கோலி, ரோகித், பும்ராவை கார்னர் செய்யும் பிசிசிஐ? புதிய விதிமுறைகள் இவர்களுக்காக கொண்டுவரப்பட்டதா?

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய தொடர்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது, இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update:2025-01-28 00:00 IST
Click the Play button to listen to article

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய தொடர்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது, இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடியது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணி வீரர்கள் உள்ளூர் தொடர்களில் விளையாடாததுதான் என்று கூறப்பட்டது. ஆதலால் தற்போது பல புதிய விதிமுறைகளை இந்திய அணிக்குள் கொண்டுவந்துள்ளது பிசிசிஐ. புதிய விதிகளை பற்றி விரிவாக இத்தொகுப்பில் காணலாம்.


விராட் கோலி & பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவர் சினேகாஷிஷ்

புதிய விதிமுறைகளின்படி தொடங்கும் இங்கிலாந்து தொடர் 

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டி20 கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது . இந்த தொடரில் விளையாடும் எந்த ஒரு வீரருக்கும் தனிப்பட்ட வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அனைவரும் பிசிசிஐ ஏற்பாடு செய்த வாகனத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. "பிசிசிஐ வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி பெங்கால் கிரிக்கெட் வாரியம் செயல்பட்டுள்ளது. இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் ஒரே பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரர்களுக்கு தனிப்பட்ட வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சினேகாஷிஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.


பயிற்சியாளர் கம்பீருடன் இந்திய அணி வீரர்கள் 

சொதப்பிய ஆஸ்திரேலிய தொடர் 

இந்தியா - ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பி.சி.சி.ஐ உன்னிப்பாகக் கவனித்த விஷயங்களின் அடிப்படையிலேயே இந்த விதிகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், அணி வீரர்கள் பல குழுக்களாகப் பயணிப்பதனால் எல்லா வீரர்களுக்கும் இடையில் தேவையான பிணைப்பு இல்லை என பி.சி.சி.ஐ கருதுவதாகக் கூறப்படுகிறது. ஒட்டு மொத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலும் இரு இரவு விருந்துகளில் மட்டுமே அனைத்து வீரர்களும் பங்கேற்றுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. "பெர்த்தில் வெற்றி பெற்ற தினத்தைத் தவிர வேறெப்போதும் அணியினர் ஒன்றாக உணவருந்தவில்லை. வீரர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து நேரம் செலவிடுகின்றனர். தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூட தனது குழுவுடன் சென்றுவிடுகிறார்" என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையில் குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. "சிலர் தனிப்பட்ட சுற்றுலா பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்கின்றனர். இவர்களை அணியின் பிற வீரர்களுடன் காண்பது அரிதாகிவிட்டது" என்றும் கூறப்பட்டுள்ளது.


மனைவி அனுஷ்காவுடன் கோலி & மனைவி ரித்திகா சஜ்தேவுடன் ரோகித்

மனைவிகள் வர தடை 

இனி எந்த ஒரு கிரிக்கெட் வீரர்களின் மனைவியும் தொடர் முழுவதும் வெளிநாட்டில் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்படாது என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்திய அணி 45 நாட்களுக்கு மேல் ஒரு தொடரில் வெளிநாட்டில் பங்கேற்கிறது என்றால் கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் அங்கு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதி அளிக்கப்படும் என பிசிசிஐ கூறி இருக்கிறது. இதேபோன்று திருமணம் ஆகாத வீரர்கள் தங்களுடைய கேர்ள் பிரண்டையும் அழைத்து வர கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்திருக்கிறது. பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.

விதிமுறைகளை மீறினால்?

பிசிசிஐ கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறைகளை பின்பற்ற தவறும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வீரர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ரஞ்சி தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் 

சர்வதேச தொடர் இல்லாத சமயத்தில் அனைத்து வீரர்களும் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடவேண்டும் என்று பிசிசிஐ அறிவித்து உள்ளது . அதன்விளைவாக தற்போது ரோகித் சர்மா, ரிஷப பந்த் மற்றும் சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகின்றனர். சாம்பியன்ஸ் கோப்பைக்காக இப்படி பல புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


பிசிசிஐ-ன் புதிய விதிமுறைகளால் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள இந்திய அணி வீரர்கள் 

கோலி, ரோகித் சர்மா & பும்ராவுக்கு செக்? 

புதிய விதிமுறைகள், அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் கலந்தாலோசித்த பிறகே எடுக்கப்பட்டதாகவும், இவை அணியில் 'நட்சத்திர வீரர்கள்' என்கிற கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ​​விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை இந்த விதிமுறைகள் நேரடியாக பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்