நான்தான் கேப்டன்! "வயசாயிடுச்சு" என சொன்னவர்களின் வாயை அடைத்த தல தோனி!

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கும் தோனியின் இதுபோன்ற ஆதிக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்று மறைமுகமாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது கெய்க்வாட்டுக்கு பதிலாக தோனி கேப்டனாக செயல்படுவார் என்ற அறிவிப்பு வெளியானதும் தோனியின் கேப்டன்சியை நினைவுகூற ஆரம்பித்திருக்கின்றனர்.;

Update:2025-04-15 00:00 IST
Click the Play button to listen to article

கடந்த 2 ஆண்டுகளாக கேப்டன் பதவியை தவிர்த்து சென்னை ரசிகர்களுக்காகவே சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடிவந்த மகேந்திர சிங் தோனி தற்போது மீண்டும் கேப்டனாக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக சாம்பியன் பட்டங்களை கைப்பற்றிய அணிகளில் ஒன்றான சிஎஸ்கே என்றாலே ஐபிஎல்லில் பிரசித்தம். காரணம் அந்த டீமில் இடம்பெற்றிருக்கும் பிளேயர்ஸ். குறிப்பாக, சிஎஸ்கே அதிகமுறை கோப்பை வெல்ல காரணமாக இருந்த தோனியை ‘தல’ தோனி என்று தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கொண்டாடிவருகின்றனர். 2023ஆம் ஆண்டு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, சாம்பியன் பட்டம் வென்றபிறகு அவர் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஆனால் அவருடைய இந்த அறிவிப்பு சென்னை அணி ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியதுடன் அடுத்த ஆண்டு கட்டாயம் விளையாடவேண்டுமென அன்புக்கட்டளைகளை இட, ரசிகர்களை உற்சாகப்படுத்த 2024ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் விக்கட் கீப்பராக இடம்பெற்றார். ஆனால் அந்த போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். ப்ளே ஆஃப் சுற்றுவரை சென்ற சிஎஸ்கே அதில் தோல்வியுற்று வெளியேறியது. இந்நிலையில் இந்த ஆண்டும் விளையாடப்போவதாக தோனி ஏற்கனவே அறிவித்த நிலையில், 2025 ஐபிஎல் சீசனில் தனது முதல் மேட்ச்சில் வெற்றிபெற்ற சிஎஸ்கே பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்தது. இந்த சூழலில் ருதுராஜ்ஜுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டதையடுத்து மீண்டும் கேப்டனாக களமிறக்கப்பட்டுள்ளார் தோனி. தோனியின் கேப்டன்சி திறமை மற்றும் நுணுக்கங்கள் குறித்து ஒரு க்ளான்ஸ்...

2025இல் தோனிமீது விழுந்த விமர்சனங்கள்

தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார் எம்.எஸ் தோனி. கடந்த ஆண்டு போட்டியிலேயே கேப்டன் பதவியை தவிர்த்து டீமில் மட்டும் இடம்பெறுவதாக அவர் அறிவித்திருந்தார். அதேபோல் இந்த ஆண்டும் அவர் டீமில் இடம்பெற்றிருந்தாலும் சிஎஸ்கே மோசமான தோல்விகளை சந்தித்ததால் தோனியின் ரசிகர்களே அவருடைய ஆட்டம் குறித்து விமர்சிக்க தொடங்கினர். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற சிஎஸ்கே அதன்பிறகு அடுத்தடுத்து தோல்விகளை தழுவியது. குறிப்பாக, ‘தல தரிசனம்’ கிடைத்தால்போதும் என்று குவியும் சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது 43 வயதாகும் தோனியால் முன்புபோல விளையாட முடியவில்லை. எனவே கடைசி 4 ஓவர்கள் இருக்கும்போது மட்டுமே அவர் களத்தில் இறங்குகிறார் என்றும் கடைசி நிமிடத்தில் கடுமையான சூழ்நிலையிலும் அவர் பந்துகளை வீணடிக்கிறார் என்றும் விமர்சிக்கப்பட்டார். இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறுகையில், தோனிக்கு முழங்கால் பிரச்சினை இருப்பதாகவும், அதனால் தொடர்ந்து ஒன்பது பத்து ஓவர்கள் அவரால் விளையாட முடியாது என்பதாலேயே பின்வரிசையில் களமிறங்க அணியின் சூழ்நிலையை பொறுத்து அவரே முடிவு செய்துகொள்வார் என்று விளக்கமளித்திருந்தார். அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை தாண்டி தோனியே அவரது பேட்டிங்கை முடிவுசெய்வார் என்ற அந்த விளக்கம் சிஎஸ்கே ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் இதுவும் சென்னை அணி வெற்றிபெறாமல் போனதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் விமர்சித்தனர்.


நடப்பு ஐபிஎல்லில் தோனி சரியாக விளையாடவில்லை என்று முன்வைக்கப்படும் விமர்சனங்கள்

இது சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளானது. காரணம், 2012 காலகட்டத்தில் சச்சின் தெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் கௌதம் காம்பீர் மூன்று பேருக்கும் வயதாகிவிட்டதால் அவர்களை சுழற்சிமுறையில்தான் களமிறக்கவேண்டுமென முடிவு செய்திருந்தார் அப்போதைய இந்திய கேப்டனாக இருந்த தோனி. அப்போது வெறும் 28 வயதேயான இளம் வீரராக வலம்வந்த தோனியின் கேப்டன்சி கைகொடுத்தாலும் மூத்த வீரர்களின் ரசிகர்களுக்கு அதிருப்தியையே ஏற்படுத்தியது. இந்நிலையில் உடல்நல பிரச்சினைகள் இருந்தால் ஓய்வு எடுக்கவேண்டும், அதைவிட்டுவிட்டு முழு உடற்தகுதி இல்லாமல் டீமில் விளையாடி அணிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்று கூறியதோடு சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கும் தோனியின் இதுபோன்ற ஆதிக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்று மறைமுகமாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது கெய்க்வாட்டுக்கு பதிலாக தோனி கேப்டனாக செயல்படுவார் என்ற அறிவிப்பு வெளியானதும் தோனியின் கேப்டன்சியை நினைவுகூற ஆரம்பித்திருக்கின்றனர்.

நடப்பு ஐபிஎல்லில் சிஎஸ்கே கேப்டனாக தோனி!

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்தபோதிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தோனி. இவருடைய தலைமையின்கீழ் 5 முறை சாம்பியன் டிராபியும் இந்த அணிக்கு கிடைத்திருக்கிறது. அதனாலேயே மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் தோனிக்கு ரசிகர்கள் மிகவும் அதிகம். 2023ஆம் ஆண்டுவரை தோனி கேப்டனாக இருந்த நிலையில், அந்த போட்டியில் கடுமையான போராட்டத்திற்கு பிறகு கடைசி நிமிடத்தில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. ஐபிஎல்லை பொருத்தவரை இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதிப்படுத்தப்படும் புதிய இளம் விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் சேர்க்கப்படுவார்கள். அப்படி இருக்கையில், ஒவ்வொரு ஆண்டும் விளையாடுகிற இளம்வீரர்களில் சிறப்பாக செயல்படுவோரை அவ்வப்போது அந்தந்த அணிகள் கேப்டனாக நியமிக்கும். ஆனால் சிஎஸ்கே மட்டும்தான் தோனி என்ற ஒரே ஒரு தலைமையின்கீழ் செயல்பட்டு வந்தது. அதற்கேற்றாற்போல் தோனியின் நுணுக்கங்களும், வழிகாட்டுதல்களும் இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் அணியில் இடம்பெறும் இளம்வீரர்கள் புகழ்வதுண்டு. குறிப்பாக, ஒவ்வொரு ஆட்டத்திலும் எதிரணி களத்தில் கடுமையான போட்டியை கொடுக்கும்போது குறிப்பிட்ட ஒவ்வொரு ஓவரிலும் எந்த வீரருக்கு எந்த பவுலரை அனுப்பலாம் என்பதில் தோனியின் கணிப்பு பெரும்பாலும் துல்லியமாக இருக்கும். அதிலும் கடைசி ஒருசில ஓவர்களில் களத்தை இறுக்கி எதிரணிக்கு பேட்டிங்கில் டஃப் கொடுத்து ஜெயிப்பதில் சென்னை அணிக்கு நிகர் சென்னை அணிதான் என்ற பெயரை பெற்றுத்தந்தவர் தோனி என்பதை யாராலும் மறுக்கமுடியாது.


ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அறிவுரை வழங்கும் தோனி

அதனாலேயே தோனியின் மீதான சென்னை ரசிகர்களின் அன்பும், அணுகுமுறையும், அவருக்கு அளிக்கும் ஆதரவும் மிகவும் அதிகமாக இருந்தது. தோனி என்றாலே தனது அணியில் இருக்கும் இளம்வீரர்களுக்கு வழிவிட்டு அவர்களை மேடையேற்றி அழகுபார்ப்பார் என்ற பெயரை அவர் கேப்டன்சி ஏற்றிருந்த கடைசி ஒருசில தொடர்களில் நன்றாக பார்க்கமுடிந்தது. சாம்பியன் டிராபியை வென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலும் தான் அந்த அணியின் கேப்டன் என்பதை காட்டிக்கொள்ளாமல் ஒரு ஓரத்தில் சாதுவாக நின்று தனது அணியினரை ரசிக்கும் தோனியை பார்த்து ஒருகட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிரண்டுபோயினர். இந்நிலையில் வயது காரணமாக ஐபிஎல்லிலிருந்து ஓய்வுபெறுவதாக தோனி அறிவித்தபோது சிஎஸ்கே ரசிகர்கள் அழுது கண்ணீர்விட்டதுடன், அவரை அணியில் சேர்க்குமாறு தொடர் கோரிக்கைகளை விடுத்துவந்தனர். ரசிகர்களின் அன்பை ஏற்று மீண்டும் 2024 ஐபிஎல்லில் விளையாடுவேன் என்று அறிவித்தார் தோனி. ஆனால் அதற்கு முந்தைய 2 தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குழு. தன்னை தோனியின் ரசிகன் என்று கூறிக்கொள்ளும் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்ட போதிலும் தோனியிடம் அறிவுரைகளை பெறுவதை தவிர்க்கவில்லை. அதை கடந்த ஆண்டு தொடரிலேயே பார்க்கமுடிந்தது. ஆனால் அந்த போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லவில்லை. ஆர்சிபியிடம் தோற்று வெளியேறியது. சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கெய்க்வாட் இந்த முறையும் கேப்டனாக செயல்பட்டுவந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றாலும் அடுத்தடுத்து தொடர்ந்து தோல்வியடைந்துகொண்டே வந்தது. கடைசியாக பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கெய்க்வாட்டின் இடது முழங்கையில் பந்து தாக்கியதில் பலத்த அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்தே அவர் விலக, மீண்டும் கேப்டனாக்கப்பட்டிருக்கிறார் தோனி. ஏப்ரல் 10ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியான நிலையில், 11ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி முதல் தோனி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால் அடுத்தடுத்து விளையாடக்கூடிய அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. இருந்தும் தோனி கேப்டன் பதவியேற்ற முதல் போட்டியிலும் சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்தது. இதனால் சென்னை அணி இந்த ஆண்டு இறுதிச்சுற்றுக்கு போவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 


தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் கால்பந்து விளையாடும் ருதுராஜ் 

கேப்டன் தோனி ஒரு மிருகம்!

மற்ற ஐபிஎல் அணிகளைப்போல இல்லாமல் சிஎஸ்கே என்றாலே கட்டாயம் இறுதி வரையிலாவது செல்லும் என்ற நற்பெயரை தோனி கேப்டனாக இருந்தவரை தக்கவைத்திருந்தார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தோனி கேப்டனாக செயல்பட்டபோது சிஎஸ்கே மொத்தம் 235 போட்டிகளில் விளையாடி, அதில் 142 முறை வெற்றியும் பெற்றிருக்கிறது. கடைசியாக 2023ஆம் ஆண்டுகூட சென்னை அணி வெற்றிபெற்றது. பொதுவாக டீமில் விளையாடுவதற்கும் ஒரு அணியின் கேப்டனாக செயல்படுவதற்கும் பிளேயருக்கு பிளேயர் அணுகுமுறை மாறுபடும். அதுபோல, தோனியின் கேப்டன்சி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி புகழ்ந்திருக்கிறார். அவர் தோனி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார். கங்குலி பேசியபோது, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக தோனி விளையாட வேண்டுமென்றால் அவர் கேப்டனாக செயல்பட வேண்டும். ஏனென்றால் அணியில் விளையாடும்போது இருப்பதைவிட கேப்டனாக அவர் முற்றிலும் வேறுபட்ட விதத்தில் செயல்படுவார். சொல்லப்போனால் பீஸ்ட் மோடுக்கு சென்றுவிடுவார். தோனிக்கு அடிபட்டு சிக்சர் அடிக்கமுடியாத நிலையில் இருக்கும்போது பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார். இப்போது அவருக்கு 43 வயதாகிறது. எனவே 2005ஐ போன்று இப்போது எதிர்பார்க்கக்கூடாது. அப்போதிருந்த விளையாட்டுக்கும் இப்போதுள்ள ஆட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இவ்வளவு ஆண்டுகள் அனுபவத்தின்மூலம் அவருக்கு நிறைய தெரிந்திருக்கும். எனவே சிஎஸ்கேவை வழிநடத்த அவர் சரியாக இருப்பார்” என்று கூறியிருந்தார். 

தொடர் தோல்வியிலிருந்து மீண்ட சென்னை 

தோனி கேப்டன் ஆகியும் ஒரு பயனும் இல்லை என்று சொன்னவர்களுக்கு, பதில் சொல்லும் விதமாக, லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியை வெற்றி பெற செய்துள்ளார். தோனி கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சென்னை அணி மிக மோசமாக தோற்றது. இதனால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார் தோனி. அவருக்கு வயதாகிவிட்டது என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில்தான், விமர்சகர்களின் வாயை அடைக்கும் விதமாக, தொடர் தோல்வியிலிருந்து சென்னை அணியை மீட்டுள்ளார் தோனி.

Tags:    

மேலும் செய்திகள்