' படத்தின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' பாடல் இடம் பெற்றிருந்த விதம் பலரால் வெகுவாக ரசிக்கப்பட்டது.
'லப்பர் பந்தில்' அன்பாக ஹரிஷ் கல்யாண் மற்றும் கெத்தாக அட்டகத்தி தினேஷ்
மெய்யழகன்: ‘96’ புகழ் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த படம் 'மெய்யழகன்'. சொத்து பிரச்சினையால் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வரும் அரவிந்த் சுவாமி, சில ஆண்டுகளுக்கு பின் தன் தங்கையின் திருமணத்திற்காக தனது பூர்வீகமான தஞ்சாவூரில் உள்ள நீடாமங்கலத்திற்குச் செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் ஒரு இளைஞன் (கார்த்தி) அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறான் என்பதுதான் படத்தின் கதை. இதில் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டதோடு, படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பலரின் மலரும் நினைவுகளை தூண்டி கண்கலங்க செய்திருந்தது. இருப்பினும் கதையின் வேகம் மெதுவாக இருப்பதாக சிலர் விமர்சிக்கவே திரையரங்கில் இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தும் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியான போது விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெகுவாக பாராட்டப்பட்டது.
மெய்யழகனில் எதார்த்தமான நடிப்பால் நம்மை ரசிக்க வைத்த கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி
கருடன்: ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில், வெற்றிமாறன் மற்றும் கே. குமார் இணைந்து தயாரித்து இந்த ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன படம் 'கருடன்'. சூரி, எம். சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் கொம்பை என்ற கிராமத்தை மையமாகக் கொண்டு, சிறுவயதில் இருந்து நண்பர்களாக இருக்கும் கருணா மற்றும் ஆதி ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து வெளிவந்த இப்படத்தில் நடிகர் சூரி சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி மிரட்டி இருந்தார். நட்பு, நன்றி மறவா தன்மை, நம்பிக்கை துரோகம் என்ற வழக்கமான பாணியில் படத்தின் கதை அமைந்திருந்த போதும், திரைக்கதையில் மாஸ் கிளப்பி இயக்குநர் படத்தை கையாண்டிருந்த விதம் பலரால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மேலும் பலம் சேர்த்தது.
'கருடன்' திரைப்படத்தில் சொக்கனாக வரும் நடிகர் சூரி
வாழை: இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் 'வாழை'. தனது சிறுவயதில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு மாரி செல்வராஜ் எடுத்திருந்த இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல், சிறுவன் பொன்வேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிராமப்புற வாழ்க்கையின் யதார்த்தங்களை, குறிப்பாக வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை நுணுக்கமாக பதிவு செய்திருந்த இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் திரைக்கு வந்த முதல் நாளிலேயே விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் 'வாழை' படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, சமூக சிந்தனையைத் தூண்டும் விதமாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த விதம் பலரால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
'வாழை' திரைப்பட காட்சி
விடுதலை பாகம் 2: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை பாகம் 2 திரைப்படம், இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்துக்கு இசைஞானி இளையராஜாவின் இசை கூடுதல் அழகையும் ஆற்றலையும் சேர்த்தது. விடுதலை தொடரின் இரண்டாம் பாகமாக வந்த இந்த படம், முதல் பாகத்தின் கதையைத் தொடர்ந்து, ஒரு கிராமத்து மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில் பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம், புலவர் கலியபெருமாள் மற்றும் பொன்பரப்பி தமிழரசரை நினைவூட்டும் விதமாக அமைந்திருப்பது கவனத்தை ஈர்த்தது. படத்தின் முதல் பாதி சிலரால் விமர்சிக்கப்பட்டாலும், வெற்றிமாறனின் இந்த துணிச்சலான படைப்பு விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுகளை பெற்றது.
'விடுதலை பாகம் 2'-ல் பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி
பாஸ் ஆன மற்றும் ஃப்யூஸ் போன படங்கள்
இப்படி இந்த ஆண்டு மாஸாகவும், கிளாஸாகவும் பல படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மனதை கவர்ந்த வரிசையில் தனுஷின் 50வது படமாக வெளிவந்த ராயன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’, இளைஞர்களின் காதல் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூழல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘லவ்வர்’, கிரிக்கெட்டை மையமாக கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிப்பட்ட ‘ப்ளூ ஸ்டார்’, அருண் விஜய் நடித்த முழு நீள ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த ‘மிஷன்: சாப்டர் 1’, ஒரு பெண்ணின் சுயாதீன வாழ்க்கை மற்றும் அதற்கான போராட்டத்தை விவரித்த ‘ரசவாதி’, நட்சத்திர நடிகராக முயற்சிக்கும் ஒருவரின் வாழ்க்கை மற்றும் அதன் இருள் பக்கங்களை விளக்கிய ‘ஸ்டார்’, கருப்பு நிறத்தை மையமாக கொண்டு திகில் திரைப்படமாக வெளிவந்த ‘பிளாக்’ போன்ற படங்களும் ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்தன. இது தவிர ஊர்வசி நடிப்பில் வெளிவந்த ‘ஜே பேபி’, சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த ‘போட்’, கூத்துக் கலையின் குரலாக ஒலித்த ‘ஜமா’, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்த ‘கொட்டுக்காளி’, விமல் மற்றும் கருணாஸ் இணைந்து நடித்த ‘போகுமிடம் வெகுதூரம் இல்லை’, சசிகுமார் நடித்த ‘நந்தன்’, சதீஷ் நடிப்பில் திரில்லர் திரைப்படமாக வெளிவந்த ‘சட்டம் என் கையில்’ போன்ற படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாத போதிலும் விமர்சன ரீதியாக பலரின் பாராட்டுகளை பெற்றன.
‘கொட்டுக்காளி’ மற்றும் ‘சட்டம் என் கையில்’ திரைப்பட காட்சிகள்
இருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த ‘அயலான்’, ‘லால் சலாம்’, ‘கேப்டன் மில்லர்’, ‘சைரன்’, ‘ரத்னம்’, ‘டீன்ஸ்’, ‘ரகு தாத்தா’, ‘பிரதர்’ போன்ற திரைப்படங்கள் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. இதில், குறிப்பாக மிகப்பெரிய பட்ஜெட்டில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’, ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’, சீயான் விக்ரம் நடித்த ‘தங்கலான்’, சூர்யா நடித்த ‘கங்குவா’ போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. ஆனால், டப்பிங் செய்யப்பட்ட திரைப்படங்களாகவும், பான் இந்தியா படங்களாகவும் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘புஷ்ப 2’, ‘கல்கி 2898 ஏ.டி’ போன்ற படங்கள் இந்திய அளவில் வெற்றி பெற்றதோடு, தமிழ்நாட்டிலும் அதிக வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.