"நாஸ்கா கோடுகளை" வரைந்தது யார்? 2000 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்! ஏலியன்கள் செயலா?

நமது பூமி பல வித்தியாசமான கோட்பாடுகளாலும், மர்மான விஷயங்களாலும் நிறைந்துள்ளது. இயற்கை அதிசயங்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசயங்களும் நம்மை ஆச்சரியப்படுத்த ஒருபோதும் தவறுவது இல்லை. பல விசித்திரமான விஷயங்களைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும், நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் உலகில் ஏராளம் உள்ளன.

Update:2025-01-14 00:00 IST
Click the Play button to listen to article

நமது பூமி பல வித்தியாசமான கோட்பாடுகளாலும், மர்மான விஷயங்களாலும் நிறைந்துள்ளது. இயற்கை அதிசயங்களும் மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசயங்களும் நம்மை ஆச்சரியப்படுத்த ஒருபோதும் தவறுவது இல்லை. பல விசித்திரமான விஷயங்களைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும், நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் உலகில் ஏராளம் உள்ளன. பெர்முடா முக்கோணம் முதல் பொம்மைகளின் தீவு வரை, வளைந்த மரங்கள் கொண்ட காடு முதல் அமெரிக்காவின் ஏரியா 51 வரை இந்த பட்டியலில் நீள்கிறது. அப்படி தெற்கு பெருவின் உயரமான பாலைவன பகுதிக்கு மேற்பரப்பில், பாறைகள் மற்றும் மணல்களின் மேலே 2000 ஆண்டுகள் பழமையான ஒரு பறந்து விரிந்த கோடுகளால் ஆன அமைப்பை காணமுடியும். ஆனால் அது யாரால் போடப்பட்டது? எப்படி உருவானது? என்பது குறித்த மர்மம் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.


2000-ஆம் ஆண்டுகள் பழமையான நாஸ்கா கோடுகள் 

நாஸ்கா கோடுகள் இருக்கும் இடம் 

தென் அமெரிக்காவில் உள்ள நவீன நகரமான நாஸ்காவிற்கு அருகே லிமாவிற்கு தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள பெருவின் பகுதியில் இந்த கோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 800-க்கும் மேற்பட்ட நேர்கோடுகள், 300 வடிவியல் உருவங்கள் மற்றும் 70 விலங்கு மற்றும் தாவர வடிவமைப்புகள் இந்த இடத்தில்  காணப்படுகின்றன. வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே இந்த உருவங்களை அடையாளம் காண முடியும். நேரில் பார்க்கும்போது இந்த கோடுகள் சாதாரணமாகவே காட்சி அளிக்கும். ரியோ கிராண்ட் டி நாஸ்கா என்ற நதிக்கரை நாகரீகத்தை சேர்ந்த நாஸ்கா இன மக்கள் உலகின் எந்த பகுதிகளிலும் இல்லாத வினோதமான உடை, கைவினை பொருட்களை கொண்டுள்ளனர். தரையில் வரையப்படும் பெரிய அளவிலான ஓவியங்கள் அதாவது Geoglyphs என்ற ஓவியங்களை வரைவதில் சிறந்து விளங்கியுள்ளனர். மேலும் நாஸ்கா இன மக்கள், காடுகளை பெருமளவில் அழித்து வாழ்ந்ததால் பின்னாட்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அந்த இனமே அழிந்து போனதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. 


ஏலியன்களால் உருவாக்கப்பட்டவை என்று ஆரம்பத்தில் நம்பப்பட்ட நாஸ்கா கோடுகள் 

மர்மம் நிறைந்த "பயோமார்ப்ஸ்"

கோடுகளால் ஆனா உருவங்களை 'பயோமார்ஃப்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர். சில நேர்கோடுகள் 30 மைல்கள் வரைகூட  செல்கின்றன. அதே சமயம் பயோமார்ஃப்கள் 50 முதல் 1200 அடி நீளம் வரை உள்ளன. சிலந்தி, ஹம்மிங்பேர்ட், கற்றாழை, குரங்கு, திமிங்கிலம், லாமா, வாத்து, பூ, மரம், பல்லி, நாய் போன்ற விலங்குகள் மற்றும் தாவர உருவங்களை இங்கு அதிகம் காணலாம். இதில் முக்கிய கவனம் பெரும் உருவம் ஒன்று உள்ளது. ஒரு மலையில் ஒரு பக்கம் முழுவதிலும்  'தி அஸ்ட்ரோனாட்' என்ற புனைப்பெயர் கொண்ட மனித உருவம் அமைந்துள்ளது. அவ்வளவு பெரிய உருவத்தை எப்படி உருவாக்கி இருக்க முடியும் என்ற மர்மம் இன்றும் முழுதாக விளங்கவில்லை.



நாஸ்காவில் இருக்கும் கோடுகளின் சின்னங்கள் 

நாஸ்கா கோடுகளில் நடந்த ஆராய்ச்சிகள் 

தொல்பொருள் ஆய்வாளர்கள் 1926ஆம் ஆண்டில் பல கிலோமீட்டர்கள் நீண்டு வரையப்பட்ட இக்கோடுகளை ஆராய்ச்சி செய்த பின் இதற்கு நாஸ்கா கோடுகள் எனப்பெயரிட்டனர். இக்கோடுகளின் நீளம் சுமார் 30 கிலோமீட்டர்கள் ஆகும். பின்னாட்களில் 1930-ஆம் ஆண்டில் பெரு நாட்டின் வானூர்திப் படையினர் இப்பகுதியனை வான்பரப்பிலிருந்து பார்த்த போது ஆச்சர்யத்தில் அதிர்ந்து போயினர். காரணம் அந்த கோடுகள் அனைத்தும் பல்வேறு உருவங்களில் வரையப்பட்ட ஓவியங்களாக இருந்துள்ளன. வண்ணத்து பூச்சி, தேரை, குரங்கு, பறவை மற்றும் திமிங்கிலம் போன்ற உருவங்கள் அதில் காணப்பட்டுள்ளன. அப்போதுதான் இவை சாதாரணக் கோடுகள் அல்ல, இதில் பல மர்மங்கள் ஒளிந்துள்ளதை உலகம் அறிந்துகொண்டுள்ளது.  


பல உருவங்களை பிரதிபலிக்கும் நாஸ்கா கோடுகள் 

வறட்சியினால் உருவான கோடுகள் 

வானில் இருந்து பார்த்தால் மட்டுமே தெளிவாகத் தெரியும்படி வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக வரையப்பட்டது எப்படி சாத்தியம் என இன்றும் பல ஆய்வாளர்கள் விளக்கம் இன்றி குழப்பமுற்றுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட இந்த ஓவியங்கள் தரையில் உள்ள பாறைகளை நகர்த்தி, நிலங்களை தோண்டி சமமான அளவில் வரையப்பட்டுள்ளன. பெரு நாட்டின் இந்த நாஸ்கா பகுதியில் வருடத்திற்கு வெறும் 20 நிமிடம் மட்டுமே மழை பெறும் நிலமாக இது காணப்படுவதால், பாறைகளும், நிலமும் மங்கிய நிறத்தில் இத்தனை வருடங்கள் அழியாமல் மறையாமல் காணப்படுகின்றது என்றும், ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இவ்வகையான கோடுகளினால் உருவம் வரையப்பட்ட ஓவியங்கள் உலகின் வேறு இந்தப் பகுதிகளிலும் இல்லை என்பது பெரு நாடு மெச்சிக் கொள்ளவேண்டிய சிறப்புகளில் ஒன்றாகும்.


இன்றும் பல மர்மங்களை உள்ளடங்கிய நாஸ்கா கோடுகள் 

நாஸ்கா கோடுகள் குறித்து விஞ்ஞானிகளின் கூற்று 

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த பாரிய கோடுகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நாஸ்கா இன மக்களால் உருவாக்கப்பட்டவையாகும். அவர்கள் கி.பி 1 முதல் 700 வரை செழித்து வளர்ந்தனர். நாஸ்கா மக்களுக்கு முன்பு வாழ்ந்த சாவின் மற்றும் பரகாஸ் கலாச்சார மனிதர்கள் கூட  சில ஜியோகிளிஃப்களை வரைந்திருக்கலாம் என்கின்றனர் அறிஞர்கள். மேலும் பழங்கால மக்கள் 12-15 அங்குல பாறைகளை அகற்றி, கீழே உள்ள இலகுவான மணலை வெளிப்படுத்துவதற்காக ஆழமாக தோண்டி அந்த குழிகளை இரும்பு ஆக்சைடு பூசப்பட்ட கூழாங்கற்களால் நிரப்பியிருக்கலாம் என்றும், அப்படி மூடப்பட்ட பகுதியில் உருவங்கள் தெரியும்படி வடிவங்களை வடிவமைத்திருக்கலாம் என்றும் மானுடவியலாளர்கள் நம்புகின்றனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்