"சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவு" - விளக்கும் ஆர்வலர்கள்

பறவைகளின் அழிவுக்கு வயல்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அவற்றில் சிட்டுக்குருவியும் இப்போது முற்றிலும் அழிந்துவிடக்கூடாது என்ற நோக்கில்தான் அவற்றை காப்பாற்ற பல்வேறு விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.;

Update:2025-03-18 00:00 IST
Click the Play button to listen to article

வீடுகளில் வளர்க்கும் உயிரினங்கள் என்று கேட்டால் நாய், பூனை, கோழி என்று சொல்வார்கள். ஆனால் நாமாக கொண்டுவராவிட்டாலும் மனிதர்களின் வாழ்விடங்களை தனது வாழ்வாதாரமாக நம்பி வாழக்கூடிய சிறிய உயிரினங்களில் ஒன்றுதான் சிட்டுக்குருவி. ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் தினசரி காலை அலாரமாக இருந்தது குருவிகளின் சத்தம். குறிப்பாக, சிட்டுக்குருவிகள், ஓடு மற்றும் கூரை வீடுகளின் தாழ்வரங்களில் வாழக்கூடியவை. வீடுகள் மற்றும் வயல்களில் சிதறிக்கிடக்கும் தானியங்களை உண்டு உயிர்வாழ்ந்து வந்தன. ஆனால் அடுக்குமாடி கட்டிடங்கள், வயல்களில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல் மற்றும் செல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் போன்றவற்றால் இந்த சிறு புள்ளினம் அழிந்துவருவதாக சொல்லப்பட்டது. அழிவின் விளிம்பிலிருக்கும் இந்த சிறு உயிரினங்களை காப்பாற்றவும், டெக்னாலஜி வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் செய்யும் தவறுகளால் மற்ற உயிரினங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

மனிதர்களை நம்பி வாழும் சிட்டுக்குருவிகள்

இப்போது எங்கு திரும்பினாலும் மரங்கள் வெட்டப்பட்டு பெரிய பெரிய கட்டிடங்களும், சாலைகளும் உருவாக்கப்படுகின்றன. அதுபோல் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இப்படி நாம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாறிக்கொண்டே போகிறோம். அதனால் நமக்கே தெரியாமல் பல சிறு சிறு உயிரினங்களை நாம் அழித்துக்கொண்டே இருக்கிறோம். 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு திரும்பி பார்த்தோமானால், நமது வீடுகளின் ஜன்னல்கள், விட்டங்கள் மற்றும் தாழ்வரங்களில் புறாக்கள், சிறுசிறு குருவிகள் போன்றவை வந்து தங்கியிருக்கும். அதேபோல் வயல்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களிலும் இந்த சிறு பறவைகளை அதிகளவில் காணமுடியும். இவை ஆங்காங்கே கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழும். குறிப்பாக, கிராமப்புற வீடுகளில் சிட்டுக்குருவிகளை நிறையவே பார்க்கலாம். அவை வீட்டில் கட்டி வைத்திருக்கும் நெல் மூட்டைகளிலிருந்து சிந்தும் நெல்மணிகளையும், வயல்களில் சிந்திக்கிடக்கும் தானியங்களையும், சிறு பூச்சிகள் மற்றும் புழுக்களையும் சாப்பிட்டு வாழும். ஆனால் மனிதனையே அண்டி வாழுகின்ற இதுபோன்ற சிறிய உயிரினங்களால் இப்போது இடைவெளியே இல்லாத அடுக்குமாடி கட்டிடங்களின் நடுவே வாழ முடிவதில்லை. இப்போதுள்ள பெரும்பாலான வீடுகளில் கூரைகள் இல்லாததாலும், வீடுகளில் ஏசி மாட்டியிருப்பதாலும் அவைகளால் அந்த சூட்டை தாக்குப்பிடிக்க முடிவதில்லை. மேலும் அவற்றிற்கு போதிய உணவு கிடைக்காததாலும் அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன. முன்பெல்லாம் பெரும்பாலான கடைகளில் தானியங்கள் சாக்கு மூட்டைகளில் திறந்து வைக்கப்பட்டிருக்கும். மேலும், அதனை வாங்கிச் செல்வோருக்கு காகிதங்களிலேயே கட்டித்தரப்படும். இதனால், திறந்து வைக்கப்பட்டிருக்கும் தானிய சாக்குப்பைகளிலிருந்தும், கட்டிக்கொடுக்கப்படும் காகிதங்களில் இருந்து சிதறுவதையும் உண்டு சிட்டுக்குருவிகளும், பிற பறவைகளும் தங்களுக்கு தேவையான உணவை எடுத்துக்கொள்ளும். ஆனால் இப்போது அவை அனைத்துமே சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் முற்றிலும் கவர்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதுவும் சிறு உயிரினங்களின் உணவு தட்டுப்பாடுக்கு முக்கிய காரணமாக மாறியிருக்கிறது. இதுபோன்ற மாற்றங்களால் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் உணவு சங்கிலித்தொடரும் பாதிக்கப்படுகிறது.


மனிதர்களின் வாழ்விடங்களை ஒட்டி வாழும் சிட்டுக்குருவிகள்

செல்போன் பயன்பாடும் சிட்டுக்குருவிகளும்

சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது செல்போன் டவர்கள். இந்த டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சானது சிட்டுக்குருவிகளின் கருவை தாக்குவதாகவும், அப்படியே அவை முட்டையிட்டாலும் அதனால் குஞ்சுபொரிக்க இயலாத நிலை ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. உண்மையில் இதுபோன்ற கதிர்வீச்சுகளால் சிட்டுக்குருவிகள் மட்டும்தான் பாதிக்கப்படுகின்றனவா என்றால் அது உண்மையில்லை என்கின்றனர் பறவைகள் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாகவே தொழில்நுட்பம் வளர வளர அவற்றால் பல உயிரினங்கள் தொடர்ச்சியாக அழிந்துகொண்டேதான் போகின்றன. உலகளவில் 160 கோடி சிட்டுக்குருவி இனங்கள் உள்ளன. அவற்றில் பல இப்போது காணாமல் போய்விட்டன. அப்படி பார்த்தால் இந்தியாவில் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவி வகைகள் இருந்தன. அதுபோக 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழும் பகுதியில் அதிகம் காணப்பட்ட வெண்வயிற்று நாரைகள், வங்காள வரகுக்கோழி, எகிப்திய கழுகுவகைகள் இப்போது கணிசமாக குறைந்திருக்கின்றன. குறிப்பாக, இப்போது சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்தது போலவே 30 ஆண்டுகளுக்கு முன்புவரை மக்களோடு ஒன்றி வாழ்ந்த மஞ்சள் தொண்டை சின்னான் என்று சொல்லக்கூடிய குருவியினத்தையும் நம்மால் இன்று பார்க்க முடிவதில்லை. இதுபோன்ற பறவைகளின் அழிவுக்கு வயல்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அவற்றில் சிட்டுக்குருவியும் இப்போது முற்றிலும் அழிந்துவிடக்கூடாது என்ற நோக்கில்தான் அவற்றை காப்பாற்ற பல்வேறு விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.


சிட்டுக்குருவிகளின் கருவை பாதிக்கும் செல்போன் டவர் கதிர்வீச்சுகள்

சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவு

உணவுச் சங்கிலியில், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியில், சிட்டுக்குருவிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகளின் உதவியுடன், பயிர்களுக்குச் சேதம் ஏற்படுத்தும் பூச்சிகளை அழித்து, அவை பல்கிப் பெருகாத வகையில், பூச்சிகளின் பெருக்கத்தை இயற்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஆனால், நாமோ அதை சரிவரப் புரிந்துகொள்ளாமல் ரசாயன பூச்சிக்கொல்லிகள்தான் ஒரே தீர்வு என தவறாகப் புரிந்துகொண்டு மண்ணையும், நம் வாழ்க்கையையும் நஞ்சாக்கி வருவதாக பறவை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அழிவது சிட்டுக்குருவிகள்தானே என அலட்சியமாக இல்லாமல், சிட்டுக்குருவிகளின் அழிவு மனிதகுலத்தின் அழிவுக்கான அபாய ஒலியாகப் பாவித்து, நம் குழந்தைகளுக்குச் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.


உலகளவில் குறைந்துவரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை

உலக சிட்டுக்குருவிகள் தினம்

சிட்டுக்குருவிகளின் அழிவை தடுக்க ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டுமுதல் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிட்டுக்குருவிகள் மட்டுமல்லாமல் அழகிய சிறு சிறு பறவைகளை கொண்டாடவும், அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. Nature forever society of India மற்றும் பிரான்ஸை சேர்ந்த eco sys action foundation ஆகியவற்றால் உலக சிட்டுக்குருவிகள் தினம் நிறுவப்பட்டது. குறைந்துவரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கவும் பல்வேறு தன்னார்வலர்கள் இதில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, சிட்டுக்குருவிகளின் பெருக்கத்திற்கு நாம் என்னென்ன செய்யவேண்டும்? என்று எடுத்துரைக்கின்றனர். மாடித்தோட்டங்களை உருவாக்குதல், மண்புழு மற்றும் இயற்கை உரங்களை பயன்படுத்துதல், தானியங்களை ஜன்னல்கள் மற்றும் மாடிகளின் மீது தூவி சிறு உயிரினங்களுக்கு உணவளித்தல், வீட்டிற்கு வெளியே சிறு பாத்திரங்களில் தண்ணீர் வைத்தல் போன்ற முன்னெடுப்புகளை நாம் ஒவ்வொருவருமே மேற்கொண்டால் சிட்டுக்குருவிகள் மட்டுமல்லாமல் மற்ற சிறு உயிரினங்களையும் காப்பாற்ற முடியும். இதுகுறித்து பள்ளிகளிலும் பல சுற்றுச்சூழல் அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.


சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க திட்டமிடல் அவசியம்

சிட்டுக்குருவிகள் உண்மையிலேயே அழிந்துவிட்டனவா?

செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிக்கப்படுவது குறித்து அதிகளவில் பேசப்பட்டாலும் இந்த சிறு உயிரினங்கள் அழியும் தருவாயில் இருப்பதாக சொல்லப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மையில்லை என மறுக்கின்றனர் ஒரு தரப்பினர். ஏனென்றால் மக்கள்தொகை அதிகமுள்ள, நெருக்கமான அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கின்ற சென்னை போன்ற பெருநகரங்களில்கூட சிட்டுக்குருவிகளை பார்க்கமுடிவதாகவும், நகர்ப்புறங்களில் குருவிகளால் வசிக்கமுடியவில்லை என்றாலும் கிராமங்களில் அவை நிறையவே இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இதுபோன்று குறிப்பிட்ட ஒரு உயிரினத்தின் வளர்ச்சியை மட்டும் மேம்படுத்தி காட்டி, அழிவின் விளிம்பில் இருக்கிற மற்ற அரியவகை உயிரினங்கள் பொருளாதார நோக்கத்திற்காக கடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியா உட்பட உலகளவில் இதுபோன்ற அரிய பறவைகளை வாங்கவும், விற்கவும் நூற்றுக்கணக்கான கள்ளச்சந்தைகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற ஏமாற்றுவேலைகளை மறைப்பதற்காகவே சிட்டுக்குருவிகளின்மீது திடீர் அக்கறை காட்டப்படுவதாக பகிரங்க குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்