பல மர்மங்களை தாங்கி நிற்கும் உலக அதிசயம் "கீசா பிரமிடு"!

கீசாவின் பெரிய பிரமிடு எகிப்தின் மிகவும் பிரசித்தி பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகில், நைல் நதிக்கு 5 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த பிரமிடு, பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக நிலைத்து நிற்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துவரும் கீசா பெரிய பிரமிடின் கட்டுமானம் பண்டைய எகிப்தியர்களின் பொறியியல் திறமைக்கு ஒரு சான்றாக விளங்குவதோடு, நவீன அறிவியலாளர்களுக்கு பெரிய புதிராகவும் உள்ளது. இது குறித்து விளக்கமாக பார்ப்போம்.

Update:2024-10-22 00:00 IST
Click the Play button to listen to article

கீசாவின் பெரிய பிரமிடு எகிப்தின் மிகவும் பிரசித்தி பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகில், நைல் நதிக்கு 5 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த பிரமிடு, பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக நிலைத்து நிற்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துவரும் கீசா பெரிய பிரமிடின் கட்டுமானம் பண்டைய எகிப்தியர்களின் பொறியியல் திறமைக்கு ஒரு சான்றாக விளங்குவதோடு, நவீன அறிவியலாளர்களுக்கு பெரிய புதிராகவும் உள்ளது. இது குறித்து விளக்கமாக பார்ப்போம்.

கீசா பிரமிட்டின் வரலாறு 

இந்த பிரமிடு சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது எதற்காக கட்டப்பட்டது என்றால் பாரோ குபு என்னும் மன்னருக்கு கல்லறையாக கட்டப்பட்டது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் கட்டுமானம் சுமார் 20 ஆண்டுகள் நீடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கீசா பிரமிட்டின் கட்டிடக்கலை இன்றளவும் நம்மை வியக்க வைக்கிறது. இந்த பிரமிடின் அசல் உயரம் 146.5 மீட்டர் (481 அடி). இதன் அடிப்பகுதி 230.4 மீட்டர் (756 அடி). அதுமட்டுமில்லாமல் இது சுமார் 2.3 மில்லியன் கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லும் சராசரியாக 2.5 டன் எடையுள்ளது. இது பண்டைய எகிப்திய பொறியியல் மற்றும் கட்டிடக்கலையின் சாதனையாக கருதப்படுகிறது. மேலும் பல நூற்றாண்டுகளாக இது உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இன்றளவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு முக்கிய ஆய்வு பொருளாக உள்ளது.


4,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கீசா பிரமிடு

கட்டுமான முறை 

பெரும்பாலான கற்கள் அருகிலுள்ள குவாரிகளில் இருந்து கொண்டு வரப்பட்டன என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கற்களை மேலே கொண்டு செல்ல சாய்வுதளங்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த பிரமிடை கட்டுவதற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பிரமிடின் நான்கு பக்கங்களும் மிக துல்லியமாக வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளை நோக்கி உள்ளன. பண்டைய எகிப்தியர்களின் கணித மற்றும் வானியல் அறிவு இதன் வடிவமைப்பில் நன்கு பிரதிபலிக்கிறது. இதன் கட்டிட பணியில், முதலில் தளம் தயார் செய்யப்பட்டதாம். பிறகு நிலம் சமன் செய்யப்பட்டு, துல்லியமாக மட்டுப்படுத்தப்பட்டதாம். முக்கியமாக அடித்தளக்கற்கள் மிகவும் கவனமாக அமைக்கப்பட்டுள்ளன. இதுவே பிரமிடின் நிலைப்புத்தன்மைக்கு முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இறுதியாக கற்கள் படிப்படியாக மேல் நோக்கி அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கும் முந்தைய அடுக்கை விட சற்று உள்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன.

பிரமிடு கற்களின் மூலம் என்ன?

பெரும்பாலான கற்கள் கீசாவிற்கு அருகிலுள்ள சுண்ணாம்புக் கல் குவாரிகளில் இருந்து கொண்டுவரப்பட்டவை. சில கற்கள், குறிப்பாக உள் அறைகளுக்கான கிரானைட் கற்கள், அஸ்வானில் இருந்து நைல் நதி வழியாக கொண்டுவரப்பட்டன. இந்த பிரமிட்டின் கற்களை மிகச்சிறப்பாக வெட்டி கையாண்டுள்ளனர். கற்கள் செம்பு உளிகள், வெண்கல ரம்பங்கள், மரக் கோடாரிகள் மற்றும் கற்களாலான சுத்தியல்கள் கொண்டு வெட்டப்பட்டுள்ளன. பிறகு பெரிய கற்களை நகர்த்த மரப் பலகைகள் மற்றும் சறுக்கு பாதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக கற்களை இழுக்க கயிறுகள் மற்றும் தடிமட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் 

சுமார் 20,000 முதல் 30,000 வரையிலான தொழிலாளர்கள் பணியாற்றியிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இவர்கள் அனைவரும் திறமையான கைவினைஞர்கள், பொறியாளர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களை உள்ளடக்கியிருக்கின்றனர். தொழிலாளர்கள் பெரும்பாலும் விவசாயிகள், யாரும் அடிமைகள் அல்ல என தற்போதைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இதனை கட்டி முடிப்பதற்கான கால அளவு, சுமார் 20 ஆண்டுகள் நீடித்தது என நம்பப்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 230 கற்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    20 ஆண்டுகள் நீடித்த கீசா பிரமிடு கட்டுமான பணி 

    பிரமிடு தோற்றம்

    இந்த பிரமிடின் வெளிப்புற சாய்வுத்தளம் பல அறிவியல் கோட்பாடுகளை தன்னுள் கொண்டுள்ளது. பிரமிடைச் சுற்றி ஒரு நீண்ட சாய்வுத் தளம் கட்டப்பட்டிருக்கலாம். பிறகு இந்த சாய்வுத் தளம் பிரமிடின் உயரம் அதிகரிக்கும்போது தொடர்ந்து உயர்த்தப்பட்டிருக்கலாம், இல்லையென்றால் கற்கள் மரத் தடிகளின் மீது வைக்கப்பட்டு, கயிறுகள் மூலம் இழுக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதன்பிறகு இதன் உள்சுருள் சாய்வுத்தளம் பிரமிடின் வெளிப்புறத்தைச் சுற்றி உள்நோக்கி செல்லும். இதனால்தான் இது உலக அதிசயமாக திகழ்கிறது.


    கீசா பெரிய பிரமிடு கட்டுமானத்தில் உள்ள கற்களின் மாதிரி

    உள் அமைப்பு மற்றும் அறைகள்

    கீசாவின் பெரிய பிரமிடின் உள் அமைப்பு மிகவும் சிக்கலானது மற்றும் பல ரகசியங்களைக் கொண்டது. பிரமிடின் உள்ளே பல அறைகள், பாதைகள் மற்றும் வழித்தடங்கள் உள்ளன. இதன் நுழைவு வாயில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. அதன்பிறகு இறங்கும் வழித்தடம் நுழைவு வாயிலில் இருந்து கீழ்நோக்கி செல்கிறது. சுமார் 1 மீட்டர் அகலம் மற்றும் 1.2 மீட்டர் உயரம் கொண்டது. இது நிலத்தடி அறைக்கு வழிவகுக்கிறது. இதன் ஏறும் வழித்தடம் இறங்கும் வழித்தடத்தின் தொடக்கத்தில் இருந்து மேல்நோக்கி செல்கிறது. அதுமட்டுமில்லாமல் மன்னரின் அறை பிரமிடின் மையத்தில் அமைந்துள்ளது. 5.75 மீட்டர் நீளம், 10.4 மீட்டர் அகலம், 5.84 மீட்டர் உயரம் கொண்டது. இந்த அறை கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. பாரோவின் சார்கோபாகஸ் (மம்மி வைக்கும் பெட்டி) இங்கு உள்ளது. இந்த அறைக்கு மேல் ஐந்து "நிவாரண அறைகள்" உள்ளன. அதன்பிறகு ராணியின் அறை மன்னரின் அறைக்கு கீழே அமைந்துள்ளது. இது 5.75 மீட்டர் நீளம், 5.23 மீட்டர் அகலம், 4.87 மீட்டர் உயரம் கொண்டது. இதன் பயன்பாடு இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதன் நிலத்தடி அறை பிரமிடின் அடிப்பாகத்தில், பாறையில் வெட்டப்பட்டுள்ளது. இதன் நோக்கமும் இன்னும் மர்மமாகவே உள்ளது.

    Tags:    

    மேலும் செய்திகள்