பூமியிலிருந்து சொர்க்கத்திற்கு செல்லும் படிகட்டு! இந்தியாவின் லே பகுதியிலுள்ள "காந்த மலை" பற்றி தெரியுமா?
உலகில் நமது அறிவிற்கும், அறிவியலுக்கும் அப்பாற்பட்ட பல இயற்கை அற்புதங்கள் இருக்கின்றன. அந்தவகையில் அற்புதமான இயற்கை அதிசயத்தை ரசிக்க விரும்பும் இந்தியர்கள், வேறு எந்த நாட்டிற்கும் செல்ல தேவையில்லை. பல அற்புதமான இடங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றன.
உலகில் நமது அறிவிற்கும், அறிவியலுக்கும் அப்பாற்பட்ட பல இயற்கை அற்புதங்கள் இருக்கின்றன. அந்தவகையில் அற்புதமான இயற்கை அதிசயத்தை ரசிக்க விரும்பும் இந்தியர்கள், வேறு எந்த நாட்டிற்கும் செல்ல தேவையில்லை. பல அற்புதமான இடங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றன. ஆம் லடாக்கில் உள்ள லே அருகே அமைந்துள்ள ஒரு மலைதான் மேக்னெட்டிக் ஹில் எனப்படும் காந்த மலை. நீங்கள் சாகச பயணம் செய்வதில் ஆர்வமுள்ளவர் என்றால் இந்த காந்த மலை உங்கள் பயணத்திற்கு சரியான தேர்வாக இருக்கும். இக்கட்டுரையில் காந்த மலையின் சிறப்பை பற்றியும் அங்கு நிகழும் அதிசயத்தை பற்றியும் விரிவாக பார்ப்போம்.
வாகனங்களை இழுக்கும் காந்த மலை
காந்த மலை எங்கு இருக்கிறது? எப்படி செல்லலாம்?
இந்த வியத்தகு மலை ஸ்ரீநகர்-லடாக் சாலையில் நிமோவிற்கு தென்கிழக்கே 7.5 கிமீ தொலைவிலும், லேவிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவிலும் உள்ளது. 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மேக்னடிக் ஹில், டிரான்ஸ்-ஹிமாலயன் பகுதியில் லே-கார்கில்-பால்டிக் தேசிய நெடுஞ்சாலையை அலங்கரிக்கிறது. விமானத்தின் மூலம் இங்குசெல்ல விரும்பினால் லே சர்வதேச விமான நிலையம், மேக்னடிக் ஹில்லில் இருந்து சுமார் 24 கிமீ தொலைவில் உள்ளது. விமான நிலையத்திலிருந்து லடாக் காந்த மலையை அடைய ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுக்கலாம். ரயிலின் மூலம் செல்ல விரும்பினால் அருகிலுள்ள ரயில் நிலையமான ஜம்மு தாவி, லே லடாக்கிலிருந்து 660 கிமீ தொலைவில் உள்ளது. இது டெல்லி மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தூரத்தை கடக்க டாக்ஸியை வாடகைக்கு எடுக்கலாம். சொந்த வாகனத்தில் சென்றால், டெல்லியிலிருந்து உங்கள் பயணத்தைத் தொடங்கி மணாலி-லே நெடுஞ்சாலை அல்லது ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை வழியாக காந்த மலையை அடையலாம்.
அழகிய லே - லடாக் தேசிய நெடுஞ்சாலை
காந்த மலையின் சிறப்பு
லே-வில் உள்ள இந்த காந்த மலை இயல்பான புவியீர்ப்பு விசையை மீறும் நிகழ்வுக்கு பிரபலமானது. புவியீர்ப்பு விசை பூமியை நோக்கி பொருட்களை ஈர்க்கிறது. பொருட்கள் உயரமான இடத்திலிருந்து விழும்போது கீழ் நோக்கி செல்வதுதான் வழக்கம். அதே போல மேடுகளில் இருக்கும் பொருட்கள் பள்ளத்தை நோக்கி செல்வதும் இயற்கையின் நியதியாக நினைக்கிறோம். ஆனால் கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த காந்த மலையின் அருகே குறிப்பிட்ட இடத்தில் கார் அல்லது வேறு வாகனங்களின் இஞ்சினை ஆஃப் செய்துவிட்டு நியூட்ரலில் நிறுத்தினால், அவ்வாகனங்களை அந்த காந்த மலை ஈர்க்கிறது. பொதுவாக மலைப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி இருந்தால் அது தாழ்வான பகுதியை நோக்கி உருண்டு செல்லவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த மலையில் எதிர்மறையாக, உயரமான இடத்தை நோக்கி அதாவது காந்த மலை இருக்கும் திசையை நோக்கி வாகனங்கள் நகரும்.
வாகன ஓட்டிகளுக்கு பிடித்த லடாக் சாலை
புவியீர்ப்பு விசையை மீறும் நிகழ்வு!
வாகனங்களை ஆஃப் செய்த பின்னரும் காந்த மலை நோக்கி ஈர்க்கப்படும் வாகனங்கள், மணிக்கு அதிகப்பட்சம் சுமார் 20 கிமீ வேகத்தில் முன்னோக்கி செல்வது அனைவரையும் வியக்க வைக்கிறது. இந்த அசாதாரண நிகழ்வின் காரணமாக 'மர்ம மலை' மற்றும் 'ஈர்ப்பு மலை' போன்ற பல பெயர்களால் இந்த பகுதி அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியில் "புவியீர்ப்பு விசையை மீறும் நிகழ்வு" என்று எழுதப்பட்டு மஞ்சள் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
காந்த மலையின் புராணக்கதை
உள்ளூர் மக்கள் இந்த காந்த மலையைப் பற்றிய ஒரு வசீகரமான கதையை சொல்லுகின்றனர். இது ஒரு காலத்தில் சொர்க்கத்திற்கான படிக்கட்டுகளாக இருந்ததாகக் கூறுகிறார்கள். தகுதியுடையவர்கள் என்று கருதப்பட்டவர்கள் நேரடியாக சொர்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டதாகவும், மற்றவர்கள் ஏறத் தவறியதாகவும் சொல்லப்படுகிறது. இது பலராலும் இன்றும் நம்பப்படுகிறது.
காந்த மலையின் அறிவியல் கோட்பாடு
காந்த மலையானது உள்ளிருந்து வெளிப்படும் வலுவான காந்த சக்தியைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மிகவும் வலுவான காந்த சக்தியின் விளைவாக அது, அருகிலுள்ள வாகனங்களை தன்னை நோக்கி இழுப்பதாக குறிப்பிடப்படுகிறது. இந்திய விமானப்படை விமானங்கள் இந்த காந்த மலைக்கு அருகே பறப்பதில்லை. இதற்கு மற்றொரு காரணமாக கூறப்படுவது ஆப்டிகல் இல்யூஷன் கோட்பாடு. ஒரு சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி லே-வில் உள்ள காந்த மலை ஒரு "சைக்ளோப்ஸ் மலை". அதாவது இது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் மட்டுமே. இந்த கோட்பாட்டின் படி, காந்த மலையானது மேல் நோக்கி சாய்வாகத் தெரிந்தாலும், உண்மையில், கீழ் நோக்கி செல்கிறது. எனவே இது ஒரு மேல் நோக்கி சாய்வாக இருப்பதுபோல தோற்றமளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன். எனவே வாகனம் மேல் நோக்கி செல்வதாக கூறப்பட்டாலும் அது உண்மையில் கீழ்நோக்கிதான் செல்கிறது என்கிறார்கள்.
லே - லடாக்கில் வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் போர்டு
காந்தமலைக்கு எப்போது போகலாம்?
இந்த சாலை ஆண்டு முழுவதும் திறந்திருந்தாலும் ஜூலை - அக்டோபர் மாதங்களுக்கு இடையிலான காலமே மேக்னடிக் ஹில்லுக்குச் செல்ல சிறந்த நேரமாம். இந்த நேரத்தில் சாலைகள் தெளிவாக இருக்கும் என்பதால் வாகனம் ஓட்டுவதில் சிரமம் இருக்காது. இப்பகுதியில் உணவகங்கள் இல்லை என்பதால் இந்த அதிசய மலைக்கு லே-வில் இருந்து பயணம் செய்ய தொடங்கும்முன் போதுமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.