சோடா விற்றவர், இந்தியாவின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக உயர்ந்த கதை! சினிமாவிலும் அசத்தல்!
திருச்சூர் மக்களின் நாட்காட்டிகள், இரண்டே திருவிழாக்களால் நிறைந்தவை. ஒன்று, நிலவோடு பூரம் நட்சத்திரம் சேர்ந்து உதிக்கும் பூரம் திருவிழா. மற்றொன்று, நட்சத்திரங்கள் பந்தை எட்டி உதைக்கும் கால்பந்து திருவிழா. `பூரங்களுடே பூரம்' என்றழைக்கப்படும் திருச்சூர் நகரத்து பூரம் திருவிழாவின் நாயகனை நமக்கு தெரியும். மலையாளிகளின் நாடி நரம்பெல்லாம் ஊறிப்போய் கிடக்கும் கால்பந்து திருவிழாவின் நாயகனை நமக்கு தெரியுமா? அவர் பெயர் இனிவளப்பிள் மணி விஜயன். அவர்தான் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனாக பல வெற்றிகளை குவித்துள்ள ஐ.எம்.விஜயன். தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருகிறார். இத்தொகுப்பில் அவரை பற்றி விரிவாக பார்ப்போம்.
சோடா விற்பனையாளராக வாழ்க்கை பயணத்தை தொடங்கி கால்பந்தாட்ட வீரராக மாறிய ஐ.எம்.விஜயன்
சோடா பாட்டில் விற்ற ஐ.எம்.விஜயன்
1969-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தவர் ஐ.எம்.விஜயன் (இனிவளப்பில் மணி விஜயன்). ஏழை குடும்பத்தில் பிறந்த இவர், மிகவும் மோசமான சூழலில், குடும்பத்தின் நிலையை முன்னேற்ற, திருச்சூர் மாநகராட்சி ஸ்டேடியத்தில் ஒரு சோடா விற்பனையாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார். அப்போது ஒரு பாட்டில் விற்றால் அவருக்கு 10 பைசா கிடைக்கும். சோடா பாட்டில் விற்பனை செய்த பணத்தில் திருச்சூர் சர்ச் மிஷன் சொசைட்டி உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ஐ.எம்.விஜயன், சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்துள்ளார். இவரின் கால்பந்தாட்டத்தை பார்த்த அப்போதைய கேரள மாநில டி.ஜி.பி, எம்.கே.ஜோசப், அவரது திறமையை போற்றும் வகையில், கேரள மாநில போலீஸ் க்ளப் அணியில் சேர்த்து விட்டுள்ளார்.
க்ளப் அணிகளுக்காக கால்பந்து விளையாடிய தருணம்...
க்ளப் கால்பந்து வாழ்க்கை
டி.ஜி.பி, எம்.கே.ஜோசப் முயற்சியின் காரணமாக கடந்த 1987-ம் ஆண்டு நடைபெற்ற குயிலான் நேஷ்னல்ஸ் போட்டியில் கேரள மாநில போலீஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஐ.எம்.விஜயன், சிறப்பாக விளையாடி அசத்திய நிலையில், அவரின் ஆக்ரோஷமான ஆட்டமும், அசாத்திய திறமையும் தேசிய கால்பந்து அணியின் கவனத்தை ஈர்த்தது. 1991-ம் ஆண்டுவரை கேரள மாநில போலீஸ் அணிக்காக விளையாடிய ஐ.எம்.விஜயன், அதன்பிறகு கொல்கத்தா மோகன்பகான் அணியில் இணைந்தார். தொடர்ந்து 1992-ம் ஆண்டு மீண்டும் கேரளா போலீஸ் அணிக்கு திரும்பிய ஐ.எம்.விஜயன், அடுத்த ஆண்டே, மீண்டும் மோகன்பகான் அணிக்கு திரும்பிய நிலையில், 1994-ம் ஆண்டு ஜேசிடி மில்ஸ் அணிக்காக களமிறங்கினார். 3 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய ஐ.எம்.விஜயன், 1997-ம் ஆண்டு அந்த அணியில் இருந்து விலகி எஃப்சி கொச்சி அணியில் இணைந்தார். 98-ல் மீண்டும் மோகன்பகான் அணிக்கு திரும்பிய விஜயன், 99-ல் மீண்டும் எஃப் சி கொச்சி அணியில் களமிறங்கினார்.
இந்திய கால்பந்து அணியில் விஜயனும் - பாய்சங் பூடியாவும் விளையாடியபோது...
இந்திய அணியில் அறிமுகம்
விஜயனை `ப்ளாக் பக்' என அவரது ரசிகர்கள் அழைத்தார்கள். அப்படியென்றால், `கருப்பு துருவமான்' எனப் பொருள். அதன் பிறகு நிறைய புகழ்பெற்ற இந்திய கால்பந்து க்ளப் அணிகளில் விளையாடியவர், 1989-ம் ஆண்டு இந்திய அணியில் விளையாட தேர்வானார். விஜயனும் - பாய்சங் பூடியாவும் இணைந்து எதிரணியினரை பந்தாடத் தொடங்கினர். இன்றுவரையிலும் இந்திய கால்பந்து அணியின் `டெட்லி காம்போ'வாகப் பார்க்கப்படும் இணை இவர்கள். 1999-ம் ஆண்டு, காட்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகளின் கால்பந்து தொடரில், ஐ.எம்.விஜயன் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தினார். செப்டம்பர் 28 அன்று பூடானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், சர்வதேச கால்பந்து உலகின் அதிவேக கோல்களில் ஒன்றை அடித்து அசத்தினார். போட்டி ஆரம்பித்த 12வது நொடியில், கோல் போஸ்டிற்குள் பந்து பறந்துபோய் விழுந்தது. 3 - 0 எனப் பூடானை இந்தியா வீழ்த்திய அந்த ஆட்டத்தில், மூன்று கோல்களையும் அடித்தது விஜயன்தான். அதற்கு முந்தைய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ஹாட்ரிக் அடித்திருந்தார். இறுதிப்போட்டியில், மாலத்தீவு அணிக்கு எதிராகத் தொடரின் 7வது கோலை அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.
நடிகர் டேனியல் பாலாஜியுடன் திரைப்பட காட்சி ஒன்றில் ஐ.எம்.விஜயன்
சினிமா வாழ்க்கை
கால்பந்து போட்டியில் உச்சத்தில் இருந்த காலக்கட்டமான 2000-ம் ஆண்டு பிற்பகுதியில் சினிமாவில் அடியெடுத்து வைத்த ஐ.எம்.விஜயன், 2001-ம் ஆண்டு மலையாளத்தில வெளியான சாந்தம் என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர், 2006-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லனாக கலக்கியிருப்பார். அதன்பிறகு கொம்பன், கெத்து, கணேஷா மீண்டும் சந்திப்போம் ஆகிய தமிழ் படங்களில் நடித்த ஐ.எம்.விஜயன், கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான விஜய்யின் பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்திய கால்பந்து அணியில் ஹீரோவாகவும், சினிமாவில் வில்லனாகவும் கலக்கி வரும் ஐ.எம்.விஜயன், மொத்தமாக 284 உள்ளூர் க்ளப் போட்டிகளில் விளையாடி 142 கோல்கள் அடித்துள்ளார்.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமிடம் விருது பெற்ற தருணம்...
ஐ.எம். விஜயன் வாங்கிய விருதுகள்
2003-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்த நிலையில், 1992, 1997 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளில் ஆசிய சர்வதேச கால்பந்து வீரருக்கான விருதையும் வென்றுள்ளார். 1993-ம் ஆண்டு நேரு கோப்பைக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 55 வயதில் ஐ.எம். விஜயனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.